ஒவ்வொரு களப்பணியாளரும், சமூகத் தொண்டரும் தமக்கென ஒரு பாதையை வகுத்துக் கொள்கின்றனர். சாதி ஒழிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் களப் பணியாளரை, சாதி ஒழிப்புக்காக காலமெல்லாம் தொண்டாற்றினார் என்று போற்றுகிறோம். ஆனால், பெண்ணியச் சிந்தனையாளராக இருக்கும் ஒருவரை பெண்ணியவாதி என்கிறோம். ஒருவர் வளர்ந்த விதம், பெற்ற அனுபவங்கள், பாதித்த விஷயங்கள் – இவற்றிலிருந்துதான் எதை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை முடிவு செய்ய முடியும். அந்த வகையில் டாக்டர் அம்பேத்கர், சாதி ஒழிப்புப் போருக்கு முன்னுரிமை கொடுத்தார். அதனால் அவர் சாதி ஒழிப்புப் போராளியாக அறியப்படுகிறார். பெரியார் சாதி ஒழிப்போடு சேர்த்து, பெண்ணுரிமைக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளித்தார். அதனால் அவர் பெண்ணியவாதியாகவும் அறியப்படுகிறார்.
அம்பேத்கரின் தொகுக்கப்பட்ட எழுத்துகளினூடாகத் தேடி, அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகளை கண்டெடுக்க வேண்டும். ஏனெனில், அவர் பெண்ணியத்தை ஒரு தனி செயல்திட்டமாக வைத்துக் கொள்ளவில்லை. இயல்பாகவே அவருக்கு எல்லாவற்றையும் விட சாதி ஒழிப்பும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையும்தான் முக்கியமானதாக இருந்திருக்க முடியும். அப்படித்தான் இருந்தது. பெரியார் மற்றும் அம்பேத்கரின் எழுத்துகளை வாசிப்பவர்களுக்கு தெரியும் – பெண்ணியவாதக் கருத்துகளும் பெண் மய்யக் கருத்துகளும் யாரிடம் மேலோங்கி இருந்தன என்பது.
அம்பேத்கரின் மக்கள் விளிம்புநிலை மக்கள். அவர்களுக்கான போராட்டமே பெரிதாய் இருக்கும்போது, பெண்ணியம் குறித்த சிந்தனை இயல்பாகவே இரண்டாம்பட்சமாகிவிடுவது இயற்கையே. இந்நிலையில் ‘அண்ணலின் பெண்ணியச் சிந்தனைகள்’ என்ற அரச. முருகுபாண்டியன் எழுதியுள்ள நூலின் அணிந்துரையில் – ‘‘பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள்? நூலில் உள்ள கருத்துகள், அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகளை மய்யமிட்டவை” என அரங்க. மல்லிகா குறிப்பிட்டுள்ளார். இதனை அம்பேத்கரே கூட ஒப்புக்கொள்ள மாட்டார். ஏனெனில், ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலில் காணப்படும் தீவிர கருத்துகள் போல, அம்பேத்கர் எங்கும் குறிப்பிடவில்லை. அவருக்கான பாதை வேறு என்பதில் அவர் தெளிவாக இருந்தார். தன் சாதி ஒழிப்பு நடவடிக்கைகளினூடாக பெண்ணியத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் அம்பேத்கர் செயல்பட்டார். பார்ப்பனியத்தைப் பற்றிச் சொல்லும்போது, பெண்களை பார்ப்பனியம் எவ்வாறு அடிமைப்படுத்தி வைத்துள்ளது என்று விளக்குகிறார்.
பெரியார் பெண்கள் படும் இன்னல்கள் குறித்துப் பேசும்போது, அவர்களின் துயரங்களுக்கு பார்ப்பனியமும் ஒரு காரணமாக இருக்கிறது என்று மநுஸ்மிருதியை ஆதாரமாகக் காட்டுகிறார். இருவருமே மநுவை எதிர்க்கிறார்கள். ஆனால் பெரியாரின் பெண்ணியச் சிந்தனைகள், அம்பேத்கரின் கருத்துகளை மய்யமிட்டவை என்ற கருத்து ஒருபோதும் ஏற்கத்தக்கதல்ல. அரங்க. மல்லிகாவின் இந்தக் கருத்தில் நூலாசிரியர் அரச. முருகுபாண்டியன் முரண்படுவாரேயானால், தனது முன்னுரையில் அவர் அதனைக் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு குறிப்பிடாதது, அவரும் இந்தக் கருத்திற்கு உடன்படுகிறாரோ என்ற அய்யத்தையே ஏற்படுத்துகிறது.
பெரியாரை தலித்துகளுக்கெதிராக நிறுத்தும் போக்கு வெவ்வேறு வகையில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பெரியாரிஸ்டுகளும், அம்பேத்கரிஸ்டுகளும், இடதுசாரிகளும் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணமிது. அவர்கள் ஒன்றிணைவதற்கான புள்ளியை நோக்கி நகரத் தொடங்க வேண்டும். மூன்று தரப்பினருக்குமான பொது எதிரி மிகவும் பலம் வாய்ந்தவனாக இருக்கும்போது, ஒற்றுமை மிகவும் அவசியம். பெரியாரை முன்வைத்து இடதுசாரிகளுக்கும், பெரியாரிஸ்டுகளுக்கும் இடையே ஆண்டாண்டு காலமாக இருக்கும் முரண்பாடுகளும், அதே பெரியாரை முன்வைத்து அம்பேத்கரிஸ்டுகளுக்கும், பெரியாரிஸ்டுகளுக்கும் இருக்கும் கருத்து மோதல்களும் களையப்பட வேண்டும். பெரியார் என்ற ஆளுமையின் கருத்துகள் இந்தியா போன்ற சாதி அடுக்குகள் நிறைந்த, பெண்ணை அடிமைப்படுத்துகிற சமூகம் இருக்கும்வரை – எப்போதும் எந்தக்காலத்திலும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும்.
‘அண்ணலின் பெண்ணியச் சிந்தனைகள்’ என்பது நூலின் தலைப்பு. அம்பேத்கரின் பெண்ணியச் சிந்தனைகள் என்று இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நூலின் பெயரைக் கேட்பவர்கள் ‘அண்ணல்’ என்றால் காந்தி என்று பொது புத்தியில் ஏற்கனவே ஏற்றப்பட்டிருக்கும்போது, ஒரு எளிய வாசகன் இந்நூலை காந்தி குறித்த நூலாகவே எண்ணிக் கொள்ள வாய்ப்பு உண்டு. இந்நூலை வெளியிட்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், நூலின் முகப்பு மற்றும் வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஆங்காங்கே பிழைகள் நிறைய தென்படுகின்றன. பல இடங்களில் வாக்கியங்கள் முற்றுப்பெறாமல் தொக்கி நிற்கின்றன.
சமூகம் ஆதிகாலத்தில் தாய்வழி சமூகமாக இருந்து, பின்னாளில் மாற்றம் பெற்று பெண்ணை இழிவாகப் பார்க்கும் நிலை உருவானது குறித்து, சுருக்கமாக ஒரு வரலாற்றுப் பார்வையை முன்வைக்கிறார் நூலாசிரியர். பெண்களின் மீது ‘கற்பு’ என்ற இழிவு சுமத்தப்பட்ட வரலாற்றையும் பதிவு செய்கிறார். ‘‘எல்லா இயக்கங்களும் (பா.ஜ.க. முதல் இடதுசாரிகள் வரை) பெண் பற்றிய புனைவுகளைக் கேள்வி கேட்பதாய் இல்லை. இந்நிலையில், சமூகம் கட்டமைத்திருக்கிற எல்லா புனிதங்களையும் கேள்விக்குட்படுத்தும் பெண்ணிய இயக்கங்களே முக்கியமான தேவையாகும்” என்கிறார் நூலாசிரியர். வாசிப்பவர்களுக்கு இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது.
எல்லா புனிதங்களையும் கேள்விக்குட்படுத்தும் பெண்ணிய இயக்கங்களே முக்கியத் தேவை என்றால், பெண்ணிய இயக்கங்கள் மட்டும் எல்லா புனிதங்களையும் கேள்விக்குட்படுத்தினால் போதும்; ஆண்கள் இருக்கும் மற்ற இயக்கங்கள் எல்லாம் பெண்களை புனிதப்படுத்தி, அடிமைப்படுத்தி வைத்திருக்கலாமா? பெண் குறித்த புனிதக் கருத்தாடல்களை உடைப்பதற்கு, பெண்கள் மட்டுமே முயன்றால் போதுமானதாகி விடுமா?
திவான் ஜெர்மனிதாஸ் எழுதிய ‘மகாராஜா’ நூலிலிருந்து கிடைத்த தகவலான, பத்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் யோனியை மருத்துவரை வைத்து அறுத்துக் கிழித்து, அதன்பிறகு புணர்ச்சியில் ஈடுபட்ட வன்கொடுமைகளும் நிகழ்ந்திருக்கின்றன என்பன போன்ற சில முக்கியமான விஷயங்களை நூலினிடையே தெரிவிக்கிறார் நூலாசிரியர். அது போலவே, மாதவிலக்கினால் வர இயலாத தேவதாசிப் பெண்களுக்கு அண்ணந்தாள் பூட்டும் கொடுமையையும் பதிவு செய்கிறார். பவுத்தம், சமணம், கிறித்துவம், இஸ்லாம், இந்து போன்ற மதங்கள் முன்நிறுத்தும் பெண்களின் நிலை குறித்து நூல் சுருக்கமாகப் பேசுகிறது.
மநுஸ்மிருதியில் பெண்கள் பற்றி கூறப்பட்டுள்ளதை, அம்பேத்கர் தன் ‘பார்ப்பனியத்தின் வெற்றி’யில் குறிப்பிடுகிறார். அம்பேத்கரால் முன்மொழியப்பட்ட இந்து விதவை மறுமணச்சட்டம், இந்து பெண்கள் சொத்துரிமைச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம், இந்து திருமண மற்றும் விவாகரத்துச் சட்டம் போன்ற அனைத்தும் – பெண் விடுதலையை எதிர்நோக்கிய கூர்மையான கருத்துகளைக் கொண்டிருந்தன என நூல் எடுத்துக் காட்டுகிறது.
பதேரிப்பிரபுக்களிடம் கைம்பெண் மறுமணம் வழக்கத்தில் இருந்தது. இவ்வழக்கம் பார்ப்பனர்களிடம் இல்லை என்பதால், அப்படி இருந்தால்தான் உயர்ந்தவர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவோம் என்ற நினைப்பில் – அவ்வழக்கத்தைத் துறந்த பதேரிப்பிரபுக்கள் குறித்து அம்பேத்கர் குறிப்பிடும்போது, இளையராஜா நினைவுக்கு வருகிறார். பெண்கள், கசாப்புக்காரர்களாகப் பணிபுரிவதை அம்பேத்கர் வரவேற்கிறார். பெண்களுக்கும் ஆண்களுக்கும் சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்கிறார். பெண்களை மெல்லிடையாளாகப் பார்க்கும் சமூகத்தில், அம்பேத்கர் மாறுபட்டு நிற்கிறார்.
மகப்பேறு நல உதவி சட்டவரைவு மூலம் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வருகிறார் அம்பேத்கர். இது, அம்பேத்கர் பெண்கள் மீது கொண்ட அக்கறையை நமக்கு பறைசாற்றுகிறது. இதுபோல, பெண்களுக்கு தன்னால் இயன்றவரை போராடி பல்வேறு உரிமைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார் அம்பேத்கர். ஆனால், இதை எவ்வாறு பெண்ணியச் சிந்தனை என்று கூற முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. ‘அம்பேத்கர் பார்வையில் பெண்கள்’ அல்லது ‘பெண்கள் முன்னேற்றத்தில் அம்பேத்கரின் பங்கு’ என்று இந்நூலின் தலைப்பு அமைந்திருக்குமானால், இது போன்ற தகவல்கள் நூலில் இடம்பெறுவது பொருத்தமாக இருந்திருக்கும்.
ஆனால் பெண்ணியம் என்பதன் பொருள் ஆழமானது. நூலை வாசித்து முடிக்கும்போது, அம்பேத்கர் பெண்ணியம் குறித்து இவ்வளவுதான் பேசியிருக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. அம்பேத்கரின் களப்பணி வேறு தளத்தில் இருந்ததால், அது தொடர்பான பணியில் எங்கெல்லாம் பெண்களின் விடுதலையை முன்னெடுக்க முடியுமோ, அங்கெல்லாம் முன்னெடுத்தார். அதனால் திரும்ப திரும்ப சாதி ஒழிப்பு, மகப்பேறு நல உதவி சட்ட வரைவு, இந்து சட்ட வரைவு இவற்றின் மூலமாக மட்டுமே – அம்பேத்கரின் பெண் மய்யச் சிந்தனைகளை எடுத்துக் கூற விழைகிறார் நூலாசிரியர்.
பெண்ணியவாதிகளின் மீது நூலாசிரியர் இன்னொரு குற்றச்சாட்டையும் வைக்கிறார். பால் வேறுபாடுகள் நிறைந்த நுண் அரசியலை வர்க்க / இன அடிப்படையில் பார்க்கும் பார்வை பெண்ணியவாதிகளுக்கு கூர்மையாக உள்ளதென்றும், அவர்களுக்கு சாதியப் பாகுபாடுகள் குறித்த பார்வை இல்லைஎன்றும் கூறுகிறார். எல்லா பெண்ணியவாதிகளும் அப்படித்தான் இருக்கிறார்களா? தலித் பெண்ணியம் குறித்த புரிதல்கள் பெருகியுள்ள வேளையில் பொத்தாம் பொதுவாக அனைத்துப் பெண்ணியவாதிகளின் மீதும் இப்படி ஒரு குற்றச்சாட்டு வைப்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்?
அம்பேத்கர் இந்து சட்ட வரைவில் ‘மிதாஷரா’ முறையைத் தவிர்த்து, ‘தயபாகா’ முறையை பின்பற்றவேண்டுமென்கிறார் அம்பேத்கர். மிதாஷரா சட்டப்படி, ஆண் வாரிசுகளுக்கே முன்னுரிமை. தயபாகாவில் இரு பாலின வாரிசுகளுக்கும் சம உரிமை உண்டு. அதுபோலவே மணமக்கள் கண்டிப்பாக ஒரே சாதியைச் சார்ந்தவராகவோ, உட்பிரிவைச் சார்ந்தவராகவோ இருக்க வேண்டும் என்ற விதியையும் புதிய இந்து சட்ட வரைவில் நீக்குகிறார். பெரும் எதிர்பார்ப்புடன் முற்போக்கான பல கருத்துகளுடன் இந்து சட்ட வரைவை நிறைவேற்ற அவர் ஆவலோடு காத்திருந்தபோது, நாடாளுமன்றத்தில் இச்சட்டவரைவை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படுகிறது. ஆகவே, அமைச்சரவையிலிருந்து விலகுகிறார் அம்பேத்கர். இப்படிப் பல செய்திகள் நூலில் இடம் பெற்றுள்ளன.
அம்பேத்கரின் மொழியில் இந்நூல் அமையவில்லை; நூலாசிரியரின் மொழியிலேயே அமைந்துள்ளது. இது ஒரு வகையில் புதிய முயற்சி. ஆனால் அம்பேத்கரின் அத்தனை தொகுதிகளையும் வாசித்து, அதிலிருந்து பெண் மய்யச் சிந்தனைகளைத் தேடி எடுப்பது சிரமமான காரியம்தான். அவற்றைப் பிழிந்து சாறெடுத்து, வாசிக்கக் கொடுத்த அரச. முருகுபாண்டியனின் உழைப்பு பாராட்டப்பட வேண்டும்.
– கவின் மலர்