Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » எழுத்தை ஆயுதமாக்கும் குரலிசைப் போராளி
    சிறப்புப் பக்கம்

    எழுத்தை ஆயுதமாக்கும் குரலிசைப் போராளி

    Sridhar KannanBy Sridhar KannanMay 13, 2010No Comments16 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தலித் க. சுப்பையா மதுரை மாவட்டம் முனியாண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். தினசரி விவசாயக் கூலி குடும்பத்தின் சொந்தக்காரர். தமிழக தலித் கலை இலக்கியப் போராட்டங்களில் முன்னோடியாகத் திகழ்பவர். குறிப்பாக, கடந்த 20 ஆண்டுகளாக, தலித் பாடல்களின் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களின் உதடுகளில் காந்த அதிர்வுகளை உருவாக்கியவர். போராட்டக்களங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் தலித் இயக்க மேடைகளிலும், தலித் கலைவிழா மேடைகளிலும் தனது விடுதலைக் குரல் மூலம் இசைப்போர் நிகழ்த்தி வருபவர். சாதி ஒழிப்பை ஓங்கி ஒலிக்கும் தீவிர அம்பேத்கர் சிந்தனையாளர். பெரியார் இயக்கப் பாசறையில் வளர்ந்தவர். மார்க்சிய சிந்தனைகளில் தன்னைப் பாடமாக்கியவர். ஒரு கலை இலக்கியப் போராளியாக இருந்து சமகால தலித் இயக்கங்களினூடாக நிழலாக இயங்கி வருபவர். “கலைத் தளத்தில் மனநோயாளிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது’ என நெஞ்சு நிமிர்த்தி விமர்சிக்கும் தோழர் சுப்பையா அவர்களிடம் எதிர்கால தலித் கலை இலக்கிய அரசியலைப் பற்றிய ஒரு நேர்காணல்.

    – அன்பு செல்வம்

    தங்களின் குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்…

    பூமிக்கு எனது அறிகம் எனது தாயின் ஓவென்கிற அழுகைச் சத்தத்தோடுதான் நிகழ்ந்திருக்க வேண்டும். உள்ளங்கையில் அடங்கும் ஒரு சதைப் பிண்டத்தை ரத்தக் குளத்திலிருந்து வெளியேற்றும் பிரசவப் போல் என் தாய் மட்டுமல்ல, நானும்கூட மொழியற்ற ஒருவகை அழுகுரலோடுதான் இந்த அழகிய உலகிற்கு அறிகமாயிருப்பேன். இயற்கை விதியான பிறப்பு குறித்த இவ்வினை, மனிதகுலம் முழுமைக்கும் பொதுவான ஒன்றாகவே இருக்கிறது.

    Dalith Subbiahமதுரை மாவட்டம், மேலூர் வட்டம், முனியாண்டிப்பட்டி எனும் சிற்றூர்ச் சேரிதான் எனது பிறப்பிடம். எனது தந்தையின் தந்தை பெயர் சுப்பன். எழுதப் படிக்கத் தெரிந்த எனது தந்தை பெயர் கருப்பன். வாகான உடலமைப்பும், வேகமாக நடக்கும் திறனுடைய என் தந்தைக்கு கள்ளர்கள் வைத்த கேலிப் பெயர் நொண்டி என்பதாகும். என் தந்தைக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி பெயர் பழனி. இவருக்கு வெள்ளையம்மாள், பூச்சியம்மாள் எனும் இரண்டு மகள்கள் உண்டு. ஆண் குழந்தை கிடையாது. அக்காலத்தில் ஆண் குழந்தை இல்லாத குடும்பங்களைப் பார்த்து “தலை சிரைக்க பிள்ளையில்லாத குடும்பம்” என்று ஏளனம் பேசுகிற வழக்கம் இருந்தது. இத்தகைய அவமானத்தைப் போக்கவே இருதார மணம் அங்கீகக்கப்பட்ட ஒன்றாக இருந்தது.

    இதன் அடிப்படையில்தான் என் அப்பாவுக்கு என் அம்மா இரண்டாம் தாரமாக வாக்கப்பட நேர்ந்தது. என் அம்மாவுக்கு ஒரே மகனான என்னைத் தவிர, குழந்தைகள் கிடையாது. என் தாத்தாவுக்கு என் அப்பா ஒரே மகன். என் அப்பாவுக்கு நான் ஒரே மகன். எனக்கு இரண்டு மகன்கள். நான் தமிழகத்தில் பிறந்தவன். எனது மனைவி சுப்புலெட்சுமி மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். எனது மகன்கள் இருவரும் புதுச்சேயில் பிறந்தவர்கள். வரலாற்றில் அடிமைத்தனத்தை எதிர்த்த முதல் மனிதனும், பேராசான் காரல் மார்க்சின் கவனத்தை ஈர்த்த போராளியும், வெள்ளை அடிமையுமான ஸ்பார்டகசை நினைவு கூறும் வகையில், அப்பெயரை என் மூத்த மகனுக்கு வைத்திருக்கிறேன். சோவியத் புரட்சியின் கண்ணாடி என்று பேராசான் லெனினால் அழைக்கப்பட்ட கார்க்கியின் நினைவாய் அப்பெயரை என் இளைய மகனுக்கு வைத்திருக்கிறேன்.

    எனது பெரியம்மா தாலாட்டுப் பாடுவார். ஒப்பாரி வைப்பார். கதைகள் சொல்லுவார். ஆனால், என்னைப் பெற்ற அம்மா பேசுவதற்கும், பிறர் பேசுவதைக் கேட்பதற்குமான சக்தியை இயற்கை வழங்கவில்லை. என் அம்மா பிறவி ஊமையாக, செவிடாகப் பிறந்து வாழ்ந்து செத்துப் போனவர். ஈனக்குரலாய் என் அம்மாவிடமிருந்து வெளிப்பட்ட சிரிப்பும் அழுகையும்தான் எனக்கும் என் அம்மாவுக்குமிடையிலான உறவை நேசத்தை பத்திரப்படுத்தி காப்பாற்றி வந்தது. எனக்கான முதல் அடையாளம் நான் ஓர் விவசாயத் தொழிலாளியின் மகன் என்பதுதான். பிறகே மற்ற அனைத்தும்.

    நீங்கள் அந்தக் காலத்தில் கல்வி பயின்ற பின்னணியை சற்று விரிவாகச் சொல்லுங்கள்…

    முதன் முதலில் எனக்கு எழுத்தைக் கற்றுக் கொடுத்தது பள்ளி ஆசியர்களல்லர். அதேபோல், நான் எழுதியது சிலேட்டுக் குச்சி அல்லது பென்சிலும் அல்ல. மேலும், நான் எழுதுவதற்குப் பயன்படுத்தியது சிலேட் அல்லது தாளும் அல்ல. பள்ளியில் என்னைச் சேர்ப்பதற்கு முன்பாக எங்கள் வீட்டு வாசலில் 56 படி நெல் கொள்ளளவுள்ள ஒரு மூட்டை நெல்லைக் கொட்டி வட்டமாகப் பரப்பி, என் சுட்டுவிரலைப் பிடித்து “அ’ எனும் முதல் எழுத்தை நான் எழுதுவதற்கு என் தந்தை எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். எனக்கான கல்விச் சிந்தனை நெல்லின் மீது எழுதிய எழுத்திலிருந்தே தொடங்கியிருக்கிறது. பள்ளியில் என்னைச் சேர்ப்பதற்கு முன்பு வீட்டில் நெல் சேமித்து வைத்திருக்கும் மச்சுக்குக் கீழே வாழை இலையில் தேங்காய், வாழைப்பழம் வைத்து படி நிறைய நெல்லும், பனை ஓலையில் எழுதப்பட்ட வீட்டுப் பத்திரம், வெற்றிலைப் பாக்கு, நூல் சுற்றப்பட்ட செப்புக் குவளையில் தண்ணீர், இவைகளுடன் சூடம் கொளுத்தி சாம்பிராணி புகை போட்டு, முன்னோர்களை நினைத்து என்னைக் கும்பிடச் சொல்லி அதன் பிறகே என் தந்தை என்னைப் பள்ளியில் சேர்த்திருக்கிறார்.

    பணப்புழக்கம் அதிகமில்லாத அக்காலத்தில், எனது பள்ளிப் படிப்பின் முதல் ஆசியரான திரு. இருதயம் அவர்களுக்கு மூன்று மரக்கால் நெல்லை என் தந்தை குரு காணிக்கையாகக் கொடுத்திருக்கிறார். என் தாய் தந்தை நான் ஒரே மகன் என்பதால், எனக்கு வைத்த பெயர் பிச்சை. பிச்சை என்று பெயரிடுவது இலவசம் என்கிற அர்த்தம் சார்ந்ததல்ல. ஆண் குழந்தை வேண்டுவோர் அக்காலத்தில் மடிப்பிச்சையேந்துவது என்கிற ஒரு சடங்கைச் செய்து வந்தனர். ஆண் குழந்தையில்லாத தாயும் தகப்பனும் நாலு வீட்டின் முன்பு நின்று மடிப்பிச்சையேந்தி நெல்பெற்று அதைக் குத்தி அரிசியாக்கித் தங்கள் குல சாமிக்குப் பொங்கலிட்டு, தங்கள் வேண்டுதலை சாமியிடம் ன்வைப்பார்கள். நம்பிக்கை சார்ந்து செய்யப்படும் இதுபோன்ற சடங்குகளால் பல வருடங்கள் கடந்து குழந்தைப் பேற்றை அடையும்போது, பிறப்பது ஆணாக இருந்தால் பிச்சை என்றும் பெண்ணாக இருந்தால் பிச்சையம்மாள் என்றும் பெயரிடுவது வழக்கம்.

    என் அம்மாவைத் திருமணம் செய்து பல வருடங்கள் கடந்த நிலையில் நான் பிறந்ததால், மேற்கண்ட மடிப்பிச்சை சடங்குகள் செய்யப்பட்ட பின்னணியில்தான் எனக்குப் பிச்சை என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கிறித்துவரான இருதயம் ஆசியர் எனக்கு வைத்த பெயர்தான் சுப்பையா. தலித்துகள் “ஈ’ விகுதியுடன் முடிவதாகப் பெயர்கள் வைப்பது முன்பு குற்றச் செயலாகக் கருதப்பட்டது. என் தாத்தா, தந்தையின் பெயர்கள் “ன்’ விகுதியுடன் முடிபவை. எனக்கு “ன்’ விகுதியுடன் பெயரிடாததற்கு இருதயம் ஆசியர்தான் காரணமாக இருந்திருக்கிறார் என்றே நினைக்கிறேன்.

    எங்கள் கிராமத்தில் அய்ந்தாம் வகுப்பு வரை இயங்கி வந்த அரசு ஆரம்பப் பள்ளியில்தான் எனது படிப்புத் தொடங்கியது. எனது பள்ளிப் படிப்பின் முதலாவது ஆசியர் திரு. இருதயம். வலதுகால் ஊனமான நிலையில் சற்றுக் காலை இழுத்து இழுத்து நடப்பார். மெலிந்த உடம்பு, அரைக்கை சட்டை, மடித்துக்கட்டிய நாலுமுழ வேட்டி, கையில் குடை, மாணவர்களிடம் கண்டிப்பு, பெற்றோர்களிடம் இலவசமாக எதையும் எதிர்பார்க்காத நேர்மை போன்றவைதான் இருதயம் ஆசியருக்கான அடையாளம். இவர் செருப்பணிந்து நான் பார்த்ததில்லை. கள்ளர்கள் வசிக்கும் பகுதியில் அமைந்திருந்த பள்ளியில் படித்த என்போன்ற சிறுவர்களை சேரிக்கு வந்து அழைத்துச் செல்வார். இருதயம் ஆசியருக்கு மூன்று பிள்ளைகள. மூத்த பெண் ரெஜினா நல்ல உயரத்துடன் சிவப்பு நிறத்தில் அழகுப் பதுமையாகக் காட்சியளிப்பார். இரண்டாவது பெண் ரெஜினாவுக்கு நேர்எதிராக கருப்பு நிறத்துடன் குள்ளமாக இருப்பார். ஒரே மகன் செல்லத்துரை. நான் மேலூருக்குப் படிக்க வந்து பல வருடங்களுக்குப் பிறகுதான் இருதயம் ஆசியர், ஒரு தலித் கிறித்துவர் என்பதாக அறிய நேர்ந்தது. எளிமையுடன் வாழ வேண்டும் என்பதை எனக்கான முன்னோடிகளில் இருதயம் ஆசியரும் ஒருவராவார்.

    ரெஜினா டீச்சர் எனக்கு கணக்கு ஆசியர். அவர் எங்கள் கிராமத்தில் தங்கியிருந்தபோது, எதிர் வீட்டைச் சேர்ந்த கள்ளர் சாதி இளைஞர் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் அந்த இளைஞன் மாமனார் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தன் மகளுக்கு நேர்ந்த அவமானத்தால் மனமுடைந்த இருதயம் ஆசியர், மறுவாரமே எங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி மேலூரில் குடியேறி விட்டார். மதுரையில் நான் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் இருதயம் ஆசிரியரை மேலூரில் ஒருநாள் சந்திக்க நேரிட்டது. கல்லூரியில் நான் படிப்பதாகக் கூறியபோது மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அத்துடன் படிப்பை முடித்த பிறகு கிராமத்தில் வசிக்காதே என்று எனக்கு ஆலோசனையும் கூறினார். படித்த தலித்துகள் கிராமச் சாதியக் கட்டமைப்பிற்குள் சுதந்திரமாக வாழ முடியாது என்பதற்கு ஆசியர் இருதயம் அன்று கூறிய அறிவுரை, பிற்காலத்தில் கிராம வாழ்வில் நான் எதிர்கொண்ட பல்வேறு அவமானங்கள் சாட்சியாக அமைந்தன.

    ஆரம்பக் கல்வியை முடித்த நிலையில் மேலூர் நகல் 6 ஆம் வகுப்பில் சேர்ப்பதற்கு என் தந்தை முயற்சி செய்தார். மேலூரில் சுந்தரேஷ்வரா வித்யசாலை எனும் தனியார் பள்ளியில் படிப்பதற்கு எனக்கு மிகுந்த விருப்பமிருந்தது. அப்பள்ளியில் வசதி படைத்தவர்கள் குறிப்பாக பார்ப்பனர், செட்டியார், நாயுடு, கள்ளர் சாதியில் சொந்த நிலம் வைத்திருப்பவர்களின் பிள்ளைகள்தான் பணம் கட்டிப் படித்து வந்தனர். உயர் கல்வி படிப்பதற்கு அடிப்படைக் கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்வதற்கான திறன் இல்லாத நிலையிலும்கூட, கல்லூரிப் படிப்புவரை நான் தொடர வேண்டுமென்பதில் என் தந்தை மிகவும் உறுதியாக இருந்தார். மேலூர் அழகர் கோவில் சாலையில் அரசுப் பொது மருத்துவமனை அருகில் உள்ள பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் 6 ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். அப்பள்ளியில் நான் படித்த காலத்தில் 70% பிள்ளைகள் அரசுப் பள்ளிகளில்தான் படித்து வந்தனர். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று தனியார் பள்ளிகள் அப்போது மிகவும் குறைவு. அப்பள்ளிகளில் பணம் கட்டிப் படிக்க வைக்க முடியாத ஏழைகளின் எண்ணிக்கை மிகமிக அதிகம். மற்றொன்று தலித் மற்றம் பிற்படுத்தப்பட்ட சாதியினர் தங்கள் பிள்ளைகள் படிப்பதற்கு அரசுப் பள்ளிகளையே பெரிதும் நம்பியிருந்தனர். இந்த நம்பிக்கைக்குக் காரணமாக இருந்தவர் காமராசர்.

    நான் படித்த காலத்தில் கிராமத்திலிருந்து நகரத்திற்குச் சென்று படித்துவரும் மாணவர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக் கூடியதாகவே இருக்கும். இவர்களில் சேரிப்பிள்ளைகளின் எண்ணிக்கை அரிதாகவும், பெண்களோ அறவே இல்லாத நிலையும் இருந்து வந்தது. தினம் மூன்று மைல் தொலைவுள்ள மேலூருக்கு சக மாணவர்களுடன் புத்தகப்பை, தூக்குச் சட்டியுடன் நடந்து சென்று படித்து வந்தேன். அப்போது காலில் செருப்பணியும் வழக்கமில்லை. வாரத்தில் 6 நாட்கள் தினம் 6 மைல் நடந்து படித்து வந்தது, என் உடம்பை பல்வேறு நிலைகளில் பாதிப்புக்குள்ளாக்கியது. இதனால் என் கண்பார்வை குறையத் தொடங்கியது.

    Dalith Subbiahஎங்கள் கிராமத்தின் வசதிபடைத்த கள்ளர் சாதி குடும்பப் பிள்ளைகள், கூட்டுவண்டியில் பள்ளிக்கு வருவார்கள். அந்த வண்டியை பிடித்துக்கொண்டே பின்புறமாக ஓடுவோம். என் புத்தகப் பைகளை அந்த வண்டியில் வைப்பதற்குக்கூட அப்பிள்ளைகள் அனுமதிக்க மாட்டார்கள். சில சமயங்களில் வண்டியைக்கூட தொடவிட மாட்டார்கள். சைக்கிளில் செல்பவர்களிடம் நானும் வருகிறேன் என்றால், என்னை உட்காரச் சொல்லி அவர்கள் மிதிக்க மாட்டார்கள். நான்தான் சைக்கிள் ஓட்டுவேன். கள்ளர்கள் உட்கார்ந்து வருவார்கள். என்னுடன் படித்த கள்ளர்கள் உள்ளிட்ட பிற சாதி மாணவர்கள் எவரும் என்னை அண்ணன் தம்பி என்று அழைத்ததில்லை. வயதில் மூத்தவர்கள் வாடா போடா என்றும், சிறியவர்கள் வா, போ என்று பெயரைச் சொல்லித்தான் அழைத்தார்கள். என் புத்தகப் பையைத் தொட்டு தூக்குவார்கள். தூக்குச் சட்டியை தொடமாட்டார்கள். நான் கொடுக்கும் அரிசியை, கேழ்வரகுப் புட்டை, தின்னக் கொடுத்தால் வாங்க மாட்டார்கள். பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் நான் படித்த 3 வருடங்களிலும் எனக்குத் தமிழாசியராகவும், 6 ஆம் வகுப்பில் வகுப்பாசியராகவும் இருந்தவர் செல்வி. பச்சையம்மாள் ஆவார். மரவேலை செய்யும் ஆசாரி வகுப்பைச் சேர்ந்த இவர், வகுப்பறையில் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார். நான் பாடுவதற்கு ஊக்கப்படுத்தியவர்களுள் இவரும் ஒருவர்.

    பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் தேர்வு பெற்ற நிலையில், மேலூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பில் சேர்ந்தேன். உயர்நிலைப் பள்ளியில் நான் படித்த காலம் துயரமானது. திங்கட் கிழமையன்று வெள்ளைச் சட்டை, நீலநிறக் கால்சட்டையணிந்து சீருடையுடன் பள்ளி செல்ல வேண்டும். சீருடை வாங்க இயலாத நிலையில், திங்கட்கிழமை பள்ளி செல்வதைப் பல மாதங்கள் தவிர்த்திருக்கிறேன். செவ்வாய்க்கிழமை பள்ளிக்குப் போனால் வகுப்பாசியர் மோசமாகத் திட்டுவார்; அடிப்பார்; முதல் வகுப்பு முடியும் வரை வெளியில் வெயிலில் நிற்க வைப்பார். இத்துயரத்தை மாலையில் வீடு திரும்பிய பிறகு பெரியம்மாவிடம் கூறி அழுவேன். என் அம்மா கண்ணீர் வடிப்பார். அடிபட்டு வீங்கிப்போன இடத்தில் சாணத்தைச் சுட்டு ஒத்தடம் கொடுப்பார். இப்படியெல்லாம் அடிவாங்கிக்கிட்டு படிக்கிற படிப்புத் தேவையில்லே; நாளையிலேருந்து பள்ளிக்கூடம் போக வேணாம் என்று பெரியம்மா சொல்வார். அப்பா மவுனமாக இதைக் கேட்டுக் கொண்டிருப்பார். எனக்கு நினைவு தெரிய எஸ்.எஸ்.எல்.சி. படிப்பு முடியும்வரை நான் உடுத்திய ஆடையில் பள்ளிச் சீருடை மட்டும்தான் துணி எடுத்து தையற்கடையில் கொடுத்து தைத்துப் போடப்பட்டவையாகும். திங்கட்கிழமை மேலூரில் நடைபெறும் மாட்டுச் சந்தையின்போதுதான் சாலையோரத்தில் விற்கப்படும் சட்டை டவுசரை அப்பா வாங்கித் தருவார். அப்பா வாங்கித் தரும் உடைகளில் எனக்கு மிகவும் பிடித்தமானவை சிவப்புச் சட்டையும் பச்சை டவுசரும்தான்.

    எனது சொந்த கிராமத்தைச் சேர்ந்த பெரிய கருப்பன் என்பவர், அப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசியராகப் பணி செய்தார். அவர் என்னைக் கண்டுகொள்ள மாட்டார். கள்ளர் சாதியைச் சேர்ந்த இவர், கள்ளர் சாதி மாணவர்கள் விளையாட்டின் மீது ஆர்வம் செலுத்த தனிக்கவனம் செலுத்துவார். கள்ளர் சாதி மாணவர்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் பல்வேறு சமயங்களில் மோதல்கள் நடந்துள்ளன. அவர்கள் சற்றும் யோசிக்காமல் என் நெஞ்சில் கைவைத்து தள்ளுவார்கள். சட்டையைப் பிடித்து உலுக்குவார்கள். கைநீட்டி அடிப்பார்கள். அவர்களுடைய தாய் தந்தையர் தலித் மக்களை திட்டுவதைப் போல வாடா, போடா என்று என்னைத் திட்டுவார்கள். பெரிய கருப்பன், சாதிப் பெருமையுடன் இதையெல்லாம் பார்த்து ரசிப்பார்.

    பல்வேறு அவமானங்களைச் சுமந்து கொண்டுதான் அப்பள்ளியில் படிப்பை முடித்து வெளியேறினேன். கள்ளர் சாதி மாணவர்களால் பல்வேறு சமயங்களில் நான் மிரட்டப்பட்டபோது, அவர்களைக் கடுமையாக எச்சரித்து எனக்கு ஆறுதலாகப் பேசிய ஆசியர்களும் உண்டு. அவர்களில் திரு. கன்னியப்பன், திரு. அரசன் ஆகிய செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த இருவரால்தான் மூன்று வருடங்களும் நான் அப்பள்ளியில் தொடர்ந்து படிக்க நேர்ந்தது.

    இதன் பிறகு கல்லூரியில் படிக்கும் பொறுப்பை எனது தாய் மாமன் திரு. மகாலிங்கம் ஏற்றுக் கொண்டார். மதுரை வெள்ளைச்சாமி (நாடார்) கல்லூயில் நான் புகுமுக வகுப்பில் சேர்ந்து படிப்பதற்கு மாமா உதவி செய்தார். இளங்கலை முதலாமாண்டு சேருவதற்கு முன்பாகவே மாமா விபத்தில் இறந்துவிட்டார். கல்லூரியில் பணம் கட்டுவதற்கு இயலாத நிலையில், அப்பாவும் அம்மாவும் வீட்டுப் பத்திரத்தை கையில் வைத்துக்கொண்டு உடன் என்னையும் அழைத்துக் கொண்டு கள்ளர்கள், கோனார் வீட்டு வாசல்களில் நின்று கடன் கேட்டு கெஞ்சியதை நான் ஒருபோதும் மறக்க முடியாது.

    என்னைப் பண்ணை வேலைக்கு சேர்த்துவிட்டால் கடன் கொடுப்பதாகச் சிலர் கூறினார்கள். வாங்கும் கடனைத் திரும்பச் செலுத்த முடியாத பட்சத்தில், புறம்போக்கு இடத்திற்காக வாய்க்கப்பட்ட மனைப்பட்டாவை வைத்து நாக்கு வழிக்கவா முடியும் என்ற சிலர் கேட்டார்கள். பல வருடங்களாக மாட்டுச் சாணம் அள்ளி அம்மா உழைத்து வந்த கோனார் சாதி குடும்பங்களும், உழவுப் பண்ணைக்காக அப்பா வேலை செய்து வந்த கள்ளர் சாதிக் குடும்பங்களும்கூட, உதவ முன்வரவில்லை. தலித்துகள் படிக்கக் கூடாது என்பதில் சாதி இந்துக்கள் தொலை நோக்குடன் சிந்திக்கிறார்கள் என்பதைக் காலம்தான் எனக்கு உணர்த்தியது. அதற்கான வழியைத் திறந்தது, மார்க்சியமும் பெரியாரியம்தான்.

    நீங்கள் வாழ்ந்த கிராமத்தின் மண் வாசனையைப் பற்றிச் சொல்லுங்கள்…

    கிராமத்தில் நான் வாழ்ந்த காலம் துயரங்களின் தொகுப்பாகும். நடப்பது, ஓடுவது, பேசுவது, சிரிப்பது, உடுத்துவது, படிப்பது போன்ற அனைத்தும் கள்ளர்களின் கண்காணிப்புக்கு உட்பட்டதாகவே இருந்தது. சாதி ஒழுங்கிற்கான இக்கண்காணிப்பு, சே மக்கள் மீது ஊர்க்காரர்கள் சுமத்திய சமூகக் கட்டுப்பாடாகவே இருந்தது. அச்ச உணர்வும், அடங்கி வாழ வேண்டிய நிர்பந்தம் என் உடம்பைக் குள்ளமாக்கி விட்டது. ஒழுங்கை மீறுதல் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்டது. இதற்கானத் தீர்ப்பை வழங்கும் அதிகாரப் பீடமாக பஞ்சாயத்துறை இருந்தது. கள்ளர்கள்தான் பஞ்சாயத்தின் நீதிபதிகள். பஞ்சாயத்தின் முதலும் முடிவுமான நோக்கம், சாதிக் கட்டமைப்பைக் கட்டிக் காப்பதுதான். காலம் முழுவதும் சேரிமக்கள் கைகட்டி, விழுந்து வணங்கி மன்றாடுபவர்களாகவும், கள்ளர்கள் தீர்ப்புச் சொல்பவர்களாகவும் இருப்பதற்கான சாதி மேலாதிக்கத்தை ரத்தம் சிந்தியாவது காப்பதற்கான ஆவணமில்லாத அமைப்புதான் பஞ்சாயத்தாகும்.

    காலில் செருப்பணிய முடியாது; குதிகால் வரை வேட்டி உடுத்த முடியாது; முழங்காலுக்கு மேல் வேட்டியைச் சற்று உயர்த்திக் கட்டினால், “உந்தொடைய எங்க பெண்கள் பார்க்கணும்னு வேட்டியத் தூக்கிக் கட்டுறியா’ என்று கள்ளர்கள் கோபப்படுவார்கள். பாட்டுப் பாடிக்கொண்டு நான் செல்லும்போது, “ஊருக்குள்ள பாட்டு என்னடா வேண்டியிருக்கு’ என்று கேட்பார்கள். கள்ளர்கள் எதிரே வரும்போது, சேரி மக்கள் பாதையைவிட்டு தூர ஒதுங்கிச் செல்ல வேண்டும். உடம்பை வளைத்து மரியாதை செலுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாத பட்சத்தில் “என்னடா/என்னடி வெறப்பா போறே போ, போ, ஒரு நாளைக்குச் சிக்குவே அப்ப வெச்சுக்குறேன்’ என்று மிரட்டுவார்கள். அந்தச் சேரிப்பய/ பொம்பள என்னை உரசிக்கிட்டுப் போறான்/போறா, என்று ஊருக்குள் திட்டமிட்டுப் பரப்புவார்கள். இக்கருத்தை ஊதிப் பெருக்கி ஒருநாள் பழி தீர்த்துக் கொள்வார்கள்.

    எங்கள் சேரிக் கோவிலான காளியம்மன் கோவில் வரவு செலவை என் தந்தைதான் நிர்வகித்து வந்தார். மேலும், வெட்டுக் காயங்களுக்குப் பச்சிலை கட்டும் மருத்துவராகவும், ஆடி மாதத்தில் நாற்றங்காலில் பழுதில்லாமல் விதை நெல் பாவுவதில் தேர்ச்சிப் பெற்றவராகவும் என் அப்பா விளங்கி வந்தார். இதனால் எங்கள் வீட்டிற்கு தினம் மாலை நேரத்தில் ஆட்கள் வந்து செல்வார்கள். இப்படி வருபவர்கள் உட்காருவதற்காக, வீட்டின் முன்பு இரண்டடி உயரத்தில் 5 அடி நீளத்தில் பட்டியல் கல்லை அப்பா போட்டிருந்தார். ஒரு நாள் கள்ளர் சாதியைச் சேர்ந்த ஒருவர் வேலைக்கு ஆள் கூப்பிட வந்தபோது, கல்லில் உட்கார்ந்திருந்த சிலர் எழுந்திருக்காததால் மறுநாள் பஞ்சாயத்தைக் கூட்டி, உட்கார்ந்திருந்த பெரியவர்களைக் கும்பிட்டு விழ வைத்து மன்னிப்புக் கேட்க வைத்தார்கள். இப்பயத்தை மனதில் வைத்து அப்பா கல்லைத் தரையில் கிடத்திப் போட்டு விட்டார்.

    இதைப் போலவே, காளியம்மன் கோவில் திருவிழாவின்போது வைக்கப்படும் பொங்கல் சோற்றையும், வெட்டப்படும் ஆட்டுக்கறியையும் கூறுபோட்டு குடும்பங்களுக்குக் கொடுப்பதற்காக கோவில் முன்பு அகலமான பட்டியல் கல்லை பெரியவர்கள் போட்டிருந்தனர். கோவில் முன்பு உள்ள ஆற்றைக் கடப்பதற்குப் பாலம் உள்ளது. உயரமான இப்பாலத்தில் கள்ளர்கள் உட்கார்ந்திருப்பார்கள். அதைவிடத் தாழ்வாக உள்ள கோவில் பட்டியல் கல்லில் நாங்கள் உட்கார்ந்திருப்போம். நாங்கள் கல்லின் மீது அமர்வதைப் பொறுக்க முடியாத கள்ளர்கள், “ஏன்டா! உங்க குண்டிக்கு உட்கார்ரதுக்கு உசரமான எடம் தேவைப்படுதா? போற போக்கப் பார்த்தா எங்களுக்குச் சமமா உட்கார்ந்திடுவிக போல இருக்கே’ என்று கோபப்படுவார்கள். நாங்க வாங்கிப் போட்ட கல்லுல நாங்க உட்கார்ரதுல என்ன கஷ்டம் என்று கேட்டால் “எதிர்த்துப் பேசுரானுக பாரு, அவனுகள கட்டி வையுங்கடா’ என்று அடிப்பதற்கு ஓடி வருவார்கள். இதுபோன்று வாக்குவாதம் ஏற்பட்டுப் பலறை தகராறுகளும் நடந்துள்ளன. இதற்குப் பயந்து அப்பட்டியல் கல்லைக் கீழே கிடத்திவிடலாம் என்று அப்பா உள்ளிட்ட பெரியவர்கள் முடிவு செய்ததுண்டு. அதன் பிறகு இரவு நேரத்தில்தான் நாங்கள் அப்பட்டியல் கல்லில் உட்காருவோம். பகலில் உட்காரப் பயப்படுவோம்.

    கள்ளர்கள் வழிபடும் கோவில் பக்கம் அது காட்டுப் பகுதியாக இருந்தாலும், சேரி மக்கள் சுத்தபத்தமாகச் செல்ல வேண்டுமென்று ஆன்மீக நேர்மை பேசுவார்கள். ஆனால், காளியம்மன் கோவிலுக்குள் செருப்புக் காலுடன் நுழைந்து காசு வைத்து தாயம் போடுவது, சீட்டு விளையாடுவது போன்று பகல் முழுக்கச் சூதாடுவார்கள். மதுரை மேலூர் சாலையில் எங்கள் கிராமத்தையொட்டி அமைந்துள்ள முனிக்கோவிலுக்கு வேண்டுதல் செய்ய விரும்பும் சேரிமக்கள் மாலை சாத்தி, தேங்காய் பழம் வைத்து நேரடியாக நேர்த்திக் கடன் செய்ய முடியாது. பூசைப் பொருட்களுக்குரிய பணத்தை கள்ளர் சாதி கோவில் பூசாரியிடம்தான் கொடுக்க வேண்டும். கோவில் சுற்றுச் சுவருக்கு வெளியில் நின்றுதான் நாங்கள் கும்பிட வேண்டும். பூசாரி திருநீரு மட்டுமே கொடுப்பார்.

    எங்கள் கிராமத்தில் கள்ளர், கோனார், ஆசாரி ஆகிய சாதியினர் உள்ளனர். இவர்களில் ஆண்களை அய்யா என்றும், பெண்களை ஆயா என்றும்தான் நாங்கள் அழைக்க வேண்டும். வயதின் அடிப்படையில் ஆண்களை மூத்தவரே, நடுவுளவரே, இளையவரே என்றும், பெண்களை பெரிய ஆயா, நடு ஆயா, சின்ன ஆயா என்றும் அழைக்க வேண்டும். இத்தகைய அழைத்தலுக்கு அவர்களின் பதில் என்னடா! ஏண்டி! என்பதாக மட்டுமே அமையும். வயதுக்கு மரியாதை என்பதெல்லாம் மேலூர் வட்டாரத்தில் ஒருவழிப் பாதைதான். தப்பித் தவறி கள்ளர்களை ஒருமையில் வா, போ என்று பேசிவிட்டால் (பேச முடியாது) அன்று மாலை பஞ்சாயத்து கூட்டப்படும். இடுப்புக்கு மேல் உடம்பில் துணியில்லாமல், ழங்காலுக்கு மேல் வேட்டியை மடித்துக்கட்டி, அந்த வேட்டி அவிழாமல் இருக்க அதன்மேல் துண்டைக் கட்டி, நெஞ்சில் மண் ஒட்டும்படி மூன்றுமுறை கும்பிட்டு விழுந்து கள்ளர்களின் விசாரணைக்குப் பதில் சொல்ல வேண்டும். விசாரணையின்போது அக்கா ஆத்தா என்கிற வசவுகள் கிடைக்கும். சில நேரங்களில் அடி, உதை விழும். அபராதம் போட்டால் அதைக் குறைக்கும்படி கோரி முழங்கால் தேய கும்பிட்டு விழ வேண்டும்.

    குடும்ப வாழ்வில் எங்கள் சேரி மனிதர்கள் மிகவும் கண்ணியமானவர்கள். கொலை, கொள்ளை, திருட்டு, விபச்சாரம், சாராயம் காய்ச்சுதல் போன்ற குற்றச் செயல்களைச் செய்ததாக எமது சேரி மக்கள் மீது மேலூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவானதாகக் கூற முடியாது. காவல் நிலையத்திற்குச் செல்வதை எமது மக்கள் கேவலமாகக் கருதுவார்கள். இப்படிப்பட்டவர்கள், கும்பிட்டு விழும் தண்டனையிலிருந்து எவரும் தப்பவில்லை. என் அப்பா பலமுறை கும்பிட்டு விழுந்திருக்கிறார். இத்தகைய எனது கிராம வாழ்வின் இருண்ட காவியத்தை நான் விரிவாக எழுத இருக்கிறேன்.

    நீங்கள் எப்படி மார்க்சியத்தின்பால் ஈர்க்கப்பட்டீர்கள்?

    மதுரையில் மாமா வீட்டில் தங்கிப் படித்தபோதுதான் சிட்டாலாட்சி நகரில் ஒரு குடிசையில் தங்கியிருந்த தோழர் கே. ராஜ்குமார் (மறைவு) எனக்கு மார்க்சியத்தை அறிகப்படுத்தினார். அவரது வழிகாட்டுதலின்படியே மார்க்சிய லெனினிய நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். மதுரை நியூ செஞ்சு புத்தக நிறுவனத்தில் உறுப்பினரானேன். அப்போது சிவப்புப் புத்தகங்களை வெளிப்படையாகக் கையில் வைத்துக் கொண்டு செல்ல முடியாது. மார்க்சிய லெனினியக் கருத்துகளை மக்கள் மத்தியில் விதைப்பதற்குப் படித்த இளைஞர்களைக் கொண்ட ஒரு குழுவை ராஜ்குமார் உருவாக்கினார். அக்குழுவில் தோழர் பொதும்பு சோனை, தோழர் மதிவாணன், தோழர் கோபால கிருஷ்ணன், த. மு.எ.ச.வின் இன்றையப் பேச்சாளர் தோழர் கிருஷ்ண குமார் நான் உட்படப் பலர் இருந்தோம். மதுரை நகரின் மிகவும் பின்தங்கிய சில குடிசைப் பகுதிகளில் இளைஞர்களின் ஆதரவோடு தோழர் ராஜ்குமார் பட்டிமன்றங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்து எங்கள் குழுவை களமிறக்கினார். எங்கள் குழுவில் உள்ள அனைவரும் மார்க்சியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தபோதிலும், தோழர் சோனையும் நானும் நக்சல்பா இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டோம். இச்செய்திகள் விரிவாக எழுதப்பட வேண்டியவையாகும். கிராம வாழ்வில் நான் எதிர்கொண்ட பாடுகளை உணர்ந்து, அவைகளை எதிர்கொள்வதற்கான விழிப்பைப் பெறும் தளமாக மார்க்சியம் எனக்கு அமைந்தது. சேரிமனிதர்களில் மார்க்சியத்தை உள்ளீடாகக் கொண்டு இயங்கும் தோழர்கள், இந்துத்துவம் உள்ளிட்ட வரலாற்றுப் பகைமையை எதிர்கொள்ளும் தனித்த போக்கை, இன்று தமிழகம் கண்டு வியக்கிறது.

    அய்யா பெரியார், மேலூர் பேருந்து நிலையம் அருகில் ஒருறை பொதுக் கூட்டத்தில் பேசியதைப் பார்த்ததாக எனக்கு நினைவிருக்கிறது. டவுசர் போட்ட வயசில் பார்த்த அந்த நிகழ்வை, என்னால் விளக்கமாகச் சொல்ல முடியவில்லை. எம்.ஜி.ஆர். படங்களை நான் விரும்பிப் பார்ப்பேன். அதன் தாக்கம் என்னை தி.மு.க. வின் அனுதாபியாக மாற்றியது. பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையை வைத்தே தி.மு.க.வை அப்போது சாமி இல்லை என்று சொல்கிற கூட்டம் என்பதாக மக்கள் பேசுவார்கள். தி.மு.க. அனுதாபியாக இருந்த என்னைப் பார்த்ததும், “சாமி இல்லை என்று சொல்கிறவன் வருகிறான்’ என்று கிண்டலடிப்பார்கள். அப்பாவின் காலத்தில் காங்கிரஸ் தி.மு.க. என்பதாகத் தமிழகம் பிரிந்து கிடந்தது. கிராமங்களை கள்ளர்கள் ஆளும் சூழலில் மேலூர் தனித் தொகுதியாகவும், கக்கன் அமைச்சராகவும் இருந்த நிலையில், கள்ளர்கள் காங்கிரஸ் கட்சி மீது மிகுந்த வெறுப்புக் கொண்டிருந்தார்கள். மேலும், சேரி மக்களுக்கும் தேவர்களுக்குமிடையே முதுகளத்தூரில் நடைபெற்ற சாதிப் போரையொட்டி, முத்துராம லிங்கத் (தேவரை) காமராசர் தலைமையிலான காங்கிரஸ் அரசு கைது செய்து சிறையிலடைத்தது. முத்துராமலிங்கம் மீது சாதி அபிமானம் கொண்ட காங்கிரஸ் கட்சி கள்ளர்கள் எல்லாம் காங்கிரசிலிருந்து விலகி, அக்கட்சியை ஒழிப்பதற்கானப் பிரச்சாரத்தில் இறங்கினார்கள். இத்தகைய எதிர்ப்பு, கள்ளர்களில் பெரும் பகுதியினரை தி.மு.க.வை நோக்கி நகர்வதற்கான நிர்பந்தத்தை ஏற்படுத்தியது. தி.மு.க. வழியே அய்யாவை அறிந்த நான், தி.மு.க.வில் ஒருபோதும் உறுப்பினராயிருந்ததில்லை. ஏனெனில், தி.மு.க. அப்போது மைனர்களையும், சாதிவெறியர்களையும் தலைவர்களாகக் கொண்டு வளரும் கட்சியாக இருந்தது.

    அய்யா பெரியாரின் நூல்களை என்னிடம் கொடுத்து வாசிக்கத் தூண்டியவர், மறைந்த தோழர் மலைச்சாமி என்பது குறிப்பிடத்தக்கதாகும். என்னிலும் வயது குறைவுடைய அவர் “தலித் பேந்தர்ஸ் ஆப் இந்தியா’ எனும் அமைப்பைத் தமிழகத்தில் நிறுவியவர். மலைச்சாமி மிகச் சிறந்த பெயார் கொள்கைப் பற்றாளர். மதுரை அவனியாபுரம் பெரியார் நகரை இருப்பிடமாகக் கொண்ட மலைச்சாமி, தமிழகத்தில் திராவிடர் கழகத்தை வேரூன்றச் செய்தவர்களில் ஒருவரும், தமிழக எண்ணெய் பலகாரக் கடைகளின் உரிமையாளரும், சேரி மக்களின் விடுதலையில் மிகுந்த அர்ப்பணிப்புடையவருமான அய்யா தேவசகாயம் அவர்களை அழைத்து, திராவிடர் கழகக் கூட்டம் நடத்தினார். அக்கூட்டத்தில் நானும் ஒரு பேச்சாளராகப் பங்கேற்றேன். நான் பங்கேற்ற முதல் பகுத்தறிவாளர் கூட்டம் அதுதான். மதுரை மாவட்ட திராவிடர் கழகத்தின் இன்றைய தலைவர் தோழர் மகேந்திரன், உயர்நிலைப் பள்ளியில் என் வகுப்புத் தோழர். பெரியார் குறித்து அவர் எனக்கு நிறையச் சொல்லுவார்.

    மேதை அம்பேத்கரை அவரது நூற்றாண்டு தினத்திற்குப் பிறகுதான் அறிய நேர்ந்தது. மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், காந்தி மியூசியம் நூலகத்தில் தனஞ்செய்கீர் எழுதிய அம்பேத்கர் வாழ்க்கை குறித்த நூலைப் பார்த்திருக்கிறேன். போதிய ஆங்கில அறிவு இல்லாத நிலையிலும், அம்பேத்கரைக் குறித்து அறியாத நிலையிலும் அந்நூலை நான் படித்ததில்லை. எங்கள் சேரிக்கு அம்பேத்கரை அறிகப்படுத்திய பெருமை, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பையே சேரும். அதே சமயம், தி.மு.க., அ.தி.மு.க. நுகத்தடிகளில் நீண்ட காலம் பிணைக்கப்பட்டிருந்த எமது மக்களை மீண்டும் மாட்டுவதற்கான திசையை நோக்கிச் செல்வது, அச்சத்தை அளிப்பதாக உள்ளது. மேற்கண்ட வரலாற்றை நான் பதிவு செய்யக் காரணம், எமது விடுதலைக் குரல் கலைக் குழுவின் இசைப் பயணத்தில் பங்கேற்கும் கலைஞர்கள் அனைவரும் பாட்டாளிகளாகவும், நாங்கள் விதைக்கும் பாடல்களும், செய்திகளும் சோசலிசத்திற்கான வர்க்க ஓர்மை, இந்துத்துவத்தை அழிப்பதற்கான அணிசேர்க்கை, பவுத்தத்தை முன் மொழிதல் போன்ற தத்துவப் பின்னணியோடு இயங்குவதற்கு அடித்தளமாக உள்ளது என்பதைப் பகிர்ந்து கொள்வதற்காகத்தான். இத்தகைய பின்புலத்தோடு கலைத் தளத்தில் மக்களிடமிருந்து நான் கற்ற அறிவையும் பெற்ற அனுபவத்தையும் பகிர்ந்து கொள்வது பொருத்தமாக அமையும் என்று நம்புகிறேன்.

    தாங்கள் ஒரு இசைக் கலைஞராக உருவானது எப்படி?

    மனிதன் அழகியலின் பாதியாக இருக்கிறான். வாழ்வின் பன்முக நிலைகளில் மனிதனின் தொடர்ச்சியான இயங்குதலுக்கு கலை இலக்கியம் உந்து சக்தியாக அமைகிறது. குரலிசை, விரலிசை, ஆட்டம், நாடகம், கூத்து ஆகிய கலை வடிவங்கள் தமக்குரிய வடிவம், உத்தி, உள்ளடக்கம் ஆகியவற்றால் மனித குலத்தை மகிழ்விக்கிறது. உழைப்பை அடிப்படையாகக் கொண்ட மண்சார், மரபுசார் கலைகளைப் படிப்பது, பரப்புவது, தரவுகளைச் சேகரிப்பது, நிகழ்த்துவது, பாதுகாப்பது ஆகிய வேலைகள் மட்டுமே ஒருவனை கலைஞன் என்று அங்கீகப்பதற்கானத் தகுதியாகிவிட்டது. இது, படிப்பாளிகளின் பிழைப்புத் தொடர்பான பணிகளில் ஒரு பகுதி மட்டுமேயாகும். மேலும், தனது முன்னோர்கள் கலைஞர்களாக இருந்தார்கள் என்கிற “பரம்பரை பம்மாத்து’ கலைத் தளத்தில் கூச்சமற்ற உரையாடலாக வெளிப்படுகிறது. பிரபுத்துவ வழிப்பட்ட இச்சிந்தனை, கலைத் தளத்தில் அதிகாரம் செலுத்துவதற்கான தந்திரமாகக் கையாளப்படுகிறது. மக்களை நேசிப்பதும், அவர்களின் பாடுகளுக்கான மூலங்களைக் கண்டறிவதும், அத்தடைகளை உடைப்பதற்கான கலை வடிவங்களைப் படைப்பதும், அதன் வழியே எதிர்கொள்ளும் விளைவுகளை மன உறுதியுடன் எதிர்ப்பதற்கானப் புரட்சிகரத் தத்துவத்தைப் பின்புலமாகக் கொண்டிருப்பவனையே கலைஞன் என்பதாக மக்கள் அங்கீகரிக்கிறார்கள்.

    இத்தகைய அனுபவங்களோடு எப்படி ஒரு கலைஞனாகப் பணமிக்க நேர்ந்தது என்பதை இங்கே தான் பதிவு செய்ய விரும்புகிறேன். கலைத் தளத்தில் பாடல் எழுதுவது, பண்ணமைப்பது, பாடுவது, நாடகம் மற்றும் நாடக விமர்சனம் எழுதுவது போன்ற தளங்களில் நான் இயங்குவதற்கு, கடவுளோ அல்லது அது தொடர்பான மத நிறுவனங்களோ காரணமல்ல என்பதைச் சொல்வதில் எனக்கு எவ்விதத் தயக்கமில்லை. என்னிலிருந்து வெளிப்படும் கலை முயற்சிகள் அனைத்திற்கும் வேராய், விழுதாய் இருப்பவர்கள் எழுத்தறிவற்ற, பிறர் உழைப்பைச் சுரண்டாத தங்கள் எண்சாண் உடம்பை மட்டுமே நம்பிப் பிழைக்கிற தினக் கூலிகளான என் தாய் தந்தை போன்ற ஏழைகளான என் சக மனிதர்கள்தான். மண்ணின் கலைகளுக்கு இவர்கள்தான் அடித்தளம். வளர்ச்சி விதிகளைப் போலவே பாடற்தளத்தில் உழைக்கும் மக்களிடமிருந்து தொடர்ச்சியாக நான் கற்றுக் கொண்டவைகளை மூன்று நிலைகளில் வகைப்படுத்துகிறேன் : 1. பாடல் கேட்ட வரலாறு 2. பாடல் பாடத் தொடங்கிய வரலாறு 3. பாடல் எழுதத் தொடங்கிய வரலாறு என்பதாகும். வந்த வழிதான் செல்லும் வழிக்கானத் தொடர்ச்சியாகும்.

    தந்தை பாடிய தாலாட்டுப் பாடல்

    என் தந்தை ஓர் விவசாயத் தொழிலாளி. உழைப்பின் களைப்பை மறக்க இரவு நேரங்களில் நல்லதங்காள், அச்சந்திரன், கட்டபொம்மன், ஊமத்துரை, மதுரை வீரன் ஆகிய வரலாற்றுப் பாடல்களை எங்கள் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து சிம்னி விளக்கின் ஒளியில் படித்து சத்தம் போட்டு இசையுடன் பாடுவார். பள்ளிப் பருவத்தில் இத்தகைய பாடல்களை, என் தந்தையின் அருகில் அமர்ந்து பாடக் கேட்டிருக்கிறேன். ஆனால், நான் கேட்ட முதல் பாடல் அதுவல்ல. எனது சின்ன அக்காள் பூச்சியம்மாளின் மூத்த மகன் கணேசன் மழலையாய் இருந்தபோது, என் தந்தை தாலாட்டுப் பாடியதைக் கேட்டிருக்கிறேன். பேரனுக்குத் தாலாட்டுப் பாடியவர், தன் சொந்த மகனுக்குத் தாலாட்டுப் பாடாமல் இருந்திருக்க நியாயமில்லை. தந்தை வழிச் சமூக அமைப்பில் ஆண் குழந்தைக்குரிய முக்கியத்துவம் குறிப்பாக ஒரே மகன் என்கிற நிலையில் காணப்படும் பெற்றோர்களின் மகிழ்ச்சியும் பல்வேறு பரிமாணங்களாக வெளிப்படும். உறக்கத்திற்கான ஓசையாகவும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் செய்தியாகவும் உழைப்பாளிகளுக்கேயுரிய இயல்பான உரத்த சத்தத்துடன் என்னைத் தூங்க வைக்கப் பாடிய தாலாட்டுப் பாடல்தான் உள்வாங்க இயலாத மழலைப் பருவத்தில் என் உடம்பைத் தாக்கிய, என் புலன்களைப் பரவசப்படுத்திய முதல் பாடல் என்று நம்புகிறேன்.

    செல்வந்தர் குடும்பங்களில் குழந்தைகள் மகிழ்வுடன் தூங்குவதற்குத் தொட்டிலின் உச்சியில் பொம்மைகள், கிலுகிலுப்பான்களைக் கட்டித் தொங்கவிடுவார்கள். கண்கள் அழகிய பொருட்களைப் பார்க்கவும், காதுகள் தாலாட்டு இசையை ரசிப்பதற்குமான சூழலில், குழந்தைகள் சீக்கிரம் தூங்குவதற்கு இத்தகைய ஏற்பாடுகள் வசதியாக இருக்கும். ஆனால், சேரிக் குழந்தைகளோ கூரை வீட்டின் கடுகளில் அழுக்குப் படிந்துள்ள ஓட்டடையைப் பார்த்துக் கொண்டே தூங்கும் அவலம். தொட்டில் சேலையும் அடிக்கடி மாற்றப்படுவதில்லை. மூத்திரத் துணிகளில் படியும் கிருமிகளால் குழந்தைகள் நெளிந்து தூங்கச் சிரமப்படும் நிலை. இதுபோன்ற சூழல், தாலாட்டுப் பாடலுக்கான நோக்கத்தையே அர்த்தமற்றதாக்கி விடுகிறது. சிந்திக்கத் தொடங்கும் முன்பே சேரிக் குழந்தைகள், இதுபோன்ற பலவிதமான பாடுகளை எதிர்கொள்வது இன்றும் தொடர்கிறது.

    இத்தகைய அவலச் சூழலில் வளரும் பல்லாயிரம் சேரிக் குழந்தைகளின் தாலாட்டுப் பாடல் கேட்டு வளர்ந்த குழந்தைகள், எண்ணிக்கையில் மிகமிகக் குறைவென்றே கருதலாம். வாய்ப்புப் பெற்ற குழந்தைகளில் நானும் ஒருவனாக இருந்தமைக்கு என் தந்தை மிகுந்த நன்றிக்குரியவராகிறார். குழந்தைக்குத் தாலாட்டுப் பாடுவது, பெற்ற தாயிடமிருந்து வெளிப்படும் வாய்மொழி இலக்கியம். மூடை நெல்லை முக்காமல் தூக்கும் உடல் வலிமை, நாலு குப்பம் நாற்று முடிச்சுகளை தலையில் சுமந்து முழங்கால் சேற்றுக்குள் பாய்ச்சல் வேகத்தில் நடக்கும் உரமேறிய கால்கள், நாற்று முடிச்சுகளை, நாற்பதடிக்கப்பால் விழும்படி வீச்சோடு எறியும் வாகான கைகள் என் அம்மாவுக்கு இயற்கை அளித்த கொடையாகும். இவ்வளவு வலிமையைத் தந்த இயற்கை, அவரை மொழியற்ற பெண்ணாக்கி இதன் வழியே தாலாட்டுப் பாடுவதற்கான திறனையும், அழகியலையும் தர மறுத்துவிட்டது.

    தொடரும்…

    தலித்முரசு – ஜனவரி – பிப் 2006,

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Article“அதெல்லாம் கிராமத்துல மட்டும் இல்லை சார்!”
    Next Article மாற்றுப்பாதை – பாரதி நிவேதன்
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    ரமாபாய் அம்பேத்கர் பிறந்த தினம்

    February 7, 2026

    அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2

    December 23, 2025

    Comments are closed.

    Newsletter

    Recent Posts
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    • கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்
    Random Posts

    Tech Insights on Apple’s Mac Mini, MacBook Air and Pro with Latest iPhone-like Chips

    January 14, 2021

    Economics Of Oppression: The Growing Precarity Of Dalit Lives In India

    September 12, 2022

    மார்க்சீயர் வேடத்தில் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் ரங்கநாயகம்மா – ஆதவன் தீட்சண்யா

    August 8, 2016

    காந்தி ஒரு மகாத்மாவா?

    October 2, 2018
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    March 13, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

     

    Loading Comments...
     

      %d