தனி இருட்டு – தய். கந்தசாமியின் ஒரே தொகுப்பு. ஆனால், தலித் இலக்கியம் குறித்த எந்த ஆய்வானாலும் இவருடைய “தனி இருட்டு’ தொகுப்பிலிருந்து தரவுகளை எடுத்தாளாமல் அந்த ஆய்வு நிறைவடையாது!
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தது அவருடைய எழுத்து. தான் எந்தக் கூட்டத்தில் பங்கேற்றாலும் தனக்கான கோரிக்கையை, உரிமையை அடையாமல் அவர் சமரசமானதில்லை. அப்படியானதொரு கலகக்காரர் அவர்! சென்னை சட்டக் கல்லூரியில் படிக்கும்போது அவர் இங்கு நிகழ்த்திய இலக்கியக் களங்கள், சாதி ஒழிப்பு இலக்கியமான தலித் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தன.
எந்தவொரு தொகுப்பிலும் உள்ள முதல் கவிதை, அந்த எழுத்தாளனின் கவிதை கோட்பாட்டைப் பேசிவிடும். “உயிராசுவாசம்’ என்ற கந்தசாமியின் முதல் கவிதையும் அப்படித்தான் பேசுகிறது. தொகுப்பு வெளிவந்த 2000 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் முக்கிய தலித் பிரச்சினைகளான மேலவளவு, பாப்பாபட்டி, மலந்திணிக்கப்பட்ட கொடுமை ஆகியவை நிகழ்ந்தபோது எழுதப்பட்டவை.
எழுதவே முடிந்ததில்லை
எல்லாரும் மெச்சும்படியான
சொல்லொன்றையும்
– எனத் தொடங்கி
மலம் திணிக்கப்பட்ட
ஓக்களிப்பு தீர்ந்து
நிச்சயமெழுதுவேன்
நீ மெச்சும்படியாக
சில கொலைகளாவது
செய்ததன் பிறகு
– என முடியும் அக்கவிதை, கந்தசாமியின் கொள்கை உறுதியை வாசிப்பவருக்கு உணர்த்தும்.
வாசிப்பாளர் தலித்தாக இருக்கும் பட்சத்தில் அவருக்குள் இக்கவிதை, சாதிக்கெதிரான மனநிலையையும்; தலித்தல்லாத வாசிப்பாளருக்கு இந்த சமூக அமைப்பின் மோசமான அடுக்குகள் மீது கோபமும், அதைத் தகர்க்க தன் சாதி மீதான வெறுப்பையும் உரு வாக்கும். இதுதான் தலித் எழுத்தின் செயல்பாடு.
கந்தசாமியின் “அப்பாவும்…’ என்ற கவிதை, தலித் தந்தையர்களின் அடையாளம். ஒவ்வொரு தலித் தந்தையும் தம் மக்களை கரையேற்ற நிகழ்த்தும் வாழ்க்கைப் போராட்டமே ஒரு சாகசம்தான். அதை அவருடைய கவிதை மிகவும் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறது. “இருப்பாய் தமிழா நெருப்பாய்’ கவிதை, ஒரே தருணத்தில் தமிழராகவும் சாதியராகவும் இருப்பது எவ்வளவு அபத்தம் என்பதைப் பற்றி பேசுகிறது. தமிழனாய் இருந்து கொண்டே பின்பற்றப்படும் சாதியம், இந்துத்துவம், மூடநம்பிக்கைகள் என அக்
கவிதையில் அவர் நடத்துகின்ற உரையாடல் – “தமிழராய் ஒன்றிணைவோம்’ என்று மொழிக்கூச்சல் போடும் அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய வரிகள்.
செருப்பாய்க் கிடந்து
சீரழிந்தது நேற்றோடு போக
உன்னிடமும் கொஞ்சம் நெருப்பிருக்கலாம்
முதலில்
சாதியம் கொடுத்த சட்டையைக் கழட்டு
வா…
நிச்சயம் விடியும்
தமிழா நீ நெருப்பாய் இருந்தால்
என முடியும் கந்தசாமியின் கவிதை, அதிநுண்ணரசியல் வாய்ந்தது.
அத்தகைய தீவிரம் கொண்ட கவிதைகள் கந்தசாமிக்கு வாய்த்தது என்பது, ஏதோ “போலச் செய்தல்’ என்னும் செயலால் அல்ல; அவருடைய ஒன்பது ஆண்டுகால அரசியல் வாழ்க்கை அது. கல்லூரிப் படிப்பு, மன்னார்குடி ராஜகோபால் அரசினர் கலைக்கல்லூரியில் நடந்த விடுதி கேட்டு போராடிய போராட்டத்தால் இடைநிற்க, “தலித் பண்பாட்டுப் பேரவை’ என்னும் அமைப்பில் அவர் இயங்கிய காலங்களில் களங்களில் கிடைந்த ஏராளமான அனுபவங்கள் அவை. அவருடைய பெரும்பாலான கவிதைகள், அத்தகைய களச்செயல்பாட்டிலிருந்து விளந்தவையே.
கந்தசாமியின் ஒவ்வொரு கவிதையும் கண்டிப்பாக பேசப்பட வேண்டியவை. இப்படிப்பட்ட ஆகச் சிறந்த எழுத்தாளரான கந்தசாமி, ஏன் தொடர்ந்து இலக்கிய உலகில் இல்லாமல் போனார் என்பது, உண்மையான இலக்கிய அக்கறை கொண்டோரின் கேள்வி. இதையேதான் நாம் அவரிடமும் முன் வைத்தோம்.
“இந்தக் கவிதைகள் நான் நினைத்த மாதிரி பேசப்படவில்லை. இது குறித்து பேசுவார்கள் என நினைத்த தலித் அறிவுஜீவிகள்கூட பேசவில்லை. அதனால்தான் எழுதாமல் இருந்துவிட்டேன்” – இது அவர் அளித்த பதில். இது, எல்லா இளம் தலித் எழுத்தாளர்களுக்கும் நேர்வதுதான். தற்பொழுது கவிதைகளை மீண்டும் எழுதிக் கொண்டிருக்கும் தய். கந்தசாமி, அவற்றை ஒரு தொகுப்பாகக் கொண்டுவரும் எண்ணத் தில் இருக்கிறார். இவ்வாறு கவிதை மனம் அசலாக இருக்கும் நேர்மை, சிலபேருக்குத்தான் உண்டென்றால், அந்தச் சிலரில் கந்தசாமியும் ஒருவர்.
வெண்மணிக்கும் திருக்குவளைக்கும் இடையேயுள்ள வலிவலம் என்னும் ஊரில் பிறந்த கந்தசாமி, தான் பிறந்த பூமியின் அரசியல் வெப்பத்தை எப்போதும் தன் உரையாடல்களில் கொண்டுள்ளார். வெண்மணியில் தலித்துகளை உள்ளே விடாத நிகழ்வுகளைக் கூறும்போதும், அவர் அடைந்த வன்கொடுமைகளைக் கூறும்போதும் அக்கோபத்தின் வெப்பநிலை கூடுகிறது.
தன் ஊரிலேயே பள்ளிக் கல்வியை முடித்த அவர், மன்னார்குடியில் அரசுக் கல்லூரியில் படிக்கும்போது அக்கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களால் அரசியல்மயப்படுத்தப்பட்டõர். பல்வேறு களப்பணிகளுக்குப் பிறகு சட்டக்கல்லூரியில் சேர்ந்து படித்து, தற்பொழுது வழக்குரைஞராக செயல்படுகிறார்.
தலித் பண்பாட்டுப் பேரவையில் பணியாற்றும் காலத்தில் பள்ளர் பறையர் என்ற வேறுபாடின்றி, தலித்துகள் தங்கள் பகுதியில் ஒன்றாய் நின்று களப் பணியாற்றி யதையும், பிற்காலங்களில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் அவர்கள் பிரிந்து சென்றதையும், அக்காலத்தில் பொதுவுடைமை இயக்கக்காரர்கள் தலித்துகள் மீது நிகழ்த்திய வன்முறைகளையும் அவர் கவிதை மனம் நினைக்கையில் கோபக் கனலாக மாறிவிடுகிறது.
அவர் கவிதைகளில் இருக்கும் நவீன கவிதைகளுக்கான கூறுகள், மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை. ஒரு தலித் எழுத்தாளரால் இப்படி எழுத முடிந்திருக்கிறதே என்னும் கவனிப்புகூட பொது வாசகத்தளத்தில் இல்லை. அவருடைய சொற்சேர்க்கைகள் புதிய உணர்வினைத் தரக்கூடியதாக இருக்கின்றன. “கானல் கூடுகள்’, “கலகாஞ்சலி’, “மூன்றாவது கன்னம்’, “தேவதைக்கறி’ என்னும் தலைப்புகளேகூட தய். கந்தசாமியின் கவிதை வலிமையை வெளிப்படுத்துகின்றன.
தலித் இலக்கியம் குறித்து பேச்சு நகர்ந்தபோது, தற்பொழுது தலித் இலக்கியத்தை மறுப்பவர்களை அவர் மறுக்கிறார். முதலாளி தொழிலாளி என்ற வேறுபாடு இருக்கும் வரை, வர்க்கம் இருக்கும் என்று கூறுவதைப் போல, சாதிய வேறுபாடுகள் இருக்கும் வரை கண்டிப்பாக தலித் இலக்கியம் இருக்கும் என்று அவர் பேசும்போது, இன்னொரு முக்கியமான கருத்தைப் பகிர்ந்து கொண்டார் :
“தலித் இலக்கியமும் தலித் அரசியலும் ஒன்றோடொன்று சரிபார்த்துக் கொள்ளப்பட வேண்டியவை. தலித் அரசியல் பின்னடைவை சந்தித்தால், தலித் இலக்கியமும் பின்னடைந்த தோற்றத்தையே தரும். மேலும், தலித் அரசியல் என்பது நாடாளுமன்ற அரசியலோடு முடிந்துவிடக் கூடியது அல்ல. அது சமூக பண்பாட்டுப் போராட்டத்தையும் முன்னெடுக்கக் கூடியதாய் இருக்க வேண்டும். அதுதான் உண்மையான தலித் அரசியல்.
“இதற்கு நேர்மாறாக இருப்பார்கள் எனில், தலித் தலைவர்களே தலித் அரசியலுக்கு எதிரானவர்களாக இருப்பார்கள். “மேலும் எல்லா சாதிக்காரங்கக்கூடதான் நான் பழகுறேன், சாப்பிடுறேன் என்று சாதாரணமானவர்கள் சொல்லுவதற்கும், கருணாநிதியும் ஜெயலலிதாவும் என்னிடம் சமமாகத் தான் பேசுகிறார்கள் என்று தலித் தலைவர்கள் சொல்வதற்கும் எந்த வேறு பாடும் இல்லை” என்றும் அவர் உறுதியாகக் கூறுகிறார்.
மூடநம்பிக்கைகள், சமூகக் கட்டுப்பாடுகள், சாதிய வன்முறை ஆகியவற்றைப் பதிவு செய்யும் அவருடைய கவிதைகளில் காதலும் இழையோடுகிறது. காதலை ஏற்க மறுப்பதற்கு பல காரணங்கள் சமூகத்தில் உள்ளன. ஆனால், கந்தசாமியின் கவிதையில் –
கூடவே
கடைசி சந்திப்பிற்குப் பிறகு
வெறிச்சோடிக்கிடக்கும்
கவிதையேட்டையும்
என்னோட சேரியில் பிறந்ததால்
அவள் ஏற்க மறுத்த
ரத்த ஈரமற்று வெளிறிக்கிடக்கும்
என் இதயத்தின் சடலத்தையும்
அவளிடமே சேர்த்து விடுங்கள்
என்னும்போது, கவிதை ஒரு சமூகத் தேவையை அடைகிறது. இந்தக் கவிதைக்கு அவர் வைத்திருக்கும் தலைப்பு “உயில்’ ஒரு தலித், தன் உயிரை மட்டுமே உயிலாக எழுத முடியும் என்னும் குறிப்பு இழையோடும் நுட்பம் பார்க்கப்பட வேண்டிய ஒன்று.
கவிதையின் பல நுட்பங்களைக் கொண்டு தலித் கவிதைகளை ஆக்கிய தய். கந்தசாமியின் எழுத்து, எந்தளவில் சமூகத்திற்குப் பயன்பட்டிருக்கிறது என்ற கேள்விக்கு, தன் பகுதி அளவில் போராட்டங்களின் போது பயன்பட்டிருக்கிறது என்கிறார். ஆனால் நாம் கூறுகிறோம், எந்தக் காலத்திலும் அழியாத பதிவுகளாக யாராலேனும் எப்போதும் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உங்கள் கவிதைகள், சமூகத்தின் விடுதலையை முழங்கிக் கொண்டேயிருக்கும்.
– யாழன் ஆதி
தய். கந்தசாமியை தொடர்பு கொள்ள : 94869 12869