தருமபுரி மாவட்டத்தில் மூன்று தலித் ஊர்கள் கொள்ளையழிப்புக்கு ஆளாகி ஒன்றரை மாதங்கள் கழிந்துவிட்ட நிலையிலும் அதுபற்றிய பேச்சு இன்னும் ஓயவில்லை. அழிக்கப்பட்ட விதமும் அழிமானத்தின் அளவும் பலரையும் அங்கு கண்குவிக்கச் செய்திருக்கிறது. வன்கொடுமைகள் பரவலாக வெளித்தெரிகிற போதெல்லாம் சாதிய ஒடுக்குமுறைக்கும் பாரபட்சங்களுக்கும் முடிவு கட்டிவிட்டுத்தான் மறுவேலை என்பதுபோல கொந்தளிக்கிறவர்கள் பின்பு தணிந்தடங்கி காணாமல் போய்விடுகிற வழக்கம் இவ்விசயத்தில் உதவாது என்பது பலருக்கும் தெரிந்திருக்கிறது. தொடர்ந்து களத்தில் இருந்தேயாக வேண்டிய கட்டாயத்திற்குள் தாங்கள் தள்ளப்பட்டிருப்பதை சாதி மறுப்பாளர்களும் சமத்துவ விரும்பிகளும் மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் மெதுவாகவேனும் உணரத்தலைப்பட்டிருக்கிறார்கள். அப்படியொரு கட்டாயத்திற்குள் நெட்டித் தள்ளி அவர்களது நிகழ்ச்சிநிரலை முடிவு செய்கிறவர்களாக சாதியவாதிகள் மாறியிருக்கிறார்கள்.
அழித்தொழிப்பை நியாயப்படுத்த அவர்கள் வெளிப்படையாக சொல்லிக் கொள்ளும் காரணங்களைவிடவும் வலுவான காரணங்கள் அவர்களது ஆழ்மனதிலும் இயல்புணர்ச்சியிலும் படிந்திருக்கின்றன. அவற்றை நிறுவ முடியாது, ஆனால் யூகிக்கலாம் அல்லது உணரலாம். அவர்களது சாதிப் பற்றானது தலித் விரோதத்தை ஆதாரமாக கொண்டுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த விரோத மனப்பான்மை, தலித்துகள் தம்மைவிட கீழானவர்கள் என்கிற கற்பிதத்தின் வழியே தக்கவைக்கப்பட்டுள்ளது. அவர்கள் உருவகித்து வைத்திருக்கிற இந்த கற்பிதமான சித்திரம் உருக்குலையும் போது யாருடைய தூண்டுதலுமின்றி தன்னியல்பாகவே பதற்றமடைகிறார்கள். அஸ்திவாரக்கல் உருவி எடுக்கப்பட்ட ஒரு கட்டிடத்தைப்போல ஆட்டங்கண்டு போகிறார்கள். தங்களுக்கு கீழாக அழுத்தி வைக்கப்பட்டிருந்த தலித்துகள் அந்தநிலையை மறுத்து வெளியேறிவிட்டால் பிறகு வன்னியர்கள் தம்மை மேல்சாதி என்று கருதிக்கொள்வதற்கான அடிப்படையே தகர்ந்துவிடுமே என்று அஞ்சுகிறார்கள். சமத்துவ சிந்தனைக்கும் கூடிவாழும் இணக்க மனப்பான்மைக்கும் எதிரான மனநிலையிலிருந்து உருவாகிற இந்த அச்சத்திலிருந்து தம்மைத்தாமே விடுவித்துக் கொள்ளவே தலித்துகள் மீது வன்கொடுமைகளை நிகழ்த்தப்படுகின்றன.
தலித்துகள் மற்றவர்களால் தமக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரங்களை மறுத்து சுயேச்சையாக வாழ்வதற்காக முயற்சி மேற்கொள்ளும் போதெல்லாம் ‘இப்படியே விட்டா நாளைக்கு நம்மகிட்டயே வந்து சம்பந்தம் பேசுற அளவுக்கு வளர்ந்திடுவானுங்க போலிருக்கே…?’ என்று இளக்காரத்தொனியில் வெளிப்படும் அச்சம், வளரவிடக்கூடாது என்கிற வன்மமாக மாறுகிறது. ‘வளரவிடக்கூடாது’ என்பதன் பொருள் நடை, உடை, பாவனை, உணவு, பழக்கவழக்கம், ரசனை, தொழில், கருத்து வெளிப்பாடு, அரசியல் நடவடிக்கை என எதுவொன்றிலும் தலித்துகளின் சுயேச்சையான தேர்வுகளை தடுப்பதுதான். தலித்துகளின் இந்த வளர்ச்சி அல்லது சுயத்தேர்வினை அவர்கள் பலமுனைகளிலும் தளங்களிலும் தங்களுக்கு போட்டியாளர்களாக வரப்போகிறார்கள் என்பதற்கான முன்னறிவிப்பாக மிகச்சரியாகவே தலித்தல்லாதவர்கள் புரிந்துகொள்கின்றனர். எனவே முளையிலேயே கிள்ளுவது என்கிற நிலையையும் தாண்டி முளைக்கவே விடாமல் அழிப்பதற்கு துணிகின்றனர். தருமபுரியில் தலித் ஊர்கள் அழித்தொழிக்கப்பட்டதை இந்த பின்பலத்தில் வைத்தே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.
சிறுபான்மையினர் பொருளாதாரரீதியாக வலுவடைய முயற்சிக்கும் இடங்களிலும் தருணங்களிலும் அதை தடுக்கும் முயற்சியாகவே மதக்கலவரங்கள் நடத்தப்பட்டுள்ளதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெளித்தோற்றத்தில் வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையான காரணம் வளர்ச்சியை – போட்டியை – அதன் வழியான சமத்துவத்தை தடுப்பதுதான் என்கிற உண்மையை அவ்வாய்வுகளிலிருந்து அறியமுடிகிறது. அதுபோலவே அமெரிக்காவில் பொருளாதார மற்றும் அரசியல் தளங்களில் கறுப்பர்களது போட்டியை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோதெல்லாம் அவர்கள்மீது வெள்ளையர்கள் கூட்டுத்தாக்குதல் நடத்தியும் கொன்றொழித்தும் போட்டியாளர்களை அப்புறப்படுத்தியுள்ளனர். குறிப்பாக கறுப்பர்கள் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் சகிப்பின்மையினாலும் எதிர்வினையாகவும் அதிக எண்ணிக்கையிலான கறுப்பர்கள் வெள்ளையர்களால் கொல்லப்பட்டதை தெரிவிக்கும் ஆய்வுகளும் வெளியாகியுள்ளன ( Hate Crimes in India: An Economic Analysis of Violence and Atrocities against Scheduled Castes and Scheduled Tribes, Smriti Sharma, Delhi School of Economics, April 2012). உத்திரபிரதேச முதல்வராக மாயாவதி இருந்தபோது அங்கு தலித்துகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்ததையும், நாட்டிலேயே அதிகப்படியான வன்கொடுமைகள் நிகழும் மாநிலமாக உத்திரப்பிரதேசம் மாறியுள்ளதையும் விளங்கிக்கொள்ள இந்த ஆய்வுகள் துணைபுரிகின்றன (உ.பி.மாடல் அரசியல் பொறிமுறை நமக்குத்தேவை என்று ராமதாஸ் இதைத்தான் சொல்கிறார் போலும்).
அதிகாரத்தில் ஒரு கறுப்பர் அல்லது தலித் வீற்றிருக்கும்போது மற்ற சமூகத்தவரது உயிருக்கும் உடமைக்கும் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கிற பொதுப்புத்திக்கு முரணாக எதார்த்தம் இருப்பதை போட்டுடைக்கும் ஆய்வுகள் இவை. தமக்கு சமமற்றவர்கள் என்று கருதிக்கொண்டிருப்பவர்கள் ஆற்றலேறி போட்டியாளர்களாக மேலெழுந்து வரும்போது அவர்களை நேர்மையாக எதிர்கொள்ள முடியாத மத/ இனப் பெரும்பான்மையினர் அவர்களை எதிரிகளாக கட்டமைத்தும் கலவரங்களை ஏற்படுத்தி அப்புறப்படுத்தியதுமான இழிவான அணுகுமுறையைத்தான் சாதிப் பெரும்பான்மையின் பெயரால் தருமபுரியில் வன்னியர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
[quotes quotes_style=”bpull” quotes_pos=”left”]
ராமதாஸின் அடுத்தடுத்த அறிக்கைகளையும் நகர்வுகளையும் கவனிக்கறபோதுதான் அவர் உண்மையிலேய தருமபுரி அழிதொழிப்பை திரும்பத்திரும்ப நினைவுபடுத்தவே விரும்புகிறார் என்பதும் அவ்வகையான நினைவூட்டல்கள் வழியாக சமூகத்தை நிரந்தரப்பதற்றத்துக்குள் தள்ளிவிட்டு ஆதாயமடையும் நிகழ்ச்சிநிரலோடு அவர் இருக்கிறார் என்பதும் புரியவந்தது.
[/quotes]
பொதுவாக ஒரு வன்கொடுமை நடந்துவிட்டால், வன்கொடுமையாளர்களை கைதுசெய்து தண்டித்தல், வன்கொடுமைக்கு ஆளான தலித்துகளுக்கு இழப்பீடு கோருதல் என்கிற மரபான அணுகுமுறை இவ்விசயத்தில் பலனளிக்கப் போவதில்லை என்று எடுத்தயெடுப்பிலேயே யாருக்கும் தெரியவில்லை. அழித்தொழிப்புக்கான காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் தலித்துகள் மீது இல்லாததையும் பொல்லாததையும் சொல்ல ஆரம்பித்தபோதும் கூட, தருமபுரி அழித்தொழிப்பின் மீதான கவனத்தை சிதறடிப்பதற்காகவே அவர் அவ்வாறெல்லாம் உளறுகிறார் என்றே பலராலும் சமாதானம் சொல்லிக் கொள்ளப்பட்டது. ஆனால் ராமதாஸின் அடுத்தடுத்த அறிக்கைகளையும் நகர்வுகளையும் கவனிக்கறபோதுதான் அவர் உண்மையிலேய தருமபுரி அழிதொழிப்பை திரும்பத்திரும்ப நினைவுபடுத்தவே விரும்புகிறார் என்பதும் அவ்வகையான நினைவூட்டல்கள் வழியாக சமூகத்தை நிரந்தரப்பதற்றத்துக்குள் தள்ளிவிட்டு ஆதாயமடையும் நிகழ்ச்சிநிரலோடு அவர் இருக்கிறார் என்பதும் புரியவந்தது. ஆகவே அவர் பிரச்னையை தருமபுரிக்கும் அப்பால் நகர்த்திக் கொண்டு போய் கொங்கு வேளாளக்கவுண்டர் பேரவையின் பொங்கலூர் மணிகண்டனோடும் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் நாராயணனோடும் கைகோர்த்திருக்கிறார். எல்லா சாதிகளிலும் உள்ள தலித் விரோதிகளையும் வன்கொடுமையர்களையும் அணிதிரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ள இந்த வினோதக்கூட்டணி தமிழ்நாட்டின் விவாதக்களத்தையும் நிகழ்ச்சிநிரலையும் பின்னுழுக்கப் பார்க்கிறது.
முஸ்லிம்கள் நாலு பொண்டாட்டி கட்டி ஏழேழு பிள்ளை பெற்று இந்தநாட்டில் நம்மைவிட மெஜாரிட்டியாகி நம்மையே ஆட்டிப்படைக்கப் பார்க்கிறார்கள் என்கிற வதந்தியை கிளப்பிவிட்டு இந்துக்களை இந்துவெறியர்களாகவும் முஸ்லிம் விரோதிகளாகவும் உருமாற்றிய இந்துத்வாவின் கருத்தியல் மற்றும் செயல்தந்திரத்தை ராமாதாஸ் வகையறாவின் இந்த வினோதக்கூட்டணியும் கைக்கொண்டுள்ளது. தலித்துகளால் எல்லாச்சாதி பெண்களுக்கும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது என்கிற பொய்முழக்கத்தை திரும்புகிற பக்கமெல்லாம் எழுப்பி சமூகத்தை பீதியில் ஆழ்த்துவதற்காக இந்தக்கூட்டணி பலமாநாடுகளையும் கருத்தரங்குகளையும் ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் தமது சாதியின் மீது ஒருவர் கொண்டுள்ள பற்றினை தலித்விரோதமாக உருமாற்றுவதற்குத் தேவையான அளவில் பொய்களும் புனைவுகளும் களமிறக்கப்படுகின்றன.
***
இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் ‘51 அமைப்புகள் அங்கம் வகிக்கும் அனைத்துச் சமுதாய பாதுகாப்பு பேரவை’ என்கிற புதிய அமைப்பை ராமதாஸ் தொடங்கியிருப்பதாக தொலைக்காட்சியில் செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த அமைப்புக்கும் ஏற்கனவே பொங்கலூர் மணிகண்டன் இறக்கிவிட்டுள்ள ‘தலித்தல்லாதார் பாதுகாப்பு பேரவை’க்கும் குறைந்தபட்சம் ஆறு ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆயினும், என்னதான் மொன்னைக்கத்திகள் என்றாலும் ஒரே உறைக்குள் இரண்டும் இருக்கமுடியாது என்கிற நியதிக்கேற்ப எலிவளை என்றாலும் தனிவளை வேண்டுமென தனித்தனியாக தொடங்கியுள்ளனர். இந்த இரண்டு பாதுகாப்புப் பேரவையினரிடமும் நாம் ஒரே கேள்வியைத்தான் கேட்கவேண்டியிருக்கிறது. ‘‘யாரிடமிருந்து யாரை பாதுகாக்கப்போகிறீர்கள்?’’
தேசிய குற்றப்பதிவு காப்பகமான National Crime Record Bureau தரும் தகவலின்படி, ‘‘தலித்துகளுக்கு எதிராக ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும் ஒரு குற்றம் நிகழ்த்தப்படுகிறது. ஒரு நாளைக்கு 3 தலித் பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்படுகின்றனர். ஒருநாளைக்கு- 11 தலித்துகள் தாக்கப்படுகிறார்கள், 27 தலித்துகள் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு வாரமும் – 13 தலித்துகள் கொல்லப்படுகிறார்கள், 6 தலித்துகள் கடத்தப்படுகிறார்கள் அல்லது அடைத்துவைக்கப்படுகிறார்கள், 5 தலித்துகளின் வீடுகளும் சொத்துகளும் கொளுத்தப்படுகின்றன’’ (http://ncdhr.org.in/esdi/single-day-in-india-3). இவைகூட பல்வேறு சமூகத்தடைகளையும் இருட்டடிப்புகளையும் மிரட்டல்களையும் சரிக்கட்டல்களையும் கட்டப்பஞ்சாயத்துகளையும் மீறி காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட விவரங்கள்தான். தலித்துகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குற்றங்கள் மற்றும் வன்கொடுமைகளின் எண்ணிக்கையின் உண்மையான நிலவரத்தோடு ஒப்பிடும்போது இது ஒரு சிறுவீதம்தான். ஆகவே யாரால் யாருக்கு ஆபத்து என்பதையும் யாரிடமிருந்து யாரை பாதுக்கவேண்டிய நிலை இருக்கிறது என்பதையும் இப்போது ராமதாஸ் வகையறாக்கள் தெளிவுபடுத்த வேண்டும். (இப்படியான வன்கொடுமைகள் எதையும் தலித்துகள் நிகழ்த்தியிருக்காத நிலையில் தலித்தல்லாத பெரும்பான்மைச் சமூகத்தினருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மணிகண்டன் கோருவதும்கூட அபத்தம்தான்)
சரி, தலித்துகள்மீது இவ்வளவு குற்றங்களை இழைக்கின்ற வன்கொடுமையாளர்கள் மீது அப்படி என்னதான் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? 1987 முதல் 2012 வரையான கால்நூற்றாண்டு காலத்தில் தருமபுரி மாவட்டத்தில் பதியப்பட்ட மொத்த வன்கொடுமை வழக்குகளே 292 தான். அதாவது இந்த 300 மாதங்களில் எத்தனையோ வன்கொடுமைகள் இழைக்கப்பட்டிருந்தாலும் சராசரியாக மாதத்திற்கு ஒரு வழக்கு மட்டுமே பதியப்பட்டுள்ளது. அவற்றில் 10 வழக்குகளில் (3%) மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். (SJ & HR unit, Dharmapuri district, PCR and SC/ST Cases Registered by the Local Police and Stage particulars upto March -2012). மாநிலம் முழுவதும் இதேநிலைதான். ஆனால், தமிழ்நாட்டிலுள்ள தலித்தல்லாதவர்கள் அனைவர்மீதும் தலித்துகள் பொய்வழக்கு தொடுத்து வன்கொடுமைத்தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யவைத்து சிறையில் அடைத்துவைத்திருப்பது போலவும் அவர்களை மீட்பதற்காக அனைத்துச் சாதியினரும் ஒன்றுதிரள வேண்டுமெனவும் ராமதாஸ் மணிகண்டன் வகையறா பீதிகிளப்பி வருகிறது.
[quotes quotes_style=”bpull” quotes_pos=”right”]பதியப்பட்ட வழக்குகளிலும் 3 சதவீதமானவற்றில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். அரசு நிர்வாகம், காவல்துறை, நீதித்துறை ஆகியவற்றிலுள்ள சாதியச்சாய்மானம், மெத்தனம், லஞ்சம், காலதமாதம் ஆகியவற்றைப் பயன்படுத்தி மீதமுள்ள 97 சதவீத வழக்குகளிலிருந்து குற்றவாளிகள் தப்பித்துவிடுகிறார்கள்
தேசிய அளவிலும்கூட பெரும்பான்மையான வழக்குகள் பதியப்படுவதில்லை. [/quotes]
பதியப்பட்ட வழக்குகளிலும் 3 சதவீதமானவற்றில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். அரசு நிர்வாகம், காவல்துறை, நீதித்துறை ஆகியவற்றிலுள்ள சாதியச்சாய்மானம், மெத்தனம், லஞ்சம், காலதமாதம் ஆகியவற்றைப் பயன்படுத்தி மீதமுள்ள 97 சதவீத வழக்குகளிலிருந்து குற்றவாளிகள் தப்பித்துவிடுகிறார்கள். ‘காவல்துறையினரிடம் புகார் செய்வது ஒன்றுக்கும் உதவாததாக உள்ளது. பல வழக்குகளில் புகார்கள் பற்றி புலன் விசாரணையே நடத்தப்படுவதில்லை. மற்றும் பலவற்றில் மேல்சாதியினருக்குச் சாதகமான முடிவு எழுதப்படுகிறது… ஹரிஜனின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அவர் அந்த உரிமைகள் இருப்பதையே அறியாதவராக உள்ளார், அல்லது அவர் மேல்சாதியினரின் செல்வாக்குக்கு உட்பட்டு நடக்கிறார். அல்லது முற்றிலும் அலட்சியமாக இருக்கவும் கூடும். வேறு சந்தர்ப்பங்களில் அவர் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணக்காரர்களான மேல்சாதியினருக்கு சாதகமாக நடக்கிறார்…’ என்று 1937 செப்டம்பர் 30 ம் தேதி தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கம் சொன்ன அதேநிலைதான் இன்றளவும் நீடிப்பதனால்தான் 97 சதமான வன்கொடுமை குற்றவாளிகள் தப்பித்துக்கொள்கிறார்கள். அம்பேத்கர் இன்னும் நுணுக்கமாக நிலமையை விவரிக்கிறார். ‘லஞ்சம் வாங்குவேராக மட்டும் இருந்தால் நிலைமைகள் ஒருவேளை இவ்வளவு மோசமாக இல்லாமலிருக்கக் கூடும். ஏனென்றால் இருதரப்பினரில் யார் வேண்டுமானாலும் அவரை விலைக்கு வாங்கிவிட முடியும். ஆனால் துரதிருஷ்டம் என்னவென்றால், காவல் துறையினரும் மாஜிஸ்திரேட்டுகளும் லஞ்சப்பேர்வழிகள் என்பதைவிட அதிகமாக பாரபட்சக்காரர்களாக உள்ளனர். அவர்கள் இந்துக்களிடம் பாரபட்சமாகவும் தீண்டப்படாதவர்களிடம் பகைமை உணர்வுடனும் நடப்பதால் தான் தீண்டப்படாதவர்களுக்குப் பாதுகாப்பும் நீதியும் மறுக்கப்படுகின்றன…’’ (டாக்டர் அம்பேத்கர் நுல் தொகுப்பு , தொகுதி -9 பக்கம் 160 & 161).
இப்படி வன்கொடுமை வழக்குகளிலிருந்து மோசடியாக தப்பித்துவிடுகிற ராமதாஸ் வகையறாக்கள் தொடுக்கப்பட்ட வழக்குகளில் பெரும்பான்மையானவை பொய்யானவை என்பதால்தான் நீதிமன்றம் தங்களை விடுவித்துவிட்டதாக சவடாலடிப்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை. அதற்கும் மேலேபோய் வன்கொடுமை வழக்குகள் அனைத்தும் பொய் என்கிற பெரும்பொய்யைச் சொல்வதோடு வன்கொடுமை தடுப்புச்சட்டத்தையே ரத்துசெய்ய வேண்டும் திருத்தம் வேண்டும் என்றெல்லாம் கூப்பாடு போடுகின்றனர். இவ்வளவு வெளிப்படையாக வன்மத்தோடும் ஆணவத்தோடும் பேசி சமூகத்தில் பதற்றத்தை உருவாக்குகிற ராமதாஸ் வகையறாக்கள் மீது ஒரு வழக்கு பதிவு செய்வதற்குகூட வலுவற்ற நிலையில்தான் இந்த வன்கொடுமை தடுப்புச்சட்டம் இருக்கிறது. ஆனால் அதையும் நீக்கச்சொல்கிறார்கள் என்றால், தலித்துகளை கொடுமை செய்யவும் கொள்ளையடிக்கவும் கொலைசெய்யவும் தலித் பெண்களை வன்புணர்ச்சி செய்யவும் கட்டற்ற சுதந்திரம் வேண்டுமென கொக்கரிப்பதாகத்தானே அர்த்தம்?
எல்லாச்சட்டங்களும் தவறாக பயன்படுத்தப்படுவதைப்போலவே வன்கொடுமை தடுப்புச்சட்டமும் தவறாக பயன்படுத்தப்படுவதற்கான சாத்தியமிருக்கிறது. ஆனால் அதையே காரணம்காட்டி இங்கு வன்கொடுமையோ தீண்டாமையோ நடக்கவில்லை என்பதும் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தையே நீக்கவேண்டும் என்று கோருவதும் எவ்வளவு பெரிய மோசடி? வன்கொடுமை புகார்களில் 10.8% சதவீதமானவை மட்டுமே பொய்யானவை என்று தேசிய குற்றப்பதிவு காப்பகம் தருகிற விவரத்தைப் பின்தொடர்ந்தால் மீதமுள்ள 89.2% புகார்கள் உண்மையானவை என்பது புரியும் (Times of india 2012 sep 27).
***
51 வெறியர்களின் அமைப்பு பற்றி கூற 20.12.12 அன்று மதுரைக்கு வந்த ராமதாஸ் ‘சோறு, வீடு இல்லாமல்கூட வாழலாம். அதைவிட முக்கியம் பெண்களின் மானப்பிரச்னை. காதல், கத்தரிக்காய் என நம் சமுதாய பெண்களை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த சிலர், “நாடக திருமணங்களை’ நடத்தி, பெண்களின் வாழ்க்கையை நாசப்படுத்துகின்றனர். இதை தடுத்து நிறுத்தத்தான் இந்த அமைப்பு’ என்று முழங்கியிருக்கிறார். கிட்டத்தட்ட இதே விசயத்தைதான் வேறுவார்த்தைகளில் மணிகண்டனும் தெரிவித்திருக்கிறார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஆணை மணக்காமல் இருப்பதில்தான் தலித்தல்லாதவர்களின் மானம் இருக்கிறதா என்கிற கேள்வி ஒருபுறமிருக்க, அப்பேர்ப்பட்ட மானம் ராமதாஸ் வகையறாவின் ஆண்களுக்கு கிடையாதா? ஒருநாளைக்கு மூன்று தலித் பெண்களை வன்புணர்வு செய்வதன் மூலம் தினமும் தங்களது சாதிகளைச் சேர்ந்த மூன்றுபேர் ‘மானங்கெட்டுப்போவதை’ தடுப்பதற்கு இந்த ராமதாசும் மணிகண்டனும் பாதுகாப்பு பேரவைகளில் ஏதாவது தீர்மானம் நிறைவேற்றி ‘புனித உறை’ தயாரித்திருக்கிறார்களா என்று பார்த்தால் அப்படி எதையும் காணவில்லை.
இந்த மணிகண்டன் மிகவும் போற்றிக்கொண்டாடும் கொங்குமண்ணின் நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்கள்தான் தமிழ்நாட்டிலேயே எய்ட்ஸ் நோயாளிகள் அதிகமுள்ள இடங்கள் (Exploring Positive Women’s Lives in Namakkal, P.Kousalya with Deepika Ganju). இந்நோய்க்கு முதன்மைக் காரணம் முறையற்ற பாலுறவு என்கிற மருத்துவ உண்மை மணிகண்டனுக்கு தெரியாவிட்டாலும் மருத்துவர்களான ராமதாசுக்கும் குட்டி ராமதாசுக்கும் தெரிந்திருக்கும். அந்த நோயாளிகள் மீது நமக்கு அனுதாபம் இருப்பது வேறுவிசயம், ஆனால் மணிகண்டன் பேசுகிற கற்பு ஒழுக்கம் புனிதம் தீட்டு கொங்குத்தூய்மை என்பதெல்லாம் அவரது சொந்தமண்ணில் என்னவாயிற்று? ஆண்கள் ஊர்ஊராக மேய்ந்து நோய் வாங்கிக்கொண்டுவரும்போது போகாத கொங்கு மானம் பெண்கள் தலித்துகளை திருமணம் செய்வதில்தான் போய்விடுகிறதா? மோட்டார் மற்றும் ரிக் தொழில்- விபத்து- எய்ட்ஸ்- சாவு ஆகியவற்றின் தொடர்ச்சியில் நாமக்கல் மாவட்டத்தில் விதவைகள் எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் பெருகியிருக்கிறது. கைம்பெண்ணின் இயல்பான விழைவுகளையும் கனவுகளையும் உணர்ந்து அப்பெண்கள் மறுமணம் செய்துகொள்வதை ஏற்காத ‘கொங்குமகிமை’ அவர்களது கைம்மையை தவறாக பயன்படுத்திக்கொள்கிறது. கொங்கு ஆண்களின் இந்த வக்கிரம் அப்பகுதியின் கலாச்சார வாழ்வில் ஏற்படுத்திவரும் மாற்றங்களால் போகாத மானம் ஒன்று மணிகண்டனுக்கு இருக்குமானால் அதை அவரே காப்பாற்றிக்கொள்ளட்டும், தலித்துகள் அதை சீந்தக்கூடமாட்டார்கள் என்று சொல்லவேண்டியிருக்கிறது.
தங்கள் சாதிப்பெண்கள் தலித் ஆண்களோடு கூடிவிடக்கூடாது என்பதுதான் இவர்களது ஒரே கவலையாக இருக்கிறது. மேல்வர்ணத்து ஆண் கீழ்வர்ணத்து பெண்- தொடத்தக்கது (அனுலோம), மேல்வர்ணத்துப் பெண் கீழ்வர்ணத்து ஆண் – தொடத்தகாதது (பிரதிலோம) என்கிற மநுவின் விதிகளுக்கு இவ்வளவு விசுவாசமாக இப்போது பார்ப்பனர்கள்கூட இல்லை என்று சந்தடிசாக்கில் சிலர் சொல்லத்துணிந்தார்கள். ஆனால் பிராமணர் சங்கமான ‘தாம்பிராஸ்’ சாதிக்கலப்புத்திருமணத்திற்கு எதிராக நீண்ட காலமாக பேசிவருகிறது என்பதை மறந்துவிடவேண்டியதில்லை. என்ன இருந்தாலும் காடுவெட்டி குருவுக்கும் அவர்கள்தானே குருக்கள். எனவே அவருக்கும் முன்பாகவே (வரலாற்று ரீதியாகவும்கூட) 16.01.2012 அன்றைக்கு சாதிக்கலப்புத் திருமணத்திற்கு எதிராக சத்யப்பிரமாணம் எடுத்திருக்கிறார்கள். ‘‘பிறவியிலே மிகச்சிறந்த பிறவியான மனிதப்பிறவியில், அதிலும் புண்ணிய பாரததேசத்தில் மேலும் குறிப்பாக ரிஷிவர்க்கமாக பிராமணத் தாயார் தகப்பனாருக்குப் பெண்ணாக /பிள்ளையாக பிறந்த நான் எனது வாழ்நாள் முழுவதும் பிராமண பாரம்பர்யத்தைக் கடைப்பிடிப்பேன். எதிர்காலத்தில் என்னுடைய கணவர்/ மனைவி பிராமண சமூகத்தினராகவே இருந்திடுவார். அதாவது வேறு ஜாதியினரை மதத்தினரை கலப்புத்திருமணம் செய்துகொள்ளமாட்டேன். எனது குடும்பப்பெரியவர்கள் மத்தியில்/ ஸ்வாமி சந்நிதியில்/ தாம்பிராஸ் நடத்துகின்ற சத்யபிரமாண நிகழ்ச்சியில் நான் இந்த சத்யப்பிரமாணத்தை எடுத்துக்கொள்கின்றேன்’’. ( திருமண விசயத்தில் மட்டும் கடைபிடிப்பதாக சொல்லும் பிராமண பாரம்பர்யத்தை தொழிலிலும் கடைபிடித்து மணியாட்டிக்கொண்டும் உஞ்சவிருத்தி செய்தும் பிழைக்கவேண்டியதுதானே? ஐஐடிக்கும் ஐஐஎம்முக்கும் எதற்கு படிக்கப்போகிறார்கள்?)
உயர்சாதி என்று தம்மை கருதிக்கொண்டு செறுமாந்துக் கிடந்தவர்களையெல்லாம், நார்நாராய் பிய்ந்த செருப்பை நனைத்து நனைத்து இப்படி பார்ப்பனர்கள் அடித்தப்பிறகும் தலித்துகளை ஒழிப்பதற்காக அவர்களோடு கூட்டு சேர்ந்திருக்கிற ராமதாஸ் வகையறாவை என்னவென்று சொல்வது? சரி, இப்படி நஞ்சான்குஞ்சானையெல்லாம் சேர்த்துக் கொண்டாவது எதிர்க்குமளவுக்கு தலித்துகள் அப்படி எவ்வளவு பேரைத்தான் சாதிமீறி கல்யாணம் முடித்துவிட்டார்கள்? ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஒரு பெண் தலித்தை மணந்துகொண்டிருப்பதைப்போல ராமதாஸ் வகையறா கிளப்பிவிடும் பீதியில் உண்மையென்று ஏதாவது இருக்கிறதா?
தேசத்தை பிளவுபடுத்துவதாய் சாதி இருக்கையில், ஒருங்கிணைக்கும் காரணியாக இருக்கும் சாதி மறுப்புத் திருமணமோ தேசநலன் சார்ந்த நடவடிக்கை என புகழ்ந்துரைத்திருக்கிறது உச்சநீதிமன்றம் (The Indian Express, New Delhi, 2011Apr-20 ). சாதிமறுப்புத்திருமணத்திற்கு சட்டரீதியான ஒப்புதலும் இருக்கிறது. சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்கிறவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிதியுதவி உள்ளிட்ட சிறப்புரிமைகளை வழங்கி ஊக்குவிக்கின்றன. இவ்வளவு ஆதரவு இருந்தும் 2006-07ல் 3945, 2007-08ல் 4205, 2008-09ல் 4750, 2009-10ல் 5862 என்கிற அளவில்தான் சாதிமறுப்புத் திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன ( THE TIMES OF INDIA, 2010 jan 31). ஆதிக்கச்சாதி பெண்கள் – தலித் ஆண், ஆதிக்கச்சாதி ஆண்- தலித் பெண் இரண்டும் சேர்த்தே இவ்வளவுதான். ஒருவேளை 2011ல் இது இரண்டுமடங்கு ஆகியிருந்தாலும்கூட 11724தான். இவை பதிவு செய்யப்பட்ட திருமணங்களின் எண்ணிக்கை மட்டுமே. ஆனால், பொதுவாக சாதிமறுப்புத் திருமணங்கள் மோதலாக வெடித்து பிரச்னைக்குள்ளாவதால் பெரும்பாலானவர்கள் பதிவுசெய்து கொள்கின்றனர் என்பதே உண்மை. பதிவு செய்யாமல் விடுபட்டவர்களின் எண்ணிக்கையும் இதேயளவுக்கு இருக்கும் என்று சேர்த்துக் கொண்டாலும்கூட 110 கோடி மக்கள்தொகை உள்ள ஒரு நாட்டில் இது எத்தனை சதவீதம்?
[quotes quotes_style=”bpull” quotes_pos=”left”]முன்னேறியச் சாதிகளின் ஆயிரக்கணக்கான பெண்களை தலித் இளைஞர்கள் காதல் நாடகமாடி கல்யாணம் முடித்துவிட்டதாக காடுவெட்டி குருவும் மணிகண்டனும் கதை விடுகிறார்கள். அப்படி ஒரு பட்டியல் இருக்குமானால் அதை வெளியிட வேண்டியதுதானே? [/quotes]
சாதிமறுப்புத்திருமணம் செய்து கொள்கிறவர்களுக்கு 25,000 ரூபாய் ஊக்கத்தொகை கொடுப்பதாக பெரியபெரிய விளம்பரபேனர்கள் வைத்தும்கூட விண்ணப்பிக்க ஆளில்லை என்றும் ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கப்படும் தொகையும் செலவழிக்கப்படாமல் திருப்பியனுப்பப்படுகிறது என்றும் 2006ல் பீகார் மாநில சமூகநலத்துறையின் செயலாளர் விஜயபிரசாத் தெரிவித்த கருத்து இன்றும் பொருந்துவதாகத்தான் உள்ளது ( THE TIMES OF INDIA, 2006 july 27). பீகார் நிலைமையை தமிழ்நாட்டோடு ஒப்பிடவேண்டாம், இங்கு ‘போலி திராவிடம், போலி மார்க்சீயம், போலி தலித்தியம் பேசி (எப்பா, இதுக்கெல்லாம் அர்த்தம் சொல்ற அகராதி எங்காச்சும் இருந்தா கொண்டாங்கடா சாமி) சாதிமறுப்புத் திருமணங்கள் பெருகிவிட்டன என்று ராமதாஸ் வகையறாக்கள் வாதிடலாம். இந்தியாவில் நடைபெற்ற சாதிமறுப்புத் திருமணங்களைப் பற்றி ஆய்வு செய்யக் கிளம்பிய ஒரு குழுவினர் தமிழ்நாட்டில்தான் மிக அதிகளவில் நடைபெற்றிருக்கும் என்கிற முன்னனுமானத்தோடு இருந்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டின் மொத்த திருமணங்களில் வெறும் 2.96% மட்டுமே சாதி மறுப்புத்திருமணங்கள் என்று களத்தில் அறிந்த உண்மை அவர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. தேசிய சராசரியான 11 சதவீதத்துடன் ஒப்பிடும் போது தமிழ்நாடு கீழிருந்து இரண்டாவது இடத்தில் தேங்கி நிற்கிறது (Inter-caste Marriages in India: Has it really changed over time?- Kumudini Das, Kailash Chandra Das, Tarun Kumar Roy, Pradeep Kumar Tripathy). இந்த 2.96 சதவீதம் என்பதும்கூட எல்லாச்சாதிகளுக்குள்ளும் ஏற்பட்ட கலப்பின் அளவு. இதில் 1.66 சதவீத திருமணங்களில்தான் பெண் தன்னைவிட தாழ்ந்த சாதியிலிருந்து கணவனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். இதே ஆய்வு தெரிவிக்கும் மற்றொரு உண்மை, தமிழ்நாட்டில் 15 -19 வயதுக்குள் திருமணமாகும் பெண்களில் 98.68% சொந்த சாதியிலும் 1.32% தம்மைவிட உயர்ந்த சாதியிலுமே கணவனை தேர்ந்தெடுக்கிறார்கள். ராமதாசின் வாதப்படி இவை குழந்தைத் திருமணங்கள். 20-24 வயதில் திருமணம் செய்துகொள்ளும் பெண்களில்தான் 2% பேர் தம்மை விட தாழ்ந்தசாதி ஆணை தெரிவுசெய்து சாதிமறுப்பை தொடங்கி வைக்கிறார்கள். இந்த புள்ளிவிவரத்தைப் பார்த்துவிட்டு பிராமணர் சங்கத்தைப் போலவே ராமதாஸ் வகையறாவும் குழந்தைத்திருமணம் நடத்தவும் கிளம்பக்கூடும். உண்மைநிலை இவ்வாறிருக்க முன்னேறியச் சாதிகளின் ஆயிரக்கணக்கான பெண்களை தலித் இளைஞர்கள் காதல் நாடகமாடி கல்யாணம் முடித்துவிட்டதாக காடுவெட்டி குருவும் மணிகண்டனும் கதை விடுகிறார்கள். அப்படி ஒரு பட்டியல் இருக்குமானால் அதை வெளியிட வேண்டியதுதானே?
கூலிங் கிளாசையும், ஜீன்ஸ் பேண்ட்டையும் செல்போனையும் பார்த்து தலித்துகளின் காதல் வலையில் பெண்கள் விழுந்துவிடுவதாக ராமதாஸ் வகையறா அங்கலாய்ப்பது உண்மையென்றால் ஒரு பெண்ணும் மிஞ்சாமல் தலித்துகளோடுதான் இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். தமது சொந்த சாதிப்பெண்களை கேவலப்படுத்தியாவது தலித்துகளின் உடை நாகரீகத்தைப் பார்த்து தான் அடைந்திருக்கும் எரிச்சலை ஆத்திரத்தோடு வெளிப்படுத்துகிறார் ராமதாஸ். ‘…வரட்டி தட்டுவதற்காக தினமும் மாலையில் ஒரு கூடை சாணி பொறுக்கி வீட்டுக்கு கொண்டுவந்தால்தான் அடுத்தநாள் காலையில் குடிக்கக் கொடுக்கும் கூழுக்கு கொஞ்சம் கீரை கொடுப்பார் என் அம்மா… அம்மா வரட்டி தட்ட சாணி பொறுக்கித்தராவிட்டால் சில சமயங்களில் கூழும் கிடைக்காது… ’ (டாக்டர் அய்யாவுக்கு மனம் திறந்த மடல், வன்னியர் சங்கம் வெளியீடு பக்-30) என்று புலம்பிய ராமதாஸ் அவர்களே, நீங்கள் இப்போதும் சாணிதான் பொறுக்கிக்கொண்டிருக்கிறீர்கள்- வரட்டி தட்ட அல்ல, தலித்துகள் மீது வீச.
***
ராமதாஸ் வகையறா பீதியடையும் அளவுக்கு இங்கு சாதிமறுப்புத் திருமணங்கள் நடந்திருக்குமானால் அதற்காக பெருமகிழ்ச்சியடைபவர்கள் நாமாகவே இருப்போம். ஆனால் அப்படியொரு மாற்றம் நடக்கவேயில்லை என்பதுதான் துயரம். ‘உன் மகளை ஒரு தலித்துக்கு கட்டி வச்சிருக்கியா? என்று ராமதாஸ் வகையறா ஒரு கேள்வியைத் தூக்கிப்போட்டதும் பலபேரின் தலை தொங்கிப் போய்விடுகிறது. மகளை தலித்துக்கு கட்டிக்கொடுத்த பெற்றோர்கள்தான் ராமதாசின் அட்டூழியங்களை கண்டிக்கமுடியும் என்ற தர்க்கப்படி வாதிட்டால், தன்மகளையோ மகனையோ தலித்துக்கு கட்டிக்கொடுக்காத ராமதாஸ் வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும் என்றாகிறது. இன்னாரைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று மகளையோ மகனையோ வற்புறுத்துகிற அதிகாரம் பெற்றோர்களுக்கேகூட கிடையாது என்கிறபோது இந்த ராமதாஸ் யார் நாட்டமை செய்ய? பெற்றோர் பார்த்து கழுதையைக் காட்டினாலும் கழுத்தை நீட்டுகிற அளவுக்கு கீழ்ப்படிதலுள்ள மகளோ கிழித்தக் கோட்டை தாண்டாத மகனோ நமக்குத் தேவையில்லை. அன்றாட வாழ்வில் சாதியைத் துறந்த ஒரு குடும்பச்சூழலில் அவர்களை வளர்ப்போமானால், தன் இணையை சாதிக்கு வெளியிலும் தேர்வு செய்வதற்குரிய அறிவையும் நம்பிக்கையையும் சுதந்திரத்தையும் அவர்கள் இயல்பாக பெற்றுவிடுவார்கள். தெரிந்தோ தெரியாமலோ ராமதாஸ் வகையறா சாதிமறுப்புத்திருமணம் பற்றி கிளப்பி விட்டுள்ள விவாதத்தை நாம் நமது குடும்பங்களுக்குள் கொண்டு செல்லவேண்டியிருக்கிறது.
சாதியின் சிற்றலகாக குடும்பம் இருப்பதால் குடும்பத்தின் அங்கத்தினர் ஒவ்வொருவரும் தவிர்க்கமுடியாதபடி சாதியின் அங்கத்தினராகவும் இருக்கிறார். எனவே ஒரு சாதியின் தலைவர் என்ற முறையில் தான் இடும் கட்டளைகளை ஏற்று செயல்படுத்த வேண்டியப் பொறுப்பு அந்த சாதியின் எல்லாக் குடும்பங்களுக்கும் இருக்கவேண்டுமென்று ராமதாஸ் வகையறா எதிர்பார்க்கிறது. சாதியை மறுக்கவோ சாதிக்கு வெளியே தனது துணையைத் தேடிக்கொள்ளவோ பெரும்பான்மையான தமிழர்கள் இப்போதைக்கு தயாரில்லைதான். ஆனால், அதற்காக தமது வாழ்க்கைத் துணையாக யார் இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமையை ராமதாஸ் வகையறாவுக்கு தாரைவார்த்து கொடுக்க அவர்களது சுயமரியாதை இடம்தராது. சட்டத்தின் ஆட்சி வழங்கியுள்ள இந்த அடிப்படை உரிமையை காவுகேட்பது சாதியானாலும் மதமானாலும் அதை தூக்கி எறிய வேண்டும் என்கிற தைரியத்தை சமூகத்தில் பாய்ச்சுவதுதான் நமது உடனடிப் பணியாக முன்வந்திருக்கிறது.
ராமதாஸ் வகையறாவே நினைத்தாலும் இனி திரும்பப்பெற முடியாதபடியான அளவுக்கு தலித்துகள் மீது கடுமையான அவதூறுகளை அவர்கள் மக்களிடையே பரப்பியிருக்கிறார்கள். வளர்ப்புமுறையிலிருந்தும் பொதுப்புத்தியிலிருந்தும் தலித்தல்லாதவர்களின் ஆழ்மனத்தில் தலித்துகள் பற்றி படிந்துள்ள அருவருப்பு வன்மம் இளக்காரம் ஆகியவற்றை மேலே இழுத்துவரவும் கூட அவர்கள் முயற்சித்திருக்கிறார்கள். தலித்தல்லாதவர்களை கொள்ளைக்காரர்களாகவும் கொலைகாரர்களாகவும் வன்புணர்ச்சியினராகவும் ஊர்க்கொளுத்திகளாகவும் வன்கொடுமையராகவும் மாற்றுவதற்குரிய அழிவுத்திட்டத்தோடு ராமதாஸ் வகையறா வந்து கொண்டிருக்கிறது, மனிதர்களாக வாழ விரும்புகிறவர்கள் வேறுபக்கம் செல்லவும் என்கிற செய்தியை ஒவ்வொரு தனிமனிதரிடமும் தெரிவிக்கும் பொறுப்பு நம்முடையதாகிறது.
நன்றி: செம்மலர், ஜனவரி 2013 இதழ்