ஆந்திராவில் ஆணவக்கொலை செய்யப்பட்ட பிரனய் குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் வி.சி.க தலைவர் திருமாவளவன்.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், மிர்யலாகுடா பகுதியைச் சேர்ந்தவர் பிரனய் குமார். அதே பகுதியைச் சேர்ந்த அம்ருதா என்ற பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். பிரனய் பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அம்ருதாவின் தந்தை மாருதிராவ் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சூழலில் அம்ருதா கர்ப்பமடைய தம்பதிகள் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காகக் கடந்த மாதம் 14-ம் தேதி மதியம் மருத்துவமனைக்குச் சென்றபோது மருத்துவமனை வாசலிலேயே பிரனயை கூலிப்படையைச் சேர்ந்த ஒருவர் வெட்டிச் சாய்த்தார். இந்த ஆணவக் கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட அம்ருதாவின் தந்தை மாருதிராவ் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக திருமாவளவன் தனது முகநூல் பக்கத்தில், “ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கின்ற அம்ருதா தன்னுடைய கணவர் கொல்லப்பட்டதற்கு நீதி கிடைக்கும் வரையில் போராடப்போவதாகவும், சாதி என்ற விஷயத்துக்காக இவ்வளவு பெரிய கொடுமையை செய்திருக்கிறார்கள் என்றும், இதுவே கடைசியாக இருக்க வேண்டும், இத்தகைய ஆணவக் கொலைகளைத் தடுக்க பிரனயின் பெயரிலேயே சட்டம் இயற்ற வேண்டுமென உறுதியாக நின்று போராட இருப்பதாக என்னிடம் கூறினார். தமிழகத்தில் கவுசல்யா சங்கர் போராடி வெற்றிகண்டதைப் போல நீயும் துணிச்சலாக போராடி வெற்றி பெற வேண்டும் என்று ஊக்கமூட்டினேன். பிரனய் பெற்றோரிடம் அமிர்தாவை உங்கள் மகளாக ஏற்று அவரை பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்” எனப் பதிவிட்டுள்ளார்.