“தீண்டாமைப் பிரச்னை பற்றி அறிவுஜீவுகள் பேசுவது இல்லை!” விருது விழாவில் விளாசிய அருந்ததி ராய்
“ஜனநாயகமும் நவீன பொருளாதாரச் சந்தையும் சாதியை நவீனமாக்கி அதன் பிடியை மேலும் இறுக்கி இருக்கின்றன. இந்தியாவின் மிகச் சிறந்த அறிவுஜீவிகள், வரலாற்று ஆசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள், எழுத்தாளர்கள் தொடர்ந்து சாதியப் பிரச்னைகளை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கிறார்கள் அல்லது குறைந்த அளவில் பதிவு செய்கிறார்கள். இதைத்தாண்டி அவர்கள் சாதியப் பிரச்னைகளைப் பேசுவது தேர்தல் காலங்களில் மட்டும்தான். பொருளாதார ஊழல்கள் குறித்துப் பேசுவதும் அதைப் பிரச்னையாக்குவதும் இப்போது மிக நாகரிகமான விஷயமாக உள்ளது. ஆனால், தீண்டாமை என்கிற ஊழல் பற்றி மிகச் சிறந்த அறிவுஜீவிகளும் வரலாற்று ஆசிரியர்களும் கேள்வி எழுப்புவதில்லை” என்று குற்றம்சாட்டினார் எழுத்தாளர் அருந்ததி ராய்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் விருது வழங்கும் விழா நடத்தப்பட்டு வருகிறது. சமூகம், அரசியல், பண்பாட்டுத் தளங்களில் சிறப்பாகப் பணியாற்றும் ஆறு பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த 3-ம் தேதி சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற விழாவில், இந்த ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர்’ விருது எழுத்தாளர் அருந்ததி ராய்க்கு வழங்கப்பட்டது. ‘பெரியார் ஒளி’ விருது கோவை இராமகிருட்டிணனுக்கும், ‘அயோத்திதாசர் விருது’ முனைவர் க.நெடுஞ்செழியனுக்கும், ‘காமராசர் கதிர்’ விருது ஜி.கே.மூப்பனாருக்கும், ‘காயிதே மில்லத் பிறை விருது’ பேராசிரியர் ஜவாஹிருல்லாவுக்கும் ‘செம்மொழி ஞாயிறு’ விருது முனைவர் அவ்வை நடராசனுக்கும் வழங்கப்பட்டன.
‘அம்பேத்கர் சுடர்’ விருதைப் பெற்றுக்கொண்டு, விழாவில் அருந்ததி ராய் பேசிய கருத்துகள் உணர்ச்சிமயமாக இருந்தன.
“விஸ்வ ஹிந்து பரிஷத்தும் பஜ்ரங்தளமும் நாடெங்கிலும் நடத்திக்கொண்டிருக்கும் ‘கர் வாப்சி’ (வீடு திரும்புதல்) என்பதைப் பற்றி நான் உங்களுடன் பேசப் போகிறேன். அசுத்தமானவர்களைத் தூய்மைப்படுத்தி, மீண்டும் இந்து மதத்துக்கு அழைத்துவரும் இந்தக் ‘கர் வாப்சி’ முறை 150 ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. இதற்கும் மதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வெறுமனே, இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் காட்டுவதற்கான ஓர் முயற்சி அது. இன்றைய மொழியில் சொன்னால், ‘வாக்கு வங்கி.’ இந்த வாக்கு வங்கியை ஏற்படுத்தும் முறை, சாம்ராஜ்யங்கள் தேசங்களாக மாறியபோது, மன்னர்களுக்குப் பதிலாக பிரதிநிதித்துவ அரசியல் உருவான போதுதான் உருவானது.
இந்துக்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டவர்கள், யாருடைய தொடுதலைத் தவிர்த்தார்களோ… யாருடைய உணவை ஏற்றுக்கொள்ள மறுத்தார்களோ… யாருடைய வீடுகளுக்குச் செல்லமாட்டார்களோ… அந்த நாலரைக் கோடி தீண்டத்தகாதவர்களையும் இந்துக்கள் என்று ஏற்க முடிவு செய்தனர். ஒரு பெரிய பிரசாரம் தொடங்கியது. தீண்டத்தகாதவர்களை இந்து மதத்துக்குள் வைத்துக்கொள்வதுதான் அந்தப் பிரசாரத்தின் நோக்கம். அந்த நோக்கத்தின் அடிப்படையில் ஆரிய சமாஜம் ‘தூய்மை’ இயக்கத்தைத் தொடங்கியது. அதைத்தான் இன்று மோடி அரசு மிகப்பெரிய அளவில் மறு அறிமுகம் செய்யத் திட்டமிடுகிறது. சிந்து சமவெளியின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்தவர்களைத் தங்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக முகமதியர்கள் கொடுத்த பெயர்தான் இந்து என்கிறார் அம்பேத்கர்.
அதோடு அவர், ‘கர் வாப்சி’ திட்டத்தின் உண்மையான நோக்கத்தை அப்போதே கண்டுணர்ந்து நிராகரித்தார். அது அவருடைய எழுத்துகளில் பதிவாகி உள்ளது. ஆனால், இன்றைக்கு பி.ஜே.பி அரசு, அந்த அம்பேத்கர் மீது அன்புகாட்டுவதாகச் சொல்லிக்கொண்டு, அவருடைய அரசியலை அடித்து நொறுக்கிவிட்டு, அவருடைய படங்களையும் சிலைகளையும் திறந்துகொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையான ‘ஆர்கனைசர்’ அம்பேத்கர் படத்தைத் தனது முகப்பு அட்டையில் பிரசுரிக்கிறது. அம்பேத்கரையும் இந்துத்துவத்தின் சின்னமாகக் கட்டமைக்கப் பார்க்கிறது. இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால், இந்து மதவாதிகள், அம்பேத்கரின் இடஒதுக்கீட்டைத்தான் ஆசை வார்த்தைகளாகக் கூறி தலித் கிறிஸ்தவர்களையும் இஸ்லாமியர்களையும் ‘கர் வாப்சி’ நிகழ்வுக்கு உடன்பட வைக்கின்றனர். அன்று, இந்த இந்து மதவாதிகள் எந்த இடஒதுக்கீட்டை எதிர்த்தார்களோ, அதை இன்று தலித் கிறிஸ்தவர்களிடமும் முஸ்லிம்களிடமும் சலுகையாகக் காட்டி, அவர்களை மீண்டும் தங்கள் மதத்துக்குள் இழுக்கப் பார்க்கிறார்கள்.
இந்தியா ஒரு வல்லரசு என்கிறார்கள், நமது தலைவர்கள். இந்த வல்லரசில்தான் 80 கோடி மக்கள், ஒரு நாளைக்கு 20 ரூபாய்க்கும் குறைவான பணத்தைக் கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சிறைகளில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தலித்களே. ‘தேசியக் குற்ற ஆவண மையம்’ அளிக்கும் விவரங்களின்படி, தலித் அல்லாத ஒருவர் ஒவ்வொரு 16 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு தலித் மீது வன்முறையை ஏவுகிறார் என்பது தெரியவருகிறது.
ஒவ்வொரு நாளும் 4 தலித் பெண்கள் பிற சாதியினரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். தலித்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் மற்ற குற்றங்களும் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே வெளியில் தெரிகின்றன. இதுவும்கூட பாலியல் குற்றங்களும் கொலைக்குற்றங்களும் மட்டுமே. இது தவிர, நிர்வாணப்படுத்தி தெருக்களில் இழுத்துச் செல்வது, மலத்தைத் திணிப்பது, நிலத்தை அபகரிப்பது, சமூகப் புறக்கணிப்பு, குடிநீர் மறுப்பு போன்ற மற்ற குற்றங்கள் இந்தக் கணக்கிலும்கூட வராது.
1960, 70-களில் ‘தலித் பேந்தர்கள்’, நக்சலைட்கள் போன்ற இயக்கங்கள் நீதி பற்றியும் புரட்சி பற்றியும் பேசினார்கள். நிலச் சீர்த்திருத்தங்களைக் கோரினார்கள். ‘உழுபவருக்கே நிலம் சொந்தம்’ என்பது அவர்களின் முழக்கமாய் இருந்தது. இன்று அந்தச் சிந்தனைகள் நமது மனங்களில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டன. அதற்குப் பதிலாக மிகக்குறுகிய கருத்தாக்கமான ‘மனித உரிமை’ நமது மனங்களில் வந்தமர்ந்துள்ளது. தலித் மக்களில் 70 சதவிகிதம் பேர் நிலமற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை பஞ்சாப், பீகார், அரியானா, கேரளா மாநிலங்களில் 90 சதவிகிதமாக இருக்கிறது.
சாதி ஒழிப்புக்கு எதிரான போராட்டத்தைத் தொடர நாம், பார்ப்பனியம், ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் ஆகியவற்றுக்கு இடையில் உள்ள தொடர்பை உணர்ந்து வெளிக்கொண்டு வர வேண்டும். உலகெங்கிலும் அரசியல் கூட்டணிகளை உருவாக்க வேண்டும். சாதி ஒழிப்புப் பணிக்கு நாம் ஒவ்வொருவரும் நமது திறமையையும் ஆற்றலையும் முழுமையாக அளிக்க வேண்டும். நமக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால், அரசியல்ரீதியான ஒற்றுமையைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் சாதிய வேறுபாடுகளை எப்படி எதிர்த்துப் போராடுவது என்பதுதான். நாம் ஓர் இணைப்புச் சங்கிலியை உருவாக்கியாக வேண்டும். நிலங்களிலிருந்து, தொழிற்சாலைகளில் இருந்து, குடிசைப் பகுதிகளிலிருந்து, சிறு நகரங்களிலிருந்து, பள்ளி பல்கலைக்கழகங்களில் இருந்து, இலக்கியத்தில் இருந்து, சினிமாவிலிருந்து உடைக்க முடியாத அந்தச் சங்கிலியை நாம் உருவாக்க வேண்டும்” என முடித்தார்.
அருந்ததி ராய் பேச்சு பாடம் நடத்துவதுபோல இருந்தது.
Source ; Junior Vikatan
– ஜோ.ஸ்டாலின்
படங்கள்: ப.சரவணகுமார்