சமூக, பொருளாதார வாழ்க்கை முறைகளில் இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் இன்னும் சமத்துவத்தை மறுக்கப் போகிறோம்? நாம் நீண்ட நாட்களுக்கு இதை மறுத்தால், அரசியல் ஜனநாயகத்தை ஆபத்தில் தள்ளுவதில்தான் அது முடியும். நாம் இந்த முரண்பாடுகளை மிக விரைவில் அகற்றியாக வேண்டும். இல்லையெனில், சமமற்றத் தன்மையால் பாதிக்கப்படும் மக்கள், நாம் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய அரசியல் ஜனநாயகத்தின் கட்டமைப்பையே தகர்த்தெறிந்து விடுவர். இரண்டாவது முக்கியத் தேவை, சகோதரத்துவக் கொள்கைக்கான அங்கீகாரம். சகோதரத்துவம் என்றால் என்ன? அனைத்து இந்தியர்களையும் சகோதரர்களாகக் கருதும் ஒரு உணர்வு – அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பது. இத்தகைய கொள்கையே சமூக வாழ்க்கை முறையில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அளிக்கும். இதை அடைவது கடினம்…
…அரசியல் எண்ணமுள்ள இந்தியர்கள், முன்பு ‘இந்திய மக்கள்’ என்று சொல்வதை எதிர்த்தது எனக்கு நினைவிருக்கிறது. ‘இந்திய தேசம்’ என்று சொல்வதையே அவர்கள் விரும்பினர். நாம் ஒரு தேசம் என்று நம்புவதே ஒரு மிகப் பெரிய மாயை என்றே நான் கருதுகிறேன். ஆயிரக்கணக்கான சாதிகளாகப் பிளவுண்டிருக்கும் மக்கள், எப்படி ஒரு தேசமாக முடியும்? சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக நாம் இன்னும் ஒரு தேசமாக ஆகவில்லை என்பதை எவ்வளவு விரைவில் உணர்கிறோமோ, அந்தளவுக்கு நல்லது. அப்போதுதான், நாம் ஒரு தேசமாக வேண்டிய அவசியத்தை உணர்ந்து, அதை அடைவதற்கான வழிமுறையைப் பற்றி கவனமாக சிந்திப்போம்.
ஆனால், இத்தகைய உணர்வு நிலைக்கு வருவது மிகவும் கடினம். அமெரிக்காவில் வந்தது போன்ற நிலைக்கு வருவது கடினம். மேலும், அமெரிக்காவில் சாதிப் பிரச்சனை இல்லை. இந்தியாவில் சாதிகள் இருக்கின்றன. இந்த சாதிகள் தேசத்திற்கு எதிரானவை. முதலில் சாதி, சமூக வாழ்க்கை முறையில் பிளவை ஏற்படுத்துகிறது. சாதி தேசத்திற்கு எதிரானது மட்டுமல்ல; சாதிகளுக்கிடையேயும் அது பொறாமையையும் எதிர்வினையையும் உருவாக்குகிறது. நாம் உண்மையில் ஒரு தேசமாக விரும்பினால், இத்தகைய இடர்ப் பாடுகளை எல்லாம் கடக்க வேண்டும். ஒரு தேசம் உருவாகும் போதுதான் சகோதரத்துவம் உண்மையாகும். சகோதரத்துவம் இல்லாமல், சமத்துவமும் சுதந்திரமும் வண்ணப் பூச்சு போல ஆழமற்றதாகவே இருக்கும்.
[quotes quotes_style=”bpull” quotes_pos=”right”]இந்த நாட்டில் அரசியல் அதிகாரம் என்பது, நீண்ட நாட்களாக ஒரு சிலரின் ஆதிக்கத்தின் கீழேயே இருந்தது. அதுமட்டுமல்ல; பெரும்பான்மை மக்கள் துன்பத்தைச் சுமந்து திரிந்தனர்; அவர்கள் அதற்கு இரையாகியும் போனார்கள்.[/quotes]
நம் முன்னால் இருக்கும் சவால்கள் பற்றிய என்னுடைய பார்வை இது. இது, சிலருக்கு மகிழ்ச்சியை அளிக்காது. ஆனால், இந்த நாட்டில் அரசியல் அதிகாரம் என்பது, நீண்ட நாட்களாக ஒரு சிலரின் ஆதிக்கத்தின் கீழேயே இருந்தது. அதுமட்டுமல்ல; பெரும்பான்மை மக்கள் துன்பத்தைச் சுமந்து திரிந்தனர்; அவர்கள் அதற்கு இரையாகியும் போனார்கள். ஒரு சிலரின் ஆதிக்கம், அவர்களின் முன்னேற்றத்தைப் பறித்ததோடு, அவர்களின் முக்கிய வாழ்க்கையே மூழ்கிவிட்டது. இத்தகைய தாழ்த்தப்பட்ட வர்க்கங்கள் அடிமைகளாக இருந்து சோர்ந்து போய்விட்டனர். அவர்கள் மற்றவர்களால் ஆளப்படுவதை விரும்பவில்லை. அவர்கள் தங்களைத் தாங்களே ஆள விரும்புகின்றனர். ஒடுக்கப்பட்ட வகுப்பினர் தன்னிலை உணர்ந்து, ஒரு வர்க்கப் போர் அல்லது போராட்டத்திற்குச் சென்றுவிடக் கூடாது. இதனால் நாட்டில் வேற்றுமைகள்தான் வளரும். அது ஒரு போரழிவுக்கான நாளாக அமைந்து விடும்.
ஆபிரகாம் லிங்கன் சரியாகச் சொன்னார்: “தங்களுக்குள்ளாகவே பிளவுபட்டுப் போராடும் ஒரு குடும்பம், நீண்ட நாட்கள் நீடித்திருக்காது.” எனவே, இம்மக்களின் ஆதங்கம் எவ்வளவு சீக்கிரம் உணரப்படுகிறதோ, புரிந்து கொள்ளப்படுகிறதோ, ஆதிக்கம் செலுத்தும் அந்த சிலருக்கும், நாட்டுக்கும், நாட்டின் சுதந்திரத்தைக் காப்பதற்கும், ஜனநாயகக் கூட்டமைப்பைத் தொடங்குவதற்கும் அது நல்லது. இது, வாழ்க்கையின் அனைத்துத் தளங்களில் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் பேணுவதின் மூலமே சாத்தியமாகும். எனவேதான், நான் இதற்கு மிகுந்த அக்கறையும் அழுத்தமும் கொடுத்தேன்.
நான் இந்த அவையை மேலும் களைப்படைய வைக்கப் போவதில்லை. சுதந்திரம் என்பது, மகிழ்ச்சிக்கான ஒரு செய்தியே என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த சுதந்திரம் நம்மீது பெரும் பொறுப்புகளைச் சுமத்தியுள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சுதந்திரம் பெற்று விட்டதால், இனிவரும் தவறுகளுக்கு நாம் ஆங்கிலேயர்களைக் காரணம் காட்டிக் கொண்டிருக்க முடியாது. இனி இங்கு நடைபெறும் தவறுகளுக்கு நம்மைத் தவிர வேறு எவரையும் குறைகூற முடியாது. பெரும் தவறுகள் நடக்கும் ஆபத்துள்ளது. நாட்கள் விரைந்து செல்கின்றன. புதுப்புது கொள்கைகளால் நம் மக்கள் உந்தப்படுகிறார்கள். அவர்கள் மக்களால் ஆளப்படும் அரசு என்பதில் சோர்வடைந்து விட்டனர். மக்களுக்கான அரசு அமைய அவர்கள் தயாராகி விட்டனர்.
மக்களால் மக்களுக்காக ஆளப்படும் அரசு என்று சொல்லப்பட்டுள்ள இந்திய அரசமைப்புச் சட்டத்தை நாம் பாதுகாக்க விரும்பினால், நாம் ஒன்றைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். நமது முன்னேற்றப் பாதையில் உள்ள தீமைகளை அகற்றி, மக்களால் மக்களுக்கான அரசு அமைய மக்களைத் தூண்ட வேண்டும். நாட்டுக்குத் தொண்டாற்றுவதற்கு இதுதான் ஒரே வழி. இதைவிட மேலான வழி எனக்குத் தெரியவில்லை.
25.11.1949 அன்று, மக்களவையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி.