ஆசிரியர், மாணவர் அமைப்புகளில் பன்முகத்தன்மையைக் கொண்டுவர வேண்டும் என்பது குறித்த வாதங்களை பிரின்சிடன் (Princeton) பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கிறார்கள். ஆனால், இந்திய உயர்கல்வி நிலையங்கள் தமது நிறுவனங்களில் பிராமணிய மேலாதிக்கம் நிலவுவதைத் தொடர்ந்து மறுத்துவருகின்றன.
தனது பொது, பன்னாட்டு விவகாரங்கள் பள்ளியிலிருந்து உட்ரோ வில்சனின் பெயரை நீக்குவதாக பிரின்சிடன் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டில் அறிவித்தது.
வில்சன் பள்ளியின் முன்னாள் மாணவன் என்ற முறையில் இதை நான் ஆமோதிக்கிறேன். சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு. 2015-ஆம் ஆண்டு உட்ரோ வில்சனின் பெயரை நீக்குமாறு மாணவர் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தபோது அதற்கான எதிர்வினை எதிர்பார்த்தது போலவே ஏனோதானோவென்று தான் இருந்தது. வேண்டுகோளைப் பரிசீலிக்க குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் “சமூகத்தில் நிலவியதைக் காட்டிலும் வில்சனின் இனவாதம் அதிகமாக இருந்தாலும்” பல்கலைக்கழகத்துக்கான அவரது பங்களிப்பு அவருடைய இனவாதப் போக்கைவிடவும் அதிகம் என முடிவுசெய்யப்பட்டு அவ்வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.
அமெரிக்காவில் டெரெக்சாவின் என்ற வெள்ளையினக் காவலரால் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்னும் ஆப்பிரிக்க அமெரிக்கர் கொல்லப்பட்டது கறுப்பினத்தவர்கள் எதிர்கொள்ளும் அநீதியை வெளிப்படுத்தியது. ஃப்ளாய்டின் கொலை உலகெங்கும் ஒரு பெரும் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கியதுடன் அடிமை முறையென்னும் பாவத்தில் தோன்றிய பிரின்சிடன் போன்ற நிறுவனங்களைத் தமது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வைத்தது. அடிமை முறையில்லையேல், பிரின்சிடன், யேல் பல்கலைக்கழகங்கள் தோன்றியிருக்க முடியாது.
வில்சனுடனான தன்னுடைய தொடர்பைத் துண்டித்துக்கொள்ள பிரின்சிடன் பல்கலைக்கழகம் எடுத்த முடிவு வெறும் அடையாளப்பூர்வமானது மட்டுமே. ஆனால், நிறவெறிக் கொள்கைகளைக் கடைபிடித்த தென் ஆப்பிரிக்கக் கல்வி நிலையங்களைப் போலவே செயல்படும் இந்திய உயர்கல்வி நிலையங்களை ஒப்பிடுகையில், பிரின்சிடன் பல்கலைக்கழகம் இனவாத நீதியின் புனிதத்தலம் போலத் தோன்றுகிறது.
ஆசிரியர், மாணவர் சங்கங்களின் விரிவாக்கம் பற்றிய விவாதங்களைப் பிரின்சிடன் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கையில், இந்திய உயர்கல்வி நிலையங்கள், தம்மில் பிராமண மேலாதிக்கம் நிலவுவதைத் தொடர்ந்து மறுத்துவருகின்றன. நான் பணிபுரியும் இந்திய நிர்வாகக் கழகத்தின் 90% ஆசிரியர்கள் இந்தியாவின் 10%க்கும் குறைவான சமூகக் குழுக்களைச் சார்ந்தவர்கள்தாம்.
பிராமண ஆதிக்கம் என்பது கிட்டத்தட்ட வெள்ளையர்களின் ஆதிக்கம் போன்ற நயவஞ்சகம்தான். இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில்வது எந்த அளவுக்கு மூச்சுத் திணறவைக்கும் அனுபவம் என்பதை எந்த ஒரு தலித் அல்லது ஆதிவாசி மாணவரைக் கேட்டாலும் சொல்லுவார். இவர்கள் தங்களுக்கு முன்னுதாரணமாக வைத்துக்கொள்ளக்கூடிய ஆசிரியர்கள் இந்த நிறுவனங்களில் இல்லை என்பது, (400 ஆசிரியர்கள் இருக்கும் எங்களது கல்வி நிறுவனத்தில் ஒரே ஒரு தலித் ஆசிரியர் மட்டுமே உள்ளார். ஆதிவாசியோ இஸ்லாமியரோ இல்லை), வரலாற்று ரீதியாக விளிம்பு நிலையில் ஒதுக்கப்பட்ட பிரிவினர்கள் இதுபோன்ற நிறுவனங்களில் படிக்கவும், பணிபுரியவும் தகுதியற்றவர்கள் என்னும் கருத்தினை நிலைநிறுத்தவும் செய்கிறது.
இந்திய உயர்கல்வி நிறுவனங்களின் “மேல்சாதி” ஆசிரியர் சங்கங்கள் சாதி என்பது சமகாலச் சமூக அமைப்புகளோடு முரண்படும் பழங்காலச் சின்னம் என்ற பாவனையில் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொண்டு வருகின்றன.
சடங்கு ரீதியாகப் பிறரை விலக்கும் பண்டைய அமைப்புகள் இன்றைய மதச்சார்பற்ற அமைப்புகள் மேற்கொள்ளும் விலக்கல்களுடன் எளிதாக இணைந்துவிடுகின்றன என்பதே யதார்த்தம். எனக்கு இதுபற்றி நேரடியாகவே தெரியும். ஆண்டுதோறும் நிகழும் பூணூல் மாற்றும் சடங்கைச் சாதி ரீதியான, ஆணாதிக்கச் சடங்கு என்று கூறியதற்காக நிர்வாகம் “ஒழுங்கு மீறலுக்கான கண்டனத்தைத்” தெரிவித்தது.
அதிகாரப்பூர்வமாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், நான் விருப்ப விடுமுறையிலும் செல்ல நேரிட்டது. என்னுடைய கல்வி வாழ்க்கையின் மிக மகிழ்ச்சிகரமான நாட்கள் அவை. படைப்பூக்கம் கொண்ட மாணவர்களின் ஆய்வுத் திட்டங்களுக்கு நான் துணையாக இருந்த காலம் அது. அப்படி நான் செல்லாமல் இருப்பது என்பது, பிராமணர்கள் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஆசிரியர் பணிக்கான வேலைச் சந்தையில் எனது மாணவர்களுக்கான வாய்ப்பை மறுக்கக்கூடிய முட்டாள்தனமாகவே அமையும்.
இதுபோன்ற முக்கியமான பின்னடைவுகள் இருந்தாலும் நான் அதிக பாதிப்பின்றித் தப்பித்துவிட்டேன். சாதி என்பது தானாகவே நம்மோடு இணைந்துவிடுவது. சாதிக்கு எதிராக ஓயாமல் பேசுவதாலோ செயல்படுவதாலோ எனது “உயர்சாதி”க் கேடயம் சேதமாகிவிடாது. புரட்சி செய்யும் பிராமணனும் அடிப்படையில் ஒரு பிராமணனே. தகுதி என்னும் கருத்தின் அடிப்படையிலான பிராமண உரிமை இப்படித்தான் செயல்படுகிறது (நீதிக்கான எந்தப் போராட்டத்திலும் உயர் வகுப்பினர் எப்படி எப்போதுமே முன்னிலை வகிக்கின்றனர் என்பதையும் இதிலிருந்து ஓரளவு விளங்கிக்கொள்ளலாம்). என் நிலையில் ஒரு தலித் ஆசிரியர் இருந்திருந்தால் அவரது வேலையே போயிருக்கும்.
தகுதி என்ற போர்வையில் பிராமணர்களின் சிறப்புரிமைகள் கோலோச்சும் அமைப்புகளை உயர் நிலையில் உள்ள இந்தியக் கல்வி நிலையங்கள் அவசரமாக ஆய்ந்தாக வேண்டும். பிரின்சிடன் பல்கலைக்கழகத்தின் பெருந்தன்மையான பன்முகத்தன்மை, வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிக்கும் திட்டம் ஆகியவையே எனது “தகுதி”யின் ஆதாரங்கள். நேருவின் கொள்கை அடிப்படையில் உதயமான பொதுத்துறை நிறுவனங்கள் நிறைந்த நகரில் சாதி தந்த உரிமையுடன் மதச்சார்பற்ற நிலையில் இருந்ததால் மட்டுமே நான் பிரின்சிடன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துவிடவில்லை. என்னுடைய மாநிறமும் பன்முகத்தன்மை நிறைந்த பிரின்ஸ்டனில் சேரும் வாய்ப்பை எனக்குத் தந்தது.
மேலைநாடுகளின் சிறந்த பல்கலைக்கழகங்களில் பட்ட மேற்படிப்பு பயின்ற எண்ணற்ற பிராமண ஆசிரியர்கள் நான் ஆசிரியராகப் பணிபுரியும் பெங்களூர் ஐ.எம்.எம்.மில் பணியாற்றுகிறார்கள். அவர்களுடைய பணி வாழ்வின் பயணமும் என்னுடையதைப் போலவேதான் உள்ளது. மாநிறம் கொண்ட பிராமணர்களுக்கு பிரின்சிடன் பல்கலைக்கழகத்தின் பன்முகத்தன்மை சார்ந்த ஒதுக்கீடு என்பது உணவுக்குப் பிறகு தரப்படும் இனிப்பைப் போன்றது. ஆனால், இந்தியக் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு என்பது பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்த தொடர் ஒதுக்கல், அடிபணியச் செய்தல், வெளியேற்றப்படுதல் போன்றவற்றுக்கான பதில் நடவடிக்கையாக அமைந்ததுள்ளது. ஆனால், இதைக் “கல்வித் தகுதி” மீதான தாக்குதலாகவே உயர் சாதியினர் பார்க்கிறார்கள்.
“கறுப்பர்களின் வாழ்வு முக்கியம்” என்னும் இயக்கத்தினால் பிரின்சிடன் உள்ளிட்ட பல அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இன அடிப்படையில் இழப்பீடு தரப்பட வேண்டும் என்ற குரல் ஓங்க ஆரம்பித்துள்ளது. “கொலம்பியப் பரிமாற்றம்” என்னும் வரலாற்று நிகழ்வு, பேராசை கொண்ட, வன்முறை நிறைந்த, அடிமைத்தனத்தை முன்னிறுத்திய பல்வேறு நிறுவனங்களை வழிநடத்திய ஐரோப்பியக் காலனி ஆதிக்கக் காலம் ஆகியவையே இழப்பு குறித்த உரையாடல்களுக்கான மையப் புள்ளிகளாக இருக்க வேண்டும். பல்வேறு இடம் சார்ந்த, தற்காலிக அளவுகோல்களின் அடிப்படையில் இந்த இழப்பீட்டைக் கணக்கிட வேண்டும்.
இந்தியாவில் சாதி ரீதியான இழப்பீட்டிற்கான தேவையை அங்கீகரிக்காமல் இருப்பது அப்பட்டமான போலித்தனமாகவே இருக்கும். பெருந்தொற்றால் உருவான பொருளாதார முடக்கத்தின்போது புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்த சொல்லொணாத துயரம் இடப்பெயர்ச்சியின் மறைக்கப்பட்ட கூறுகளை வெளிக்கொணர்ந்திருக்கிறது. சாலைகள், இருப்புப் பாதைகள், ரயில்வே நடைமேடைகள், ஓடும் ரயில்கள் ஆகியவற்றில் பரிதாபமாக உயிரிழந்த பெரும்பாலான புலம்பெயர் தொழிலாளர்கள் சாதிய அதிகார அடுக்கின் அடிமட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
நவீன அமெரிக்காவின் வேர்கள் சிறுபான்மை கறுப்பினத்தவர் மீதான மூர்க்கமான வன்முறை, அடிபணியவைத்தல் ஆகியவற்றில் வலுவாக வேரோடியுள்ளன. இந்தியாவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான “உயர்சாதி”க் குழுக்கள் பல நூற்றாண்டுகளாக உழைக்கும் வர்க்கத்தினரின் வியர்வையையும் சொத்துகளையும் சுரண்டிவந்துள்ளன. இந்தியாவின் சாதிரீதியான ஒதுக்கல் அமெரிக்காவின் இன ரீதியான ஒதுக்கலுடன் அடிக்கடி ஒப்பிடப்படுகிறது. ஆனால் ஆப்பிரிக்காவின் தென்பகுதியில் வசிக்கும் சிறுபான்மை வெள்ளையர்களுக்கும் பெரும்பான்மை கறுப்பர்களுக்கும் இடையே நிலவும் உறவுமுறையுடன் இந்தியாவின் நிலையை ஒப்பிடுவது மேலும் பொருத்தமாக இருக்கும்.
வெள்ளையின ஆண்களும் பெண்களும் பெருமளவில் வீதிகளில் வந்து போராடுவதுதான் தற்போது நடைபெற்று வரும் “கறுப்பர்களின் வாழ்வு முக்கியம்” இயக்கத்தின் மிக முக்கிய அம்சமாகும். இந்தியாவில், குறிப்பாக இந்து மேலாதிக்க உணர்வு கொண்ட சக்திகள் ஆதிக்கம் பெற்றது முதலே தலித்துகளும் இஸ்லாமியர்களும் படுகொலை செய்யப்படுவதும், ஒடுக்கப்பட்ட பிரிவினரைக் குறிவைத்து நடத்தப்படும் காவல்துறையின் கொடூரங்களும் கணிசமான அளவில் இந்தியாவில் அதிகரித்துள்ளன.
ஆதிவாசிகளைப் பெரிய அளவில் இடப்பெயர்ச்சி செய்துதான் சுதந்திர இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நம் நாட்டில் “தலித்துகளின் வாழ்வு முக்கியம்”, “ஆதிவாசிகளின் வாழ்வு முக்கியம்” அல்லது “இஸ்லாமியர்களின் வாழ்வு முக்கியம்” போன்ற இயக்கங்களுக்கு ஆதரவாக உயர்சாதியினர் தெருக்களில் வந்து ஏன் போராடவில்லை?
இந்தப் புதிர் அரசியல் அரங்கில் மட்டுமின்றி வரலாறு, சமூகவியல், உளவியல் போன்ற துறைகளிலும்கூட முக்கியமான விவாதப் பொருளாக இருக்க வேண்டும். “கறுப்பர்கள் வாழ்வு முக்கியம்”, “#BlackInTheIvory (கல்வித் துறையில் கறுப்பு இன மக்களுக்கு எதிரான இனவாதம் நிலவுவது குறித்து கறுப்பு இனத்தைச் சேர்ந்த கல்வியாளர்களின் குரல்களை வெளிப்படுத்துவதற்கான ஹேஷ்டேக் இது. சமூக ஊடகங்களில் தோன்றிய இந்தப் பரப்புரை பெரிய இயக்கமாக உருவெடுத்தது) ஆகிய இரண்டுக்குமிடையே நிலவும் இயங்கியல் சார்ந்த உறவுமுறையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “தலித்துகளின் வாழ்வு முக்கியம்” என்ற இயக்கம் இந்தியத் தெருக்களில் ஏன் உருவாகவில்லை என்பதைப் புரிந்துகொள்ள, இந்தியக் கல்வித் துறையில் தலித்துகளுக்கு எதிரான இனவாதம் நிலவுவது குறித்து தலித்துகளின் குரலை வெளிப்படுத்தக்கூடிய “DalitsInTheIvory” என்பது போன்ற இயக்கம் இங்கே ஏன் நிகழவில்லை என்று பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.
கட்டமைப்பு ரீதியாகப் பழமைவாதத்தில் ஊறி இருந்தாலும் வெள்ளையின ஆதிக்கவாதம் இயங்கும் விதத்தைத் துல்லியமாகக் காட்டுவதில் அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளன. “பெருநகரத்தின் மொழி”யைப் பேசுவதில் தேர்ச்சி பெற்ற ஆண்களும் பெண்களும்தான் பேரரசுகளுக்கு எதிராக வெற்றிகரமாகச் சவால் விடுத்துள்ளனர் என்பதை பிரின்சிடன் பல்கலைக்கழகத்தில் என்னுடைய ஆசிரியர்கள் எனக்குக் கற்பித்தார்கள். உலகெங்கிலும் காலனி ஆதிக்கத்திற்கெதிராக நாம் காணும் போராட்டங்கள் இந்த உண்மைக்கான சான்றுகளே. காந்தி, அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு, ராம் மனோகர் லோஹியா, ஜெயபிரகாஷ் நாராயண் போன்ற பலர் மிகச்சிறந்த மேலைநாட்டுக் கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள்.
சாதிக் கட்டமைப்பைப் “பேரரசு” என வர்ணிப்பது முழுவதும் சரியானதல்லவெனினும், ஆழமாக வேரூன்றிய உயர்சாதி சிறப்புரிமைகளின் சுய பாதுகாப்பானது, சமகால இந்தியப் பல்கலைக்கழகங்களின் பிறரை விலக்கிவைக்கும் தன்மை கொண்ட கட்டமைப்புகளில்தான் உள்ளது. “கற்பி, ஒன்றுசேர், போராடு” என்னும் முழக்கம் டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கையின் மிக முக்கியமான செய்தியாக முன்னிறுத்தப்படுகிறது. “தலித்துகளின் வாழ்வு முக்கியம்” என்ற இயக்கத்திற்கு ஆதரவு திரட்டுவது என்பது DalitsInTheIvory என்பதுடன் உயிரோட்டமுள்ள தொடர்புடையதாக இருக்க வேண்டியது அவசியம்.
இந்தக் காரணத்தினாலும் பல்கலைக்கழக வளாகங்களில் ஜனநாயகம் நிலவ எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளையும் பிராமணர்களின் சிறப்புரிமைக்கான கட்டமைப்புகளில் ஊறியிருக்கும் கல்வி நிலையங்கள் நிச்சயம் எதிர்க்கும். “உயர்சாதி”க்கே உரிய பிறரை விலக்கிவைக்கும் பிரத்யேக அடையாளங்கள் கல்வி நிறுவனங்களின் அதிகாரப் பீடங்களில் இடம்பெறுவது, தென் அமெரிக்காவின் பண்டைய நினைவுச் சின்ன்னங்களைத் தென்னக மரபின் நாட்டார் மரபுச் சின்னங்கள் என்று கூறிப் பாதுகாப்பதற்கு ஒப்பானது. ராபர்ட் லீயின் சிலையானது ஆப்பிரிக்க-அமெரிக்கர்களைப் பொறுத்தவரை விலக்கப்படுதல், அடிபணியச் செய்தல் ஆகியவற்றின் சின்னம். இந்தியாவின் பெரும்பான்மையான மக்களுக்குப் பூணூல் என்பதும் அது போலத்தான்.
நவீன பல்கலைக்கழகங்கள் ஜனநாயகச் சிந்தனைக்கான களங்களாக உருவாவதை அனைத்து விதமான சர்வாதிகார அரசுகளும் வெறுப்புடனேயே பார்க்கின்றன. இந்தியாவின் தற்போதைய அரசும் இதற்கு விதிவிலக்கல்ல. நுகர்விய வலைப்பின்னலில் எங்கே இருக்கிறார்கள் என்பதை இடத்தை வைத்து வரையறுக்கப்படும் நடுத்தர வகுப்பினர், சர்வாதிகாரப் போக்கு கொண்ட அரசின் வேலையை மேலும் எளிதாக்கிவிடுகின்றனர். அடிமட்டத்தில் இருப்பவர்கள் “கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய்” என்னும் செயல்திட்டத்தைப் பின்பற்றினால் உயர் சாதிப் பிரிவினரின் சார்பாகச் செயல்படும் விலக்குதலை அடிப்படையாகக் கொண்ட தேசியவாதத்தின் திட்டம் வெற்றிபெற முடியாது.
இத்தகைய சகோதரத்துவத் திட்டத்திற்குத் துணை நிற்கக்கூடிய களங்கள் நமது பல்கலைக்கழகங்களிலேயே உள்ளன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை பல்கலைக்கழக வளாகங்களில் எப்படி முன்னெடுக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்துத்தான் அரசியல் சட்டம் சார்ந்த ஜனநாயகக் குடியரசு என்ற வகையில் இந்தியாவின் எதிர்காலம் அமையும். ஒரு சில பிரிவினரை விலக்கிவைக்கும் கட்டமைப்புகளுக்குப் பல ஆண்டுகளாகத் தாம் எவ்வாறு விரும்பி ஆதரவு அளித்துவந்தோம் என்பது பற்றி ஒளிவுமறைவற்று, நேர்மையாக ஒப்புக்கொண்டு நல்லுறவை நாடும் செயல்முறையை இந்தியக் கல்விநிலைய வளாகங்கள் உடனடியாகத் தொடங்கியாக வேண்டும் (தென்னாப்பிரிக்க அரசு இன ஒதுக்கல் கொள்கையைக் கைவிட்ட பிறகு, கறுப்பின மக்கள் மீது முன்பு தாங்கள் செலுத்திய வன்கொடுமைகள் குறித்து வெள்ளை இன அதிகாரிகள் மேற்கொண்ட “தவறுகளை ஒப்புக்கொண்டு நல்லுறவு நாடும்” நடவடிக்கையை ஒத்தது இது)
பல்கலைக்கழகங்கள் மாற்றம் பெறுவதற்கு வெளியிலிருந்து நெருக்கடி வர வேண்டும் என்பதை வரலாறு நமக்குக் கற்றுத் தருகிறது. பிரின்சிடன் போன்ற ஒரு பல்கலைக்கழகமேகூட அண்மைக் காலம்வரை 1 சதவீத (மேல்தட்டு) வெள்ளையர்களுக்கான அமைப்பாகவே இருந்துவந்தது. இனரீதியான நீதியை பிரின்சிடன் பல்கலைக்கழகம் வழங்கியதுபோல இந்தியக் கல்வி நிலையங்கள் சாதி ரீதியான நீதி தொடர்பான கேள்விகளைத் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? ஏகலைவன் காலம் முதல் ரோஹித் வெமுலா காலம் வரை பல நூற்றாண்டுகளாக நம்மைத் துரத்தும் இக்கேள்வியை எதிர்கொள்ளத் தேவையான நியாயமான பார்வை கொண்ட தலைவர்கள் இந்தியாவில் இப்போது இருக்கிறார்களா?
*
தீபக் மல்கான் பெங்களூர் ஐஐஎம்மில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். கட்டுரையில் கூறப்பட்டுள்ளவை அவருடைய சொந்தக் கருத்துகள்.
ஆங்கில மூலம்: When Will India’s Educational Institutes Have Their ‘Dalit Lives Matter’ Moment?
by Deepak Malghan