அனிதா
தமிழர் எல்லோருக்குமான
பிணமாக மாறுவதற்கு முன்பு
ரத்தமும் சதையுமான பறைச்சியாய் இருந்தாள்
தண்ணீர்,கழிப்பிட வசதியற்ற
அவள் வீடு
பறத்தெருவிலிருந்தது.
ஜீன்ஸ் கூலிங் கிளாஸ் போட்டவர்கள்
அவளது தெருவிலிருந்து
அவளது படிப்பை கெடுக்கவில்லை
பொட்டச்சிக்கு எதுக்கு படிப்பு
என்று பறையன் அப்பா சொல்லவில்லை
படிச்சு கிழிச்சது போதும்
என்று பறையன் அண்ணன்கள் சொல்லவில்லை
அடக்கமா ஒடுக்கமா இருன்னு
பறைச்சி பாட்டி சொல்லவில்லை
படிப்புதான் நமக்கு எல்லாமே
என்று எல்லா பறையர்களும் தமது
பிள்ளைகளுக்கு சொல்வதைத்தான்
அனிதாவின் வீட்டிலும் அவளிடம் சொன்னார்கள்
பறையிசை கேட்டபடிதான்
அவள் பள்ளிப்பாடம் படிப்பாள்
மாட்டிறைச்சி தின்றவள்தான்
கணக்கில் 100 மார்க் எடுத்தாள்
டாக்டர்தான் ஆவேன் என்று
வைராக்கியமாய் நின்றாள்
அம்பேத்கரின் பேத்தியவள்
ஜெய் பீம் சொல்லிவிட்டுத்தான் சென்றாள்
அனிதா
தமிழர் எல்லோருக்குமான
பிணமாக மாறுவதற்கு முன்பு
ரத்தமும் சதையுமான
எனது தங்கையாய்
கண்களில் தீப்பந்தம் மிளிர
பறத்தெருவில் கம்பீரமாய் வளையவந்த
பறைச்சியாய் இருந்தாள்
– ப. ஜெயசீலன்.