இந்தியாவையே பதைபதைக்கச் செய்தது அந்தக் கொலை. பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகமுள்ள உடுமலைப்பேட்டை சாலையில் வைத்து ஒரு ஜோடியின் மீது, கொடூர தாக்குதலை நடத்திச் சென்றது இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல். இதில் கழுத்து, கைகள் என பல இடங்களில் பலத்த வெட்டுக் காயங்களுடன் இளைஞர் மயங்கி விழுகிறார். இன்னொரு புறம் தனது கணவரை காப்பாற்றச் சொல்லி தலையில் வெட்டுக் காயங்களுடன் கதறி அழுது கொண்டிருந்தார் அந்தப் பெண்.
2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி காலை நடந்தேறிய இந்த சம்பவத்தில் தனது காதல் கணவர் சங்கரை, சாதி வெறியின் கோரத் தாண்டவத்திற்கு இரையாகக் கொடுத்தார் கௌசல்யா. சாதி ஆணவப் படுகொலையின் உக்கிரத்தை உலகறியச் செய்த அந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்தவர்கள் கௌசல்யாவின் சொந்தபந்தங்கள்தான். கூலிப்படையை ஏவி அந்தப் பிஞ்சுகளின் காதலைக் கொன்றது சாதிவெறிக் கூட்டம்.
இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் நிறைவடைய இருக்கும் நிலையில், இதில் தொடர்புடைய 11 பேரில், கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உட்பட ஆறு பேருக்கு தூக்குத்தண்டனை வழங்கியிருக்கிறது திருப்பூர் நீதிமன்றம். குற்றவாளிகளின் தரப்பில் தண்டனையைக் குறைத்து வழங்குமாறு வாதம் முன்வைக்கப்பட்டபோது, எதனடிப்படையில் தண்டனையைக் குறைத்து வழங்கக் கோருகிறீர்கள் எனக்கேட்ட நீதிபதி அலமேலு நடராஜனின் குரலில் படுகொலை செய்யப்பட்ட சங்கர் மவுனமாக வந்துபோகிறார்.
இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே கௌசல்யாவிற்கு உறுதுணையாக இருக்கும், சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் நம்மிடம்,
[quotes quotes_style=”bpull” quotes_pos=”right”]குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டவர்களும் குற்றவாளிகளே. அவர்களின் விடுதலையை எதிர்த்தும் நாங்கள் மேல்முறையீடு செய்வோம். ஏனென்றால், அவர்களால் கௌசல்யாவிற்கோ, சங்கரின் குடும்பத்தாருக்கோ நிச்சயம் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.[/quotes]
“கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்த குற்றவாளிகளின் தரப்பில் இருந்து இதுவரை 58 முறை பெயில் கேட்டு மனு கொடுத்திருந்தனர். நாமும் அதற்கு 58 முறை எதிர்ப்பு தெரிவித்தோம். இந்த விவகாரத்தில் தனி வழக்கறிஞர் இல்லாமல், நான்கு பேர் கொண்ட வழக்கறிஞர்கள் குழு அமைத்து வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையில் முன்வைக்கப்பட்ட அனைத்து சாட்சிகளும் வலுவான ஆதாரங்களாக அமைந்தன. இதுகுறித்து நேற்றே கௌசல்யாவிடம் ‘நாளை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது. அப்படியில்லை என்றால் நாம் மேல்முறையீடு செய்வோம்’ எனக் கூறியிருந்தோம். இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டவர்களும் குற்றவாளிகளே. அவர்களின் விடுதலையை எதிர்த்தும் நாங்கள் மேல்முறையீடு செய்வோம். ஏனென்றால், அவர்களால் கௌசல்யாவிற்கோ, சங்கரின் குடும்பத்தாருக்கோ நிச்சயம் பிரச்சனை ஏற்படும் வாய்ப்பிருக்கிறது.
மரண தண்டனை குறித்து எங்களுக்கும், கௌசல்யாவிற்கும் மாற்றுக்கருத்து உண்டு. நாங்கள் அதை நிச்சயம் எதிர்க்கிறோம். மரண தண்டனையால் குற்றங்கள் ஒழிந்துவிடும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தவரை வழங்கப்பட்டிருக்கும் தீர்ப்பு நியாயமானதுதான். கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மட்டும் சாதிரீதியில் நடைபெற்ற ஆணவக் கொலைகளின் எண்ணிக்கை 187. இந்த ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்படவேண்டும் என தேசிய சட்ட ஆணையம் மசோதா ஒன்றைக் கொண்டுவந்தது. அது இன்னமும் கிடப்பில்தான் போடப்பட்டுள்ளது. தேசிய மகளிர் ஆணையமும் தனிசட்டம் இயற்ற கோரிக்கைகள் விடுத்தது. உச்சநீதிமன்றம் இதுகுறித்து அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க உத்தரவிட்டு, 22 மாநிலங்கள் சாதி ஆணவக் கொலைகள் நடந்து கொண்டிருப்பதாக ஒத்துக் கொண்டபோதிலும், தமிழ்நாடு அரசு இன்னமும் ஒத்துக் கொள்ளவேயில்லை. தமிழ்நாட்டில் சாதிய ஆணவக்கொலைகள் நடப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது எவிடென்ஸ் அமைப்புதான். வடமாநிலங்களுக்கு நிகராக இங்கு இதுமாதிரியான கொலைகள் வெகுசாதாரணமாக நடந்துகொண்டிருக்கின்றன. தனிச்சட்டம் மட்டுமே இதற்கெல்லாம் தீர்வாக இருக்க முடியும்” என்கிறார் உறுதியாக.
கண்ணெதிரிலேயே தன் கணவருக்கு நேர்ந்த கொடூரத்திலிருந்து தன்னை மீட்டுக்கொண்டு, சமூக செயல்பாடுகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, சுயமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கௌசல்யா, “நீதித்துறை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதே நம்பிக்கையோடு இந்த வழக்கை குறிப்பாக, இம்மூவரின் விடுதலையை எதிர்த்து இறுதிவரை சட்டப்போராட்டத்தை மேற்கொள்வேன். சட்டப்போராட்டத்திலும், களப்போராட்டத்திலும் ஒருபோதும் ஓயமாட்டேன். ஏனென்றால், சங்கருக்கான நீதி இந்த வழக்கின் தீர்ப்பில் மட்டும் அடங்கியிருக்கவில்லை. சாதிய கெளரவக்கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம் படைப்பதுதான் சங்கருக்கான நீதியாக நான் கருதுகிறேன். அதற்கு இந்த தீர்ப்பு துணைசெய்யும் என்று நான் நம்புகிறேன்” என நீதிமன்ற வளாகத்திலேயே நம்பிக்கையுடன் பேசினார்.
சாதி ஆணவப் படுகொலையின் அடுத்தத் தாண்டவம் தொடங்குவதற்கு முன்பாக அரசு விழித்துக் கொள்ளவேண்டும். இன்னொரு சங்கர் கொலை செய்யப்படக் கூடாது. இல்லையென்றால், அனைத்து மக்களும் ஒன்றுபட்டு கட்டமைக்கப்பட்ட இந்த சமூகத்தில் சாதி மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும்.
– ச.ப.மதிவாணன்
Source : Nakkeeran