இயற்கைச் சூழலும், தாத்தா – பாட்டிகளும் சூழ்ந்த ஒரு கதை வாழ்வியல் கம்பீரனுக்கு. அவருடைய கதைகளில் முன்னோர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் அசைவையும் விழிபிதுங்கும் உடல்மொழிகளையும் கையாண்டு, தன்னை ஒரு முக்கியமான “கதைசொல்லி’யாக மாற்றிக் கொண்ட கவிதைக்காரர் கம்பீரன்.
நாட்டார் வழக்காற்றியலில் புழங்கும் சொலவடைகளையும், அவற்றுள் இருக்கும் இலக்கியத்தையும் – எழுத்து வடிவமைக்கும் ஒரு சிலரில் கம்பீரன் ஒருவர். “சொலவடைகளும் சொல்கதைகளும் இல்லை என்றால், தமிழ்மொழி ஓர் எலும்புக்கூடாகத்தான் இருக்கும்’ என்று கூறும் அவருடைய இலக்கியப் பங்களிப்பு, தற்பொழுது குழந்தைகளை நோக்கி மய்யம் கொண்டிருக்கிறது.
“பிரியாத மழை நினைவு’, “ஒரு சாண் மனுஷன்’ ஆகிய இரு நூல்களை எழுதியிருக்கும் கம்பீரனின் இயற்பெயர் நீதிமணி. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகில் உள்ள சின்ன தாமல் செருவு என்ற குக்கிராமத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை திராவிட இயக்க தீவிரப் பற்றாளராக இருந்திருக்கிறார். அண்ணா போன்றோர் அந்தக் காலங்களில் எழுதியவற்றை எடுத்துக் கொண்டு வந்து, தன்னுடைய பிள்ளைகளிடம் படித்துக் காட்டும் பழக்கம் அவருக்கு இருந்திருக்கிறது.
அவர் தந்தை படித்துக் காட்டியதை, தானும் தம்பி தங்கையும் ஒன்றாக சேர்ந்து கேட்டுக் கொண்டிருந்ததை மிகவும் நெகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறார். அதுதான் அவர் எழுத்தின் தோற்றுவாய். பிறகு தானே நூல்களை வாசிக்கத் தொடங்கி, நூலகங்களுக்குச் சென்று படிக்கத் தொடங்கிய கம்பீரனின் எழுத்துப் பணி, அவருடைய பள்ளிக் காலத்திலேயே தோன்றிவிட்டிருக்கிறது. அதற்கு, கல்லூரிப் படிப்பு வரை அவருக்கு கிடைத்த ஆசிரியர்கள் தொடர்ச்சியான காரணங்களாக இருந்திருக்கின்றனர்.
ஆனால், வேலைக்கு வந்தபிறகுதான் தீவிர இலக்கிய வாதியாக, பல்வேறு ஆளுமைகளை வெளிப்படுத்தக் கூடியவராக மாறி இருக்கிறார். தலித்தியத்தை முன்மொழிபவராக தன்னை வார்த்துக் கொண்ட கம்பீரனின் எழுத்துகள் – காதல், விடுதலை மற்றும் பகுத்தறிவை பேசக் கூடியவையாக இருக்கின்றன. அய்க்கூ வடிவ கவிதைகளையும் அவர் நிறைய எழுதியுள்ளார்.
விழுந்த மரம்
எழுந்து நிற்கிறது
கைத்தடியாக
என்பதை ஒரு படிமமாக உருவாக்கி, அதையே ஓர் ஆக்கமாக மாற்றியிருக்கிறார்.
கம்பீரனின் கவிதை இயங்கியல், எளிமையானது. ஆனால், எழுத்துகள் செய்ய வேண்டிய செயலை அதன் ஆற்றலோடு செய்கிறது. ஒரு கருத்தை அரூபமாக நாம் சொல்ல வேண்டும் என்றால் காதலைச் சொல்லலாம், உள்மன விவகாரங்களைப் பேசலாம். ஆனால் நாம் ஒரு கொள்கையோடு பேசவேண்டி இருக்கிறது என்பதால், அந்த ஆக்கங்கள் மக்களைச் சேர்ந்து அவர்கள் எழுச்சி பெற வேண்டும் என்பதால், தலித் கவிதைகள் நேரடியாக இருக்கின்றன என்கிறார் அவர். இந்தியாவில் பிறமொழிகளில் தோன்றி யுள்ள பெரும்பாலான தலித் ஆக்கங்கள் அத்தகைய தொனியில்தான் இருக்கின்றன. அதுதான் சரியானது என்பது அவருடைய கவிதைக் கோட்பாடு.
கம்பீரனின் கவிதை ஒன்று :
பூணூலால் வர்ண வேலியிட்ட
கோயில் கருவறைக்கு வெளியே
செருப்பைப் போல் நான்
விட்ட இடம் மீறாமல்
இந்து ஆதிக்கத்தால் இடம் மாற முடியாத சாதிய இருப்பு, இக்கவிதையின் பாடுபொருள். இடம் மாற முடியாததற்கு எது காரணமாகிறது என்ற கேள்வியைக்கூட இக்கவிதை எழுப்புகிறது. அதையும் கடந்து அதற்கு இந்து சனாதன முறைதான் ஆதாரமாகிறது என்பதையும் இக்கவிதை கூறி, ஒரு வினையை ஆற்றுகிறது. அது எங்கே அவரை நிறுத்தியதோ, அங்கேயே அவர் இருப்பதற்கான சூழ்ச்சியை செய்துள்ளது. அதைத் தகர்க்க வேண்டிய வேலை எதுவெனவும் அது வெளிப்படையாகக் கூறுகிறது.
வர்ண வேலியைத் தகர்ப்பதும் அதற்கு மூலமாக இருக்கக்கூடிய இந்து மதத்தை வேரறுக்க வேண்டும் என்பதையும் இக்கவிதை மிக எளிமையாக நமக்குப் புரிய வைக்கிறது.
கம்பீரனின் இன்னொரு கவிதை :
அபிஷேகம் ஆராதனை
எதுவும் வேண்டாமல்
எத்திசையும் கைகளை நீட்டி
தன்னால் இயன்றதைக் கொடுக்கும்
மரங்களிடம் கண்டேன்
கடவுளிடம் காணாத கைகளை
எத்தகைய நிலையிலும் கடவுளின் இருப்பு என்பது இல்லாததாக இருக்கிறது. ஆனால், மரம் கடவுள் என்ற கற்பனை போலல்லாமல் உண்மையானது. எதுவெல்லாம் அதனால் முடியுமோ அதையெல்லாம் தரக்கூடியது. இருப்பினும், மனித இனம் எதை ஒழிக்க வேண்டுமோ அதை வணங் கிக் கொண்டு, எதை வளர்க்க வேண்டுமோ அதை வெட்டிக் கொண்டுமிருக்கிறது என்கிறது இக்கவிதை. ஆம், கம்பீரனின் கவிதைகள் நுட்பமானவை. அவருடைய “பிரியாத மழை நினைவு’ முழுக்க இத்தகைய கவிதைகளை நாம் காணலாம்.
தலித் இலக்கியம் தொடர்பான உரையாடலில், தலித் இலக்கிய ஆளுமைகளின் பங்களிப்புகள் சிறப்பாக உள்ளன. ஆனால், ஒரு தலித் எழுத்தாளரின் நூல்களையோ, ஆக்கங்களையோ இன்னொரு தலித் எழுத்தாளரோ, விமர்சகரோதான் பேச வேண்டியிருக்கிறது. பொது நிலையிலுள்ள எழுத்தாளர்கள் அவற்றைக் குறித்த விமர்சனங்களை எழுதுவதில்லை. இதுவே ஒருவித ஒதுக்கல் போக்குதான். பொதுவான எழுத்தாளர்களுக்கு கிடைக்கும் ஊடக வெளிச்சம், தலித் எழுத்தாளர்களுக்கு கிடைப்பதில்லை. ஒரு சில பேருக்கு இப் போதுதான் ஊடகங்களில் வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. அத்தகைய வாய்ப்புகளும் எளிதாகவோ, திறமையின் அடிப்படையிலோ கொடுக்கப்படுவதில்லை. அதையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது என்பது கம்பீரனின் கருத்து.
அடுத்து, தற்போதைய தலித் எழுத்தாளர்களின் ஆக்கங்கள், அவ்வளவு ஆழமாக இல்லை. நான் அனுபவித்த சாதிக் கொடுமைகளைவிட என் பெற்றோர் அனுபவித்தது அதிகமாக இருந்திருக்கும். என் மகனுக்கு அத்தகைய வேதனை அவ்வளவாக இல்லை. எனவே அவனெழுத்து, அத்தகைய வேகத்தோடும் வீரியத்தோடும் இருப்பதற்கு வாய்ப்பில்லை. ஆனால், இன்னும் எழுதப்படாமல் விடப்பட்டவை ஏராளம். மறுக்க வேண்டிய கதையாடல்கள் இன்னும் அதிகமாக இருக்கின்றன என்கிறார் கம்பீரன். எடுத்துக்காட்டாக, அவர் கூறும் ஒரு குறிப்பு மிகவும் கவனிக்கத்தக்கது.
கீழத்தஞ்சைப் பகுதிகளில் தலித்துகளின் வாழ்வுரிமைக்காகப் போராடியவர்கள் பொதுவுடைமை இயக்கக்காரர்கள் என்பது பரவலாக அறியப்பட்ட செய்தி. ஆனால், தஞ்சை சாம்பான் எழுதிய “ஆடுபாரம்’ நூல், அப்பகுதியில் இருக்கக்கூடிய தலித் மக்கள், தாங்களே எப்படி சாதிய ஆதிக்கத்திற்கு எதிராக இயங்கினார்கள் என்பதை பல்வேறு ஆதாரங்களோடு விவரிக்கிறது. அதற்காக அவர் ஓராண்டு களப்பணியாற்றி இருக்கிறார். இப்படி தலித் எழுத்தாளர்கள் களப்பணியாற்றி தங்கள் ஆக்கங்களை உருவாக்குவார்களென்றால், அவை இன்னும் செழுமை பெறும் என்கிறார்.
இன்றைக்கு தமிழில் இருக்கும் குறைந்த எண்ணிக்கையிலான கதைசொல்லிகளில் கம்பீரன் ஒருவர். அவருடைய “ஒரு சாண் மனுஷன்’ தொகுப்பு முழுக்க குழந்தைகளுக்கான நாட்டுப்புறக் கதைகளைக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியும் கைபேசியும் வந்த பிறகு, குழந்தைகளுக்கான நேரம் என்பதே இல்லாமல் போய்விட்டது. குழந்தைகளின் கல்வி குறித்தும் அவர்களின் ஆரோக்கியம், அறிவு வளர்ச்சி, சமூக அக்கறை ஆகியவற்றை வளர்க்கக்கூடிய நாடாக இந்தியா இல்லை.
தேர்தல் வாக்குறுதிகளைப் பார்த்தாலே நமக்கு எளிதில் விளங்கும். வயது வந்தோர்க்கு அரசியல் கட்சிகள் வாரி வழங்கும் வாக்குறுதிகள் போல, குழந்தைகளுக்கு எந்த வாக்குறுதியையும் அரசியல்வாதிகள் வழங்குவதில்லை. ஏனெனில், அவர்கள் வாக்காளர்களாக இல்லை.
ஆகவேதான் குழந்தைகள் தொழிலாளர்களாகி, பாதியிலே படிப்பை விட்டுவிடுகின்றனர். இந்த அவலங்களையெல்லாம் முன்வைத்துதான் குழந்தைகளுக்கான கதைகளை உருவாக்குகிறார் கம்பீரன். பல கதைகளை குழந்தைகளிடம் கொண்டு சேர்த்திருக்கிறார். குழந்தைகளுக்கான இதழ்களில் அவருடைய கதைகள் வெளிவந்துள்ளன.
குழந்தைகளுக்கு கதை சொல்கின்றபோது, கிராமங்களி லிருந்து அவர் எடுக்கும் தொன்மங்கள் – அவர்களுக்குப் பண்பாட்டு மாற்றத்தை உருவாக்கக்கூடியதாக இருக்கிற அம்சம் மிகவும் உன்னதமானது. கடிக்காத எறும்புக்கு கிராமங்களில் “சாமி எறும்பு’ என்று பெயர். பிறருக்குத் துன்பம் தராத எறும்பையே சாமி எறும்பு என்று கூறும்போது, சாமியைக் காரணம் காட்டி – மதத்தின் பேராலோ, சாதிகளின் பேராலோ பிறரை துன்புறுத்தலாமா என்னும் உண்மையை – கதை மூலம் உணர்த்தும்போது கம்பீரனின் சமூக அக்கறை, நம் மனங்களை நிறைக்கிறது.
குழந்தைகளின் உலகத்தில் அவர்களின் தாத்தா பாட்டிகளை மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும் கம்பீரன், அதன் மூலம் ஒற்றுமையான, உயிர்ப்புடன்கூடிய ஒரு சமூகத்தை யும் உருவாக்க முனைகிறார்.
– யாழன் ஆதி
கம்பீரனை தொடர்பு கொள்ள : 94421 16545