இதுவரை தான் பயணித்த பாதையில் இருந்து அப்படியே யு-டர்ன் போட்டு, ‘பட்டியல் சாதியிலிருந்து வெளியேறுவோம்’ என்ற முழக்கம், ‘இட ஒதுக்கீடு கூடாது’ என்ற நிலைப்பாடு, தமிழகமே எதிர்த்தாலும் ‘தீவிர பா.ஜ.க நிலைப்பாடு’ என்று மாறியிருக்கும் ‘புதிய தமிழகம்’ தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியைச் சந்தித்தேன்.
‘‘ஆண்டாண்டுக் காலமாக இழிவுக்குள்ளாக்கப்பட்டுப் பின்தங்கிப்போன மக்கள் சமூக நீதி பெறுவதற்காக வகைப்படுத்தப்பட்டதுதான் எஸ்.சி பட்டியல். ஆனால், ‘எஸ்.சி பட்டியலில் வைத்ததால்தான் எங்களை இழிவுபடுத்துகிறார்கள்’ என்று நீங்கள் சொல்வதை என்னவென்று புரிந்துகொள்வது?’’
‘‘இது ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய வரலாற்றுப் பிழை!
வயலும் வயல் சார்ந்த பகுதிகளிலும் தொன்றுதொட்டு விவசாயம் செய்து வாழ்ந்துவந்தவர்கள்தாம் தேவேந்திரகுல வேளாளர்கள். பசுவைப் போற்றக்கூடிய இம்மக்கள், எந்தவிதத் தீண்டாமைகளுக்கும் ஆளானவர்கள் கிடையாது. அரசப் படையெடுப்புகளின்போது, இம்மக்களிடமிருந்து நிலங்களைப் பிடுங்கிக்கொண்டவர்கள் அந்த நிலங்களிலேயே இம்மக்களைக் கூலிகளாக்கிக் கொண்டனர். எனவே, தத்தமது நிலங்களை மீட்டெடுக்கும் போராட்டத்தை மட்டுமே நடத்திக்கொண்டிருந்த இம்மக்களை, பட்டியல் சாதியாகச் சேர்த்துக்கொண்டதே தவறு.
பட்டியல் சாதியினர், தாழ்த்தப்பட்டவர்கள், ஆதி திராவிடர் என்ற முத்திரைகளை எல்லாம் எடுத்துவிடுங்கள். எங்களது மரபு ரீதியான அடையாளத்தை மட்டும் மீட்டுக்கொடுங்கள். எப்படி முன்னேற வேண்டும், எப்படித் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் இந்தச் சமுதாயத்துக்குத் தெளிவாகவே தெரியும்.
உலகம் முழுக்க நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகள் இந்தியச் சமூகத்திலும் இருந்துவந்தது உண்மைதான். ஆனால், ஆண்டாண்டுக்காலமாக யாரும் இங்கே இழிவுபடுத்தப்படவில்லை. அரசனுக்குக் கீழுள்ள அனைவருமே சமமானவர்களாகத்தான் இருந்தார்கள். தொழில் ரீதியான பிரிவினைகள் மட்டும்தான் இருந்துவந்தன. காலப்போக்கில், வாய்ப்புகளைப் பெறுவதில் முண்டியடித்து முன்னேறிப் போனவர்கள் தவிர ஏனையோர் பின்தங்கிப்போனார்கள். இப்படிப் பின்னுக்குத் தள்ளப்பட்டவர்களை முழுமையான அளவில் முன்னேற்றத்துக்கு அழைத்துச் செல்லும் நடவடிக்கைகளை எடுக்காமல், வெறுமனே பட்டியலிட்டதே தவறானது.’’
‘‘ ‘சாதி ரீதியிலான இழிவைத் துடைத்தெறிய இந்து மதத்திலிருந்து வெளியேற வேண்டும்’ என்ற அம்பேத்கரின் கூற்றை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா?’’
‘‘சாதி ரீதியாக எந்த இழிவுமே இல்லை. ஐயர், கவுண்டர், நாடார், தேவர், தேவேந்திரர், முதலியார் என்று போட்டுக்கொள்வதில் எந்தத் தவறுமே இல்லை. அப்படிப் போடாமல் விட்டதுதான் தவறே!’’
‘‘சுய சாதிப் பெருமை பேசுவதென்பதே மறைமுகமாக மற்றொரு சாதியை இழிவுப்படுத்துவதாகத்தானே அமையும்?’’
‘‘ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு பெருமை உண்டு. சமூக வளர்ச்சியில், தனிப்பட்ட சமுதாயப் பெருமையும் அடையாளமும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.’’
‘‘இட ஒதுக்கீட்டு முறையை ஏன் எதிர்க்கிறீர்கள்?’’
‘‘ஜோதிராவ் பூலேவில் ஆரம்பித்து அம்பேத்கர், பெரியார் வரை அனைவருமே, அரசுத் துறைகளில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் ஆதிக்கம் செலுத்துவதை மட்டும் பார்த்தார்களே தவிர… பெரும்பான்மையாக உள்ள ஏழை மக்களின் அவல நிலையைப் பார்க்கத் தவறிவிட்டார்கள். அதனால்தான், இட ஒதுக்கீடு என்ற குறிப்பிட்ட முறையை மட்டுமே வலியுறுத்தியிருக்கிறார்கள். ஒட்டுமொத்த மக்களுக்கான தீர்வைப் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை.’’
‘‘இட ஒதுக்கீடு எனும் சமூக நீதித் தத்துவம் ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்தவில்லை என்கிறீர்களா?’’
‘‘இட ஒதுக்கீடு இல்லாமலிருந்தால், இந்தச் சமுதாயங்கள் இதைவிடவும் முன்னேற்ற நிலைக்கு வந்திருக்க முடியும் என்பதுதான் உண்மை. இட ஒதுக்கீடு என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைத்துவிட்டதால்தான் இன்னமும் ஆட்சி அதிகாரத்துக்குள் வரமுடியாமல், எம்.பி., எம்.எல்.ஏ என்ற அளவிலேயே நின்றுகொண்டிருக்கிறோம்.
இந்தச் சமுதாயத்தில், இட ஒதுக்கீடு, தனித் தொகுதி என்பதுபோன்ற நடைமுறைகளே இல்லாமலிருந்திருந்தால், டாக்டர் கிருஷ்ணசாமி நேரே ஆட்சி அதிகாரத்திலேயே போய் அமர்ந்திருக்க முடியும்!’’
‘‘அம்பேத்கர், செய்யத் தவறியவை என்று எதைச் சொல்கிறீர்கள்?’’
‘‘வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த தென்னாப்பிரிக்கா, உகாண்டா, நமீபியா உள்ளிட்ட நாடுகள் எல்லாம் இன்றைக்கு விடுதலையடைந்துவிட்டன. அந்த நாடுகளில் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களெல்லாம் யாரிடம் இட ஒதுக்கீடு கேட்டுக்கொண்டிருந்தார்கள்? ஒட்டுமொத்தத் தேச விடுதலைக்காகத்தானே போராடினார்கள்!
நெல்சன் மண்டேலாவைப் போல் ஆட்சி அதிகாரத்துக்காகப் போராடாததுதான் அம்பேத்கர் செய்த தவறு! ரஷ்யா, சீனா, வியட்நாமில் என்ன நடந்ததோ அதேபோல், இங்கேயும் நெடும்பயணம் சென்று, ஏழைகளை எல்லாம் ஒன்றுபடுத்தி, புரட்சி செய்து மக்களுக்கான ஆட்சியை ஏற்படுத்தியிருந்தால், சாதியும் போயிருக்கும் ஏழ்மையும் போயிருக்கும்! ஆனால், ‘உலகம் முழுக்கத் தலையைக் காப்பாற்றுவதற்காகப் போராட்டம் நடந்துகொண்டிருந்த நேரத்தில், இந்தியாவில் மட்டும்தான் ‘தலைப்பாகை’யைக் காப்பாற்றுவதற்கான போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.
ஒரு சமுதாயம் முன்னேறுவதற்கு நிலம் வேண்டும்; அல்லது அரசியல் அதிகாரம் வேண்டும். அம்பேத்கர் – பெரியார் போன்ற தலைவர்கள் இந்த இரண்டுக்காகவும் போராடவில்லை! வெறும் சலுகைக்கான போராட்டமாக மட்டுமே சுருக்கிவிட்டார்கள்.”
‘‘திராவிடக் கட்சிகளை நீங்கள் குற்றம் சாட்டுவது இருக்கட்டும். மாட்டுத் தோல் உரித்ததாகக் கூறி, தாழ்த்தப்பட்டவர்கள் வட மாநிலங்களில் தாக்கப்பட்டார்களே?’’
‘‘அது சாதிய ரீதியிலான விவகாரம் அல்ல. ஆனாலும் சொல்கிறேன்… அரேபியாவிலும் துபாயிலும் பன்றிக்கறி வைத்திருக்க முடியுமா? ஒவ்வொரு நாட்டுக்கும் தனிப்பட்ட பண்பாடு உண்டு. அந்தவகையில், பசுவைத் தெய்வமாக – புனிதமாக மதிக்கிற போற்றுகிற நாடு இந்தியா. அன்றைய சூழ்நிலையில், இந்தியாவைப் பொறுத்தவரை, விவசாயத்துக்குப் பிறகு பசுதான் மிகப்பெரிய பொருளாதாரம். எனவே அவற்றைக் கொல்லக்கூடாது என்று கொள்கை வகுத்துக்கொண்டார்கள். நூறு வருடங்களாக மாட்டுக் கறி சாப்பிட்டு வருகிறவரை, கூட்டமாகப் போய் அடிப்பதும், கொல்வதுமான செயல்பாடுகளை ஒருபோதும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை!’’
‘‘அருந்ததிய மக்களுக்கு மூன்று விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கியதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி, இப்போது ‘எங்கள் மக்களுக்கு இட ஒதுக்கீடே தேவையில்லை’ என்று சொல்வது சந்தர்ப்பவாதம் இல்லையா?’’
‘‘ ‘மூன்று விழுக்காடு இட ஒதுக்கீடு என்பதை உள்ளே கொடுக்காதீர்கள்; வெளியே கொடுங்கள்’ என்றுதான் நாங்கள் சொன்னோம். அவர்களுக்கு இந்த மூன்று விழுக்காட்டில் மட்டுமல்லாது, மீதமுள்ள 15 விழுக்காட்டிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இது பிற சமுதாயத்தினருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தது. அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி, சமூக நீதிக் கண்ணோட்டத்தில் இதைச் செய்யவில்லை… அந்த எளிய மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியோடுதான் இதைச் செய்தார் என்பதைச் சுட்டிக்காட்டினோம்!’’
‘‘எஸ்.சி பட்டியலிலிருந்து வெளியேறக் கோரும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது… என தலித் தலைவர்களே கேட்கிறார்களே?’’
‘‘இந்திய சுதந்திரத்துக்காகப் போராடும் உரிமையை மகாத்மா காந்திக்கு யார் கொடுத்தது? திராவிடர் உரிமையைப் பற்றிப் பேசுவதற்குப் பெரியாருக்கு உரிமை கொடுத்தது யார்? ஒட்டுமொத்த தேவேந்திர குல மக்களும், ‘பட்டியலிலிருந்து வெளியேற வேண்டும்’ என்று தங்களுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களுடைய அடையாளம்தான் நாங்கள்!’’
‘‘ ‘சாதிய இழிவு நீங்க இந்து மதத்தை விட்டு வெளியேறுவேன்’ என்றார் அம்பேத்கர். ஆனால், டாக்டர் கிருஷ்ணசாமியோ ‘பட்டியலிலிருந்து வெளியேறுவேன்’ என்கிறார். இது எப்படித் தீர்வாகும் என்று திருமாவளவன் கேட்கிறாரே?’’
‘‘அம்பேத்கர் பெயரைச் சொல்வதற்கு அவர்களுக்குத் தகுதியே கிடையாது. ஏனெனில், மந்திரி பதவியைத் துறந்து, எந்தச் சலுகையும் வேண்டாம், சுயமரியாதைதான் வேண்டும் என்று சொல்லித்தானே 1956-லேயே புத்த மதத்தைத் தழுவிச் சென்றார் அம்பேத்கர். ஆனால், அதில் நம்பிக்கை இல்லாததால்தான் இவர்கள் புத்த மதத்துக்குச் செல்லாமல், இன்னமும் இந்து மதத்துக்குள்ளேயே இருக்கிறார்கள். ‘இட ஒதுக்கீட்டுத் தத்துவம் இந்தச் சமுதாயத்தை முன்னேற்றாது’ என்பதைத் தெரிந்துகொண்டுதான் அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறிச் சென்றார்.’’
‘‘மத்திய பா.ஜ.க அரசின் திட்டங்களில், ‘இது மக்கள் நலனுக்கு விரோதமானது’ என்று நீங்கள் எதிர்க்கும் ஏதாவதொரு திட்டம் இருக்கிறதா?’’
‘‘மக்கள் விரோதத் திட்டம் எதையும் இதுவரை பா.ஜ.க கொண்டுவரவில்லை. பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி உள்ளிட்ட திட்டங்கள் உயர்ந்த நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டன. ஆனால், அவற்றைச் செயல்படுத்தியதில்தான் சில தவறுகள் நிகழ்ந்துவிட்டன.’’
‘‘2015 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற பா.ஜ.க மாநாட்டின்போது புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளோடு அமித்ஷா ரகசிய உடன்பாடு செய்துகொண்டார் என்ற தகவலை ஒப்புக்கொள்கிறீர்களா?’’
‘‘2015 ஆம் ஆண்டு புதிய தமிழகம் – பா.ஜ.க இடையே அப்படி எந்த ரகசியத் தொடர்பும் உடன்பாடும் இல்லை. ஆனால், பட்டியலிலிருந்து வெளியேற வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை, தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் அங்கீகரிக்காத சூழ்நிலையில், தேசியக் கட்சியான பா.ஜ.க மட்டும் எங்கள் கருத்தை ஏற்றுக்கொண்டி ருந்தது. இதில் மறைப்பதற்கு எந்த விஷயமும் இல்லை. ஆனாலும் அதற்குப் பிறகு பா.ஜ.க-விடமிருந்து இதுகுறித்து எந்தவிதமான சலனமும் இல்லை.
கடந்த மூன்றாண்டுகளில், கோரிக்கை மாநாடுகள் பலவும் நடத்தி முடித்து விட்டோம். ஆனாலும் எங்களது கோரிக்கை குறித்து இதுவரையில் பா.ஜ.க ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அவர்களும் இந்த விஷயத்தில் அரசியல்தான் செய்கிறார்களோ என்ற ஆதங்கம் எழுகிறது.
‘தேவேந்திர குல வேளாளர்’ என்ற அடையாளத்தில் எங்களை அழைக்கச்செய்யும் அரசாணையை மாநில அரசு பிறப்பிக்க வேண்டும். பட்டியலிலிருந்து வெளியேற்றுவதென்பது மத்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. எனவே, மாநில அரசு இதுகுறித்து மத்திய அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும். என்ன விலை கொடுத்தாவது, பட்டியலிலிருந்து வெளியேறி எங்கள் அடையாளத்தை மீட்டெடுப்போம்!’’
த.கதிரவன் – படம்: தே.அசோக்குமார்
நன்றி : ஆனந்த விகடன், 04/10/2018