பண்டிதமணி
க. அப்பாதுரையார்
ஆசிரியர்: தமிழன் (கோலார்)
இலக்கியத்தில் மூழ்கி புராண இதிகாசங்களில் திளைத்து, வரலாறு உணர்ந்து தருக்க ரீதியாக ஆதாரங்களோடு வாதிட்ட பகுத்தறிவாதிகள் தமிழகத்தில் மிகக் குறைவு. அவர்களில் சிறந்தவர் பண்டிதமணி ஜி. அப்பாதுரையார். அவர் வாதத்தில் அன்றையக் காலத்துத் தமிழ்நாடு தூயத் தமிழகம், இணைந்தோடும்-கருத்தில் தரம் தெரியும், திறன் பேசும், அறம் ஒளிரும், சிந்தனையிலே உணர்வு பொங்க, சிந்தையிலே உரத்தைத் தேக்கி செயலிலே வீரத்தைக் காட்டி வாழ்ந்தார் அப்புலவர் பெருமகனார்.
இவர் 1890-இல் கொங்கு நாட்டில் பிறந்து கோலாரில் வளர்ந்தார். தமிழ் ஆர்வமும் அறிவும் பெற்று பண்டிதரானார். இளமையிலே கழைக்கூத்து, மாந்திரீகம், பில்லி, சூனியம் போன்றவைகளில் நாட்டங் கொண்டிருந்தார் என்பார்கள்.
1907-இல் இவர் வாழ்க்கையில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. இதற்கு, தமிழகத்து முதல் பகுத்தறிவாதியான தண்டமிழ் செல்வன் பண்டித க. அயோத்திதாச தம்ம தாயகா அவர்களால் சென்னை ராயப்பேட்டையிலிருந்து வெளியிடப் பட்டுவந்த ‘தமிழன்’ பத்திரிகையும், அயோத்திதாசரின் எண்ணற்ற விளக்கக் கூட்டங்களே காரணமாகும் – சமயம், சமுதாயம், இலக்கியம் ஆகியத் துறைகளில் வல்லவர்களோடு வாதிட்டு வெற்றிக் காணுவது இவருக்கு கைவந்த கலையாயிருந்தது. 1912 லிருந்து திராவிடன், நவசக்தி, விலாசினி, குடியரசு போன்ற பத்திரிகை களிலும், சிறப்பாக தமிழன் பத்திரிகையிலும் பல்வேறு வகை யான அரிய கட்டுரைகளை எழுதி புகழ் பெற்றார்.
ஆரம்ப காலத்தில் கிருத்துவ சமயத்தை ஏற்றியிருந்த இவர் 1911-இல் தமது 21-வது வயதில் பௌத்த நெறியை தழுவினார். இதில் மிகவும் ஈடுபாடு கொண்டு ‘இளைஞர் பௌத்த சங்கத்தை’ கோலார், வேலூர், சென்னை, செங்கற்பட்டு போன்ற இடங்களில் ஏற்படுத்தினார். சிறு நூல்கள் பல எழுதினார். எண்ணிலடங்கா அறியைக்கக் கூட்டங்களை நடத்தினார். இவரது நீத்தார் நினைவு நாளில் “எங்களுக்கெல்லாம் முன்பே பகுத்தறிவு பிரச்சாரம் செய்து மக்களை திருத்தியவர் இவர்” என்று பெரியார் ஈ.வெ.ரா. அவர்களால் புகழப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
1917-இல் மாண்டேகு சேம்ஸ் போர்ட் குழுவினருக்கு சமுதாய நிலையை வளக்கியது, 1924-இல் காந்தியடிகளோடு சமுதாயச் சீர்த்திருத்தத்தைப் பற்றி வாதிட்டது, ஆகியவை இவரது தொண்டின் சிறப்புகளாகும். 1926-லிருந்து பள்ளி ஆசிரியராகவும், கோலார் “தமிழன்” பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றினார். புத்தர் அருளறம் என்ற நூலினை படைத்துள்ளார். 1930-லிருந்து 1955 வரை அவர் செய்த தொண்டு மகத்தானதாகும். 1962-ல் உடல்நலங்குன்றி பஞ்சஸ்கந்த பிரிவினையடைந்தார்.