பொய், புரட்டுகள் சமூக வரலாற்றில் காலம் காலமாக பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன. புத்தர் காலம் துவங்கி என்பதை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். அப்படியான பொய்களில் பெயர் மீதான பொய்கள் பிரபலமானவை. நாட்டுப்புற தெய்வங்களையெல்லாம் பெருங்கடவுள்களின் அவதாரப் பெயர்களாக மாற்றுவது என்பது அதில் முக்கியமானது. இந்த பெயர் அழுக்கு அண்ணல் அம்பேத்கர் பெயர் மீதும் சுமத்தப்பட்டுள்ளது. பள்ளிக்காலங்களில் அம்பேத்கர் குறித்த பாடத் திட்டங்களில் பொதுவான ஒரு சம்பவம் விவரிக்கப்படும். அண்ணல் தனது பால்ய வயதில் படிக்க வாய்ப்பில்லாமல் இருந்த போது, அம்பேத்கர் என்கிற பெயருடைய ஆசிரியர் அவருடைய கல்விக்கு பேருதவி செய்ததாகவும் அதன் காரணத்தினாலேயே அவருடைய பெயரை அண்ணல் தனக்குச் சூட்டிக் கொண்டதாகவும் முடியும் அந்த கதை.
2018-ல் அம்பேத்கர் பிறந்தநாளில் நியூஸ்-18 தமிழ்நாடு செய்தி அம்பேத்கருடைய ஆவண படம் ஒன்றை ஒளிபரப்பினார்கள். அதிலும் கூட இதே புரட்டு தொடர்ந்திருந்தது. இன்னும் அந்த தகவலை ஆழமாக உள் நுழைந்து பார்த்தால், அந்த ஆசிரியர் ஒரு பார்ப்பன சமூகத்தை சோ்ந்தவர். அவர் அண்ணலின் கல்விக்கு பேருதவி செய்தார் என்கிற பல பதிவுகள் எங்கும் பரவிக் கிடக்கின்றன.
அண்ணலின் பெயர் அப்படித்தான் வந்திருக்கும் என ஒரு தீர்மானமாகவே இருந்த சூழலில், சூலை 2018-ல் வெளிவந்த ஒரு புத்தகம் அதனை மறுத்துள்ளது. “அம்பேத்கர் என்ற பெயர் ஒரு பார்ப்பனருடையதா? – கழுவப்படும் பெயரழுக்கு” என்கிற இந்த புத்தகத்தை யாக்கன் அவர்கள் எழுதி ஆவணப்படுத்தியுள்ளார். கலகம் வெளியீட்டகம் இதனை அச்சிட்டு வெளியிட்டுள்ளது.
“இந்துவாக சாகமாட்டேன்” என சூளுரைத்து அதனை நிறைவேற்றிக்காட்டிய அண்ணலின் பெயரை இந்து அடையாளத்திற்குள் கொண்டுவர நினைத்த பாஜக அரசை அம்பலப்படுத்தி நூலை துவங்குகிறார் யாக்கன். உ.பி மாநில ஆளுனர் ராம்நாயக் மார்ச் 2017-ல் பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் அதில் அம்பேத்கரின் பெயரை, “பி.ஆர்.அம்பேத்கர் என எழுதுவது தவறு. அவரது பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ஆகும்.” என மாற்றக் கூறுகிறார். அதனை தொடர்ந்து தான் கலந்து கொண்ட பள்ளி ஆண்டுவிழாவில் “ அம்பேத்கரின் பெயரிலேயே கடவுள் ராமரின் பெயர் உள்ளது. அதனால் அரசு ஆவணங்கள் அனைத்திலும் அவரது முழுப் பெயரையும் எழுத வேண்டும் என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு, 2018, மார்ச் 29-ல் அதற்கு தனியாக அரசாணையை வெளியிட்டது.
தனது வாழ்நாள் முழுக்க இந்து சனாதனத்திற்கு எதிராக பேசியும் எழுதியும் வாழ்ந்தும் வந்த அண்ணலை இந்து சட்டகத்திற்குள் அடைக்க முற்படுவதை யாக்கன் நூலில் விவரிக்கிறார். அதே போன்றதுதான் அம்பேத்கர் எனும் பெயர் பார்ப்பன ஆசிரியருடையது என்கிற வாதமும். தன்னை வளர்த்துவிட்ட பார்ப்பன ஆசிரியரின் பெயரை தாங்கிக் கொண்டு தன்னை வளர்த்துவிட்ட சமூகத்தின் மீதே தாக்குதல் நடத்திய நன்றி உணர்வு இல்லாதவர் என்றும், அவரைப் போலவே தலித் மக்களும் நன்றி கெட்டவர்கள் என்கிற பிரச்சாரம் மிகத் தீவரமாக பரப்பப்பட்டுவருகிறது என வேதனை தெரிவிக்கிறார் யாக்கன். இதே போல அம்பேத்கர் எனும் பெருக்கு பின் எழுதப்பட்ட பல கதைகளை நூலில் விவரிக்கிறார். இந்த பார்ப்பன பெயர்க் கதையை அம்பேத்கரின் வாழ்க்கை குறிப்புகளில் குறிப்பிட்டுள்ள தனஞ்செய்கீர், டி.சி.அஹிர், வசந்த் மூன் போன்றோரின் பதிவு முரண்பாடுகளை விவரிக்கவும் தயங்கவில்லை யாக்கன். தனது மகனுடைய பெயர் பள்ளிப் பதிவேடுகளில் மாற்றப்பட்டதற்கு ஓய்வு பெற்ற ராணுவப்பள்ளி ஆசிரியரான அண்ணலின் தந்தை சிறு எதிர்ப்பு கூட காட்டாமல் இருந்திருப்பாரா! மராட்டிய மண்ணில் பிறந்த பார்ப்பனர் யாருக்கும் அம்பேத்கர் என பெயர் இருந்திருக்கவில்லை. பார்ப்பன ஆசிரியரின் குடும்பப் பெயர் எனில் அந்த பார்ப்பனர் குடும்பத்தில் உள்ளவர்களுக்காவது அப்பெயர் இருந்திருக்க வேண்டும் அல்லவா! வாழ்நாள் முழுவதும் பேசியும் எழுதியும் வந்த பாபாசாகேப் அம்பேத்கர் தனது உரையிலோ எழுத்திலோ அப்படியான எந்தத் தகவலையும் அவர் பதிவுசெய்ததில்லை. இப்படியான பல முரண்களை பதிவு செய்கிறார் நூல் ஆசிரியர்.
அண்ணலுடைய மூதாதையர்கள், மகராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் தபோலிக்கு அருகில் உள்ள ‘ஆம்படேவ’ எனும் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்டவர்கள். அண்ணலின் பாட்டனார் மால் நாக் அல்லது மாலோஜி கிழக்கிந்திய கம்பேனியின் மகர் ரெஜிமென்ட் படைப்பிரிவில் ‘கவில்தாரர்’ஆக பணியாற்றினார். மாலோஜிக்கு பிறந்து உயிரோடிருந்த மூன்று பேரில் ஒருவர்தான் அண்ணலின் தந்தை. அண்ணலின் சித்தப்பா ஃபக்ரியா என்றழைக்கப்பட்ட பல்வந்த், பக்தி மார்க்க சபையில் இணைந்து துறவியாக வாழ்ந்தவர். அண்ணலின் தாய் பீமாபாய் இறந்த பிறகு அண்ணலுடைய அத்தை (தந்தையின் தங்கை) மீராபாய்தான் அவரை பரிவுடன் வளர்த்தவர். அண்ணல் பிறந்த மகர் சமூகத்தின் போர் வீரம் பற்றிய கல்வெட்டு தகவல்கள் என அம்பேத்கர் குறித்த மிக நீண்ட வரலாற்றை பதிவு செய்துள்ளார் யாக்கன்.
அண்ணல் முதன்முதலில் தபோலி ஏ.ஜி உயர்நிலைப்பள்ளியில் தொடக்கக் கல்வியைத் துவங்கினார். சதாராவில் இருந்த அரசு பள்ளியில் படித்த போதுதான அம்பேத்கரின் பெயர் மாற்றப்பட்டதாக அண்ணலின் வரலாற்றை எழுதியவர்கள் குறிப்பிடுகிறார்கள். 1990-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாளன்று சதாராவில் அப்பள்ளியில் சோ்க்கப்பட்ட போது மாணவர் பதிவேட்டில் 1914 என்ற வரிசை எண்ணில் “பீவா ராம்ஜி ஆம்பேத்கர்” என்றும் பிறந்தநாள் 14-04-1891 என்றும் பதிவாகியுள்ளது. அண்ணலும் தனது ஒன்பதாவது வயதில் ‘பீவா ராம்ஜி ஆம்பேட்கர்’ என மராத்தி மொழியில் மோடி எழுத்துவடிவத்தில் கையெழுத்து இட்டுள்ளார்.
மோடி மற்றும் தேவநாகிரி போன்ற எழுத்து வடிவத்திலேயே மராத்தியை எழுதிவந்துள்ளனர். அம்பேத்கர் சதாரா அரசுப்பள்ளியில் சோ்ந்த நவம்பர் – 7 என்கிற தேதியை மகாராஷ்டிர அரசு கடந்த 27-10-2017-ல் மாணவர் தினமாக அறிவித்துள்ளது. இந்த மாணவர் தின அறிவிப்பை, அண்ணல், ‘பீவா ராம்ஜி ஆம்பேத்கர்’ என கெழுத்திட்டுள்ள மாணவர் பதிவேட்டினை அடிப்படையாக கொண்டுதான் அரசு உறுதி செய்துள்ளது என்பதை யாக்கன் இந்நூலில் மிக அழுத்தமாக பதிவு செய்கிறார். இப்பள்ளியில் சோ்க்கப்படும் போதே ‘பீவா ராம்ஜி அம்பேத்கர்’ என பதிவு செய்யப்பட்டுள்ள பெயரை, இப்பள்ளியில் படிக்கும் போதுதான் பார்ப்பன ஆசிரியரால் சூட்டப்படது என்கிற பிழையை வரலாற்றாசிரியர்கள் எழுதியுள்ளதையும் கேள்வியெழுப்புகிறார். அம்பேத்கர் சதாராவில் வாழ்ந்த வீட்டை அண்ணலின் நினைவிடமாக்குவதற்கு அரசு தொடர்ந்த வழக்கிலும் அதே மாணவர் பதிவேடுதான் முக்கிய ஆதாரமாக இருந்ததையும் குறிப்பிடுகிறார்.
இதோடு மிக முக்கியமான ஆவணமாக நூலில் அம்பேத்கர் கைப்பட எழுதிய கடிதங்களையும் சமர்ப்பித்துள்ளார். 1916-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்த அம்பேத்கருக்கு தனது பி.எச்.டி ஆய்வுரையை முடிக்க வேண்டிய நெருக்கடி இருந்தது. பி.எச்.டி.க்கான ஆவணங்கள், தரவுகள், நூல்கள் அனைத்தும் லண்டன் பிரிட்டீஸ் நூலகத்தில் இருப்பதை அறிந்தார் அண்ணல். எனவே அங்கு செல்ல திட்டமிட்டு, அமெரிக்காவில் இருந்து லண்டன் செல்வதற்கு கடவுசீட்டு பெற பிரிட்டீஷ் தூதரக அதிகாரிக்கு இரண்டு விண்ணப்பக் கடிதங்களை அண்ணல் அம்பேத்கர் எழுதியுள்ளார். கடிதத்தோடு சுயவிவரக் குறிப்பையும் இணைத்துள்ளார்.
அதில் அண்ணல் “என் முழுப் பெயர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர். என் தந்தையின் பெயர் ராம்ஜி மாலோஜி அம்பேத்கர். எனது தந்தையின் பிறந்த நாளோ அவர் பிறந்த இடமோ எனக்கு தெரியாது. அதற்காக வருத்தப்படுகிறேன். நான் மோவ் (மால்வா, இந்தியா)என்ற இடத்தில் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் நாள் பிறந்தேன். ஆனால் வாழ்ந்ததும் படித்ததும் பாம்பே நகரில்.” என தனது சுயவிவரங்களை தன் கைப்பட எழுதியுள்ளார்.
“’1916-ஆம் ஆண்டு அம்பேத்கரால் எழுதப்பட்ட சுயவிவரக் குறிப்புகள் அடங்கிய அந்தக் கடிதத்தில் தனது பெயர், பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் என்றும் தனது தந்தையின் பெயர் ராம்ஜி மாலோஜி அம்பேத்கர் என்றும் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.தம் தந்தையின் பெயர் குறித்து டாக்டர் அம்பேத்கரே அளிக்கும் இந்த குறிப்புகள் ‘அம்பேத்கர் என்ற பெயர் ஒரு பார்ப்பனருடையது என்ற நூற்றாண்டு காலக் கொடுங்கதையை முடிவுக்கு கொண்டு வருகின்றன. அம்பேத்கர் என்ற பெயர் அவருடைய இயற்பெயர் என்பதை சந்தேகத்திற்கிடமின்ற உறுதி செய்கின்றன.” என கழுவப்படும் பெயரழுக்கு எனும் இந்நூலின் ஆசிரியர் யாக்கன் நிறுவுகிறார். இதே போன்று அம்பேத்கர் கைப்பட எழுதிய பல கடிதங்களை ஆவணமாக்கி, இந்த பொய் புரட்டுகளுக்கு இந்த நூலின் மூலமாக முடிவுரை எழுதியிருக்கிறார் யாக்கன். அம்பேத்கர் வாழ்வின் பல தகவல்களையும் இந்நூல் பேசிச் செல்கிறது. அம்பேத்கரின் பால்ய வயது புகைப்படம், அவர் படித்த பள்ளிகளின் படங்கள், அவர் கையெழுத்தால் ஆன பல கடிதங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அம்பேத்கர் எனும் பெயருக்கான தகவல் திரட்டு இந்நூல்.
ரகுநாத்
சஞ்சிகை – சிற்றிதழ்