உலக கவிதை நாளில்
இன்னொரு கவிதை எழுதி
என்ன செய்யப்போகிறான்
அவன்…
தலை போகும் அவசரத்தில்
‘தளை’ தட்டினால் தான் என்ன?
‘அசை’வதெல்லாம் இங்கே
‘சீராக’வா இருக்கிறது!
வருத்தத்தைப் பாட
விருத்தம் பொருத்தமா?
எத்தனை லிட்டர்
இலக்கியக் கண்ணீர்
ஏகலைவன் விரல் மீட்கும்?
அனிதாவின் உயிர் மீட்கும்?
எத்தனை கிலோ இலக்கியம்
“இடஒதுக்கீடு சலுகை அல்ல
சமூக நீதி” என்று
சொல்லவேண்டிய இடத்தில்
சுத்தியலால்
அடித்துச் சொல்லும்.. !
இதோ
கற்பூரத்தை தின்ற
கழுதை
ஆரத்தி தட்டிலிருந்த
வெற்றிலை பாக்கையும்
தின்றுவிட்டது.
”போங்கடா புண்ணாக்குகளா”
என்று
ஒரேவரியில் சொல்லி நகராமல்
சுற்றிவளைத்தும்
அப்பிடி இப்படி என்று
மென்றுமுழுங்கியும்
எழுதிக்கொண்டுதான்
இருக்கிறான்
அவன் இன்னும்…
சிற்பியால் முடிந்தது சிலை…
துரோகிகளின் பட்டாபிஷேகத்தில்
துதிபாடாமல் சாதிக்கும்
மவுனம் கூட கவிதை தான்..
இதோ…
23 ஆம் புலிகேசியின்
முகத்தில் காறித்துப்பிய
கரடியின் எச்சில் முழுவதும்
இலக்கியம் மணக்கிறது!
ஆர். பாலகிருஷ்ணன்
21.03.2021