பாபா சாகேப் அம்பேத்கர் எழுதிய இந்தியக்கிறிஸ்தவம் குறித்த ஆய்வுகளில் தென்னிந்தியா பற்றிய குறிப்புகள்.
இந்திய வரலாற்றில், இந்திய சமுதாய அரசியல் மறுமலர்ச்சியில் ஆர்வமுடைய எவரும் அண்ணல் அம்பேத்கரின் அனைத்து நூல்களையும் வாசிக்கவேண்டும் என்று பெருவிருப்பு கொள்வார் இதில் சந்தேகமில்லை. அதிலும் குறிப்பாக இந்து மதம், தீண்டாமை, சாதியம் குறித்து அவர் எழுதியுள்ள ஆய்வுகள் ஈடுஇணையற்றவை.
ஆங்கில நூல் தொகுப்புகளில் 4,5 தொகுப்புகளாக இருந்த நூலாக்கம் பெறாத நூல்களாக (Unpublished writings) இருந்து வசந்த் மூன் அவர்களின் பேருழைப்பால் நூலாக்கம் பெற்ற நூல்தொகுப்புகள் தமிழில் ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து தொகுதிகளாக டாக்டர் அம்பேத்கர் பவுண்டேஷன் மற்றும் இந்திய சமூக நீதித்துறை உழைப்பில் அழகாக மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. இவற்றை பத்தாவது தொகுதியில் பகுதி4 சமயம் ஆகும். இதில் 4 இயல்கள் உள்ளன. அவை முறையே 27, 28, 29, 30 ஆகும். இவ்வியல்களில் 29, 30 பகுதிகளில் மிக விரிவாக டாக்டர் அம்பேத்கர் கிறிஸ்தவ சமய வரலாறு குறித்தும் அது இந்தியாவில் ஓரளவு இந்துக்களையும் தீண்டப்படாத மக்களையும் எவ்வாறு உள்வாங்கியது? மதம் மாறியவர்களின் நிலை என்ன? கிறிஸ்தவம் எவ்வாறு இந்தியாவில் சாதி ஒழிப்பிற்குப் பங்காற்றியது? அதன் வெற்றி, தோல்விகள் என்ன? அதன் எதிர்காலம் என்ன? என்று விரிவாக ஆராய்ந்துள்ளார். பக்கம் 479 இலிருந்து 562 ஆம் பக்கம் வரை விரிவாக ஆராய்ந்துள்ளார். இந்த ஆய்வை முடிக்கும் பொழுது அவர் பின்வருமாறு கூறுகிறார் இவை நெஞ்சில் நிறுத்த வேண்டிய கருத்துக்கள் ஆகும்.
“இந்திய கிறிஸ்தவர்கள் பால் நான் ஆழமான அக்கறை கொண்டு இருக்கிறேன். ஏனெனில் அவர்களில் மிகப் பெரும்பான்மையினர் தீண்டப்படாத சாதிகளில் இருந்து ஈர்க்கப்பட்டவர்கள்.நான் செய்துள்ள விமர்சனங்கள் நண்பனின் விமர்சனங்களே அன்றி ஒரு எதிராளியின் விமர்சனங்கள் அல்ல. அவர்களின் குறைகளை அவர்களது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு காரணம் அவர்கள் பலம் உடையவர்களாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புவதால் தான். ஏனென்றால் அவர்களைப் பெரும் அபாயங்கள் எதிர்நோக்குகின்றன” (பக்கம் 561 தொகுதி 10 (தமிழ்) பேச்சும் எழுத்தும்)
இயேசுநாதரின் 12 சீடர்களில் ஒருவரான தாமஸ் காலம் தொடங்கி இந்தியாவில் கிறிஸ்தவம் நூற்றாண்டு தோறும் எவ்வாறு விரிவாக வளர்ந்துவிட்டது என்று விவரித்துள்ளார்.தாமஸ் இந்தியாவிற்கு வந்தது சென்னையில் அவருக்கு நினைவுச்சின்னம் என்றெல்லாம் இருப்பினும் கூட அதற்கு இன்னும் நம்பத் தகுந்த சான்றுகள் சரியாக வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் எண்ணுகின்றார். இரண்டாம் நூற்றாண்டில்அலெக்சாண்ட்ரியா விலிருந்து கிறிஸ்தவ மத பிரச்சாரகராக வந்த பென்டோனியஸ் பற்றி வரலாற்று ஆவணங்களில் உள்ளது என்று கூறுகிறார்.
பின்னர் 15, 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு பிறகு ஐரோப்பியரின் தொடர் பயணங்களை விரிவாக விளக்கியுள்ளார். கிறிஸ்தவ மதத்தின் வளர்ச்சிக்கு மூன்று காரணங்கள் வேகத்தடை போட்டு உள்ளன என்றும் விவரிக்கிறார். மேலும் கிறிஸ்துவ நிறுவனங்கள் தங்களது உயர்கல்வி களையெல்லாம் இந்தியாவில் சாதிப்பிரிவு மக்களுக்கு விழுந்து கொண்டு பணியாற்றினாலும் அவர்களில் எவரும் கிறிஸ்தவத்தை நோக்கித் திரும்புவது இல்லை மாறாக தீண்டப்படாத மக்கள் கிறிஸ்தவத்தின் ஈர்க்கப்பட்டாலும் கிறிஸ்தவர்கள் அவர்களை இன்னும் சரியான விதத்தில் அங்கீகரிக்கவில்லை. இந்தியாவில் கிறிஸ்தவர்கள் இன்னும் தீண்டாமை உணர்வுடன் இருக்கின்றனர் என்று டாக்டர் அம்பேத்கர் குற்றம் சாட்டுகிறார்.
கிறிஸ்தவர்கள் தங்களது அரசியல் ஆதிக்கம், ஒற்றுமை, தீவிரமான சமூக செயல்பாடுகள் ஆகியவற்றில் மிக கவனமாகத் தங்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். ராபர்ட் டி நொபிலி, சுவார்ட்ஸ் இன்னும் பல்வேறு கிறிஸ்தவப் பாதிரிகளின் பணிகளையும் விளக்குகின்றார். “உண்மையானஒரு கிறிஸ்தவன் சாதியில் நம்பிக்கை வைக்க முடியாது” (பக்கம் 536 மேற்படி நூல்) என்று கருத்துரைக்கிறார்.
இந்த இடத்தில் டாக்டர் அம்பேத்கருக்கு 50 ஆண்டுகளுக்கு முன்பேயே அயோத்திதாச பண்டிதர் அவர்கள் அரைக்கிறிஸ்தவர்கள் என்று விவிலியத்தை ஒரு கையிலும் மறு கையில் மனு தர்மத்தையும் வைத்து கொண்டிருப்பவர்களை, சாதி பேதத்தைத் தேடுபவர்களை அரைக்கிறிஸ்தவர்கள் என்று அயோத்திதாச பண்டிதர் விளக்கியுள்ளார் என்பது ஒப்பிட்டு ஆராயத்தக்கது.
இந்தப் பதிவுகளில் டாக்டர் அம்பேத்கரின் ஆழ்ந்த புலமையை அற்புதமான மேற்கோள்கள் வழி அறியமுடிகிறது.மேலும் மிக கூரிய கண்களுடன் நேர்மையுடன் ஆய்வு செய்ததையும் உணரமுடிகிறது.
– பேரா.க.ஜெயபாலன்