தமிழகத்தில் புத்தமதத்தின் தொடக்கநாள்களில் புத்தரின் முழு உருவச்சிலை வழிபாடு இல்லை. பாதங்களும் பீடிகையும் திறந்த வெளியில் வைத்து வழிபடப்பட்டன. காவிரிப் பூம்பட்டினத்தில் புதைபொருள் ஆராய்ச்சியில் கிடைத்த சுண்ணாம்புக்கல்லில் செய்யப்பட்ட புத்தரின் பாதங்கள் சான்று.
சங்க காலம் கி.மு. 3 முதல் கி.பி. 2 வரை தமிழுக்கும் சங்க இலக்கியத் திற்கும் பவுத்த சமயமும் அதன் தத்துவமும் புதிதில்லை. ஒரு வளமையான தத்துவ விசாரம் தமிழிலும் பாலியிலும் காஞ்சியில் நிகழ்ந்திருக்கிறது.தமிழகத்தில் பவுத்தம் குறித்து முதலில் பேசியது ‘மணிமேகலை’ காப்பியம்.
” பீடிகை கண்டு பிறப்புணர்ந்த காதை”யில் மணிமேகலை புத்த பீடிகையின் அமைப்பைப் பேசுகிறது. “பவத்திறம் அறுக” எனப் பாவை நோற்றக் காதையில் மணிமேகலை திருவடியே சரண் எனச் சங்கத்தில் சரணாகதி அடைவதை சாத்தனார் பேசுகிறார்.
பெளத்த மரபின் இப்பாதவழிபாட்டினைப் பின்னாளில் வைணவ மரபும் ஏற்றுக் கொண்டது. ”அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று சைவமும் திருவடி பெருமை பேசத் தொடங்கியது.
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார்” என்பது குறள்.
கல்லாயிருந்த அகலிகை ராமனின் திருவடி தீண்டியபடியால் பெண்ணானாள். பலிச்சக்கரவர்த்தியின் சிரசில் தன் திருவடி அழுந்த அவன் பாதாள உலகின் அதிபதியானான். அனுமன் சிறிய திருவடி., கருடன் பெரிய திருவடி. என்று அறியப்பட்டனர். ஆண்டவனையும் குருவையும் திருவடி என்று குறிப்பிடப்படும் பாதம் மூலமாக வழிபடுவது பல மதங்களிலும் ஊடுருவியது.
– இந்திரன்