தமிழ் நாட்டில் முதன் முதலில் பார்ப்பனக் கருத்தாக்க சாதியச் சமூகத்திற்கு எதிராகத் திட்டமிடப்பட்ட சமநீதி இயக்கம், அறிவாசான் அயோத்திதாசரிடம் இருந்தான் தொடக்கம் பெற்றது அவர்தான் சாதிய மனிதர்களாக ஆக்கப்பட்டிருந்தஒட்டுமொத்த பார்ப்பனரல்லாதாருக்கும் “தமிழன்’ “திராவிடன்’ என அடையாளங்களை மீட்டுருவாக்கம் செய்தவர்.
தமிழ்த் தேசியத்தின் முன்னோடியான அயோத்திதாசரின் சமகாலத்திலேயே – அடங்காத கனலுடன் பார்ப்பனியத்தால் இழிவுக்கும் இயலாமைக்கும் ஆளாக்கப்பட்ட தொல்தமிழர்களின் அடியாழக் கனவுகளையும் எதிர்பார்ப்புகளையும் ஒன்றுதிரட்டி வழிகாட்டுகிற சமூகக்காவலராய் முற்றும் பொருந்தியவரே டி. ஜான்ரத்தினம் ஆவார். 1846இல் பிறந்த – ஜான் ரத்தினம் அவர்கள், அயோத்திதாசருக்கு ஒரு சில மாதங்களே இளையவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜான் ரத்தினம், கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தினூடே, கிறித்துவ மத நிறுவனப் பின்புலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பினைப்பெற்றார். 1862இல் உயர்நிலைப் பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி அடைந்தார். ஆங்கிலத்தில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லமை பெற்ற அவர், சென்னை மாநகரில் புகழ்பெற்ற “ஸ்பென்சர் கம்பெனி’யில் 1863ஆம் ஆண்டு பணியில் அமர்ந்தார். சமூக உருத்து கொண்ட அவரால் அப்பணியில் ஒரு சில ஆண்டுகளே நீடிக்க முடிந்தது.
சனாதன சமூக வக்கிரமும், அந்த வக்கிரத்துக்கு ஆட்பட்டவர்களால் சாதித்தரம் சார்ந்த மனித மதிப்பீடுகளே போற்றப்பட்ட வாழ்விலயல் தவிர, வேறெந்த உன்னதமும் திரண்டு விடாத அக்காலத்தில், ஜான். ரத்தினம் அவர்கள் தொல் தமிழர்களின் வாழ்க்கையை மாற்றுகளின்கர்ப்பமாக உணர்ந்தார். அதன் தேவையும் அவசர நிலைமையும்அவரை கிறித்துவத்தைத் தழுவுவதில் கொண்டு போய் விட்டது. சாதி அமைப்பின் தத்துவக் காவல் அரணான இந்து மதத்தைவிட்டொழிந்த அவர் தொல் தமிழர்களுக்கு – “மதமாற்றமே முழு சுதந்திரத்தை அளிக்கும்’ என்ற அறைகூவலை எழுப்பினார்.
பார்ப்பனிய சமூக வழமைகளில் மலினப்பட மறுத்தவராய் கிறித்துவரான ஜான் ரத்தினம், தனது அறச்சீற்றத்தின் வெளிப்பாடாய் கிறித்துவத்திற்குள் முழுமையாக அய்க்கியப்படலானார்.இந்து மத மறுத்தலின் சக்தியாய் மாறிய அவர், 1877இல் “ரெவரெண்ட்’ ஆனார். கிறித்துவத்துக்குள் தனக்கு ஏற்பட்ட பிடிப்பையும், மதகுரு பொறுப்பையும் தன் மக்களுக்குத் தொண்டு செய்யும் வாய்ப்பாக்கினார்.
பார்ப்பனியத்தின் பிறவிப் பேத ஏற்றத்தாழ்வுகளை எளிதில் அழித்துவிட முடியாதபடி அவை ஆயிரம் ஆயிரம் கால மனோபாவமாகக் கெட்டிதட்டி போயிருந்த நிலையில், ஆகங்கிலேயர் ஆட்சிதான் மக்கள் அனைவரும் “சட்டத்தின் முன் சமம்’ எனும் தத்துவத்தை – “உலகத்தோடு ஒட்ட ஒழுக்கலுக்கான சட்டமாக’ அறிமுகப்படுத்தியது. மேலும், பார்ப்பன – பார்ப்பனிய நிலமானிய அமைப்பில் அரசுக்கும் ஆண்டைகளுக்கும் நேரடியாக “உடலுழைப்பு ஊழியர்’ போன்ற கடமைப்பாடுகளை தலித்துகள் செலுத்தத் தேவையில்லை என்றும் சட்டம் கொண்டு வந்தது.
ஜான் ரத்தினம் அவர்கள் கிறித்துவத்தின் பரவலோடும் ஆங்கிலேய ஆட்சியின் விடியலோடும், தம் மக்களுக்கு நேர்ந்த இழப்புகளை சீர்படுத்த அணியமானார். இந்துப் படிமுறை அமைப்பின் அருவருப்பான சாதிய ஆதிக்கவாதிகளைவிட, சாதி இல்லாத சமூகத்திலிருந்து வெளிக்கிளம்பிய ஆங்கிலேயர்களை அழகானவர்களாகக் கண்டார். சமூக ஜனநாயகமற்ற பார்ப்பனியச் சூழலிலிருந்து மீள, ஆங்கிலேயர் ஆட்சியை நேச சக்தியாகப் பாவித்தார்.
பார்ப்பனியத்திற்கான எதிர்ப்பு சிந்தனையிலும்செயல்பாட்டிலும் – அயோத்திதாசரோடு இடையறாது ஊடாடுபவராகயிருந்த ஜான்ரத்தினம், 1885ஆம் ஆண்டு அயோத்திதாசரின் “திராவிட பாண்டியன்’ ஏட்டிற்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றார். இவ்வேடு. “திராவிடர்’ என்ற சொல்லாடலை சமூக – அரசியல் தளத்தில் முன்வைத்து “பார்ப்பனரல்லாதார்’ என்ற அணிசேர்க்கையை உருவாக்கியது? மேலும், “திராவிடம்’ என்ற சொல்லாடலின் மொழிக்குடும்பம், நிலப்பகுதி ஆகியவற்றுக்கு அப்பாலும் சமூக – அரசியல் தளத்தை நீட்டியது.
1886 இல் ஜான் ரத்தினம், தொல் தமிழர்கள் இயல்பிலேயே கலைஞர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு சென்னை மக்கிமா நகர், தேனாம்பேட்டை ஆகிய இடங்களில் “கலைக் கல்விக் கூடத்தை’யும் மாதிரிப் பள்ளிகளாக நிறுவினார். இப்பள்ளிகளில் ஓவியக் கலை சிற்பக் கலை, இசைக்கலை, தச்சுத் தொழில், தையல் தொழில் கற்பிக்கப்பட்டது.
மானுடச் சிந்தனையின் புற நிகழ்வுகளைப்போல, படித்தல் என்பவனாகப் பாவித்து ஜான் ரத்தினம் அவர்கள், இம்மூன்றின் ஊற்றுக் கண்ணாக கல்வியைக் கொண்டார். 1887இல்ஆயிரம் விளக்குப் பகுதியில்”வெஸ்லியன் மிஷின்’ பள்ளியைத் தோற்று வித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பும் ஏற்றார். “தமிழ்த் தென்றல்’ திரு. வி.க.வும் இப்பள்ளியில் ஆசிரியராகப் பணியில் அமர்ந்தார். இப்பள்ளியைப் பற்றி திரு.வி.க. அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“”அந்நாளில் ஆதிதிராவிடர்க்கென்று மாகாணத்தில் அமைந்த பள்ளிகளில் ஆயிரம் விளக்குப் பள்ளியே சிறந்ததாகயும், பெரியதாகவும் விளங்கியது. அதன் நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் எழுதப் புகுந்தால் அவை மட்டுமே தனி நூலாகும். தலைமையாசிரியர் அன்பு எங்களை பொறுப்புணர்ந்து நடக்கச் செய்யும் எங்கட்கு அப்பள்ளி கோயிலாகியது. அன்பு, உயர்வு தாழ்வைக் கடந்த உரியது என்னும் நுட்பம், ஆயிரம் விளக்குப் பள்ளியில் நன்கு விளங்கியது. நாடோறும் ஆதிதிராவிடப் பிள்ளைகளுடன் பழகும் பேறு எனக்குக் கிடைத்தது. அதனால் யான் அடைந்த தென்னை? யானும் ஆதிதிராவிடனாகிய பேற்றை அடைந்தேன். அதாவது யான் சாதியற்றவனானேன்.
“”பிறப்பில் உயர்வு கருதுதல் கூடாதென்று பேசிவந்தேன்; எழுதி வந்தேன். அப்பேச்சையும் எழுத்தையும் செயலாக்கியது ஆயிரம் விளக்குப் பள்ளி. மதவெறி என்னை பேயாக்கியது. அப்பேயையும் ஆயிரம் விளக்குப்பள்ளி ஓட்டியது. ஜான் ராத்தினத்தின் கூட்டுறவு, எனது மத வெறியின் வேரைக் கவ்வியது. தொண்டின் திறத்தை ஜான் ரத்தினத்தின் வாழ்க்கை எனக்கு அறிவுறுத்தியது.”
தமிழ்த் தென்றல் திரு.வி.க.வுக்கு ஜான் ரத்தினம் ஆசிரியராகவும் இருந்தவர். திரு.வி.க. – கமலம்பிகை வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை முன்னின்று நடத்தியவர்.
அக்காலத்தில் நீதித் துறையில் ஆங்கிலேயர்களும், பார்ப்பனர்களும், பார்ப்பனர்களை அடுத்த ஆதிக்கச் சாதியினருமே ஆக்கிரமித்திருந்தனர். ஜான் ரத்தினம் அவர்கள் தமது அறிவாலும், ஆற்றலாலும் மக்கள் தொண்டாலும் ஆங்கிலேயே அரசால் மதிப்பளிக்கப்பட்டு, ஆயிரம் விளக்குப் பள்ளி தொடங்கிய 1887இல் சென்னை மாகாண கவுரவ நீதியரசராக்கப்பட்டார். தான் ஏற்ற பதவியின் பொறுப்புணர்ந்து அதில் உண்மையும் நேர்மையும், நீதியும் கொண்டு அப்பழுக்கற்றவராய் நீதி பரிபாலனம் புரிந்தார். இவரால் தொல் தமிழர்கள், நீதியின் எல்லைக்கு வர முடிந்தது. ஜான் ரத்தினம் அவர்கள், நீதிமன்றம் என்பது நடைமுறையில் வெறும் வழக்குகள் மன்றமாகவும், நீதிபதிகள் வெறும் மதிப்பீட்டாளராகவும், சாட்சியங்களுக்கேற்ப நீதி வளைந்து போவதையும் தன்னளவில் தடுத்து நிறுத்தினார்.
ஜான் ரத்தினம் அவர்கள், 1889இல் தொல் தமிழர் பிள்ளைகளின் வாழ்வியல் இடர்ப்பாடுகளை உணர்ந்து அவர்களின் படிப்புக்குப் பின்புலமாக மாணவர் விடுதியினை ஏற்படுத்தினார். 1892இல் அவர் தோற்றுவித்த “வெஸ்லியன் மிஷன்’ பள்ளி மிகப் பெரிய பள்ளியாகும். 10 மைல் சுற்றளவில் ஆண் – பெண் இருபாலருக்கும் இப்பள்ளியே கல்வியை வழங்கியது. தொல் தமிழர்களுக்குள் தலைமுறை மாற்றத்தை ஏற்படுத்தியது.
காலங்காலமாய் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை முன்னெடுக்க, சமூகப் பாட்டாளி வர்க்க மக்களின் தனித்துவமான பிரச்சினைகளை எல்லாம் அம்பலத்திற்குக் கொண்டுவர, மனித உரிமைகளை வென்றெடுக்க, தலித் தலைமையிலான தனியான அமைப்பு தன்னளவில் தோற்றுவிக்க வேண்டும் என உறுதி பூண்டு, 1892இல் “திராவிடர் கழகம்’ என்ற அமைப்பினை உருவாக்கினார்.
வாழ்வின் வேட்கை புரியாமல், சமத்துவம் அறியாமல், தாழ்வு மனப்பான்மையால் தடம் புரண்டிருந்த தன் மக்கள் தலை நிமிர்ந்து வாழவும், சமூக ஒருங்கிணைப்பில் வெற்றிவாகை சூடவும், திராவிடர் கழகத்தினை ஏற்படுத்திய ஜான் ரத்தினம் அவர்கள், சக மனிதர்களிடம் கருத்துப் பணியாற்றுவது களப்பணியாற்றத்தான் என்பதைத் தன் வாழ்வின் அடிநிலை இழையாக பற்றுக் கொண்டதால், திராவிடர் கழகத்திற்கென “திராவிடத் தூதன்’ என்ற ஏட்டினையும் தோற்றுவித்தார்.
ஜான் ரத்தினம் அவர்கள், திராவிடர் கழகம் மூலம் சமநீதிக்கான சாத்தியப் பாடுகளை நிவேற்றிக் கொள்வதில் ஆங்கிலேயே ஆட்சியாளர்களிடம் கேட்பதையும், நிர்பந்திப்பதையும் தன் உத்தியாகக் கொண்டு செயல்பட்டார். சென்னையின் பல பகுதிகளில் தொல் தமிழர்கள் குடியிருப்புகள் அமைய ஆவன செய்தார். தொல் தமிழர்களுக்கு நில உரிமை பத்திரப் பதிவினை, மாவட்ட ஆட்சியாளர் சான்றிதழாக, எக்காலத்திலும் யாரும் பறிமுதல் செய்ய முடியாதபடி உத்திரவாதத்தோடு நில உரிமை அமைய கவனம் மேற்கொண்டார்.
1900 இல் நெல்லை மாவட்டத்தில் கிறித்துவத்தை ஆக்கிரமித்த ஆதிக்கச் சாதியினர், தாழ்த்தப்பட்ட சாதியிலிருந்து கிறித்துவம் தழுவியர்களால் கட்டப்பட்ட திருச்சபைக்கு அவர்களைச் செல்ல விடாமல் தடுத்து வந்தனர். மேலும், அவர்களைத் தங்களுடைய விவசாயப் பண்ணைக்கு முழுநேரமும் பயன்படுத்தி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இப்படிப்பட்ட நிலைமைகளைக் கண்டித்து ஜான் ரத்தினம் அவர்கள், தமது “திராவிடத் தூதன்’ ஏட்டில் தொடர்ந்து எழுதி வந்ததோடு ஆட்சியாளர்களிடம் முறையிட்டுத் தீர்வும் கண்டார்.
ஆதித்தமிழர்களின் சுயஉறுதியாக்கத்தை நோக்கிய கருத்தியலை முன்வைத்து மேடையேறிய ஜான் ரத்தினம், ஏறத்தாழ கால் நூற்றாண்டு அளவில், 1914வரை தொல்தமிழர் அமைப்புகளின் எல்லாக் கூட்டங்களுக்கும் தலைமை வகித்தவர் ஆவார். அவரது உரை வீச்சுகளின் உள்ளடக்கம், “மானுடத்தில்’, இழப்புகளற்ற உறவுச் சமன் பாடுகளை நிலைப்படுத்துகிற, நிரந்தரத் தீர்வு இருந்தே ஆக வேண்டும். அப்பொழுதுதான் சமூகம் முழுவதற்குமான ஒருமுக வளர்ச்சியும் உள்ளார்ந்த உறவும் சாத்தியப்படும்’ என்பதாக இருந்தது.
1914ஆம் ஆண்டிலிருந்து ஜான் ரத்தினம் அவர்கள் தலித் தலைவர்கள் ஷாப் சுப்பிரமணியம், எம்.சி.ராஜா, நீதிக்கட்சித் தலைவர் டாக்டர் டி.எம். நாயர் ஆகியோராடு இணைந்து பணிபுரியலானார். 1917ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று சென்னை ஸ்பர்டாங் சாலையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிக்கட்சியின் கூட்டத்திற்கு ஜான் ரத்தினம் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டார்.
1922இல் ஆதிதிராவிடர்களுக்கும் சாதி திராவிடர்களுக்கும் இடையே இருந்த பாகுபாடுகளைக் களைய வேண்டி, தலைவர் ஷாப் சுப்பிரமணியம் தன் சொந்த செலவிலேயே மாநாட்டினைக் கூட்டினார். இம்மாநாடு வெற்றி பெற ஜான் ரத்தினம் தன் 76ஆவது வயதிலும் கடும் பணியாற்றினார்.
மக்களை ஒருங்கிணைத்தல், விடுதலைக்காக நிலைப்படுத்துதல், வளப்படுத்துதல் என்பதே ஜான் ரதினம் அவர்களின் நெடிய சமூக வாழ்க்கைப் பயணத்தின் ஒற்றை இலக்காகும். அவருடைய கடைசிக் காலத்தில் நம்மோடு சம்மந்தப்பட்ட, தம்மைச் சுற்றியிருந்த, தம்மையும் உள்ளிட்ட, தம் காலத்து விசயங்களை – நடப்புகளை, தம்மக்களின் நோக்கில் ஆதங்கத்தோடு நினைவு கூர்வது, இளைய தலைமுறையினரோடு பேசிப் பகிர்ந்து மெய் சிலிர்ப்புப் பெறுவது அவருக்கு ஆறுதலாக இருந்தது.
ஜான் ரத்தினம் அவர்கள், ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களையும் ஓரணியில் திரட்டும் இணைப்புப் பாலமாக “கூடுமிடம்’ ஒன்றினை 100 ஏக்கர் நிலத்தில் சமூகக் கூடத்துடன் ஏற்படுத்த பாடுபட்டார். மாகாண ஆளுநரின் ஒப்புதலையும் பெற்றார். இது கைகூடும் வேளையில், தலித் மக்களிடையே மதபேத உணர்ச்சி வலுவடைந்து “கூடுமிடம்’ தடைபட்டு விட்டது. இந்நிகழ்ச்சி, ஜான் ரத்தினம் அவர்களின் நெஞ்சில் குத்திய முள்ளாகிப் போனது.
தனக்காக, தன் குடும்பத்திற்காக எதையும் தேடிக் கொள்ளாமல் எங்கும், எதிலும் எப்பொழுதும் தன் சமூகத்திற்காக வாழ்ந்து காட்டிய ஜான் ரத்தினம் அவர்கள், 1942இல் தன்னுடைய 96வயதில் தன்மக்களை விட்டுப் பிரிந்தார். அவர் மரண சாசனமாக விட்டுச் சென்ற சேதி – “விடுதலைக்கு முன் நிபந்தனை ஒற்றுமை’ என்பதுதான்.
“தலித் முரசு’ – மார்ச் 2003