மனித இனத்தைச் சாதியால் பிரித்த ஆதிக்க சக்திகளுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் எதிராக நடைபெற்ற சமூக நீதிக்கான போர்களுக்கு முன்னோடிதான் – தென்திசை முளைத்த செஞ்சுடர் உ.ஆ.பெருமாள் பீட்டர் அவர்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்கு அருகில் உள்ள பேரையூரில் சமூகப் பாட்டாளி வர்க்கத்தில் வேளாண்குடி மரபினரான ஆண்டித்தண்டல் – சிகப்பி தம்பதியினருக்கு, 7.1.1885 அன்று பிறந்தார் பெருமாள்.
சாதிய சமூகத்திற்கு மனசாட்சியும் இல்லை; மனுசத்தன்மையும் இல்லை என்பதை பேரையூரும் நிரூபித்தது. வானத்திலோ ஒரே இருட்டு. மாதமோ மார்கழி. நடுநிசி நேரத்தில் ஓர் ஓலைக் குடிசைக்குள் குளிரும் – காய்ச்சலும் போட்டிப் போட்டுக்கொண்டு, அந்த கர்ப்பிணிப் பெண்ணை உயிருக்குப் போராட வைத்தது. உறவினர்கள் அலறியடித்து ஓடிச்சென்று, பேரையூருக்கும் அந்தப் பகுதிக்கும் வாய்த்த ஒரே மருத்துவரான ஆதிக்க சாதியைச் சேர்ந்த பண்டிதம் பிள்ளையிடம் மருத்துவம் பார்க்க வேண்டி கதறி அழுகின்றனர். ஆனால், அந்த சாதி இந்து மிருகம் கீழ் சாதி வீட்டிற்கு வந்து மருத்துவம் பார்க்க மறுத்துவிட்டது.
குளிரோடும் காய்ச்சலோடும் போராடிக் கொண்டிருந்த அந்தக் கர்ப்பிணிப் பெண்ணை ஒரு கட்டிலில் கிடத்தி, வெட்டவெளியினூடே கண்மாய்க்குக் கொண்டு வந்ததில் – குளிரும், காய்ச்சலும் அதிகரிக்க – அந்த சாதி வெறிபிடித்த மருத்துவன் கண்மாய்க்கு வருவதற்குள், மரணம் அந்த தலித் பெண்ணை அழைத்துச் சென்றுவிட்டது. இப்படித்தான் நோய் வந்த ஒவ்வொரு தலித்தும், மருத்துவ வசதியின்றி செத்துக் கொண்டிருந்தனர். சாதி, தலித் மக்களின் மனித இருப்பின் உயிரியக் கத்திலும் விளையாடியது. இந்து அநாகரீக வக்கிரங்களிலிருந்து தப்பு வதற்கு வழியில்லாமலே இம்மக்கள் இருந்தார்கள்.
இந்த அவல நிலையே, பெருமாள் அவர்களை சமூக வாழ்வுக்கு கொண்டு வந்து நிறுத்தியது. தலித்துகளில் படித்த முதல் மனிதர் என்பதால், மக்களின் எதிர்பார்ப்புகளின் குவிமய்யமாக அவர் அடையாளம் காணப்பட்டார். இனி எந்தவொரு மனித உயிரையும் நோய்க்குப் பறிகொடுக்க மாட்டேன் என்று சூளுரைத்த பெருமாள் அவர்கள், மருத்துவப் புலத்துக்குள் விரைவாகப் பிரவேசித்தார். மனித நோய்களின் சகல கூறுகளையும் நோக்குகிற பார்வையில் விரிவடைந்தார். தானே மருத்துவ நூல்களையும், ஓலைச்சுவடிகளையும் வாங்கிப்படித்து மருத்துவத் துறையில் நிபுணத்துவம் பெற்றார்.
சாதி மேன்மைகளின் முட்டுக்கொம்புகளாக மருத்துவம் கற்பிதம் செய்யப்பட்டதற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.தலித் மக்களைத் தொட்டு வைத்தியம் பார்த்தால் – “தீட்டு’ ஏற்படும் என்றிருந்த சாதிய மூர்க்கத்தனத்திற்கு எதிராகத் தானே தலைசிறந்த மருத்துவராக மாறி, சித்த வைத்திய நூல்களையும் படைத்தளித்தார்.
தலித் மக்களை சந்தர்ப்பத்தாலும், சூழ்நிலையாலும் தாங்கிக் கொண்ட அவர், சமூக மாற்றத்திற்கான ஆயத்தங்களை தலித் மக்களிடமிருந்தே தொடங்கினார். ஒருவரைப் பார்த்தவுடன் அவரது சாதியை அடையாளப்படுத்தும் எந்தவித அணிகலன்களையும் அணியக்கூடாது என்றார். தலித் பெண்கள் ஈயத்தினாலான அணிகலன்களைக் கழுத்திலும் கைகளிலும் கால்களிலும் அணிவதை கைவிடச் செய்தார். பெண்கள் காது வளர்ப்பது நாகரீகமற்ற பழக்கம் எனச் சுட்டிக் காட்டினார். திருமணம் செய்வதற்கு முன்பாக ஆண்களும் – பெண்களும் உடல் மற்றும் உள்ள அளவில் பொலிவு பெற்று குடும்ப – சமூக நடப்புகளையும் தெரிந்திருக்க வேண்டும் என்றார்.
பெண்களுக்கு எதிரான எல்லா மூர்க்கத்தனங்களுக்கும் சனாதன இந்து தர்மமே பின்புலமாகும். பெண்கள் அடுக்களையிலிருந்தும், சேரியிலிருந்தும், வயல்காட்டிலிருந்தும் வெளியேறி நகரத்திற்கு சென்று மேற்படிப்புப் படித்து – ஆசிரியர்களாக, அரசு ஊழியர்களாக ஆகவேண்டும் என்றார். பாலியல் அடிப்படையிலான தனி மனித– சமூக உறவுகளைச் சமத்துவமானவையாக, சுதந்திரமானவையாக மாற்றியமைக்கப் பாடுபட்ட அவர், குழந்தை மணம், நிர்பந்தத் திருமண வாழ்க்கை இவைகளிலிருந்து பெண்களை விடுவிக்கச் செய்தார். திருமண விலக்கு, விவாகரத்து போன்றவற்றை நடைமுறைப்படுத்தினார்.
பெருமாள் அவர்கள், தம் மக்கள் வேளாண் கூலியாய்ச் சுருக்கப்பட்டிருப்பதே – சாதிய அடிமைத்தனத்தைப் பேணும் மூலகாரணி என அறிந்தார். கல்வியே தனது சமூகக் குழுவின் தன்னுரிமையை மீட்டெடுக்கும் ஆயுதம் என்பதில் உறுதி கொண்டார். ஆசிரியரான அவர், கைரேகை பதிப்பவர்களின் கட்டை விரலை வெட்டிவிட வேண்டும் என்று உத்தரவிட்டார். வேளாண் தொழிலில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு, பெற்றோர்களுக்கு , முதியோர்களுக்கு இரவுப் பள்ளிகளை ஏற்படுத்தி, அறிவொளி பாய்ச்சினார். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பிள்ளையைத் தத்தெடுத்துப் பள்ளிகளில் சேர்த்தார்.
சாதி ஆதிக்க திசை தோறும் இருள் தீற்றும் ஈன ஞானங்களை கேள்விக்குள்ளாக்கவும், ஊமை மாந்தரின் வெடித்தெழும் குரலாய் அறைகூவல் விடுக்கவும் 9.8.1922ஆம் ஆண்டு தனது தோழர்களான பரமக்குடி வீ. பீட்டர், எல். வேதநாயகம், மா.சாமுவேல், ப.மு.சின்னக்கருப்பன், ம.கா.பெரியநாயகம், ஆகியோரின் பின்புலத்துடன், ‘பூவைசிய இந்திரகுல சங்கத்தினை’ ஏற்படுத்தினார். தலித் மக்களுக்குப் பாலைவனப் பயணத்தில் பிளந்த வாயில் விழுந்த மழைத்துளியாய் இனித்த அவர், அமைப்பு ரீதியிலான சமூகத் தலைவரானார்.
கல்வி, நாகரீகம், சமூக ஒற்றுமை, சமூக முன்னேற்றம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட அச்சங்கத்திற்கு, பரமக்குடி வீ.பீட்டர், பொதுச்செயலாளரானார். பேரையூரை தலைமையகமாகக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் வரை நீடித்த அச்சங்கம்தான், முதன் முறையாகப் பதிவு செய்யப்பட்ட சங்கம். அச்சங்கமே தென் தமிழ்நாடு முழுவதும் அமைப்பு ரீதியிலான சிந்தனைக்கு வித்திட்டது.
நாகரிகம் என்பது தலித் மக்களுக்கு வாழ்க்கையின் தேர்வு; மற்றவர்களுக்கோ தேவையின் தீர்வு. தலித் மக்கள் தங்களுடைய பழைய தடத்தையும், தளத்தையும் அழித்துக் கொண்டுதான் விடுதலை பெற முடியும் என பிரகடனம் செய்த பெருமாள் அவர்கள், ஓட்டலில் உட்காரக்கூடாது; செருப்புப் போடக்கூடாது; தோளில் துண்டு போடக் கூடாது போன்ற “கூடாது’களுக்கெல்லாம் எதிராகப் போராடி பேரையூரில் தீண்டாமையை ஒழித்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் பனை மரங்கள் எங்கெங்கு அமைந்தனவோ, சேரிகள் எங்கெங்கு ஒதுங்கி இருந்தனவேõ, அங்கெல்லாம் கிறித்துவம் பரவியது. கிறித்துவ அருட்தொண்டர்களும், பாதிரிமார்களும் சேரிகளுக்குச்சென்று இறைப்பணியையும் சமூக நலப் பணியையும் ஆற்றினர். இந்து மதத்தால் சமூக ஜனநாயகம் மறுக்கப்பட்ட தலித் மக்களின் வாழ்க்கை முன்னேற வழி ஏற்பட்டது.
மானுடத்தில் விளிம்பில் தளும்பியத் தன் மக்களோடு, சோற்றில் கரைக்க உப்புக்கல்லாய் தன் இருப்பைக் கரைத்துஉயிர்ப்பூட்டிய தலைவர் பெருமாள் அவர்கள், தம் மக்கள் கல்வி பெறவும், மருத்துவ வசதி பெறவும், நடை – உடை பாவனைகள் மாறி நாகரிகமான வாழ்வு வாழவும், இழிதொழில்களை செய்யச் சொல்லி சாதி இந்துக்கள் நிர்பந்தப்படுத்தும் வேதனையிலிருந்து விடுபடவும், தன் மக்கள், ஆசிரியர்களாகவும் அரசு ஊழியர்களாகவும்போவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ளவும், கிறித்துவத்தை சாதகமாகக் கருதினார். 1925 ஆம் ஆண்டு கிறித்துவத்தைத் தழுவினார். பெருமாள்என்ற இயற்பெயரோடு பீட்டர் என்ற பெயரும் இணைந்தது.
தலைவர் பெருமாள் பீட்டருக்கு தலித்துகளின் தன்னுரிமையும் சாதி மறுப்பும் முக்கியமானது. சமூக விடுதலைக்கு தென்னாட்டு அம்பேத்கரான தலைவர் பெரியாரை ஏற்றுக்கொண்ட அவர், தான் நிறுவிய “பூவைசிய இந்திரகுல சங்க’த்தின் மூலம் சாதி மறுப்புத் திருமணத்தை 19.10.1934 இல் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து பல சாதி, மத மறுப்புத் திருமணங்கள் அவர் தலைமையில் நடந்தேறின.
தனது சந்ததி என்பதும் தனது பரம்பரை என்பதும் உறவுப் பெயர்பட்டியல் அல்ல ; அது நாளைய விடியலை நோக்கி நகரும் ஒரு சமூகக் குழுவின் வரலாற்றுத் தொடர்ச்சி என்பதை உணர்ந்த பெருமாள் பீட்டர், தன் மக்களுக்கு அரசியல் பின்புலமும் வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். அன்றைய ராமநாதபுரம் மாவட்டத்தின் அரசியல் களத்தில், பிரதானமாக கல்வி வள்ளல் காமராசர் தலைமையில் “காங்கிரசாகவும்’, முத்துராமலிங்கம் (தேவர்) தலைமையில் “பார்வர்டு பிளாக்’காகவும் எதிரும் புதிருமாக அணிவகுத்து நின்றன. தலைவர் பெருமாள் பீட்டர் தம் மக்களோடு காங்கிரசில் இணைந்தார். அவருக்கு சமூக–அரசியல் தளபதியாக இம்மானுவேல் சேகரன் வாய்க்கப் பெற்றார்.
காங்கிரசில் சேர்ந்து தலைவர் ஆனாலும் பெருமாள் பீட்டர், சமூகச் சீர்த்திருத்தத்தில் மிகக் கவனமாக இருந்தார். 1949ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் நாள் சென்னை மாகாண அன்றைய அமைச்சர் மாதவன் தலைமையில் பேரையூரில் இருந்த கள்ளுக்கடையின் மூடு விழாவினை, சமூகச் சீர்திருத்தவிழாவாக நடத்திக்காட்டினார்.அவர் கட்டளைக்கு இசைந்த மக்கள் பெருந்திரளாக வந்து, கள் பானைகளை உடைத்தெறிந்து கடைச்சுவர்களை இடித்துத் தரைமட்டமாக்கி, கூரையைப் பிய்த்தெறிந்து கள்ளுக்கடை இருந்ததற்கான அடிச்சுவடே இல்லாமல் செய்துவிட்டனர்.
ஒரு கிராமத்தில், ஒரே சமூக – பொருளாதார சூழலில் வாழும் மக்கள் மதம் மாறியதற்காக அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டதற்குத் தீர்வு காண வேண்டியும், தலித் கிறித்துவர்களுக்கு கிறித்துவ சபைகளில், நிர்வாக அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் பெற வேண்டியும், 26.9.54 அன்று “தமிழ்நாடு சுவிசேஷ லுத்தரன் கிறித்துவ யூனியன்’ என்ற அமைப்பினை உருவாக்கினார்.இதன் பொதுச் செயலாளர் இம்மானுவேல் சேகரன் ஆவார். இதுவே தலித் கிறித்துவ இயக்கத்தின் முன்னோடி அமைப்பாகும்.
1957இல் முத்துராமலிங்க(தேவர்) அருப்புக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதியிலும் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்ததால், 1957 சூலை 1ஆம் தேதி முதுகுளத்தூர் சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடந்தது.இதில் பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த சசிவர்ணத்(தேவர்) வெற்றி பெற்றார். தலித் மக்கள் அதிக எண்ணிக்கையில் காங்கிரசுக்கே வாக்களித்தனர்.
இதனால் கோபம் கொண்ட மறவர்கள், தலித் மற்றும் நாடார்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். பத்திரகாளிக்குப் பலி கொடுப்பதற்காக, காடாமங்கலத்தில் ஒன்பது தலித்துகள் பட்டப் பகலில் கடத்திச் செல்லப்பட்டனர். சித்தன்குடி கிராமத்தில் குடிதண்ணீரில் மலம் போடப்பட்டது. காடாமங்கலத்தில் தலித் மக்களின் பயிர்கள் அழித்தொழிக்கப்பட்டு, உடைமைகள் களவாடப்பட்டன. கலவரம் மூண்டது.
நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, அன்றைய மாவட்ட ஆட்சியாளர் சி.வி.ஆர். பணிக்கர் 10.9.1957 அன்று சமாதானக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். தலித் மக்களின் பிரதிநிதிகளாக பெருமாள் பீட்டர், இம்மானுவேல் சேகரன் அவர்களும், மறவர்கள் சார்பாக முத்துராமலிங்க (தேவர்), சசிவர்ண (தேவர்) ஆகியோரும் நாடார் சார்பாக வேல்சாமி (நாடார்), சீனிவாச (நாடார்) ஆகியோரும் அழைக்கப்பட்டிருந்தனர். “சமாதானத்தை நிலைநாட்ட தலைவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட கலவரப் பகுதிகளுக்குச் சென்று பொது மேடைகளில் பேசலாம்’ என்று முத்துராமலிங்க(தேவர்) ஆலோசனை கூறினார்.
பொதுக்கூட்ட மேடைகளில் சாதுரியமாகவும் சரளமாகவும் பேசக் கூடிய முத்துராமலிங்க (தேவர்), பொதுக்கூட்டங்களைத் தன் சாதிக்கு சாதகமாக்கிக் கொள்வார் என்பதை யூகித்த பெருமாள் பீட்டர், அவரின் யோசனையை ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களின் கொந்தளிப்பு அடங்காமல் இருக்கும் சூழ்நிலைகளில் கூட்டம் நடத்த முடியாது. எனவே, தலைவர்கள் அனைவரும் கையொப்பமிட்ட சமாதான அறிக்கையை துண்டுப்பிரசுரங்களாக அச்சிட்டு விநியோகிக்கலாம் என்று பெருமாள் பீட்டர் கூறிய ஆலோசனையை அனைவரும் ஏற்றனர். சமாதான அறிக்கையில் தனக்குச் சமமாக இம்மானுவேல் சேகரன் கையொப்பமிடுவதை முத்துராமலிங்க (தேவர்) மறுத்தார்.
ஆனால், இம்மானுவேலின் எதிர்ப்பும் மாவட்ட ஆட்சியாளரின் நிர்பந்தமும் முத்துராமலிங்கத்தை கையெழுத்திட வைத்தது. கூட்டம் முடிந்த அன்று இரவு இம்மானுவேல், பேரையூரில் பெருமாள் பீட்டர் வீட்டிலேயே தங்கிவிட்டு அடுத்த நாள் (11.9.1957) பரமக்குடியில் உள்ள பள்ளி விழாவில் பங்கேற்பதற்காக திரும்பினார். ஆனால், அன்று இம்மானுவேல் சேகரனின் படுகொலை செய்தி பெருமாள் பீட்டருக்கு வந்து சேர்ந்தது.
பழுத்த இலை சுழன்றதும் குருத்து இலை தளிர்த்தாற்போல், இச்சமூகத்திற்கு தனக்குப் பிறகு வாரிசாக இம்மானுவேலை பாவித்து வந்த பெருமாள் பீட்டர், தனக்கு முன்னமே இம்மானுவேல் உயிர் பறிக்கப்பட்டதில் உருக்குலைந்தார். இம்மானுவேல் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாதவராய் – நாளடைவில் மூலநரம்பே வர்மப் பிடிக்குள் சிக்கியது போல் பிசகிக் கொள்ள, அவர் நடையும் தடமும் சடைத்துப் போனார். 30.5.1960 அன்று தம்மக்களிடமிருந்து உடலால் மட்டும் விடை பெற்றுக்கொண்டார்.
பெருமாள் பீட்டர், தன் மக்களின் மகிழ்ச்சியின் போதும், துயரங்களின்போதும் கூடவே இருந்தார். புரட்சியாளர் அம்பேத்கருக்கு அய்ந்து வயது மூத்தவரான அவருடைய காலம், தலித் மக்களுக்கான வெறுமையை விரட்டியடிக்கும் காலமாக இருந்தது.
பெருமாள் பீட்டர், ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளாக மக்களே வாழ்க்கையாக , சுவாசமாக வாழ்ந்தவர். சமூகப் புரட்சியை மக்களுக்குள் விதைத்தவர். பெருமாள் பீட்டரின் வாழ்வில் சத்தியமிருந்ததால், காலப்பல்லக்கு வரிசையாக அவருக்காக காத்துக் கிடந்தது; இன்றும் காத்துக்கிடக்கிறது. காலங்கள் மாறலாம்; கோலங்கள் மாறலாம்; கோள்கூடதிசைமாறிக்கொள்ளலாம். ஆனால், தென்புலத்து தலித் மக்களின் வரலாற்றில் தலைவர் பெருமாள் பீட்டர் பதித்த ஆழமான சுவடுகளை, யாரும் மறுத்திடவோ, மறைத்திடவோ முடியாது.
“தலித் முரசு’ – அக்டோபர் 2002