புத்தரும் கார்ல் மார்க்ஸ்சும் என்பது பற்றி உதிரித்தாள்களில் தட்டச்சு செய்த மூன்று வெவ்வேறான பிரதிகளை ஆசிரியர் குழு கண்டுடெடுத்தது. அவற்றுள் இரு பிரதிகளில் டாக்டர் அம்பேத்கர் தம் கைப்படத்திருத்தம் செய்துள்ளார். இவற்றை ஒப்பிட்டுப் பார்த்த பின்பு, திருத்தங்களை உள்ளடக்கி இந்தக் கட்டுரை தொகுக்கப்பட்டது. இந்தக்கட்டுரை பின்வரும் குறுந்தலைப்புகளைக் கொண்டுள்ளது:
1. புத்தரின் கோட்பாடு
2 கார்ல் மார்க்ஸின் மூலக் கோட்பாடு
3. மார்க்சியத்தில் எஞ்சியிருப்பவை
4.புத்தர் – கார்ல் மார்க்ஸ் ஒப்பீடு
5.வழிவகைகள்
6.வழிகளைப் பற்றிய மதிப்பீடு
7.எவருடைய வழிகள் அதிகப் பயனுறுதியுள்ளவை?
8. அரசு உதிர்ந்து போதல்– பதிப்பாசிரியர்கள்
புத்தரா, கார்ல் மார்க்ஸா ?
கார்ல் மார்க்ஸ், புத்தர் ஆகிய இருவருக்கிடையிலான ஓர் மதிப்பீடு வேடிக்கையானதாகக் கருதப்படலாம். இதில் வியப்படைவதற்கு ஏதுமில்லை. மார்க்ஸுக்கும் புத்தருக்கும் இடையே 2381 ஆண்டு இடைவெளி உள்ளது. புத்தர் கி.மு. 563-ல் பிறந்தவர். கார்ல் மார்க்ஸ் கி.பி. 1818-ல் பிறந்தவர். கார்ல் மார்க்ஸ் புதியதொரு அரசியல் – பொருளாதாரக் கொள்கையின் சிற்பியெனக் கருதப்படுபவர். இதற்கு மாறாகப் புத்தரோ அரசியலுக்கும், பொருளாதாரத்திற்கும் தொடர்பேதுமில்லாத ஒரு சமயத்தின் நிறுவனரென நம்பப்படுபவர் இந்த அளவிற்குக் காலத்தாலும் வெவ்வேறான சிந்தனைப் போக்காலும் வேறுபட்ட இரு மாமனிதர்களை உடன்பாடாகவோ மாறுபாடாகவோ ஒப்பிடமுயலும் புத்தரா, மார்க்ஸா ?’ என்னும் இந்தத் தலைப்பு நிச்சயமாக விசித்திரமானதாகவே தோன்றும் மார்க்ஸையும் புத்தரையும் ஒரு சேரவைத்துப் பார்க்கும் நோக்கத்தையே மார்க்சிஸ்டுகள் நிச்சயம் எள்ளி நகைக்கக்கூடும். மார்க்ஸ் மிகவும் புதிய காலத்தைச் சேர்ந்தவர் புத்தரோ மிகப்பண்டைய காலத்தவர். தங்கள் தலைவரோடு ஒப்பிடுகையில் புத்தர் மிகவும் தொன்மைக் காலத்தவர் என்று மார்க்ஸிஸ்டுகள் கருதலாம். இவ்விருவருக்கிடையே என்ன ஒப்புமை இருக்கக் கூடும்? ஒரு மார்க்ஸிஸ்ட் புத்தரிடம் கற்றுக் கொள்வதற்கு என்ன இருக்கிறது? புத்தர் ஒரு மார்க்ஸிஸ்டுக்கு என்ன கற்பிக்க முடியும்? எனினும் இருவரிடையிலான ஒப்பீடு கவர்ச்சிமிக்கது; கற்பதற்குரியது. இவர்கள் இருவரையும் கற்று இவ்விருவருடைய கொள்கைகளிலும் ஈடுபாடு கொண்டுள்ளவன் என்ற வகையில் இவர்களுக்கு இடையிலான ஒப்பீட்டினை வலிந்து மேற் கொண்டவனாகியுள்ளேன். மார்க்ஸிஸ்டுகள் தங்களுடைய விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் புத்தரைப் படித்தறிந்து அவர் எந்தக் கொள்கைகளைப் பற்றி நின்றார் என்பதைப் புரிந்து கொள்வார்களேயானால் அவர்களின் கருத்தோட்டத்தில் நிச்சயமாக மாற்றம் ஏற்படும் என்று நான் உணர்கிறேன். புத்தரை ஏளனம் செய்ய வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கும் அவர்கள் உடனே பணிந்து போற்றத் தொடங்கி விடுவார்கள் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும். ஆயினும் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூற முடியும். புத்தருடைய போதனைகளில் அவர்கள் கவனித்துப் போற்றக்கூடியவை உள்ளன என்பதுதான் அது.
1. புத்தரின் கோட்பாடு
பொதுவாகப் புத்தர் அகிம்சைத் தத்துவத்தோடு இணைக்கப்படுகிறார். அவருடைய போதனைகள் அனைத்துமாய் முடிவுமாய் இருப்பது அதுவே எனக் கொள்ளப்படுகின்றது. புத்தர் போதித்தவை அகிம்சைக்கும் மேலாகப் பெரிதும் பரந்திருப்பவை என்பதை எவரும் சரிவர அறியவில்லை. எனவே, அவர்தம் கொள்கைகளை விரிவாக வரிசைப்படுத்தல் அவசியமாகின்றது. திரிபீடகத்தைப் படித்தறிந்த அளவில் நான் தெரிந்து கொண்டவற்றைப் பின்வருமாறு வரிசைப்படுத்துகின்றேன்;
1. ஒரு சுதந்திரமான சமுதாயத்திற்குச் சமயம் அவசியமாகிறது.
2. சமயங்கள் அனைத்தும் ஏற்புடையவை என்பதில்லை.
3. சமயம் வாழ்வின் உண்மைகளோடு தொடர்புடையனவாக இருத்தல் வேண்டுமேயன்றி, கடவுள், ஆன்மா, சொர்க்கம், பூவுலகம் ஆகியவற்றைப் பற்றிய கோட்பாடுகளையும் யூக அனுமானங்களையும் கொண்டதாக இருக்கக் கூடாது.
4. கடவுளைச் சமயத்தின் மையமாக ஆக்குவது தவறானது.
5. ஆன்ம முக்தியைச் சமயத்தின் மையமாக ஆக்குவது தவறானது.
6. உயிர்களைப் பலியிடுவதைச் சமயத்தின் மையமாக ஆக்குவது தவறானது.
7. உண்மைச் சமயம் மாந்தர்தம் உள்ளத்தில் உள்ளதேயன்றிச் சாத்திரங்களில் உள்ளது அன்று.
8. மனிதனும், ஒழுக்கமுமே சமயத்தின் மையமாக இருத்தல் வேண்டும். இல்லையெனில் சமயம் கொடிய மூடநம்பிக்கையாகிவிடும்.
9. ஒழுக்கம் வாழ்க்கையின் இலட்சியமாக இருந்துவிட்டால் மட்டும் போதாது. கடவுள் என்பது இல்லையாதலின், ஒழுக்கமே வாழ்க்கையின் சட்டமாக வேண்டும்.
10. சமயத்தின் பணி உலகை மாற்றியமைத்து அதை மகிழ்ச்சிக்குரியதாய் ஆக்குவதாக இருக்க வேண்டுமேயன்றி, அதன் தொடக்கத்தையும் முடிவையும் விளக்கிக்கொண்டிருப்பதாக இருக்கக்கூடாது.
11. உலகில் துன்பங்களுக்குக் காரணம் ஆர்வநலன்களின் மோத லேயாதலால், அவற்றிற்குத் தீர்வு காண்பதற்கான ஒரே வழி அஷ்டாங்க மார்க்கத்தைப் (எண்மணிப் பாதை ) பின்பற்றுவதேயாகும்.
12. தனி மனிதனின் தனிவுடைமை என்பது ஒரு வர்க்கத்தாருக்கு அதிகாரத்தையும் மற்றொரு வர்க்கத்தாருக்குத் துன்பத்தையும் கொணர்கிறது.
13. துன்பத்திற்கான காரணத்தைக் கண்டு நீக்குவதன் மூலம் உருவாகும் சூழல் சமூக நன்மைக்கு அவசியமாகின்றது.
14. மாந்தரனைவரும் சமமானவர்கள்.
15. மனிதனைக் குலத்தாலன்றிக் குணத்தாலேயே அளவிட வேண்டும்.
16. உயர்ந்த இலட்சியங்களேயன்றி உயர்குலப் பிறப்பு முக்கியமன்று.
17. மயித்ரி அல்லது அனைவரிடமும் தோழமையுணர்வுடன் இருப்பது என்பதை எப்போதும் கைவிடலாகாது. பகைவரிடமும் காட்ட வேண்டிய பண்பு இது.
18. கற்கும் உரிமை அனைவருக்கும் உரியது. உயிர் வாழ்க்கைக்கு உணவு இன்றியமையாதது போலவே கல்வியும் ஒருவனுக்கு அவசியமானது.
19. நன்னடத்தையில்லாத கல்வி ஆபத்தானது.
20. எதுவுமே தவறற்றது அன்று அனைத்தும் மாற்றத்திற்குரியவையே. அனைத்தும் விசாரணைக்கும் பரிசோதனைக்கும் உரியவையே.
21. எதுவும் இறுதியானதன்று.
22. அனைத்தும் காரண காரிய விதிக்குட்பட்டவையே.
23. எதுவும் நிலையானதோ, சனாதனமானதோ அன்று. அனைத்தும் மாற்றத்திற்கு உட்பட்டவையே. உள்ளவை அனைத்தும் உருவானவையே.
24. உண்மைக்காகவும் நீதிக்காகவும் நடைபெறும் போர்களைத் தவிர பிற போர்கள் யாவும் தவறானவையே.
25. வெற்றிபெற்றோர் வெல்லப்பட்டோருக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன.
சுருக்கமாகச் சொல்வதாயின் இவையே புத்தரின் கொள்கையாம். இதுமிகப் பழமையானது என்ற போதிலும் எத்துணைப் புத்தம் புதிதாக உள்ளது ! இந்தப் போதனைகள் எத்துணை ஆழமானதாகவும் விரிந்ததாகவும் உள்ளன!
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும்
நூல் தொகுதி 7
( பகுதி 2 – இயல் 14 – பக்கம் 403 – 434)