- கார்ல் மார்க்ஸின் மூலக்கோட்பாடுகள்
கார்ல் மார்க்ஸ் நிறுவிய அவரது மூலக் கோட்பாடுகளை இனிக் காண்போம். நவீன சோஷலிசம் அல்லது கம்யூனிசம் என்பதன் தந்தை கார்ல் மார்க்ஸ்தான் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை என்ற போதிலும் சமதர்மத்திற்கான கோட்பாட்டை நிறுவுவதற்காக மட்டுமே அவர் அக்கறை கொண்டவராக இல்லை. அவருக்கு நீண்ட காலத்திற்கு முன்பே பிறர் அதனைச் செய்து முடித்து விட்டனர். தன்னுடைய சமதர்மம் அறிவியல் பூர்வமானது என்பதை நிலை நாட்டுவதில் அவர் மிக ஆர்வமுடையவராக இருந்தார். அவரது போராட்டம் முதலாளிகளுக்கு எதிராக இருந்தது போலவே கற்பனாவாத சமதர்மவாதிகளுக்கு எதிரானதாகவும் இருந்தது. இவ்விரு வகையினரையும் அவர் வெறுத்தார். தன்னுடைய சமதர்மத்திற்கு விஞ்ஞானத் தன்மை அளிப்பதற்கு அவர் பெரிதும் முக்கியத்துவம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய சமதர்மம் கற்பனாவாதமானதன்று, விஞ்ஞானமயமானது என்பதை நிலை நாட்டுவதைத் தவிர வேறெந்த நோக்கமும் அற்றதாகவே கார்ல் மார்க்ஸின் அனைத்துக் கோட்பாடுகளும் அமைந்திருந்தன.
விஞ்ஞான சமதர்மம் எனக் கார்ல்மார்க்ஸ் கருதியது, தன்னுடைய சமதர்மக் கோட்பாடு தவிர்க்க முடியாதது, தப்பிக்க முடியாதது என்பதோடு, அதை நோக்கியே சமுதாயம் நகர்ந்து கொண்டிருக்கின்றது என்பதோடு அந்த முன்னேற்றத்தை எதனாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்பதுமாகும். இந்தக் கருத்தை மெய்ப்பிப்பதையே கார்ல் மார்க்ஸ் முதன்மைப்பணியாகக் கொண்டு உழைத்தார்.
கார்ல் மார்க்ஸின் கருத்து பின்வரும் ஆய்வுக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டமைந்தது. அவையானவன:
1) தத்துவத்தின் நோக்கம் உலகத்தைப் புனரமைப்பு செய்வதேயல்லாமல் பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கிக் கொண்டிருப்பதன்று.
2) முதன்மையாகப் பொருளாதாரச் சக்திகளே வரலாற்றுப் போக்கை உருவாக்கும் சக்திகளாக உள்ளன.
3) சமூகம் உடைமையாளர்கள் – உழைப்பாளர்கள் என இரண்டு வர்க்கங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
4) இவ்விருவர்க்கங்களுக்கிடையே எப்போதும் இடையறாதவர்க்க முரண்பாடு நிகழ்ந்த வண்ணம் உள்ளது.
5) உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பின் விளைவான உபரி மதிப்பை அபகரித்துக் கொள்வதன் மூலம் உடைமை வர்க்கம் உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டுகிறது.
6) உற்பத்திச் சாதனங்களை நாட்டுடைமையாக்குவதன் மூலமே அதாவது தனிவுடைமையை ஒழிப்பதனாலேயே இந்தச் சுரண்டலுக்கு முடிவுகட்ட முடியும்.
7) இந்தச் சுரண்டல் உழைப்போரை மேலும் மேலும் வறியவர்கள் ஆக்குகின்றது.
8) உழைக்கும் மக்களிடையே பெருகிக் கொண்டே வரும் இந்த வறு மை, அவர்களிடையே புரட்சிகர உணர்வைத் தோற்றுவித்து, வர்க்க முரண்பாட்டை வர்க்க மோதலாக மாற்றுகிறது.
9) உடைமையாளர்களின் எண்ணிக்கையை உழைக்கும் மக்களின் எண்ணிக்கை விஞ்சுவதால் உழைப்போர் அரசைக் கைப்பற்றித் தங்கள் ஆட்சியான உழைக்கும் மக்களின் சர்வாதிகார ஆட்சியை அமைத்தே தீருவர்.
10) இந்த உண்மைகள் தடுக்க முடியாதவையாதலால் சமதர்மம் தவிர்க்க முடியாததாகும்.
மார்க்சிய சோஷலிசத்திற்கான அடிப்படையாக உள்ள மூலக் கூறுகளை நான் சரியாக அறிவித்திருப்பதாகவே நம்புகின்றேன்.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும்
நூல் தொகுதி 7
( பகுதி 2 – இயல் 14 – பக்கம் 403 – 434)