Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற யாருடன் இணைய வேண்டும்?-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    January 9, 2026

    அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2

    December 23, 2025

    எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!

    December 6, 2025
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » அம்பேத்கர் வாழ்க்கையில் மரணத்துக்கு முந்தைய கடைசி 24 மணி நேரம் என்ன நடந்தது?
    கட்டுரைகள்

    அம்பேத்கர் வாழ்க்கையில் மரணத்துக்கு முந்தைய கடைசி 24 மணி நேரம் என்ன நடந்தது?

    Sridhar KannanBy Sridhar KannanDecember 9, 2022No Comments8 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    நாம்தேவ் கட்கர்

    பிபிசி மராத்தி

    இந்தியாவின் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கு 1956, டிசம்பர் 6 சூரிய உதயத்தோடு தொடங்கவில்லை. ஆனால், அன்றைய தினத்தை அவர்கள் சூரிய அஸ்தமனமாகவே கருதினர். சுரண்டப்படுவோருக்கு, பின்தங்கிய சமூகத்தினருக்கு ஆதரவாக இருந்த டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அன்றுதான் மரணமடைந்தார்.

    தன்னுடைய கல்வி, வாழ்வாதாரத்துக்கான போராட்டங்களை சந்தித்தது தொடங்கி, தலித்களின் முன்னேற்றம், சுதந்திர இந்தியாவின் அரசமைப்பை எழுதியது வரை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் பயணம் என்பது கடினமான சூழல்களைக் கொண்டதாகும்.

    தனது வாழ்க்கை பயணம் முழுவதும் பல்வேறு நோய்களால் பாபாசாகேப் பாதிக்கப்பட்டார்.

    நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், நரம்பு அழற்சி, மூட்டு வலி போன்ற குணப்படுத்த முடியாத நோய்களால் அவர் பாதிக்கப்பட்டார். நீரிழிவு நோய் காரணமாக அவர் உடல் சோர்வடைந்தது. முடக்கு வாதம் காரணமாக பல இரவுகளில் அவர் படுத்த படுக்கையாக இருந்தார்.

    பாபாசாகேப்பின் கடைசி சில மணி நேரங்களைப் பற்றி எழுதும் போது, அவருக்கு இருந்த இந்த நோய்கள் குறித்தும் குறிப்பிட வேண்டிய தேவை இருக்கிறது. அவரின் கடைசி தினங்களில் பாபாசாகேப்பின் உடல் நிலை எவ்வாறு இருந்தது என்பது பற்றிய புரிதலை இது கொடுக்கும்.

    டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட இரவில் பாபாசாகேப்பின் உயிர் பிரிந்தது. அதற்கு முந்தைய நாள் அதாவது டிசம்பர் 5ஆம் தேதி இரவு என்ன நடந்தது என்பதை இந்த கட்டுரை வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.

    தவிர அதற்குமுன்பாக, அவர் தனது மரணத்துக்கு முன்பு கடைசியாக பொதுவெளியில் எங்கு அவர் காணப்பட்டார் என்பதையும் தெரிந்து கொள்வோம்.

    ராஜ்யசபாவில் கடைசி தினங்கள்

    இந்திய நாடாளுமன்றத்தில் மேலவை என்று அழைக்கப்படும் ராஜ்யசபாவில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் கடைசியாக பொதுவெளியில் காணப்பட்டார்.

    1956ஆம் ஆண்டின் கடைசி மூன்று வாரங்களில் டெல்லிக்கு வெளியே பயணம் சென்றார். நவம்பர் 12 ஆம் தேதி அவர் பட்னா வழியாக காத்மண்டு சென்றார். அங்கு நவம்பர் 14ஆம் தேதியன்று உலக தம்மம் கருத்தரங்கு தொடங்கியது.

    இந்த கருத்தரங்கு, நேபாளின் அரசர் ராஜே மகேந்திராவால் தொடங்கப்பட்டது.

    இந்த நிகழ்வின்போது நேபாள அரசர், பாபாசாகேப் அம்பேத்கரிடம் மேடையில் தனது அருகில் அமருமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு முன்பு இது போல நேர்ந்ததில்லை. இதன்மூலம் பௌத்த உலகில் பாபாசாகேப் அம்பேத்கருக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமை தெரியவருகிறது.

    காத்மாண்டுவின் பல்வேறு பகுதிகளில் மக்களை சந்தித்து பேசியதில் பாபாசாகேப் சோர்வடைந்தார். இந்தியா திரும்பும் வழியில், பெளத்த புனிதத் தலங்களுக்கு சென்று வந்தார்.

    காத்மாண்டுவின் வரலாற்று சிறப்பு மிக்க அசோகா பில்லரில் உள்ள கெளதம புத்தரின் பிறந்த இடமான லும்பினிக்குச் சென்றார். இதன் பின்னர் இந்தியா திரும்பும் வழியில் பாட்னாவில் புத்த கயாவுக்குச் சென்றார்.

    காத்மாண்டுவில் உரையாற்றிய பாபாசாகேப்
    படக்குறிப்பு,காத்மாண்டூவில் உரையாற்றிய பாபாசாகேப்

    இந்த சிறப்பான பயணத்துக்குப் பின்னர் டெல்லிக்கு நவம்பர் 30ஆம் தேதி திரும்பி வந்தபோது அவர் சோர்வடைந்து காணப்பட்டார்.

    டெல்லியில் ராஜ்யசபா குளிர்காலக் கூட்டம் தொடங்கி இருந்தது. எனினும் அவருக்கு உடல் நலக்குறைவாக இருந்ததால் அவரால் அதில் பங்கேற்க முடியவில்லை. ஆனால், டிசம்பர் 4 ஆம் தேதி வரை தான் ராஜ்யசபா கூட்டத்துக்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியபடியே இருந்தார்.

    பாபாசாகேப் உடன் இருந்த டாக்டர் மல்வங்கர், அவர் உடல் நலத்தை பரிசோதிப்பதை பொருட்படுத்தவில்லை என்று கூறினார்.

    பாபாசாகேப் ராஜ்யசபாவுக்குச் சென்றார். மதியம் வீட்டுக்குத் திரும்பி வந்தார். மதிய உணவுக்குப் பின்னர் அவர்கள் ஓய்வு எடுத்தனர். இதுதான் பாபாசாகேப் கடைசியாக நாடாளுமன்றம் சென்ற தினமாகும்.

    மும்பையில் மதமாற்ற விழா நடத்த திட்டம்

    ராஜ்யசபாவில் இருந்து வந்த பின்னர், பாபாசாகேப் அம்பேத்கர் ஓய்வெடுத்தார். பிற்பகலில் அவரது மனைவி சவிதா, அம்பேத்கருக்கு காபி வழங்கினார். டெல்லியில் 26ஆம் எண் அலிப்பூர் ரோடு பங்களாவின் புல் வெளியில் மனைவியுடன் அம்பேத்கர் பேசிக்கொண்டிருந்தார்.

    இதற்கிடையே நானக் சந்த் ரட்டு அங்கு வந்தார்.

    மும்பையில் (அப்போது பம்பாய் என்று அழைக்கப்பட்டது) 1956ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி மதமாற்ற விழா ஒன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

    நாக்பூரில் நடந்தது போல மும்பையிலும் மதமாற்ற விழாவை பாபாசாகேப் நடத்த வேண்டும் என்று தலைவர்கள் விரும்பினர். அதில் பாபாசாகேப் அம்பேத்கர், சவிதா அம்பேத்கர் இருவரும் பங்கேற்க வேண்டும் என்று விரும்பினர்.

    எனவே, மும்பையில் மதமாற்ற விழாவில் பங்கேற்பதற்காக டிசம்பர் 14ஆம் தேதி பயணத்துக்கு பயணசீட்டு முன்பதிவு செய்வது குறித்து ரட்டுவிடம் அம்பேத்கர் கேட்டார். அப்போது அம்பேத்கர் மனைவி, உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு பாபாசாகேப் விமானத்தில் செல்ல வேண்டும் என்று கூறினார்.

    எனவே அதன்படி விமான பயணதுக்கு பயணச்சீட்டு ஏற்பாடு செய்யும்படி ரட்டுவிடம் பாபாசாகேப் கூறினார். நீண்டநேரம் பாபாசாகேப் சொல்ல, சொல்ல ரட்டு தட்டச்சு செய்தார். பின்னர் 11.30 மணியைப் போல பாபாசாகேப் படுக்கைக்குச் சென்றார். வீட்டுக்குச் செல்வதற்கு ரட்டுவுக்கும் தாமதம் ஆகிவிட்டதால் அங்கேயே தூங்கினார்.

    பாபாசாகேப் அம்பேத்கரின் கடைசி 24 மணி நேரங்கள்

    அம்பேத்கர் மரணம் அடைவதற்கு முதல் நாள் அதாவது டிசம்பர் 5 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு படுக்கையை விட்டு எழுந்தார். அவரது மனைவி சவிதா அம்பேத்கர் தேநீர் கொண்டு வந்து அவரை எழுப்பி விட்டார்.

    அதன் பின்னர் இருவரும் தேநீர் அருந்தினர். இதற்கிடையே அலுவலகத்துக்கு கிளம்பியிருந்த நானக்சந்த் ரட்டு அங்கு வந்தார். அவர்கள் தேநீர் அருந்தியவுடன் கிளம்பினர்.

    அம்பேத்கர் முழுவதுமாக காலைகடன்களை முடிப்பதற்காக சவிதா அம்பேத்கர் உதவினார். பின்னர் அவரை காலை உணவு உண்பதற்காக அழைத்துச்சென்றார்.

    பாபாசாகேப் அம்பேத்கர், சவிதா அம்பேத்கர், டாக்டர் மால்வங்கர் மூவரும் இணைந்து காலை உணவு உண்டனர். பின்னர் பங்களாவின் வராந்தாவில் அமர்ந்து மூவரும் உரையாடினர். பாபாசாகேப் நாளிதழ்களை படித்தார்.

    இதன் பின்னர் சவிதா அம்பேத்கர் சமையல் அறைக்கு சென்று விட்டார். பின்னர் பாபாசாகேப், டாக்டர் மால்வங்கர் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.

    அம்பேத்கர்

    பட மூலாதாரம்,GETTY IMAGES

    மதியம் 12.30 மணியைப் போல சவிதா அம்பேத்கர், பாபாசாகேப்பை மதிய உணவுக்காக அழைத்தார். அந்த சமயத்தில் பாபாசாகேப் நூலகத்தில் உட்கார்ந்து படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருந்தார்.

    புத்தரும் அவரது தம்மமும் என்ற (The Buddha and His Dhamma) புத்தகத்தின் முன்னுரையை முழுவதுமாக எழுதி முடித்தார். சவிதா அம்பேத்கர், பாபாசாகேப் அம்பேத்கருக்கு மதிய உணவு எடுத்து வந்தார். அதனை உண்டபின்னர் அம்பேத்கர் ஓய்வு எடுத்தார்.

    டெல்லி வீட்டில் சவிதா அம்பேத்கர், தானே நேரடியாக மார்க்கெட் சென்று புத்தகங்கள், உணவு, பானங்கள் வாங்கி வருவது வழக்கம். பாபாசாகேப் அம்பேத்கர் உறங்கும்போதோ அல்லது நாடாளுமன்றத்துக்கு சென்றிருக்கும்போதோ அவர் இவ்வாறு செல்வது வழக்கம்.

    பாபாசாகேப் அம்பேத்கர் டிசம்பர் 5 ஆம் தேதி மதியம் உறங்கி ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது பொருட்கள் வாங்குவதற்காக சவிதா அம்பேத்கர் மார்கெட் சென்றிருந்தார். டிசம்பர் 5ஆம் தேதி இரவு டாக்டர் மல்வங்கர் விமானம் மூலம் மும்பை செல்ல திட்டமிட்டிருந்தார்.

    எனவே அவர் மும்பைக்கு கொண்டு செல்வதற்காக சிலவற்றை வாங்குவதற்காக , சவிதா அம்பேத்கருடன் மார்க்கெட் சென்றார். பாபாசாகேப் அம்பேத்கரின் தூக்கம் கெட்டு விடும் என்பதால், அவரிடம் ஏதும் சொல்லாமலே டாக்டர் மல்வங்கர் வெளியே சென்று விட்டார். மதியம் 2.30 மணியைப் போல சவிதா அம்பேத்கர், டாக்டர் மல்வங்கர் இருவரும் மார்க்கெட் சென்றனர்.

    மல்வங்கர் மாலை 5.30மணிக்கு திரும்பி வந்தார். அப்போது பாபாசாகேப் கோபமாக இருந்தார்.

    டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூலில் இது பற்றி கூறியுள்ள சதவிதா அம்பேத்கர், ‘சாகேப் கோபமாக இருப்பது ஒரு புதிய விஷயம் அல்ல. வைத்த இடத்தில் புத்தகம் இல்லை என்றாலோ , உரிய இடத்தில் பேனா கிடைக்கவில்லை என்றாலோ பங்களாவில் உள்ள அனைவர் மீதும் அவர் கோபப்படுவார்.

    அவரின் விருப்பத்திற்கு மாறாக நடந்தாலோ அல்லது எதிர்பார்த்தபடி நடக்காத சிறிய விஷயத்துக்காகவோ அவரின் கோபம் தலைக்கு ஏறும். அவரின் கோபம் இடிபோல இருக்கும். சாகேப்பின் கோபம் சிறிது நேரமே இருக்கும். விருப்பமான புத்தகம் , நோட்டு புத்தகம் அல்லது பேப்பர் கிடைத்து விட்டால், அடுத்த நிமிடமே அவரது கோபம் மறைந்து விடும்,’ என்று கூறியிருக்கிறார். மார்க்கெட்டில் இருந்து வந்த பின்னர், பாபாசாகேப்பின் அறைக்கு சவிதா அம்பேத்கர் சென்றார். அப்போது வருத்தத்துடன் அம்பேத்கர் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் அவரிடம் எங்கே சென்று வந்தேன் என்பதை விவரித்த பின்னர் அம்பேத்கருக்கு காபி எடுத்து வருவதற்காக நேரடியாக சமையலறைக்கு சென்று விட்டார்.

    ஜெயின் மதத்தலைவர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளைக் கொண்ட குழுவினர் முன்பே பெற்ற அனுமதியுடன் இரவு 8 மணிக்கு அம்பேத்கரை சந்தித்தனர். பெளத்தம்-சமணம் குறித்து குழுவினரும், பாபாசாகேப் அம்பேத்கரும் பேசிக் கொண்டிருந்தனர்.

    பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தின் 12 ஆவது தொகுதியில் இது பற்றி எழுதியுள்ள சங்தேவ் கைர்மோட், டிசம்பர் 6ஆம் தேதி ஜெயின் கூட்டம் ஒன்று நடக்கப்போகிறது என கூறிய அவர்கள், சமணம்-பெளத்தம் இடையே ஒற்றுமையை கொண்டு வருவது குறித்து சமண துறவிகளுடன் அம்பேத்கர் ஆலோசனை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர் எனக் கூறியுள்ளார்.

    இதற்கிடையே டாக்டர் மல்வங்கர் மும்பைக்கு கிளம்பி சென்றார். அப்போது பாபாசாகேப் அம்பேத்கர், குழுவினருடன் பேசிக்கொண்டிருந்தார். மல்வங்கர் அம்பேத்கரிடம் அனுமதி பெற்று அவர் கிளம்பி சென்றதாக தனது புத்தகத்தில் சவிதா அம்பேத்கர் கூறியுள்ளார்.

    எனினும், சங்தேவ் கைர்மோட்எழுதியுள்ள அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில், டாக்டர் மல்வங்கர் கிளம்பும்போது ஒரு வார்த்தை கூட அம்பேத்கரிடம் சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.

    “அடுத்த நாள்(டிச்ம்பர் 6ஆம் தேதி) என்னுடைய செயலாளரிடம் இருந்து என்னுடைய நேரத்தை அறிந்து கொண்டு மாலையில் சொல்கின்றேன். நாம் ஆலோசிக்கலாம்,” என்று பாபாசாகேப் அம்பேத்கர், ஜெயின் குழுவினரிடம் சொன்னார். பின்னர் அந்த குழுவினர் கிளம்பிச்சென்றனர்.

    பின்னர், புத்தம் சரணம் கச்சாமி என்ற வரிகளை பாபாசாகேப் அம்பேத்கர் மெதுவான குரலில் பாடியபடி இருந்தார் பாபாசாகேப் மகிழ்ச்சியான தருணங்களில் இருக்கும்போது புத்த வந்தனம் மற்றும் கபீர் வரிகளை வாசிப்பது வழக்கம் என சவிதா அம்பேத்கர் கூறியுள்ளார்.

    சிறிது நேரம் கழித்து காம்பவுண்டுக்குள் சவிதா அம்பேத்கர் எட்டிப்பார்த்தார். ரட்டுவிடம் அம்பேத்கர், புத்த வந்தனம் இசை தட்டை ரேடியோ கிராமில் போடும்படி கேட்டுக்கொண்டார்.

    டைனிங் டேபிளில் அமர்ந்து இரவு உணவை எடுத்துக் கொண்ட அம்பேத்கர், சிறிதளவு மட்டுமே சாப்பிட்டார். இதன் பின்னர் சவிதா அம்பேத்கர் இரவு உணவை முடித்தார். அவர் சாப்பிடும்வரை அம்பேத்கர் அங்கேயே உட்கார்ந்திருந்தார். சலோ கபீர் தேரா பவாஸ்கர் தேரா என பாபாசாகேப் அம்பேத்கர் பாடியபடி இருந்தார்.

    பின்னர் ஊன்றுகோலின் உதவியுடன், அம்பேத்கரை சவிதா அம்பேத்கர் படுக்கைக்கு அழைத்துச் சென்றார். அப்போது அம்பேத்கர் சில புத்தகங்களை உடன் எடுத்துச் சென்றார்.

    போகும்பொழுது, ரட்டுவிடம் புத்தர் மற்றும் அவரது தம்மம் என்ற புத்தகத்தின் முன்னுரையின் பிரதி, எஸ்.எம். ஜோஷி, ஆச்சார்யா அட்ரேவுக்கு எழுதப்பட்ட கடிதங்களின் பிரதிகளையும் கொடுத்து மேசையில் வைக்கச் சொன்னார். இந்தப் பணிகளை முடித்த பின்னர் ரட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் சவிதா அம்பேத்கர் தனக்கான பணிகளில் மூழ்கினார்.

    அம்பேத்கரின் மரணம்

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் மனைவி சவிதா அம்பேத்கர் கொடுத்த தகவல்களின்படி, பாபாசாகேப் அம்பேத்கர் இரவு நீண்டநேரம் படிப்பது மற்றும் எழுதுவதை வழக்கமாக கொண்டிருந்தார். பெரும்பாலும் அவர் சோர்வாக உணர்ந்தால், இரவு முழுவதுமே படிப்பதிலும், எழுதுவதிலும் நேரம் செலவழிப்பார்.

    5 ஆம் தேதி இரவு நானக்சந்த் ரட்டு, கிளம்பிச்சென்ற பின்னர் புத்தர் மற்றும் அவரது தம்மம் என்ற புத்தகத்தின் முன்னுரையை அம்பேத்கர் திருத்தினார்.

    பின்னர் எஸ்.எம். ஜோஷி மற்றும் ஆச்சார்யா அத்ரேவுக்கும், பிராமி சர்க்காருக்கும் எழுதிய கடிதங்களில் கடைசித் திருத்தங்கள் செய்து வைத்து விட்டு, அன்று வழக்கத்தை விட, முன்னதாக பதினொன்றரை மணிக்கே தூங்கச் சென்றார்.

    அம்பேத்கர்

    பட மூலாதாரம்,NAMDEV KATKAR/BBC

    படக்குறிப்பு,டெல்லியில் உள்ள பாபாசாகேப்பின் வீடு (இப்போது நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது)

    ‘டிசம்பர் 5ஆம் தேதி இரவுதான் அவரது வாழ்க்கையின் கடைசி இரவாக இருந்தது,’ என்று உணர்வுபூர்வமாக சவிதா அம்பேத்கர் எழுதியுள்ளார்.

    சூரிய அஸ்தமனத்துடன் டிசம்பர் 6ஆம் தேதி விடிந்தது.

    சவிதா அம்பேத்கர் எப்போதும் போல 1956ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி எழுந்தார். வழக்கம்போல தேநீர் தயாரித்து ஒரு டிரேயில் எடுத்துக்கொண்டு பாபாசாகேப் அம்பேத்கர் அறைக்கு அவரை தூக்கத்தில் இருந்து எழுப்புவதற்காக சென்றார். அப்போது மணி காலை 7.30 ஆகியிருந்தது.

    “அறைக்குள் நுழைந்தவுடன், அம்பேத்கரின் பாதம் ஒன்று தலையணையில் இருந்ததை நான் பார்த்தேன். இரண்டு அல்லது மூன்றுமுறை அவரை எழுப்புவதற்காக சத்தமிட்டேன். எந்த ஒரு அசைவும் அவரிடம் இருந்து வெளிப்படவில்லை. அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கலாம் என்று நினைத்தேன். எனவே அவரது உடலை தொட்டு அசைத்து எழுப்ப முயற்சித்தேன்…” என சவிதா அம்பேத்கர் எழுதியிருக்கிறார்.

    பாபாசாகேப் அம்பேத்கர் தூக்கத்திலேயே மரணம் அடைந்திருந்தார். சவிதா அம்பேத்கர் அதிர்ச்சியடைந்தார். கதறி அழ ஆரம்பித்தார். பங்களாவில் அப்போது சவிதா அம்பேத்கர், அவரது உதவியாளர் சுதாமா ஆகியோர் மட்டுமே இருந்தனர்.

    சவிதா அம்பேத்கர் அழத்தொடங்கினார். கண்ணீருடன் கரகரத்த குரலில் சுதாமாவை அழைத்தார்.

    அப்போது சவிதா அம்பேத்கர், டாக்டர் மல்வங்கரை அழைத்து என்ன செய்வது என்று கேட்டார். அதற்கு டாக்டர் மல்வங்கர், ‘கோராமைன்’ என்ற ஊசி மருந்தை அம்பேத்கருக்கு செலுத்தும்படி கூறினார்.

    அம்பேத்கர் மரணம் அடைந்து பல மணி நேரம் ஆனதால், ஊசி மருந்து சாத்தியப்படவில்லை. பின்னர் சுதாமாவிடம், நானக்சந்த் ரட்டுவை அழைக்கும்படி சவிதா அம்பேத்கர் சொன்னார்.

    சுதாமா கார் ஒன்றில் சென்று நானக்சந்த் ரட்டுவை அழைத்து வந்தார். சிலர் அம்பேத்கர் உடலில் உயிர் வரவழைக்க முடியுமா என்று அவரது மார்பில் மசாஜ் செய்தனர்.

    செயற்கை சுவாசம் அளிக்கவும் முயற்சி செய்தனர். ஆனால், ஏதும் பலன் அளிக்கவில்லை. பாபாசாகேப் அம்பேத்கர் உயிரிழந்துவிட்டார்.

    பின்னர் சவிதா அம்பேத்கர் மூவரிடமும், அம்பேத்கரின் மரண செய்தியை ஒளிபரப்புவதற்கான ஏற்பாடு செய்யும்படி கூறினார்.

    முக்கியமாக தெரிந்தவர்கள், அரசுதுறைகளை சேர்ந்தோர், பிடிஐ செய்தி முகமை, யுஎன்ஐ செய்தி முகமை, ஆகாசவாணி கேந்த்ரா ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்தோர் அழைக்கப்பட்டனர்.

    பாபாசாகேப் அம்பேத்கரின் மரணம் குறித்த செய்தியை அவர்களிடம் நானக்சந்த் ரட்டு தெரிவித்தார். அம்பேத்கரின் மரணச்செய்தி காட்டுத்தீபோல பரவியது.

    ஆயிரக்கணக்கானோர் டெல்லியில் உள்ள அம்பேத்கர் இல்லம் அமைந்துள்ள நம்பர் 26 அலிப்பூர் ரோடு நோக்கி வரத்தொடங்கினர்.

    அம்பேத்கர் குறித்து சங்தேவ் கைர்மோட் எழுதிய வாழ்க்கை வரலாறு நூலில் சவிதா அம்பேத்கர் , அம்பேத்கர் உடலை சாரநாத்தில் தகனம் செய்யும்படி வலியுறுத்தியதாக கூறியுள்ளார்.

    எனினும், சவிதா அம்பேத்கர் எழுதிய வாழ்க்கை வரலாறு நூலில், மும்பையில் அம்பேத்கர் உடலை தகனம் செய்யவே தான் வலியுறுத்தியதாக கூறிள்ளார்.

    எனினும், அம்பேத்கரின் இறுதி சடங்குகளை மும்பையில் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. பல்வேறு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அம்பேத்கரின் ஆதரவாளர்கள் டெல்லியின் எண் 26, அலிப்பூர் ரோடு நோக்கி வர ஆரம்பித்தனர்.

    பாபாசாகேப் அம்பேத்கரின் உடலை மும்பை எடுத்துச் செல்வதற்காக விமானம் ஒன்றை ஜெகஜீவன்ராம் ஏற்பாடு செய்தார். நாக்பூர் வழியே அவரது உடல் மும்பைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அம்பேத்கரின் மரணத்தின்போதுதான் மும்பையில் வரலாறு காணாத இறுதி ஊர்வலத்தை நாடு கண்டது.

    டாக்டர். பாபாசாகேப் அம்பேத்கர் இறந்த பிறகு, சவிதா அம்பேத்கர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. பாபாசாகேப் அம்பேத்கர் இறந்த பிறகு, தனது ‘சோதனை காலம்’ தொடங்கியதாக சவிதா அம்பேத்கர் கூறியிருக்கிறார்.

    Share this:

    • Click to share on Twitter (Opens in new window)
    • Click to share on Facebook (Opens in new window)
    • Click to share on WhatsApp (Opens in new window)

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleபுத்தர் கார்ல் மார்க்ஸ் ஒப்பீடு
    Next Article தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பட்டியலினத்தோர் மீதான தாக்குதல்கள்: காரணம் என்ன?
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2

    December 23, 2025

    எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!

    December 6, 2025

    அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி-1

    December 2, 2025

    Comments are closed.

    Newsletter

    Recent Posts
    • ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற யாருடன் இணைய வேண்டும்?-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    • அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2
    • எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!
    • அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி-1
    • யுனெஸ்கோ தலைமையகத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் மார்பளவு சிலை திறப்பு
    Random Posts

    அம்பேத்கர் கவசம்

    October 29, 2017

    டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இந்தியாவின் மாபெரும் அறிவுஜீவி

    April 1, 2024

    மகளிரும்  எதிர்ப்புரட்சியும்

    July 18, 2018

    The philatelic lives of Dr. Ambedkar

    April 18, 2021
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற யாருடன் இணைய வேண்டும்?-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    January 9, 2026

    அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2

    December 23, 2025

    எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!

    December 6, 2025

    அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி-1

    December 2, 2025
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    %d