ஏப்ரல் மாதம் ‘தலித் வரலாற்று மாதமாக’ கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் தலித்துகள் தங்களது அடையாளத்தை கொண்டாடவும், தலித் வரலாற்றில் நடந்த போராட்டங்கள் மற்றும் நினைவுகளின் சின்னமாகவும் இந்த மாதம் உள்ளது.
கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் அல்லது அமெரிக்கா என எங்கு வசித்தாலும், உலகம் முழுவதும் வாழும் தலித்துகளின் ஒற்றுமைக்கு ஒரு சிறந்த உதாரணமாக இந்த மாதம் கருதப்படுகிறது.
பாபா சாகேப் ஏப்ரல் மாதத்தில் பிறந்தார் என்பதால் மட்டுமல்ல, சாதியத்தை எதிர்த்துப் போராடிய பல மாவீரர்களும் இந்த மாதத்தில் தான் பிறந்தார்கள். இவர்களில் பாபு ஜெகஜீவன் ராம் மற்றும் மகாத்மா ஜோதிபா பூலே ஆகியோரும் அடங்குவர். ஏப்ரல் 4ஆம் தேதி, இந்தியாவின் சுதந்திரத்திற்காக துணிச்சலாகப் போராடிய போர் வீரன் ஜல்காரி பாய் உயிர் நீத்த தினம்.
தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாதி அமைப்பின் ஆழமான பிரிவினைகளில் விழுந்து தொலைந்து போகிறார்கள். சமூகத்தின் முக்கிய நாட்கள் மற்றும் கொண்டாட்டங்களில் இருந்து அவர்கள் என்றென்றும் மறக்கப்பட்டு, இறுதியில் எதிர்கால சந்ததியினரின் நினைவுகளிலிருந்து அழிக்கப்படுகின்றனர்.
ஏப்ரல் மாதம் நம் முன்னோர்களின் வளமான பாரம்பரியத்தை நினைவுகூர ஒரு வாய்ப்பை வழங்குகிறது. தலித் சமூகத்தை எப்போதும் அடக்கி ஒடுக்கி, ஒதுக்கி வைக்கும் சாதி அமைப்புக்கு எதிராக நமது முன்னோர்கள் நடத்திய போராட்டங்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும் நினைவில் கொள்ளவும், சமூகத்தில் அவர்களின் பங்களிப்பை போற்றவும் இந்த மாதம் உதவுகிறது.

பட மூலாதாரம்,GETTY IMAGES
தலித்துகளின் நீண்ட போராட்ட வரலாறு
1757இல் பிளாசி போர் நடந்தது, இதில் முகலாய பேரரசருக்கு எதிராக போரிட்ட துசாதுகள், அவரை தோற்கடித்தனர். அதேபோல 1857இல் நடந்த கிளர்ச்சி, ஜல்காரி பாய் முதல் மங்கு ராம் மற்றும் உதா தேவி வரை இவர்களைப் பற்றி உங்களுக்கு எந்தளவு தெரியும்?
வரலாற்றின் பக்கங்கள் இதுபோன்ற பல கதைகளால் நிரம்பியுள்ளன, அங்கு சுதந்திரத்திற்காக போராடுவது முதல் தேசத்தை கட்டியெழுப்புவது வரை நமது தியாகங்கள் புறக்கணிக்கப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன.
ஆனால் தலித்துகளின் மிகப்பெரிய போராட்டம் என்பது அவர்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டம் தான். தலித்துகள் தண்ணீருக்காகவும், தீண்டாமையை ஒழிப்பதற்காகவும், தங்கள் உழைப்புக்கு மதிப்பளிக்கவும், கோவில்களுக்குள் நுழையவும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல நூற்றாண்டுகளாக நம் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று நான் கூறமாட்டேன்.
சமூக சீர்திருத்தங்கள் தொடர்பாக நமது கலாசாரத்தில் வேரூன்றி இருக்கும் விழுமியங்கள், மாற்றங்களை ஏற்றுக்கொள்ளக்கூடிய நமது மதத்தின் தன்மை, எல்லாவற்றிற்கும் மேலாக நமது அரசியலமைப்பில் போடப்பட்டுள்ள சமூக நீதிக்கான அடித்தளம், இவை அனைத்தும் நமது பங்களிப்பை உறுதி செய்துள்ளன.

பட மூலாதாரம்,GETTY IMAGES
சாதிவெறி பற்றிய விவாதம்
இன்று சாதி என்பது நமது அன்றாட உரையாடல்களின் ஒரு அங்கமாக மாறி வருகிறது. சாதி பற்றிய விவாதங்கள் நம்மைச் சுற்றி நடப்பதால், சாதி சார்ந்த உணர்வும், அதை உணர்வுப்பூர்வமான ஒன்றாக அணுகும் விதமும் அதிகரித்துள்ளது.
பாலிவுட் கதாபாத்திரங்களில் கூட மாற்றங்களைக் காண முடிகிறது. லகான் திரைப்படத்தில் ‘கச்ரா’ என்ற கதாபாத்திரம் (கச்ரா என்றால் குப்பை என்று அர்த்தம்) சித்தரிக்கப்பட்ட விதத்தோடு ஒப்பிடுகையில், இன்று பாலிவுட் படங்களின் தலித் கதாபாத்திரங்கள் பலசாலிகளாக, புத்திசாலிகளாக, திறமையான மனிதர்களாக காட்டப்படுகின்றனர்.
‘சக்ரவ்யுஹ்’, ‘மஞ்சி தி மவுண்டன் மேன்’, ‘சாய்ராட்’, ‘தஹாத்’, ‘ஜெய் பீம்’, ‘காந்தாரா’, ‘காதல்’ போன்ற படங்கள் இந்த மாற்றத்திற்கு உதாரணம்.
இருந்தபோதிலும், ஒவ்வொரு நாளும் நான் சந்திக்கும் உயர் சாதி-பணக்கார வகுப்பைச் சேர்ந்தவர்கள், சாதிவெறி ஒரு பெரிய சமூகப் பிரச்னை இல்லை என்றே வலியுறுத்துகிறார்கள். ஏனெனில் அவர்களின் பார்வையில் சாதி அடிப்படையிலான பாகுபாடு என்பது முடிவுக்கு வந்துவிட்டது.
ஆனால் திருமணத்திற்கு வரன் பார்க்கும்போது, சொந்த சாதியில் துணையைத் தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். ஆங்கில நாளிதழ்களில் வரும் திருமண விளம்பரங்களின் பத்திகள் சாதியின் அடிப்படையில் பிரிக்கப்பட்டு, சொந்த சாதியின் வரன்களை மட்டுமே தேடுகிறார்கள். இதே மக்கள் தான், சாதியின் அடிப்படையில் நாங்கள் பாகுபாடு காட்டுவதில்லை என்று கூறுகிறார்கள்.
இப்படிப்பட்ட அடிப்படை முரண்பாடுகள் இருக்கும்போது, எங்கள் குடும்பத்தில் யாருக்கும் சாதிவெறி இல்லை, இப்போதெல்லாம் யாரும் சாதியின் காரணமாக எந்தப் பாகுபாட்டையும் எதிர்கொள்வதில்லை என்று எப்படி சாதாரணமாகக் அவர்களால் கூறமுடிகிறது என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

பட மூலாதாரம்,GETTY IMAGES
சாதியின் வரலாறு குறித்த கதைகள்
இது தவிர, சாதி மற்றும் அதன் வரலாற்று அடித்தளம் குறித்தும் புதிய கதைகள் உருவாக்கப்படுகின்றன. சாதியை வரையறுக்க, சமய நூல்களில் தொடங்கி சாதி என்ற சொல்லின் தோற்ற வரலாறு ஆராயப்படுகிறது. வர்ணத்திற்கும் சாதிக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கும் வகையில் பல நூல்கள் எழுதப்பட்டுள்ளன.
‘சாதி’ என்ற வார்த்தையின் விசித்திரமான புரிதல் தொடர்பான தகவல்கள் வாட்ஸ்அப் பல்கலைக்கழக உலகம் முழுவதும் நிறைந்துள்ளது.
‘Caste’ என்ற ஆங்கில வார்த்தை போர்த்துகீசிய வார்த்தையான ‘Castus’ என்பதிலிருந்து பெறப்பட்டது உண்மை தான். ஆனால் சாதி என்பது ஒரு மேற்கத்திய கருத்தாக்கம் என்றும், ஆங்கிலேயர்களால் ஏகாதிபத்தியத்தின் கரங்களுக்குள் நம்மை அடக்க தான் சாதி கொண்டுவரப்பட்டது என்றும் சாமர்த்தியமாகச் சொல்ல இந்த உண்மை பயன்படுத்தப்படுகிறது.
சொல்லப்போனால், இந்த வார்த்தையின் தோற்றம் பற்றி நான் எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லை அல்லது வெளிநாட்டினர் அதை நடைமுறையில் தவறாகப் பயன்படுத்தினார்கள் என்பதை மறுக்கவில்லை. தலித்துகளின் தற்போதைய நிலை என்னை மிகவும் கவலையடையச் செய்கிறது.
தன் சக்தியை காட்ட இன்று தலித்துகளை பலாத்காரம் செய்வது யார்? இன்றைய சமூகத்தில் நாம் எங்கே நிற்கிறோம்?
எங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை மீண்டும் பெற விரும்புகிறோம், இதன் மூலம் எதிர்காலத்தில் நாம் கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியும்.
நாட்டில் சாதி பாகுபாடு இல்லை என்ற நம்பிக்கை உள்ளவர்கள் ஏராளம். அவர்களது வீட்டு பெரியவர்கள் தலித்துகளை நன்றாக நடத்துவதைப் பார்த்ததையும் அவர்கள் மறக்கவில்லை. தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைக்காக எனது சமூகம் பல நூற்றாண்டுகளாக போராடியது எனக்கும் நன்றாக நினைவிருக்கிறது.
ஆனால், சாதிவெறி என்பது நாட்டில் இல்லை என்று பல சமயங்களில் ஒருவர் கூறுவதைக் கேட்டு மனமும் சோர்வும் அடைகிறது. தான் சாதி பாகுபாட்டைக் கண்டதில்லை என்று கூறுபவர்கள் பணக்கார குடும்பத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும் அல்லது மேல் சாதியில்.

பட மூலாதாரம்,GETTY IMAGES
‘இட ஒதுக்கீடு என்பது துரோகம் அல்ல’
இப்படிப்பட்ட சூழ்நிலையில், சாதியின் பெயரால் அடக்குமுறையைச் சந்திக்காதவர், நம் தலைமுறைகள் பலரின் வலியை எப்படிப் புரிந்துகொள்வார் என்பதுதான் கேள்வி.
சாதிவெறியின் வலியை தலித்துகள் அனுபவிக்கவில்லை என்று உங்களுக்கு சொல்ல வேண்டும். கஷ்டப்பட்டவர்கள், சுரண்டப்பட்டவர்கள், தங்கள் கஷ்டங்கள் முடிவுக்கு வந்துவிட்டன என்பதை அறிவிக்க வேண்டும்.
யாராவது சாதிவெறியை எதிர்கொள்ளவில்லை என்றால், அது அவருடைய அதிர்ஷ்டம். ஆனால் சாதிவெறி இல்லை என்பது உண்மையல்ல. சமூக உண்மைகளைப் பற்றிய இத்தகைய அறியாமை வேதனை அளிக்கிறது. சாதிவெறியைப் பற்றி நான் கேள்விப்படும்போது, குறிப்பாக ஒரு தலித் பெண்ணாக என் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, மக்கள் முகத்தில் தோன்றும் அதிர்ச்சி அவர்களின் அறியாமையைக் காட்டுகிறது.
அவர்களின் அறியாமை நமது போராட்டத்தை ஓரங்கட்டுகிறது. மேலும் நமது அனுபவங்களைச் சொல்லும் போது, இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்காக இப்படியெல்லாம் சொல்கிறோம் என்ற உணர்வு ஏற்படுகிறது.
இட ஒதுக்கீடு என்பது துரோகம் அல்ல, கடந்த கால தவறுகளுக்கு பிராயச்சித்தமும் அல்ல. பாபா சாகேப் போராடிய சமத்துவத்தை நோக்கிச் செல்வதற்கான நமது உரிமை இதுவாகும், இன்னும் நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்.
இன்று அந்நிய சக்திகள் நம் நாட்டை விட்டு வெளியேறிவிட்டன, நம் நாட்டில் யாரும் சாதி அமைப்பை நம்புவதாகக் கூறவில்லை அல்லது சாதிவெறியுடன் நடந்துகொள்வதும் இல்லை என்று கூறுகிறார்கள்.

பட மூலாதாரம்,GETTY IMAGES
பிறகு இதையெல்லாம் செய்வது யார்?
இப்படிப்பட்ட நிலையில், தலித் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து, உயிரோடு எரிப்பது யார் என்ற கேள்விகள் என் மனதில் எழுகின்றன.
சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது தலித்துகள் ஏன் இறக்கிறார்கள்? குதிரை சவாரி செய்ததற்காக இன்றும் மக்கள் சுடப்படுவது ஏன்? மீசை வைத்ததற்காக இன்றும் தலித்துகள் கொல்லப்படுவது ஏன்?
இன்றும் கூட, வலிமையை வெளிப்படுத்தும் பொது மேடையாக தலித்துகளின் உடல் கருதப்படுவது ஏன்? இந்த அடக்குமுறையை யார் செய்வது?
உதாரணங்களின் மூலம் நான் பாதிக்கப்பட்டவனாக என்னைக் காட்ட முயற்சிக்கவில்லை, ஆனால் கேள்வி என்னவென்றால், இதை யார் செய்கிறார்கள்? ஒரு தலித் தலைவர் அதிகாரப் பசியில் இதைச் செய்வதாக அடிக்கடி செய்திகள் வரும்.
நிச்சயமாக நாங்கள் அதிகாரத்தின் மையத்தில் இருக்க விரும்புகிறோம். பல நூற்றாண்டுகளாக நாம் அரசாங்கங்களின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளோம். இப்போது நாம் அதிகாரத்தை சுவைக்க விரும்புகிறோம்.
அமேசானில் பணிபுரியும் மற்றும் சியாட்டிலில் வசிப்பவர்களும் எங்களை அறிந்திருக்கக் கூடிய வகையில் ஒரு நெட்வொர்க்கை, அத்தகைய சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க விரும்புகிறோம், இதனால் அவர்கள் எங்கள் வேலைக்கான விண்ணப்பத்தை நிறுவனங்களுக்கு அனுப்ப முடியும். கேம்பிரிட்ஜில் வசிக்கும் மக்களுடன் எங்களது அறிமுகத்தை அதிகரிக்க விரும்புகிறோம்,
இதனால் அவர்கள் எங்கள் வாழ்க்கையில் முன்னேற உதவுவார்கள்.
இதையெல்லாம் இழந்துவிட்டோம். இப்போது இதையெல்லாம் மீண்டும் பெற நாங்கள் விரும்புகிறோம். எங்கள் உரிமைகளை வலுவாக வலியுறுத்தவும் நாங்கள் உத்தேசித்துள்ளோம்.
தலித் வரலாற்று மாதத்தில், நாம் அனைவரும் சாதிவெறியர்கள் என்பதை ஏற்றுக்கொள்வோம். நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் இனவாதியாக நடந்து கொள்கிறோம். சாதி என்பது நம் உணர்வில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
ஒரு நிறுவன அமைப்பாக சாதி ஆழமாக வேரூன்றியிருப்பதை ஏற்க முடியாது என்றால், பாபா சாகேப் பெயரில் சமூக வலைதளங்களில் பதிவுகள் எழுதுவது அர்த்தமற்றது.
முதலில் சாதி இருக்கிறது என்பதை ஏற்க வேண்டும். அதை பகுத்தறிவுடன் அணுக வேண்டும். அப்போதுதான் சாதியக் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடுவது பற்றிய விவாதத்தை நாம் ஆரம்பிக்க முடியும்.
டாக்டர் அதிதி நாராயணி பாஸ்வான்
பிபிசி இந்திக்காக