காதல் திருமணம் செய்து வைத்ததற்காக சில நாட்களுக்கு முன்பாக திருநெல்வேலியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் தாக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்பாக சென்னையிலேயே ஒரு ஆணவக் கொலை நடைபெற்றது. இந்த வாரம் மதுரையில் ஒரு ஆணவக் கொலை நடந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடரக் காரணம் என்ன?
விருதுநகர் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த அழகேந்திரன் என்ற இளைஞர் தான் வசிக்கும் பகுதியில் பட்டியலினத்தில் வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூன் 24ஆம் தேதி மதுரைக்குத் தன் உறவினர் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டு அழகேந்திரன் சென்றிருக்கிறார்.
பிறகு தலை துண்டிக்கப்பட்ட அவரது சடலம் மதுரை வேளான்பூர் கண்மாய் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது. உறவினரின் வீட்டிற்கு வந்த அவரை, பெண்ணின் சகோதரரான பிரபாகரன் அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டதாக அந்த இளைஞரின் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். இப்போது பிரபாகரன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அடித்து நொறுக்கப்பட்ட சிபிஎம் அலுவலகம்
இதற்கு முன்பாக, காதல் திருமணத்திற்கு ஆதரவாக இருந்ததற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. திருநெல்வேலி பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்த உதயதாட்சாயிணி என்ற பெண்ணும் பாளையங்கோட்டை நம்பிக்கைபுரம் பகுதியைச் சேர்ந்த மதன் என்ற இளைஞரும் கடந்த ஆறு வருடங்களாகக் காதலித்து வந்தனர்.
இதில் மதன் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால், உதயதாட்சாயிணி தரப்பில் இந்தக் காதலுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் ஜூன் 13ஆம் தேதி திருமணம் செய்தனர். ஜூன் 14ஆம் தேதி அந்தத் திருமணத்தைப் பதிவு செய்ய நினைத்திருந்தனர்.
இதை பெண் வீட்டார் தடுக்கலாம் என்பதால் திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை அணுகினர். இதனால், காவல்துறை பாதுகாப்போடு திருமணத்தைப் பதிவு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சிகளை மேற்கொண்டது.
இந்த நிலையில், பெண் வீட்டார், அவர்களது உறவினர்கள், இவர்களது சாதியைச் சேர்ந்த பந்தல் ராஜா, அவருடைய ஆதரவாளர்கள் ஆகியோர் திருநெல்வேலி வினோபா நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த மேசை, நாற்காலி, கண்ணாடி, கதவு, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். இதைத் தடுக்க முயன்ற கட்சியினர் சிலரும் தாக்குதலுக்கு உள்ளாயினர்.
காதல் திருமணத்திற்காக ஒரு கட்சியின் அலுவலகம், ஒரு சிறிய சாதி அமைப்பைச் சேர்ந்தவர்களால் அடித்து நொறுக்கப்பட்டது மாநிலத்தையே அதிர வைத்தது. கல்லூரிகளில் சேரும் பெண்களின் எண்ணிக்கையை அதிகமாகக் கொண்ட மாநிலம், அதிக அளவில் பெண்கள் வேலைக்குச் செல்லும் மாநிலம் எனப் பொதுவாகவே முற்போக்கான மாநிலமாகக் கருதப்படும் தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கின்றன.
“தமிழ்நாட்டில் நாம் நினைப்பதைப் போல சாதி மறுப்புத் திருமணங்கள் அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. திருநெல்வேலியில் நடந்த சம்பவம் இதற்கு ஓர் உதாரணம். இதுபோன்ற திருமணங்களைத் தடுக்க எந்த எல்லைக்கும், அதாவது கொலை செய்யும் எல்லைக்கும் போக இவர்கள் தயாராக இருக்கிறார்கள்” என்கிறார் தாக்குதல் நடந்த நேரத்தில் அலுவலகத்தில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரான கே.ஜி. பாஸ்கரன்.
சாதிக்கு வெளியில் காதலித்து, திருமணம் செய்பவர்கள் பாதுகாப்பு கேட்டால், பாதுகாப்பு அளிப்பதாக அரசு சொல்கிறது, ஆனால், அப்படி ஏதும் நடப்பதில்லை என்கிறார் பாஸ்கரன்.
இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து ஜூன் 26ஆம் தேதி வரை, 7 ஆணவக் கொலை சம்பவங்கள் நடந்திருப்பதாகச் சொல்கிறது மதுரையிலிருந்து செயல்படும் எவிடன்ஸ் அமைப்பு அளிக்கும் புள்ளிவிவரம்.
கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ்நாட்டில் சாதி மறுப்புத் திருமணங்கள் தொடர்பான மனநிலை மாறாமல் இருப்பதையே இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன என்கிறார் மதுரையிலிருந்து செயல்படும் ‘எவிடன்ஸ்’ அமைப்பின் கதிர்.
“கடந்த 2004ஆம் ஆண்டில் நிலக்கோட்டைக்கு அருகிலுள்ள ஊர் ஒன்றில் பெண் ஒருவர் வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைத் திருமணம் செய்ததற்காக ஊர் நடுவில் ஒரு மரத்தில் நாயைக் கட்டும் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டார். அதற்குப் பிறகு ஊரில் பணம் வசூலித்து, ஒரு தண்ணீர் லாரியைக் கொண்டு வந்து அதில் மஞ்சளைக் கலந்து ஊரையே கழுவிவிட்டார்கள்.மூன்று நாட்களுக்குப் பிறகு அந்தப் பெண் கொலை செய்யப்பட்டார்.” என்கிறார் கதிர்.
மேலும் தொடர்ந்த அவர், “இந்த ஆண்டு துவக்கத்தில் பட்டுக்கோட்டை மாவட்டத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்தார் என்பதற்காக, தந்தையே அந்தப் பெண்ணை ஒரு மரத்தில் தூக்கில் மாட்டிக் கொலை செய்தார். இது ஊரே பார்க்க நடந்தது. முதல் கொலைக்கும் இரண்டாவது கொலைக்கும் இடையில் இருபது ஆண்டுகள் கால இடைவெளி இருக்கிறது. ஆனால், எதுவும் மாறவில்லை” என்கிறார் கதிர்.
‘சாதி பெருமிதம் வெகுவாக அதிகரித்துள்ளது’
ஆனால் கடந்த சில ஆண்டுகளில் சாதி தொடர்பான பெருமிதம் வெகுவாக அதிகரித்திருக்கிறது என்கிறார் ஆய்வாளரும் பேராசிரியருமான ஸ்டாலின் ராஜாங்கம்.
“இந்த சாதிப் பெருமிதத்தின் முக்கியமான அம்சமாக, சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிராக பிரசாரம் செய்கிறார்கள். சாதியப் படிநிலையில் தங்களைவிட கீழே உள்ள சாதியினர் தங்கள் சாதியைச் சீரழிக்க தங்கள் சமூக பெண்ணைக் காதலித்து ஏமாற்றுகிறார்கள் என்று சொல்லி கோபத்தை மூட்டுகிறார்கள். அதன்மூலம் தங்கள் சாதியினரை உளவியல் ரீதியாகத் திரட்டுகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் பல கலாசார நிகழ்வுகளில் இதுபோல பேசப்படுவது சமீப நாட்களில் அதிகரித்திருக்கிறது” என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.
சாதியப் படிநிலையில் தங்கள் சமூகத்திற்குக் கீழே உள்ள ஆண்கள், தங்கள் சமூகப் பெண்களைக் காதலித்து ஏமாற்றுகிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்துப் படம் எடுப்பதும் பேசுவதும் சமீப காலங்களில் அதிகரித்திருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார்.
“தமிழ்நாட்டில் சாதியப் படிநிலையில் கீழிருக்கும் சமூகங்களில் எழுச்சி வெளிப்படையாகத் தெரிகிறது. அவர்களுக்கு என உருவாக்கப்பட்ட சினிமா, கட்சி போன்றவை வெளிப்படையாகத் தெரிகின்றன. இதை வைத்து இவர்கள்தான் எதிரிகள் எனச் சுட்டிக்காட்ட, ஒரு வாய்ப்பு ஆதிக்க சாதியினருக்கு இப்போது கிடைத்திருக்கிறது” என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.
தமிழ்நாட்டில் சாதிப் பெருமிதம் அதிகரிப்பதற்கும் பா.ஜ.கவின் வாக்கு வங்கி அதிகரிப்பதற்கும் இடையில் தொடர்பிருக்கிறது என்கிறார் ஸ்டாலின்.
“பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை மதத்தைப் பற்றியே பேசினாலும் சாதியை மையமாக வைத்துத்தான் அவர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த முறை பா.ஜ.க. கணிசமாக வாக்குகளைப் பெற்றிருக்கிறது என்றால், அதில் சாதிரீதியான அணிதிரட்டல்களுக்கும் பங்கு இருக்கிறது” என்கிறார் அவர்.
ஆணவக் கொலை, ஆணவத் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் மனநிலையில் பல்வேறு அடுக்குகள் இருக்கின்றன என்கிறார் எவிடன்ஸ் கதிர்.
“ஆதிக்க சாதியினரைப் பொறுத்தவரை, பெண்தான் சாதியை உற்பத்தி செய்யும் நிறுவனம். ஆகவே தங்கள் சாதிப் பெண்களைப் படிநிலையில் கீழே இருக்கும் சாதியைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்தால், தங்கள் மானம் போய்விட்டதாகவும், அந்தப் பெண்ணையோ, அந்த இளைஞரையோ கொலை செய்தால், அந்த மானம் மீட்கப்படுவதாகவும் கருதுகிறார்கள்.
அதேபோல, சாதி கடந்த காதல்கள் – திருமணங்களில் சாதி தவிர பொருளாதாரம், ஆணாதிக்கம், மதம், கல்வி போன்ற வேறு சில அம்சங்களும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பொதுவாக காதலுக்கு சாதி எதிரியாக இருப்பதாக நினைக்கிறோம். ஆனால், சாதிக்குத்தான் காதல் எதிரியாக இருக்கிறது. அதனால்தான் இதெல்லாம் நடக்கிறது,” என்கிறார் அவர்.
ஆணவக் கொலைகளுக்கு தனிச் சட்டம் தீர்வாகுமா?
ஆணவக் கொலைகள் நடப்பதைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இது தொடர்பாக இருவேறு கருத்துகள் இருக்கின்றன.
“ஆணவக் கொலைகளைத் தடுக்க சட்டம் கொண்டு வருவதில் பிரச்னையில்லை. ஆனால் அதுவே இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வாக அமையும் என்று சொல்ல முடியாது. ஏற்கெனவே உள்ள எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கடுமையான பிரிவுகள் உள்ளன. சாதியின் பெயரைச் சொல்லித் திட்டினாலே அதில் தண்டனை உண்டு. ஆனாலும் அதுபோன்ற செயல்கள் இப்போதும் நடக்கத்தானே செய்கின்றன?” என கேட்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.
ஏற்கெனவே உள்ள கடுமையான சட்டத்தாலேயே வன்கொடுமைகளைத் தடுக்க முடியாத நிலையில், புதிதாக வரும் சட்டம் என்ன செய்துவிடும்? தனியாக ஒரு சட்டம் கொண்டு வருவது ஒரு அழுத்தமாக இருக்கலாமே தவிர, அதற்கு மேல் அந்தச் சட்டத்தால் ஏதும் செய்ய முடியாது என்பது ஸ்டாலின் போன்றவர்களின் போன்றவர்களின் கருத்தாக உள்ளது.
“இருப்பினும், இதுபோன்ற சட்டங்களை ஏன் கொண்டு வரச் சொல்கிறோம் என்றால், இம்மாதிரியான சூழலில் வேறு என்ன செய்வதென்று நமக்குத் தெரியவில்லை. காந்தி சொல்வதைப் போல உரையாடலில் நம்பிக்கை வைக்கச் சொல்லும் திறன் எந்தத் தலைவருக்கும் இல்லை” என்கிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.
ஆனால், இதை வேறுவிதமாகப் பார்க்கிறார் எவிடன்ஸ் கதிர். “2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது, 2017 முதல் 2021 வரை மூன்று ஆணவக் கொலைகள்தான் நடந்ததாகக் குறிப்பிடப்பட்டது. அதேபோல, தேசிய அளவிலும் மிகக் குறைவான எண்களே தரப்பட்டன. காரணம், இதுபோன்ற சம்பவங்கள் முறைப்படி ஆவணப்படுத்தப்படுவதில்லை.
தனிச்சட்டம் வரும்போது, அந்தச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டால் நாம் நிலவரம் குறித்து சரியான புரிதலைப் பெற முடியும். இதுபோன்ற கொடுமைகள் நீண்ட காலமாக இருப்பவைதான். சட்டத்தின் மூலம் மட்டுமே இவற்றை நிறுத்திவிட முடியாது என்பதை நானும் புரிந்துகொள்கிறேன். ஆனால், இவற்றைக் கட்டுப்படுத்த ஒரு கருவியாக அந்தச் சட்டம் அமையும்” என்கிறார் கதிர்.
மேலும், “எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைச் சட்டங்களைப் பொறுத்தவரை, பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்படும்போதுதான் பயன்படுத்த முடியும். மாறாக பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்குள் ஆணவக் கொலை நடந்தால் அந்தச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார் அவர்.
நீளும் ஆணவக் கொலைகளின் பட்டியல்
கடந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் இருந்து இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிவரை சுமார் 30 ஆணவக் கொலை/தாக்குதல் சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றன. 2024ஆம் ஆண்டில் தற்போதுவரை 7 கொலைகள் நடந்திருக்கின்றன.
- பட்டுக்கோட்டையில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரைத் தனது மகள் காதலித்ததால், அந்தப் பெண்ணை ஜனவரி 3ஆம் தேதி அவரது தந்தையே தூக்கிலிட்டுக் கொலை செய்தார்.
- மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிற்படுத்தப்பட்ட இரு வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் காதலித்துத் திருமணம் செய்தனர். இதில் ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர், இருவரையும் ஜனவரி 30ஆம் தேதியன்று கொலை செய்தார்.
- சென்னை சீனிவாசா நகரில் பட்டியலினத்தில் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இருவர் காதலித்து வந்த நிலையில், பெண்ணின் சகோதரர்கள், ஜனவரி 31ஆம் தேதி காதலனை வெட்டிக் கொலை செய்தனர்.
- சென்னை பள்ளிக்கரணையில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரான பிரவீன் என்பவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்தார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த பெண்ணின் சகோதரர்கள் பிப்ரவரி 24ஆம் தேதியன்று பிரவீனை வெட்டிக் கொலை செய்தனர்.
- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரான சுபாஷ், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர், மார்ச் 6ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்ற சுபாஷை நான்கு சக்கர வாகனத்தை ஏற்றிக் கொல்ல முயன்றனர். இதில் சுபாஷின் சகோதரி கொல்லப்பட்டார். சுபாஷ் படுகாயமடைந்தார்.
- மதுரை அவனியாபுரத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் அவருடைய உறவினரான இளம்பெண்ணைக் காதலித்து வந்தார். இதில் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர், ஏப்ரல் 11ஆம் தேதி கார்த்திக்கை கொலை செய்தனர்.
- விருதுநகர் மாவட்டத்தில் வசித்து வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த அழகேந்திரன், பட்டியலினத்தில் வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்தார். இதற்குப் பிறகு அழகேந்திரன் தலையை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக பெண்ணின் சகோதரர் பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆணவக் கொலைகளில் காதலர்களில் ஒருவரோ, இருவரோ கொல்லப்படுள்ளனர். காதலர்கள் மட்டுமல்லாமல் காதலுக்குத் துணையாக நின்றவர்களும் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். காதலர்களில் ஒருவரது பெற்றோர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது.
திருமணம் செய்தால் சாதிப் பெருமிதம் போய்விடும் என காதலனே காதலியைக் கொலை செய்த நிகழ்வும் நடந்திருக்கிறது. ஒரே சாதிக்குள்ளும் காதல் தொடர்பான ஆணவக் கொலைகள் நடந்திருக்கின்றன. வெகு சில தருணங்களில், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்களைக் கொலை செய்ததும் நடந்திருக்கிறது.
முரளிதரன் காசி விஸ்வநாதன்
பிபிசி தமிழ்
நன்றி : பிபிசி தமிழ்