பல நூற்றாண்டுகளாக நிகழம் ஓர் அநீதியினைச் சகித்துக் கொள்வதற்கு ஒரு பண்பாட்டுப் பின்புலம் இருக்கும் என்பதை மறுக்க முடியுமா? அல்லது ஒரு நாடே தனது மனசாட்சியினைக் கொன்றுவிட்டு அதை கடந்துக் செல்கிறது என்று எடுத்துக் கொள்ள முடியமா..??
சாதியின் அடிப்படைகளைப் பற்றி பேசுவதற்கு ஏராளமான பேர் இருக்கிறார்கள். அதை எதிர்ப்பதின் மூலம் ஒரு முற்போக்கு அடையாளம் கிடைப்பதால் அதற்கு எப்போதும் ஒருவகை மவுசு இருக்கிறது. இது சமூகவியல் ஆய்வுக்கு மட்டுமின்றி அரசின் செயல்பாடுகளுக்கும் பொருந்தும். சாதியின் மூலத்தினை ஆய்ந்த டாக்டர் அம்பேத்கர் தொடக்கத்தில் ஒரு பேரதிர்ச்ச்சியைக் கண்டார். ஆமாம், அவர் காலத்தில் சாதியை ஆய்ந்த உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பலர் இருந்தார்கள். ஆயினும் அவர்கள் எல்லோரும் கவனிக்க மறந்த ஒன்று.. இந்தியாவில் கிராமங்கள் ஏன் இரண்டாக இருக்க்கின்றன? நமது சொல்லில் சொல்வதென்றால் ஊர்-சேரி என ஏன் இரண்டாக பிரிந்து இருக்கின்றன?. இந்தப் பிரிவினை அமைப்பு எப்படி தோன்றியது? என்பதைப் பற்றி அவர்கள் கவனம் கொள்ளாததால் அது ஏன் தோன்றியது, எப்படித் தோன்றியது போன்ற கேள்விகளும் தோன்றாமல் போய்விட்டது. ஆனால் அக்கேள்விகள் டாக்டர் அம்பேத்கருக்குத் தோன்றின. அதனால் அதன் மூலத்தை அவர் கண்டு பிடித்தார். ஆனால் அவருக்குப் பின்னும் ஏராளமான அறிஞர்களையும் தலைவர்களையும் இந்தியா தோற்றுவித்தது. அவர்கள் யாரும் அம்பேத்கரின் கேள்வி குறித்தோ அல்லது ஊர் சேரி என்பதின் தோற்றம், அதன் இயக்கம், அதன் ஒழிப்பு பற்றி பேசியதாக எனக்குத் தெரியவில்லை. இப்போதுகூட நிலைமை ஒன்றும் மாறிவிடவில்லை. தம்மை முற்போக்கான சிந்தனையாளர்கள் அல்லது எழுத்தாளர்கள், தலைவர்கள் என்று கருதிக் கொள்பவர்கள்கூட இந்த அவலத்தைப் பற்றி யோசிக்கவில்லையே.. ஏன் என்பதை சமூகத்திற்கான கேள்வியாக முன்வைக்கிறேன்.
தமிழ்நாட்டில் நாட்டுப்புறக் குடியிறுப்பை கிராமம் என்று அழைக்கிறோம். அச்சொல்லுக்கு மூலச் சொல் ’கிராம’ என்னும் வடச்சொல்தான். சிலர் கம்மம் என்ற சொல்லின் மருவல்தான் கிராமம் என்று வாதிக்கின்றனர். இது ஆய்வுக்குரியதுதான் என்றாலும், மக்கள் சேர்ந்து வாழும் ஒரு நாட்டுப்புறக் குடியிறுப்பிற்கு தூயத் தமிழ்ப் பெயர் இன்னும் இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். இது எப்போதும் இப்படித்தான் இருந்ததா?
தொல்காப்பியத்தில் “ஊரும் அயலும் சேரியும்”.. என மூன்று நாட்டுப்புறக் குடியிருப்புகள் குறிக்கப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் ஊர் என்றும் சேரி என்றும் அழைக்கப்பட்டது ஒரே பொருளில்தான் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்த வரலாறு நீண்டது என்பதால் அதற்குள் போவது இப்போது தேவையற்றது. ஆயினும் கேள்வி என்னவென்றால் ஊர் என்பது இடைச்சாதியினர் வாழும் இடத்திற்கும் சேரி என்பது தீண்டத்தகாதவர்கள் அல்லது தலித்துகள் வாழும் இடத்திற்கான சொல்லாகவும் மாறியது எப்படி? எப்போது..? அப்படி நிகழ்ந்ததற்கான காரணத்தை ஆய்வாளர்கள் கவனிக்க வேண்டும் என எதிர்பார்த்தால் அதில் ஏமாற்றமே மிஞ்சியது.
கால மாற்றம் நிகழ்ந்து ஊர் என்பது இடைச்சாதியினர் வாழும் இடமாகவும், சேரி என்னும் தலித்துகள் வாழும் பகுதி “காலனி” (Colony) என்றும் வழங்கப்படுகிறது. இதற்கு ஒரு சுவையானப் பின்னணி உண்டு.
வெற்றிக்கெள்ளப்பட்ட இந்தியா கொண்ட பிரிட்டனின் காலணியாக கருதப்பட்டது. அதாவது இங்கிலாந்தின் காலனி நாடு. இதன் விளைவாக காலணி என்கிற சொல் மீது ஏனோ மோகம் பற்றிக் கொண்டது. சாதியவாதிகளால் புறக்கணிக்கப்பட்ட சாதியற்ற அவர்ண தலித்துகள் அவர்களை வெற்றிக் கொண்டதைக் குறிக்கும் வகையில் காலணி மக்கள் என்று அழைக்கத் தொடங்கினார்கள். அது தோன்றிய காலத்தைக் குறிப்பாகச் சொல்ல முடியாவிட்டாலும், சேரி என்னும் சொல்லை பயன்படுத்துவது கூச்சமளித்ததால் குடியிறுப்பு என்று பொருள்தரும் காலனியைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். அது இன்றும் கேள்விக்கும் ஆய்வுக்கும் அப்பாற்பட்டே இருக்கிறது. தலித்துகள் வசிக்கும் பகுதியை காலணி என்று அழைக்கும் சாதி இந்துக்களை யார்தான் தடுக்க முடியும்? எதிர்த்துக் கேட்டால் அது ஆங்கில வார்த்தை என்று பூசி மெழுகலாம்.
இது ஒருபக்கம் இருந்தாலும், பார்ப்பனர்கள் வசித்த அக்ரகாரம் எனும் சொல் ஒவ்வாதச் சொல்லாக இருந்து வருகிறது. சமூக அதிகாரத்தின் குறியீடாக கருதப்பட்ட அச்சொல்லை கடந்த நூற்றாண்டில் அதிகமாக வெறுத்தார்கள். பார்ப்பன எதிர்ப்பின் குறியீடாக அக்ரஹார எதிர்ப்பும் அங்கீகரிக்கப்பட்டது. அது ஒருவகையில் நியாமானதுதான். சமூக அதிகாரத்தைக் குவித்து வைத்திருந்த அக்ரஹாரத்ததை எதிர்த்தது நியாமென்றால், அதற்கு நேர் எதிராக அதிகாரத்தை இழந்து முடக்கப்பட்ட சேரி அல்லது காலணி எனும் கட்டமைப்பும் எதிர்ப்பிற்கு உள்ளாக்கப்பட்டிக்க வேண்டும். அது நடக்காமல் போனது வரலாற்றின் பெருந்துயரங்களில் ஒன்று. ஏனென்றால் கடந்த ஈராயிரம் ஆண்டுகளாக இச்சொல்லாட்சி நிலைத்து ஒருவகை அதிகாரமற்ற சமூகத்தின் குறியீடாக மாறிவிட்டது.
இந்த நோய் பரவி நகரங்களையும் பற்றிக் கொண்டது. சென்னைப் பெருமாநகரத்தில் குடிசைப் பகுதிகளில் குடியிருக்கும் மக்களை சேரி மக்கள் என்று அழைக்கும் போக்கு இன்றும் இருப்பதை மறுக்க முடியுமா? அது ’சேரி பிஹேவிர்’ என்று கொஞ்ச காலத்திற்கு முன்புகூட பெரும் விவாதங்கள் சமூக வலைதளங்களில் எழுந்தன. சேரி இளைஞர்கள் ஜீன்ஸ், கூலிங்கிளாஸ் போட்டுக் கொள்கிறார்கள் என்று ஒரு தலைவர் அங்கலாய்த்ததும் இப்போது நினைவுக்கு வரலாம்.
இப்போது காலம் மாறிவிட்டது. ஆனால் கிராமப் புறங்களில் சமூக வாழ்நிலை மாற்றம் பெரிதாக நிகழவில்லை. ஊர்-சேரி என்றப் பிரிவினையும் அப்படியேத்தான் நிலைத்துள்ளது. இதை ஒழிக்க வேண்டும் என்ற செயல்திட்டம் எந்த ஒரு அமைப்பிடமோ அல்லது கட்சிகளிடமும் இல்லை. குறிப்பாக திராவிட இயக்கம், இடதுசாரிகள், காங்கிரஸ் மட்டுமின்றி வலது சாரிகளிடமும்கூட இதுகுறித்து விழிப்புணர்வோ, உரையாடல்கூட இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தப் பிரச்சனை இன்னும் இவர்களின் கவனத்தைக் கவராத ஒன்றாக பல பத்தாண்டுகளாக இருந்து வருகிறது. ஜப்பானில் புரோக்குமீன்களுக்கும், அமெரிக்காவில் கெட்டொக்களில் வசித்த கருப்பர்களுக்கும் அந்நாடுகளில் எழுந்த குரல் ஏன் இந்தியாவில் ஒலிக்கவில்லை என்று கேட்பது தவறாகிவிடுமா? இன்னும் எத்தனைக் காலம் கண்டும் காணாமல் இருக்கப் போகிறோம்? உலக வெளிச்சம் பெற்ற இந்த நூற்றாண்டிலும் கண்களை மூடிக் கொண்டிருப்போமா? தமிழ்நாடு அரசாவது மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி மாநிலமாக இதில் இருக்க வேண்டும் என்கிற ஆதங்கத்தில்தான் இந்தக் கட்டுரை.
இப்பிரச்சனையின் அவலத்தை முதலில் உணர்ந்தவர் தலைவர்களுள் கலைஞர் கருணாநிதி அவர்கள்தான். கிராமப் புரங்களில் அவர் உருவாக்கிய சமத்துவப் புரங்கள் இந்தப் பாகுபாட்டை ஒழிக்க முற்பட்ட புரட்சிகரமான செயல்திட்டம். ஆனால் அத்திட்டம் ஏனோ நிறுத்தப்பட்டது. இனி அதற்கு உயிர் வருமா என்றுத் தெரியவில்லை. ஆயினும் அத்திட்டம் ஏற்கெனவே நிலவி வரும் ஊர்-சேரி அமைப்பிற்கான மாற்று ஏற்பாடல்ல.
அண்மையில் கேரளம் என்ற பெயர் மாற்றத்தின் போது அங்குள்ள தலித் குடியிறுப்புகள் சேரி எனும் பொருள்படும் பெயர்களில் அழைக்கப்படக்கூடாது என்று ஓர் அறிவிப்பு வெளியானதைப் பார்த்தபோது அது சரியான முன்னெடுப்பு அல்ல எனத் தோன்றியது. பெயரை மாற்றுவதல்ல தேவை, அதன் பண்மை மாற்றுவதுதான் முதல் தேவை.
ஒரு பெயரை அழைக்கக்கூடாது என்று சட்டம் இயற்றுவதின் மூலம் அதை ஒழித்துவிட முடியாது. நரிகளெல்லாம் குதிரைகளாகட்டும் என்று அறிவித்தால் அப்படி நடந்துவிடுமா? சேரி, காலணி என்கிற பெயர்களை ஒழிப்பதின் மூலம் எதை அடைய முடியும். ஊர் சேரி (காலனி) என்கிற சமூக அமைப்பு நில அடிப்படையில் இருப்பதால் அது சாத்தியப்படுமா? அதிகப்பட்சம் அரசு ஆவணங்களில் காலணி என்றும் சேரிகள் என்றும் இருப்பதை வேண்டுமானால் ஒழிக்கலாம். நடைமுறையில் அப்படி நிகழ்வது சாத்தியமே இல்லை. எனவே மாற்று ஏற்பாடுகள் இதற்குத் தேவை. அதற்கு பின்வரும்
ஆலோசனைகளைத் தமிழ்நாடு அரசிற்கு முன்வைக்க விரும்புகிறேன்.
1. ஊர் சேரி என்கிற நில அமைப்பை ஒழிக்க முடியாது. ஆனால் அது நிரந்தரமானது அல்ல. இந்தியாவிலேயே விரைவாக நகரமயமாகும் மாநிலம் தமிழ்நாடு. ஒரு நகரம் உள் கட்டமைப்பில் விரிவாகும்போது அருகில் உள்ள கிராமங்களை இணைத்துக் கொள்கிறது. பின் நாளாவட்டத்தில் நகரமாக மாறிவிடும்போது ஊர் சேரி என்னும் இடைவெளி குறைகிறது. எனவே நகரமயமாக்கலை விரைவு படுத்த வேண்டும்.
2. தமிழ் உணர்வு மேலோங்கியுள்ள இக்காலத்தில் கிராமம் என்கிற வடச்சொல்லை நீக்கி அதற்கு இணையானத் தமிழ்ச் சொல்லை அறிமுகப்படுத்தி அரசு ஆவணங்களில் அதைப் புழக்கத்திற்கு கொண்டு வர வேண்டும்.
3. சேரி மற்றும் காலணி ஆகியச் சொற்களை அரசு ஆவணங்களில் குறிப்பாக வருவாய் ஆவணங்களிலிருந்து அகற்றுவது முதற்கட்டமாக நடந்தாலும், சேரி மற்றும் காலனிப் பகுதியில் வசிக்கும் மக்கள் அவர்களது வசிப்பிடத்தை தனி ஒரு கிராமமாக அறிவிக்க வேண்டும். ஊரும்-சேரியும் இணைந்து வழங்கும் பொதுவான கிராமப் பெயரை பெரும்பாலும் ஊர் பகுதியில் வசிப்பவர்கள் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். எனவே தலித்துகள் தங்களது குடியிறுப்பை தனி கிராம அலகாக அறிவித்துக் கொள்ளவும், அதற்கான தனிப் பெயரைச் சூட்டிக் கொள்ளவும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். காலனிகள் தனி கிராங்களாகப் பெயர் மாற்றம் பெறும்போது அப்பகுதிக்கே உரிய வரலாற்றுப் பெயர்களைச் சூட்டிக் கொள்ள அரசு வழிகாட்ட வேண்டும். அவை உடனடியாக வருவாய் துறை ஆவணங்களில் இணைக்கப்பட வேண்டும்.
4. தனிக் கிராமம் அல்லது குடியிறுப்பாக அறிவிக்கப்பட்ட சேரிப்பகுதிக்கு பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி தனி கிராம தகுதியை வழங்க முடியும். குறைந்தப்பட்சம் 700பேர் மக்கள் தொகை கொண்ட ஊரகப் பகுதியினைத் தனி கிராமமாக அறிவிக்க பஞ்சாயத்து ராஜ் சட்டம் இடம் தருகிறது. இந்த வாய்ப்பை ஏன் தமிழக அரசு பயன்படுத்தக் கூடாது? தனி கிராமங்களாக அறிவிக்கப்படுவதன் மூலம் கிராமங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்பது உண்மைதானென்றாலும், கிராமங்களின் எண்ணிக்கை வளர்ச்சிக்கு ஏற்ப ஒன்றிய அரசிடமிருந்து பெரும் நிதியின் அளவும் இரட்டிப்பாகும் என்பது உண்மைதானே.
5. தனி கிராமமாக அறிவிக்கப்பட்ட சேரிப் பகுதிகளில் விரைவான வளர்ச்சியை ஊக்குவிக்க முடியும். ஊரக வளர்ச்சித் துறையின் நிதி உதவியும் ஆதிதிராவிட நலத்துறையின் வழிகாட்டலும் ஓர் ஆரோக்கியமான வளர்ச்சியை உருவாக்கும். ஊர் சேரி என்கிற பிரிவினை கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சியினால் படிப்படியாகக் குறைந்து ஓர் இணக்கம் உருவாகும்.
6. நீண்ட காலமாக நிலவிவரும் இந்த அவலத்தை இன்னும் எத்தனைக் காலத்திற்குக் கண்டும் காணாமல் இருப்பது? தனி மனித உரிமை மற்றும் சமூக நலன் என நோக்கும் போது எவ்வளவு பெரிய தலைக்குனிவு, அவமானம். சேரிகள் அத்தனையும் தனியான ஒரு கிராமத் தகுதியினைப் பெற்று தமது வளர்ச்சியை அவர்களே கவனித்துக் கொள்ள வாய்ப்பளிக்கும்போது அவர்கள் திறம்பட தம்மை நிர்வகித்துக் கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்வார்கள். அப்படி நடக்காதெனில் அதற்கான பழியை அவர்களே சுமக்கட்டும். இந்த மாற்றத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்கு அனுமதியுங்கள். ஊர் சேரி என்கிற சொல்லும் அதன் பண்பும் ஒழிந்துவிடும். அதற்குப் பிறகு தனி உதவிகள் ஏதும் அப்பகுதிகளுக்குத் தேவைப்படாது.
நாம் நாகரீக உலகில் இருக்கிறோம். இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக வளர்ந்திருக்கிறோம். ஆனால் பண்பாட்டளவில் ஊர் சேரியென இனியும் பிரிந்திருக்க மாட்டோம் என்பதை இந்தியாவிற்கு மட்டுமின்றி உலகிற்கே வழிகாட்டும் வாய்ப்பை நாம் ஏன் தவறவிட வேண்டும்?
ஊர்-சேரி என்னும் அவலத்தை இத்தனை நூற்றாண்டுகள் கண்டும் காணாமலிருந்த அனைவருமே இந்த அவலத்திற்குப் பொறுப்பாளிகள். எனவே இவர்கள் தமிழக அரசின் கவனத்தை ஏன் ஈர்க்கக்கூடாது? நாம் இன்னும் சமூக நீதி மண்ணில்தானே வாழ்கிறோம்?
கௌதம சன்னா
27.06.2024
(04.07.2024 அன்று இந்து தமிழ்த் திசையில் வெளியான கட்டுரையின் சுருக்கப்படாத வடிவம்.
2003 தலித் தேசியம் குறித்து எழுதிய நூலின் கடைசிப் பகுதியில் அமைந்த ஓர் அத்தியாயத்தின் ஒரு பகுதியை இந்து தமிழ்த் திசைக்காக சுருக்கி எழுதியதின் வடிவம் இது)