– ஸ்டாலின் ராஜாங்கம்
தலித் வரலாற்றியலில் சான்றுகள் திரட்டல், அதனை உரிய வரிசையில் இணைத்தல் என்பனவற்றைவிட ‘வாசிப்பு’ என்ற அம்சம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. ஏற்கெனவே ஒரு அர்த்தத்தில் வாசிக்கப்பட்ட ஒன்றைத் தலைகீழாக்கம் – கட்டுடைப்பு – மறுவாசிப்பு என்னும் பார்வைகளினூடாக வேறொரு வாசிப்புக்கு உட்படுத்துதலாக இவற்றைக் கூறலாம்.
இந்தியர்கள் வரலாற்றைப் பதிவுசெய்துவைக்கும் பழக்கம் இல்லாதவர்களெனப் பெரும் வரலாற்றாசிரியர்கள்முதல் உள்ளூர் மேடைப் பேச்சாளர்கள்வரை கூறக் கேட்டிருக்கிறோம். இந்தியர்கள் என்ற இடத்தில் தமிழர்கள், தலித்துகள் போன்றோரையும் பொருத்தி இக்கூற்றைப் பேசலாம். இக்கூற்று காலனியத்தின் வருகைக்குப் பின்புதான் தோன்றியிருக்க முடியும். ‘வரலாறு’பற்றிய நம் இன்றைய புரிதல் காலனியம் தந்த சட்டகத்தால் உருவானது. அது ‘எழுத்து’ என்னும் புலப்படும் சான்றுகளையே ‘ஆதாரங்களாக’க் கருதி வரலாற்றை எழுத முன்வந்தது. அதன்படி அது இந்திய வரலாற்றை எழுத விரும்பியபோது எழுத்துரீதியான ஆதாரங்களையே எதிர்பார்த்தது. இந்தப் பார்வையே வெள்ளையர்களை ஆதரித்த, எதிர்த்த எல்லா உள்ளூர்க்காரர்களையும் பாதித்தது.
அண்மைக் கண்டுபிடிப்புகள் வழியாகப் பண்டைய காலத்திலிருந்தே எழுத்தின் பயன்பாடு இருந்திருக்கிறது என்றாலும் அது மக்கள் பயன்பாட்டில் என்னவாக இருந்தது என்பதை ஆராய வேண்டியிருக்கிறது. எழுத்தைப் பயன்படுத்துவதற்கான சமூகத் தேவை இருந்திருந்தால்தான் அதை அறிந்திருப்பதற்கான தேவையும் எழுந்திருக்கும். அத்தகைய சமூகத் தேவையின் இடம் குறித்தும் ஆராயப்பட வேண்டும். இலக்கியங்களிலும் மத நூல்களிலும் கூறப்படும் கல்வியின் பொருள் குறித்தும் அது தோன்றிய காலத்தின் பின்புலத்தில் வைத்து விவாதிக்க வேண்டும். இந்நிலையில்தான் பெருமளவு வாய்மொழிச் சமூகமாக இருந்த இந்தியாவைப் பற்றி காலனியக் காலத்தில் பலரும் வரலாறு எழுதினர். எழுத்தைப் பயன்படுத்த வேண்டிய சமூகத் தேவையில்லாதிருந்த மக்கள் குழுவினர், எழுத்தை ஆதாரமாகக் கொண்ட நவீன வரலாற்றியலுக்குள் வராமல் போனார்கள். அதன் காரணமாக அவர்கள் ‘ஆதாரம் அற்றவர்கள்’ என்று கருதப்பட்டனர். இதன்படி உருவானதுதான் இந்தியர்கள் வரலாற்றைப் பதிவுசெய்து வைக்காதவர்கள் என்ற கருத்து. ஆனால் எழுத்திற்குள் வராதவர்களே இங்கு பெரும்பான்மை. காலனியவாதிகள் உருவாக்கிய இந்தச் சட்டகத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட உள்ளூர் வரலாற்றாசிரியர்கள், தங்களின் வரலாற்றை எழுத்தாக்கிக் கொண்டதோடு பெரும்பான்மை மக்கள் குழுவினரை வரலாறு அற்றவர்களாக ஆக்கினர்.
சமகாலத்தில் தலித் வரலாறு என்றொரு விழிப்புணர்வு பரவலாகியிருக்கிறது; ஓரளவு அது ஏற்கப்பட்டுள்ளது. ஆனால் நன்கு புலப்படக்கூடிய ஆதாரங்கள் சார்ந்ததுதான் வரலாறு என்ற கருத்து செல்வாக்கோடு இருப்பதால் புலப்படக்கூடிய, ஆதாரங்கள் கிடைக்கக்கூடிய ஓரிரு நூற்றாண்டுகளைத் தாண்டித் தலித் வரலாற்றை விரித்துச் செல்ல முடிவதில்லை. சான்றுகள் இல்லையென்பதாலேயே அம்மக்களே இருந்திருக்கவில்லை என்றாகிவிடாது. கடந்த இரண்டொரு நூற்றாண்டுகளில் பிறர் எழுதிய வரலாற்றிலும் அவர்களின் இடம் சொல்லும்படி இல்லை. இந்நிலையில் வரலாற்றை எழுதவும், சான்றுகளைக் கண்டடையவும் தலித் வரலாற்றியல் புதிய முறைகளைக் கைக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தப் பயணத்தில் வரலாறு, சான்றுகள் என்பனவற்றின் அர்த்தங்களேகூடப் புதிய பரிமாணத்தைப் பெற்றுவிடுகின்றன.
ஒரு கட்டம் வரையில் தலித்துகள் உள்ளிட்ட அடித்தள மக்கள் வரலாறுபற்றிப் பேசுவதற்கு எழுத்து மரபு X வாய்மொழி மரபு என்னும் எதிர்மறை காட்டப்பட்டு, அதில் வாய்மொழி மரபினால் தலித்துகளின் வரலாற்றை அறிவதற்கான சான்றுகளாகக் கொண்டனர். எழுத்து சார்ந்த சான்றுகள் கிடைத்திராத நிலையில் வாய்மொழிகளை வாசிப்பது தலித் மக்களின் வரலாற்றைப் புரிந்துகொள்வதில் கணிசமான பங்கைச் செலுத்தின. அதேவேளையில் இந்த இரட்டை எதிர்மறை எழுத்து மரபில் அம்மக்களுக்கு முற்றிலும் இடமே இல்லை என்றாக்கியும்விட்டது. எழுத்து மரபின் வரையறைகளைப் பேசுவதன்மூலம் அதன் வரலாற்றுப் பங்கையே மறுப்பதாகிவிடக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. எழுத்து மரபையும் வாய்மொழி மரபையும் எதிரெதிராக வைத்து அவற்றில் ஏதாவதொரு பக்கத்தில் மக்கள் குழுவினரைப் பொருத்திவிடாமல் இவ்விரண்டு மரபுகளுக்கிடையே இருந்த ஊடாட்டத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
வாசிப்பு
தலித் வரலாற்றியலில் சான்றுகள் திரட்டல், அதனை உரிய வரிசையில் இணைத்தல் என்பனவற்றைவிட ‘வாசிப்பு’ என்ற அம்சம் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. ஏற்கெனவே ஒரு அர்த்தத்தில் வாசிக்கப்பட்ட ஒன்றைத் தலைகீழாக்கம் – கட்டுடைப்பு – மறுவாசிப்பு என்னும் பார்வைகளினூடாக வேறொரு வாசிப்புக்கு உட்படுத்துதலாக இவற்றைக் கூறலாம். இப்பார்வைகள் மேலைநாட்டு நவீன வாசிப்புக் கோட்பாடுகள் வழியாக இங்கு அறிமுகமானாலும் அயோத்திதாசர் போன்ற உள்ளூர்ச் சிந்தனையாளர்கள்வழி பெற்றிருக்கும் தாக்கமும் கணிசமானது. அயோத்திதாசரின் யோசனைகள் விளக்கங்கள் என்ற உரை மரபு சார்ந்தது.
இதன்படி ஏற்கெனவே இருந்துவரும் எழுத்து மரபிலான சான்றுகள்மீது வாசிப்புகள் கோரப்பட்டன. எழுத்துப் பிரதிகளில் சொல்லப்படும் அர்த்தங்களைத் தாண்டிச் சொல்லப்படாத அர்த்தங்கள்பற்றி யோசிக்கப்பட்டன. கதைகளினூடான இடைவெளிகள், குறியீடுகள், மௌனங்கள், ஒன்று இன்னொன்றாகச் சொல்லப்பட்டிருத்தல், சொல்லாய்வுகள் போன்றவற்றின் அர்த்தங்கள் வாசிக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட மக்களின் அடையாளங்களே எழுத்து மரபின் அடிநாதமாகவும் இருந்ததை இத்தகைய வாசிப்புகள் வெளிக்கொணர்ந்திருக்கின்றன. இங்கிருக்கும் எல்லா அடையாளங்களும் ஏதோவொரு விதத்தில் ஒடுக்கப்பட்டோரின் ஒரு காலத்தைய உரிமைகள்மீதான இன்றைய தலைகீழாக்கமாகவே இருக்கிறது என்கிற வாசிப்பு எழுகிறது. கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் பெருங்கோவில்களில் எஞ்சி நிற்கும் தலித் அடையாளங்கள் தலைகீழாக்கப்படாத வரலாற்றிற்கான சான்றுகளாக விளங்குகின்றன. இப்போக்கு சான்றுகளாகக் கருதப்படாதவற்றிற்குள் இருக்கும் சான்றுகளை இனங்காண உதவுகிறது. புனைவுக்கும் வரலாற்றிற்குமான ஊடாட்டமும் தெரியவருகிறது. அதாவது வரலாற்றைத் தட்டையாக அணுகுவதிலுள்ள பிரச்சினைப்பாட்டை உணர்த்துகின்றது. தலித் வாசிப்பு காரணமாக வரலாறு என்பதற்கான வடிவம் மாறியுள்ளது. வரலாறு என்பதற்கான வடிவம் மாறியுள்ளது. தலித் வாசிப்பு காரணமாக வரலாறு என்பதற்கான வடிவம் மாறியுள்ளது. வரலாறு புறவயப்பட்டது என்பதிலிருந்து அகவயப்பட்டதாக மாறியிருக்கிறது. அதாவது வரலாறு எழுதுபவரின் கண்ணோட்டம் மாறியிருக்கிறது.
வாய்மொழி மரபுகளும் இந்தச் சமூகத்தின் விளை பொருட்கள்தாம். அவை மாறும் தன்மையுடையவை. எழுத்து மரபோடும் ஊடாடிவரும் தன்மை பெற்றவை. எனவே வாய்மொழி மரபையும் உள்ளவாறே பொருள் கொள்ளாமல் ‘உள்மெய்’யாக வாசிக்க வேண்டும் என்ற புரிதலையும் பெற வேண்டி இருக்கிறது. உள்ளூர் அம்மன் விழாக்களிலும் சடங்குகளிலும் தலித் ஒருவர் கொண்டிருக்கும் பங்குமீதான வாசிப்பு இந்த வகையில் முக்கியமானது.
ஆவணம்
இதன் தொடர்ச்சியாக ஆவணம் என்பதையும் பார்க்க வேண்டும். இப்போது ஆதாரங்கள் என்று சொல்வதைவிட ஆவணம் என்ற சொல்லே அதிகம் கையாளப்படுகிறது. ஆவணப்படுத்தல், ஆவணமாக்கல் போன்ற சொற்கள் இத்தொடர்பிலேயே புழக்கத்தில் வந்திருக்கின்றன. எழுத்து மட்டுமே ஆவணம் என்று கொள்ளப்பட்ட நிலையிலிருந்து சொல்லாடல், வாசிப்பு, அர்த்தம் என எல்லாமும் ஆவணத்தில் சேர்ந்துவிடுகின்றன. ஆவணங்கள் என்று சொல்லும்போது இரண்டு அம்சங்களே தூக்கலாகிவிடுகின்றன. ஒன்று ஒரு குழுவின் அரசியல் வரலாற்றிற்கான சான்றுகளை மட்டுமே ஆவணங்களாகக் கருதுவது; பாதுகாக்கப்பட்ட / அங்கீகரிப்பட்ட ஆவணக் காப்பகங்களில் இருப்பவற்றை ஆவணங்களாகப் பார்க்கும் போக்கு மற்றொன்று. இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையன. இப்போக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றைக் குறிப்பிட்ட வரையறைக்குள் நிறுத்திவிடுகிறது. ஆவணக் காப்பகச் சான்றுகளைத் தாண்டி இம்மக்களின் வரலாற்றை யோசிக்கவிடாமல் நிறுத்திவிடுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் வரலாறு மற்ற எவரையும்விட அவர்களின் வாழ்வியல் தேவைகளோடு, அவர்களின் அன்றாடங்களோடு தொடர்புகொண்டிருக்கிறது. எனவே அவர்களின் அரசியல் வரலாற்றைப் பண்பாட்டு வரலாற்றிலிருந்து பிரித்துவிட முடிவதில்லை.
எனவே அங்கீகரிக்கப்பட்ட ஆவணக் காப்பகங்களுக்கு வெளியேயும் செயற்பட வேண்டியுள்ளது. இன்றைய ஆவணக் காப்பகம் என்ற யோசனையும் காலனியத்தின் பங்களிப்புதான். அங்கு காலனியக் காலம்முதல் ‘எழுதப்பட்ட’ ஆதாரங்களே சேமிக்கப்பட்டிக்கின்றன. அவற்றிலுள்ள சான்றுகள் அவை தோன்றிய பின்புலத்திலிருந்து பிரிக்கப்பட்டுப் பல்லாண்டுகளாக வேறோரிடத்தில் தக்க வைக்கப்பட்டிருக்கின்றன. இப்போக்கு சான்றுகள் தேடுபவர்களுக்கு உதவுகிறதே ஒழிய சான்றுகளோடு தொடர்புடைய பொருட்களின் இன்றைய மாற்றங்களை அறிய உதவுவதில்லை. ஆவணக் காப்பகச் சான்றுகள் மாறாதவை. ஆனால் ஒரு பொருளின் மாற்றத்தையும் சேர்த்துதான் அதன் இன்றைய வரலாறு எழுதப்படுகிறது. எனவே இன்றைய ஆவணக் காப்பகம் என்கிற கருத்தாக்கம் மையப்படுத்தப்பட்டதாக – அதிகாரத்தால் தீர்மானிக்கப்படுவதாக இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொண்டே அவற்றை அணுக வேண்டியிருக்கிறது. இந்நிலையில்தான் தலித் மக்கள்பற்றி அங்கு கிடைக்கும் ஆதாரங்களின் வரையறையை நாம் புரிந்துகொள்கிறோம்.
அதேவேளையில் இந்த வரையறை பற்றிய ஓர்மையோடு ஆவணக் காப்பகத்தைப் பயன்படுத்தும் ஆய்வாளர்கள் இன்றைக்குத் தமிழில் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்விடத்தில் ஆவணங்களைத் தேடி மையப்படுத்தப்படாத இடங்களை நோக்கி நகர வேண்டியுள்ளது. பெருநகரங்கள் அல்லாத சிறு நகரங்கள் – கிராமங்கள், பெருந்தலைவர்கள் அல்லாத உள்ளூர்த் தலைவர்கள், பேரியக்கங்கள் அல்லாத வட்டார அமைப்புகள், பெருநிகழ்வுகள் அல்லாத சிறு கலகங்கள், நூல்கள் அல்லாத கடிதங்கள், பிரசுரங்கள் என அவை விரிய வேண்டும். இவற்றை ‘மாற்று ஆவணக் காப்பகங்கள்’ என்று அழைக்கலாம். மாற்று வரலாறு சாத்தியமாக வேண்டுமானால் மாற்று ஆவணங்கள், மாற்று ஆய்வு முறை, மாற்று ஆவணக் காப்பகங்கள் பற்றியும் யோசிக்க வேண்டும். மையமான நகரங்கள் அல்லாத இடங்களிலும் ஆவணங்கள் இருக்கின்றன. அவை சிதறிக் கிடக்கின்றன. நாம் ஆவணம் என்று அறியாமல் இருப்பவை, நாம் பயன்படுத்தும்வரை ஆவணம் என்ற மதிப்பை யோசிக்காதவை. இவ்விடத்தில் ஆய்வாளர் என்னும் அதிகாரம் நம் நினைவுக்கு வந்துபோகிறது.நம்முடைய பயன்பாட்டால்தான் ஆவணக் காப்பகம் உருவாக்கப்படுகிறது. உள்ளூர் மக்களிடம் செய்திகளைத் திரட்டுவது எனும்போது அவர்களால் உருவாக்கப்பட்ட கதைகள் மட்டும் அவர்களிடம் இருப்பதில்லை. அவர்களிடம் ‘பரவிய’ கதைகளும் இருக்கும். உள்ளூர் அதிகாரம் பற்றிய ஓர்மையும் இதில் அவசியம்.
உணர்வு என்னும் ஆவணம்
ஆவணங்களில் கிடைக்கக்கூடிய தகவல்கள் ஒரு புறமிருக்க, ஆவணங்கள் கிடைக்கும் இடமும், ஆவணங்களைக் கொண்டிருக்கக்கூடிய மனிதர்களும் வரலாற்றின் தரவுகளாகிவிடுகிறார்கள். கடந்த காலங்களில் போராட்டத்திலோ இயக்கங்களிலோ ஈடுபட்டு வயதாகிவிட்டவரைப் பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவரிடமிருந்து விவரணையாகவோ, புலப்படும் சான்றாகவோ ஒரு தகவலைப் பெறும்போது, அது வெறும் தகவலாக மட்டும் அவரால் பகிரப்படுவதில்லை. அவற்றோடு அவர் கொண்டிருந்த உணர்வுப்பூர்வமான பகிர்தலாகவும் அது மாறிவிடுகிறது. அவருடைய ஏக்கம், கோபம், இயலாமை ஆகியவற்றோடு அது பகிரப்படுகிறது. கூடவே, அந்தக் குறிப்பிட்ட தகவலை / தரவை அவர் இதுவரை தன்னுடைய வரலாற்றின் அங்கமாகக் காத்துவந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பு மிக முக்கியமானது. இந்த உணர்வு மொழிக்கு வரலாற்றில் இருக்கும் இடம் என்னவென்று யோசிக்க வேண்டியிருக்கிறது.
எக்ஸ்ரே மாணிக்கம், எரிமலை ரத்தினம் போன்ற அம்பேத்கரியப் பெரியவர்களைச் சந்தித்தபோது இப்பண்பை உணர்ந்திருக்கிறேன். அதேவேளையில் நாம் அவர்களை ஆய்வுத் தரவுகளைத் தரும் பசுக்களாகச் சுருக்கவும் கூடாது. தாங்கள் கொண்டிருக்கும் தகவல்கள் ஆவண மதிப்புக் கொண்டவை என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆய்வாளர்களுக்குத் தரவுகளாகத் தெரியும் பலவற்றை அவர்கள் தமது வாழ்வுப் பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொண்டிருப்பார்கள். அதேவேளையில் இதுபோன்ற தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் செயற்பாட்டாளருக்கும் வரையறைகள் இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மறதி, திட்டமிட்ட விடுதல், திட்டமிடாமல் விடுதல், மாற்றிச் சொல்லுதல் என யாவும் அவற்றில் நிகழ்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
உள்ளடங்கிய ஊர்களுக்குச் செல்லும்போது ஆவணம் மட்டுமே கிடைப்பதில்லை. அதைப்பற்றி மக்கள் என்னென்ன நினைக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது. பலவேளைகளில் மக்கள் ஒன்றைப் பற்றி மிகையாக நினைப்பதையும் பார்க்கிறோம். அதேபோல மக்கள் எல்லாவற்றையும் நினைவில் வைத்துக்கொள்ள விரும்புவதில்லை. அவர்கள் மறக்க விரும்பும் நினைவுகளும் இருக்கலாம்.
தொட்டுணர முடியாத ஆவணங்கள்
பாடல்கள், கதைகள், நம்பிக்கைகள் போன்றவை பண்பாட்டு ஆதாரங்களாய் இருக்கின்றன. அவை தொட்டுணர முடியாதவை. இதே போக்கு அரசியல் வரலாற்றிலும் இருக்கின்றன. நீண்ட காலம் அமைப்புகளும் போராட்டங்களும் நடைபெற்ற பகுதிகளிலேயே அவைபற்றிப் புலப்படும் ஆதாரங்கள் கிடைப்பதில்லை. சான்றாக, இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவின் / தமிழகத்தின் பல பகுதிகளில் இழிவு மறுப்புப் போராட்டங்கள் நடந்துள்ளன. அவைபற்றிய வரலாறு இல்லாமலிருப்பதற்குக் காரணம் ஆதாரங்கள் சார்ந்து அவை நடத்தப்பட்டிருக்கவில்லை என்பதுதான். ஏனெனில் அவை சில இடங்களில் அமைப்புகளின் ஆளுமைகளின் தலைமையை ஏற்று நடந்துள்ளன. சில இடங்களில் மக்களின் தன்னெழுச்சியாலும் நடந்திருக்கின்றன. முக்கியமாக அவை வரலாற்றில் இடம்பெறுவதற்கான ஓர்மையைக் கொண்டிருக்காததால் போராட்டங்களுக்கு முன்பும் பின்பும் ஆதாரங்களைக் கருதாமல் இயங்கியிருக்கின்றன.
இத்தகைய இழிவு மறுப்புப் போராட்டங்களைத் தேடத் தொடங்கும்போது தொட்டுணர முடியாத ஆவணங்கள் கிடைக்கின்றன. போராட்டங்களின்போது இயற்றிப் பாடப்பட்ட பாடல்கள், மாற்றப்பட்ட ஊர்ப் பெயர்கள், குழந்தைகளுக்குச் சூட்டப்பட்ட பெயர்கள், ஒரு உணவு முறையை மறுத்து மற்றொரு உணவுமுறைக்கு மாறியமை போன்றவற்றை இவ்வகையில் கூறலாம். இவ்வகைப் போராட்டங்கள் பிரசுரம் அடித்துக் குறித்த நாளில் நடைபெறாமல் ஏதோவொரு கிராமத்தில் அந்தந்த நேரத் தேவைகளை ஒட்டி எழுந்திருக்கின்றன. பெரும் அரசியல் தலைவர்களின் தலைமையோ வழிகாட்டலோ இல்லாமல் அந்த ஊரிலிருந்து ஒருவரோ, ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ அவற்றை வழிநடத்தியிருப்பர்.
இப்போதும் பதிவு செய்யப்படாத பாடல்கள் நிறைய உள்ளன. வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இழிதொழில் மறுப்புப் போராட்டம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் பாடல்கள் இதுவரையிலும் தொகுக்கப்படவில்லை. இதில் அம்பேத்கர்பற்றிய பாடல்கள் முக்கியமானவை. குறிப்பாக வியாசர்பாடி கே.ஜி. நேசன் தொடங்கி 1990களில் கேசட்டுகளில் பதிவான கானா பாடல்கள்வரை.. உள்ளூர் அளவில் நடந்த போராட்டங்கள் பற்றிய கதைகளும் முக்கியமானவை. அடுத்ததாக முறையாக ஆவணப்படுத்தப்படாத கலவரங்களின் வரலாறு இருக்கிறது. பெரிய கலவரங்கள்முதல் உள்ளூர் அளவில் நடந்த வன்முறைகள்வரை இவற்றில் அடங்கலாம். இதற்குச் செய்தித்தாள் துணுக்குகள் தொடங்கி வெகுமக்கள் நினைவுகள்வரை பயன்படும்.
சில ஊர்களில் மரபாக வழங்கப்படும் பறையன் காடு, சக்கிலி வலசு போன்ற பெயர்கள் காட்டும் வரலாறு, கோவில்களில் அளிக்கப்படும் ‘மரியாதை’ போன்றவற்றையும் இதில் அடக்கலாம்.
தலித்துகள் ஏற்படுத்திய சில நிறுவனங்களைப் பற்றியும் யோசிக்க வேண்டியிருக்கிறது. உள்ளடங்கிய ஊர்களில் தனித்தனிச் சாதிகளின் பெயரால் அமைந்த சங்கங்கள், பின்னாளைய மன்றங்கள், அவற்றால் ஏற்படுத்தப்பட்ட பள்ளிகள், சொத்துகள் போன்றவை கவனிக்கப்பட வேண்டும். அதேபோல அவற்றின் இன்றைய நிலையையும் சேர்த்தே யோசிக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக முன்பிருந்த பௌத்தச் சங்கங்களில் சில இப்போதும் நீடிக்கின்றன, சில இல்லை, சில பகுதியளவில் இருக்கின்றன, சில வழக்கு மன்றங்களில் இருக்கின்றன. முன்பு பள்ளி ஆரம்பித்த இடங்களுக்கும் இது பொருந்தும்.
கடந்த காலங்களில் இயக்கங்களிலோ களச் செயற்பாடுகளிலோ இருந்தவர்கள் அறிந்தும் அறியாமலும் தக்கவைத்திருக்கும் ஆவணங்கள் இருக்கின்றன. இவர்களிடம் நிகழ்ச்சி நடத்தியதற்கான துண்டுப் பிரசுரங்கள், அரசிடம் அளித்த விண்ணப்ப நகல்கள், கட்சி மாநாட்டுத் தீர்மான நகல்கள், இதழ்கள், செய்தித்தாள் குறிப்புகள் கிடைக்கும். அதேவேளையில் இதுபோன்ற பெரியவர்கள் பெரும்பாலும் இறந்துவிட்டனர். அவர்கள் வைத்திருந்த ஆவணங்கள் அவர்களின் வாரிசுகளால் பாதுகாத்து வைக்கப்படுவதில்லை. அறியாமல் வைத்திருந்தாலும் பிறர்மீதும் நம்பிக்கை வராததால் அவர்கள் தருவதில்லை. இவ்வாறுதான் எல்லோருக்கும் பல பிரசுரங்களைத் தந்து ஏமாந்துவந்த அன்பு பொன்னோவியம் ஒரு கட்டத்தில் யாரிடமும் எதையும் தராமலிருந்து ஞான. அலாய்சியஸ் நம்பிக்கை தந்த பின்னால் அயோத்திதாசரின் தமிழன் இதழ்களைத் தந்தார். வேறு சிக்கல்களும் இருக்கின்றன. தங்கள் தந்தையர்களின் ஆவணங்களுக்கு மதிப்பு இருக்கின்றன, தேடி வருகிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட வாரிசுகள் எதையோ பெரிதாக எதிர்பார்த்துத் தாங்களும் பயன்படுத்தாமல் பிறருக்கும் தராமல் இருக்கிறார்கள்.
சில ஊர்களில் அரிய ஆவணங்கள் அதன் முக்கியத்துவம் உணரப்படாமலும் கிடக்கக்கூடும். ஒருமுறை சிதம்பரம் பகுதியிலிருந்து சிதைந்த ஒரு கடிதம் கிடைத்தது. 1950களில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த எல். இளையபெருமாள், தொண்டு வீராசாமி ஆகிய இருவருக்கும் சிங்கப்பூரில் செயற்பட்டுவந்த ‘சிதம்பரம் தாலுகா மகாஜன சங்கம்’ சார்பாக எழுதப்பட்ட கடிதம் அது. சிதம்பரம் பகுதியிலிருந்து சிங்கப்பூருக்குப் பிழைக்கச் சென்ற தலித்துகள் உருவாக்கியிருந்த சங்கம் அது. உள்ளூர் சீர்திருத்த முயற்சிகளோடு அச்சங்கம் இணைந்திருந்தது. நந்தனார் பெயரில் நடத்தப்படும் நாடகங்களில் ஆதி திராவிடர்கள் இழிவுபடுத்தப்படுகிறார்கள், எனவே அவற்றைத் தடைசெய்யக் குரலெழுப்ப வேண்டுமென இருவரையும் அக்கடிதம் கேட்டுக்கொள்கிறது. இருவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள். அவ்வாறிருப்பினும் சமூகப் பிரச்சினைகளில் இருவரும் சேர்ந்து செயற்பட வேண்டுமென அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதனை வலியுறுத்தி இக்கடிதத்தை எழுதியிருக்கிறார்கள். “நீங்கள் கட்சிப் பேதத்தைக் கொண்டு இதனைக் கைவிடாதீர்கள். அபிப்பிராய பேதமிருக்கலாம். நீங்கள் ஒரே லட்சியத்திற்காகப் பாடுபடுகிறீர்களென்பதை மறந்துவிடாதீர்கள். சமூகத்திற்கு இழிவு தரும் பழக்கத்தை அழியுங்கள்” என்று அக்கடிதத்தை முடிக்கிறார்கள். இந்தக் கடிதத்தில் புலம்பெயர்தல், சங்கம் அமைத்தல், அங்கிருந்து உள்ளூரில் இணைந்திருத்தல், நந்தனார் கதை எதிர்ப்பு எனப் பல செய்திகள் கிடைக்கின்றன. இது ஆவணக் காப்பகங்களில் கிடைக்காது.
வரலாறு என்னும் நம்பிக்கை
வரலாறு என்ற பதத்திற்கு எதிர்ப்பதம் நம்பிக்கை. வரலாறு நம் நம்பிக்கையாக இருக்க முடியுமா? கூடாது என்பது நம் லட்சியம். ஆனால் நம்பிக்கையாக இருக்கிறது என்பது யதார்த்தம். இந்திய வரலாற்றில் இதற்கான உதாரணங்களாகப் பலவற்றைக் கூறலாம். குறிப்பாக, சாதி வரலாறுகள் பலவும் அந்தந்தச் சாதிகளால் நம்பப்படுபவையாக இருக்கின்றன. அந்த வரலாற்றைச் சிறிது அசைத்தாலும் பொய்ம்மையா, உண்மையா என்ற கேள்வியை நோக்கிச் சென்றுவிடும். எனவே சாதிய வரலாறுகள் பதற்றத்துடனும் பக்தியுடனும் கையாளப்படுகின்றன. இந்த விதத்தில் நம்பிக்கையும் வரலாறும் ஊடாடுகின்றன. இங்கு நடந்தவையெல்லாம் வரலாறு ஆவதில்லை. நடந்தவை, நடக்காதவை என்று எதுவாக இருந்தாலும் அது சொல்லப்படாவிட்டால் வரலாறு ஆவதில்லை. ‘சொல்லப்படுவது’ அதிலும் ‘திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதே’ இங்கு வரலாறாக ஆகியிருக்கிறது. நம்பப்படும் நம்பிக்கைகள் திரும்பத் திரும்பச் சொல்லப்படும்போது வரலாறாக ஆகியிருக்கின்றன.
இவ்விடத்தில் ஒடுக்கப்பட்ட மக்களும் தங்களின் வரலாறு என்ற ஒன்றைக் ‘கற்பனை’ செய்கிறார்கள். அந்தக் கற்பனைகளை வாசிப்பதற்கான முறையியல்கள் நம்மிடமில்லை. அவை கற்பனைகளென்று தள்ளிவிட முயலுகிற நாம் அத்தகைய ‘கற்பனைகள்’ ஏன் என்று புரிந்துகொள்ளத் தவறுகிறோம். கற்பனை பொய் ஆகாது. அது புனைவு. இதன்படி பார்த்தால் இக்கற்பனைகளில் பொய் நோக்கத்தைவிட ‘அற நோக்கம்’ இருப்பதைப் பார்க்க முடியும். ஒரு ஊரில் சாதியெதிர்ப்புப் போராட்டத்தில் ஒருவர் இறந்துபோகிறார். அவருக்கு மக்கள் சிலையெடுக்க விரும்புகிறார்கள். அதற்கு வழி தேடுகிறார்கள். அப்போது தலைவர் ஒருவர் இறந்த மகனுக்குச் சிலை வடித்து வைத்திருக்கிறார். இறந்த தியாகியின் சிலைக்காகத் தன்னிடமிருந்த சிலையைத் தருகிறார். நிறுவப்பட்ட சிலை பின்னாட்களில் தியாகியின் உருவமாகவே கருதப்படுகிறது. வரலாறு எழுதுபவருக்கு இந்த உண்மை தெரியவருகிறது. அவர் என்ன செய்ய வேண்டும்? உண்மையைச் சொல்ல வேண்டுமா அல்லது மக்களின் நம்பிக்கையைச் சிதைக்காமல் விட்டுவிட வேண்டுமா? இங்கு வடிவங்களில் பிழையிருக்கலாம். நோக்கத்தில் பிழையில்லை. இவ்விடத்தில் வரலாற்றிற்கு உண்மையைவிட அறம் முக்கியமாகிறது.
மதுரைக்கு அருகிலுள்ள மேலூர் வஞ்சி நகரம் என்ற ஊரில் தலித் உரிமைக்காகப் போராடிய கந்தன் என்பவர் ஆதிக்க வகுப்பினரால் கொல்லப்பட்டார். அவருக்கு நடுகல் நட்டு ஊரார் வணங்கி வருகிறார்கள். 15 ஆண்டுகளுக்கு முன் அங்கு போனபோது அரசியல் மேடைகளில் பாடுவதற்காக அவர் எழுதிய பாடலைக் கேட்க முடிந்தது. ஒவ்வொருமுறை அங்கு போகும்போதும் அவரைப் பற்றிய ஏதோவொன்று புதிதாக மக்களிடம் முளைத்திருப்பதைப் பார்க்க முடிந்தது. இந்தாண்டு போனபோது நீண்ட காலமாகக் கேட்காதிருந்த கந்தன் பற்றிய பாடலைக் கேட்க முடிந்தது. கந்தன் உயிரோடு இருந்தபோது அவரை நேரில் பார்த்த உறவுப் பெண்ணொருத்தி அதைப் பாடிக் காட்டினார். அதில் கந்தனின் கம்பீரத் தோற்றம், அழகு, உடுத்தும் நேர்த்தி போன்றவை சித்தரிக்கப்பட்டிருந்தன. பாடலில் சொல்லப்படுவதைப் போலவே கந்தன் இருந்திருக்கவில்லை. பாடலுக்காக உருவகிக்கப்பட்ட கற்பனைத் தோற்றம் என்று பாடியவரே ஒப்புக்கொள்கிறார். ஆனால் தோற்றத்தை வர்ணித்துப் பாடிக்கொண்டிருக்கும்போதே அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் பாடுவதை நிறுத்திவிடுகிறார். இவ்விடத்தில் கற்பனைதான் கந்தனுக்கு உருவத்தைத் தருகிறது. எனில் இது கற்பனை மட்டும்தானா? தாங்கள் இயற்றிய பாடலைத் தாங்களே நம்புவதால்தான் அவர்கள் பாடும்போது அழுகிறார்கள். அம்பேத்கர் வயலின் வாசிப்பதுபோல, சைக்கிள் ஓட்டுவதுபோலச் செய்யப்படும் கற்பனைகளை இவ்வகையில் புரிந்துகொள்ளலாம்.
வரலாற்று நிகழ்வுகளை அல்லது பாத்திரங்களை அர்த்தப்படுத்துவதற்கும் புனைவு மனம் தேவைப்படுகிறது. திருச்சியில் 1954ஆம் ஆண்டு வீரம்மாள் என்ற தலித் பெண், தலித் பெண் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியைத் தொடங்கினார். கிட்டதட்ட அதே காலகட்டத்தில் திருச்சியிலேயே தொண்டு வீராச்சாமியும் ஒரு பள்ளியைத் தொடங்கினார். ஆனால் வீரம்மாளின் நிறுவனம் காலத்தால் வளர்ந்தது. வீராச்சாமியின் பள்ளி வளராமல்போனது. இவ்விரண்டையும் தனித்தனியாக எழுதும்போது அவை தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி எனப் பள்ளிகள் பற்றிய வரலாறாக நிற்கிறது. ஆனால் ஒப்பிடுகிறபோது அவற்றிலிருந்து புதிய வரலாறு ஒன்று தெரியவருகிறது. ஒரு நிறுவனம் வளருவதற்கும் வளராமல் போவதற்கும் தலித் ஒருவர்பற்றிய பொதுச் சமூகத்தின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதற்கும் தொடர்பு இருப்பதை இவர்களின் வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்கிறோம்.
இந்த வரலாற்றியலில் ஆவணத்தை வைத்திருக்கும் எளிய மக்களிடம் ஓயாமல் ஒரேவிதமான ஆதங்கம் வெளிப்படுவதைப் பார்க்க முடிகிறது. அம்மக்கள் ஆவணங்களைக் கடந்த காலத்தவையாக மட்டும் பார்ப்பதில்லை. அவற்றைச் சமகாலத்தின் தேவையோடு இணைத்து அர்த்தப்படுத்தவே விரும்புகிறார்கள். இது முக்கியமானது. ஊரில் கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்கான பட்டாவைப் பெற நடத்திய போராட்டங்களுக்கான பிரசுரங்களை, மனுக்களைக் காட்டும்போது ‘இன்றுவரை கிடைக்காத பட்டா’ என்ற செய்தியில் கொண்டுவந்து நிறுத்துகிறது. இவ்விடத்தில் வரலாறான முற்றுப் பெற்றதாக இல்லாமல் தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக இருக்கிறது. இதனை வேறெந்த வரலாற்றியலுக்கும் இல்லாத தனித்துவம் என்று குறிப்பிடலாம்.
2024 டிசம்பர் 16, 17, 18 தேதிகளில் கொலாம்பியா குளோபல் சென்டரில் (மும்பை) ‘The Archive: Event, Infrastruture, Imagination’ என்ற தலைப்பில் நடந்த பயிலரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் திருத்திய வடிவம்.)
