#பாபாசாகேப் #அம்பேத்கர் கொண்டாடிய #புத்தபூர்ணிமை #விழாக்கள்
(அறியப்பட வேண்டிய வரலாறுகள்)
தொகுப்பு: முனைவர் க.ஜெயபாலன்.
டாக்டர் அம்பேத்கர் பௌத்தத்தைக்கையில் எடுத்ததென்பது மாமன்னர் அசோகர் பௌத்தத்தை கையில் எடுத்தது எந்த அளவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே அளவுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இதன் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்து சமூக மறுமலர்ச்சியை கொண்டு வர வேண்டியது பல தள மனிதர்களுக்கும் உரிய கடமையாகும். அவ்வகையில் பாபாசாகேப் அம்பேத்கர் தனது வாழ்நாளில் கொண்டாடிய புத்த பூர்ணிமை நிகழ்வுகள் மற்றும் பௌத்த பயணங்கள் குறித்த சில குறிப்புகளை இவண் காண்போம்.
முன்னோட்டம். (பீடிகை)
பாபாசாகேப் அம்பேத்கரின் பௌத்த ஏற்பு என்பது ஒரே நாளில் ஏற்பட்ட முடிவு அல்ல. இவ்வாறாகவே பாபாசாகேப் அம்பேத்கர் பண்டித ஜவஹர்லால் நேரு அண்ணல் காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்களுக்கெல்லாம் மூத்தவர்களாக தென்னிந்தியாவில் தோன்றிய பண்டித அயோத்திதாசர், மேலும் இவர்கள்(காந்தியடிகள், நேருஜி, அம்பேத்கர்) காலத்தில் வாழ்ந்த தந்தை பெரியார், பொதுவுடமை களத்தில் ஆழமாக நின்றாலும் பௌத்தத்தின் அடிப்படைகளை புரிந்து கொண்டிருந்த யாரை விடவும் காலத்தால் முந்திய தோழர் சிங்காரவேலர், மராட்டிய மண்ணிலேயே பௌத்த மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தம்மாநந்த கோசாம்பி இதைப் போலவே பண்டித நேரு, அண்ணல் காந்தியடிகள் உள்ளிட்ட தலைவர்களும் நவீன இந்தியாவில் கொண்டிருந்த கொள்கைகள் சிந்தனைகள் பௌத்தத்தின்பால் மாமன்னர் அசோகர் பால் கொண்டிருந்த பற்றுகள் என்பவை எல்லாம் சாதாரணமானவை அல்ல. இவை யாவும் பரந்த மனதோடு விரிவாக அலசி ஆராயப்பட வேண்டும். இப்படி அலசி ஆராயப்படுவதற்கு விடுதலை பெற்ற மனம் வேண்டும் என்பது அவசியமான ஒன்று.
அப்படிப்பட்ட பார்வை நமக்கு வந்தால் மட்டுமே சில உண்மைகளை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இவ்வகையில் சார்ல்ஸ் ஆலன் என்ற அறிஞர் தருகின்ற சில குறிப்புகளில் இருந்து நாம் உள்ளே நகரலாம்.
கதைகளுக்கு புராணங்களுக்கு தரப்படுகின்ற மரியாதை இந்திய நாட்டின் மாபெரும் வரலாற்று நாயகரான மாமன்னர் அசோகருக்கு ஏன் வழங்கப்படவில்லை? இது மிகவும் வியப்பான ஒன்று. இது இந்தியாவில் மட்டுமே நிகழக்கூடிய ஒன்று என்று கூறிவிட்டு பின்வரும் கருத்தை மிக ஆழமாக சார்ல்ஸ் ஆலன் கூறுகிறார்:
“முதன் முறையாக இந்தியாவை தனது ஒரே குடையின் கீழே கொண்டுவந்த மன்னன் அவவகையில் அவன் தான் உணமையான ‘இந்தியாவின் தந்தை, இந்தியாவில் எல்லோருக்கும் ஏற்கும்படியான கொள்கைகளைக் கொண்டு வந்த பெருமனிதன், காந்தியின் அஹிம்சை கொள்கைகளுக்கு முன்னோடியாக, மூத்து முதலில் நின்றவன. அறமே எவரையும் வெல்லும் ஆயுதம் என்ற பெரும கருத்தினைக் கண்டவன, ஆட்சியாளர்களின் மத்தியில யாரும. எவரும் ஒத்துக் கொள்ளும் தனிப்பெரும ஆட்சியாளன, ஆட்சிப் பணபுகளால் உயர்ந்த இடத்தில் அமாந்தவன். – ஆனால் இவனைப்பற்றி ஏதும் -தெரியாத மக்கள் கூட்டம்” ஆச்சரியமும, வேதனையும் தான் மிஞ்சுகிறது”
(பக்கம்: 421 பேரரசன் அசோகன், மறக்கப்பட்ட ஒரு மாமன்னனின் வரலாறு, சார்ல்ஸ் ஆலன், தமிழில் தருமி, எதிர் வெளியீடு முதல் பதிப்பு ஆகஸ்ட் 2014)
நவீன காலத்தில் கூட மிகப் பெரிய இருளில் இந்தியா இருக்கிறது என்று கூறிவிட்டு உண்மையில் சில தலைவர்கள் அந்த இருளை கிழித்து புதிய தடங்களை பதித்தார்கள் என்று பண்டித நேரு குறித்தும் காந்தியடிகள் குறித்தும் சில பதிவுகளை குறிப்பிட்டு விட்டு பல வரலாற்று அறிஞர்களின் செயல்களையும் குறிப்பிட்டு விட்டு டாக்டர் அம்பேத்கரைப் பற்றிப் பின்வருமாறு சார்ல்ஸ் ஆலன் வரைவது குறிப்பிடத்தக்க ஒன்று:
“சுதந்திரம் பெற்ற மதச்சார்பற்ற புதிய இந்தியாவில் அஷோக அசோகர் என்ற பெயர்கள் எளிதாகப் புழங்கின. 1960களில் பெரும் நட்சத்திர நிலையில் டில்லியில் “அசோகா ஹோட்டல்” உருவெடுத்தது. இந்தியா முழுவதும் பரவியிருந்த அரசின் இந்தத் தொடர் ஹோட்டல்களில் இவ்விடுதி முதன்மை பெற்ற தலைமை விடுதியாக இருந்தது. கிர்னார் மலை முன்பு ஒரு பெரிய கற்பாறையில் அசோகரது பதினான்கு மலைக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டன. புதுடில்லியில் ஜெய் சிங் வானிலை ஆய்வுக் கூடத்தில் இக்கல்வெட்டுகளின் மாதிர் பித்தளையில் செய்யப்பட்டு நிறுவப்பட்டது. அசோக் என்ற பெயரும் பையன்களுக்கான பெயர்ப் பட்டியலில் முக்கிய இடம் பெற்றது. இது நிச்சயமாக புத்த சமயத் தொடர்போடில்லாமல் பெயர்களின் பொருளினால் – அசோகன் சோகம் இல்லாவன் – அப்பெயர் பிரபலமானது,
இதற்கும் மேலாக இந்தியாவின் குடியுரிமைச் சட்டம் தலித் சாதியில் உதித்த நீதித்துறை அமைச்சரான டாக்டர் பீமாராவ் ராமஜி அம்பேத்கரால் எழுதப்பட்டு 26 நவம்பர் 1949 அன்று நிறைவேறியது. இச்சட்டம் அசோகரது சட்டம் போல் மதச் சுதந்திரம் அளித்தது, சாதி வைத்துப் பிரிக்கப்படுவதைத் தடை செய்தது
சரியான திக்கில் பயணத்தை ஆரம்பித்தாலும், சில மாற்றுச் கருத்துடையவர்களால் இப்பயணம் பல தடைகளுக்கு உள்ளானது மாற்றுக் கருத்துடைய இவர்கள் மிகவும் குறுகிய சிறுபான்மையாளர்கள். இவர்கள் உரத்த குரலில் “இந்துத்வா” என்ற குறுகிய கருத்தை உரக்கக் கத்தி நாட்டின் பயணத்தைத் தடுக்கின்றனர். இவர்களைப் பொறுத்தவரை ஒரு “நல்ல இந்தியன்” என்பவன் “ஒரு இந்து” சிறுபான்மையாக இருக்கும் இஸ்லாமியரைப் பெருமளவிலும், கிறித்துவர்கள், பார்ஸிகள் போன்றவர்களை சிறிய அளவிலும் பாதிக்கவே இக்கூச்சல் தாழ்த்தப்பட்ட, ஆனால் அரசியலுக்குள்ளாகும் தலித்துகளையும் பாதிக்கும் நடவடிக்கையே இது.
1956 டிசம்பர் மாதம் மரணமடைந்த அம்பேத்கர் தன் இறப்பிற்கு ஆறு வாரங்களுக்கு முன்பு மிகவும் மனம் உடைந்தவராக ஆயிரக்கணக்கான தலித்துகளோடு புத்தமதத்தில் சேர்ந்தார். சாதியினால் உள்ள உயர்வு தாழ்வு, சில சாதியினரைக் கீழாக பார்க்கும் நிலை ஏதும் மாறவேயில்லை என்ற பெரிய மனக்குறையே இதற்குரிய காரணம் மேலும் இன்றைய தலித் மக்கள், முன்பு
புத்த மதத்தில் இருந்தவர்கள் சமூகத்தால் விரட்டியடிக்கப்பட்டு சமூகத்தின் விளிமபு மனிதர்களானவர்கள் இன்று இவர்கள் இந்தியாவின் மக்கடதொகையில் காலபங்கினர் கடந்த இருபது ஆணடுகளில் தலித்துகள் ஓரளவு அரசியல் செல்வாக்கை வளர்த்து வருகிறார்கள் “
(பக்கங்கள்: 424- 425, மேற்படி நூல்)
இவ்வாறு புதிய இந்தியாவை எழுதுவதில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் எவ்வாறு மாமன்னர் அசோகர் ஆற்றிய பணிகளுக்கு நிகராக ஆற்று இருக்கிறார் என்பதை பல்வேறு குறிப்புகளின் வழியாக நூல்களின் வழியாக கட்டுரைகளின் வழியாக பல சான்றோர்கள் எழுதி உள்ளனர்.
இந்தியாவில் ஒட்டுமொத்த வரலாறு என்பதே வர்க்கங்களின் போராட்டம் உலக வரலாறு என்று மாமேதை காரல் மார்க்ஸ் சொல்வதற்கு ஏற்ப இங்கே சாதிகளின் சமயங்களின் போராட்டமே இந்திய வரலாறாக இன்று வரை இருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாக அமைகிறது என்பதை சார்ல்ஸ் ஆலன் கூறுகிறார்.
பௌத்தத்தை நோக்கிச் செல்லுதல்.
பௌத்தத்தை நோக்கி நகர்வது என்பது ஜனநாயகத்தை நோக்கி நகர்வது நவீனத்துவ வாழ்க்கையை நோக்கி நகர்வது என்பது ஆகும். இதைத்தான் டாக்டர் அம்பேத்கரின் வாழ்வும் நவீன கால சிந்தனை ஆலர்கலின் வாழ்க்கையும் கருத்துக்களும் காட்டுகின்றன. கால மாற்றத்திற்கு ஏற்ப கருத்துக்களை மாற்றிக் கொள்ளவும் வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவும் சிந்தனைகளை உயர்த்திக் கொள்ளவும் இடம் அளிக்கின்ற சமயமாக பௌத்தம் இருக்கின்ற காரணத்தினால் இது சாத்தியமாக உள்ளது.
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் வாழ்வியலின் உயர்ந்த சிந்தனைகளை எல்லாம் அரசியல் பொருளாதார தத்துவ சட்டவியல் நுட்பங்களை எல்லாம் கற்று உணர்ந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பழைய கால சமயம் ஒன்றை வெறுமனே தூக்கித் திரிந்தவர் அல்ல. அதை நுட்பமாக ஆராய்ந்து அதன் பல்வேறு கால மாற்றத்திற்கு ஒவ்வாத கருத்துக்களை தூசு தட்டி தூக்கி எறிந்து புதியதாக வடிவமைத்து கொடுத்தார் என்பதை அவரது நூல்களும் உரைகளும் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளும் தருகின்றன.
I.டாக்டர் அம்பேத்கர் கொண்டாடிய புத்த பூர்ணிமா விழாக்கள்.
I.1 புத்த பூர்ணிமா விழாவை இந்தியர்கள் ஏன் கொண்டாட வேண்டும்? டாக்டர் அம்பேத்கர் 17/05/1941 இல் எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி:
“பார்ப்பனர் அல்லாத மக்கள் இம்மாமனிதரை(புத்தரை) மறந்திருக்கக் கூடாது. ஏனெனில், மூட நம்பிக்கைகளிலும் மந்திரங்களின் பிடியிலும் கட்டுண்டு கிடந்த மக்களை புத்தர்தான் விடுதலை செய்து, அவர்களை மனிதநேயப் பாதைக்குக் கொண்டு வந்து அவர்களை மனிதர்களாகவும் மாற்ற முயன்றார். இவர் களுடைய நலன்களுக்காகத் தன்னுடைய அரச வாழ்க்கையை விட்டொழித்து. இம்மக்களின் சுயமரியாதைக்காக இந்த நாட்டைத் தன்னுடைய கொள்கைகளால் செழுமைப்படுத்திய புத்தரை இவர்கள் மறந்திருக்கக் கூடாது. பார்ப்பனர் அல்லாத மக்கள் இத்தகையதொரு மாமனிதரை மறந்தது மிகுந்த வ்ருத்தத்திற்குரிய செய்தியாகும். அவர்கள் புத்தரை தங்களின் நினைவில் உயிர்ப்புடன் வைத்திருந்திருக்க வேண்டும்.
புத்தர் பிறந்த நாள் விழாவை இந்திய மக்கள் கொண்டாட வேண்டும் என்று நாம் வலியுறுத்த இது மட்டுமே காரணம் என்று நாம் கூறவில்லை. நமது காரணம் மேற்கூறிய காரணங்களில் இருந்து வேறுபட்டது; மிகவும் வலுவானது. இந்துக்களில் உள்ள படித்த வகுப்பினர் இந்துப் பண்புகளை அடிப்படையாகக் கொண்ட இந்துக்களுக்கான அரசியல் ஜனநாயகத்தை நிறுவ விரும்புகின்றனர். இதற்காக அவர்கள் போராடி வருகிறார்கள். இத்தகைய அறிவுஜீவிகளின் மீது நாம் இரக்கம் கொள்கிறோம்.
இந்த நாட்டில் ஜனநாயகத்தை நிறுவ நினைப்பவர்கள் முட்டாள் களாகவோ, சூழ்ச்சி நிறைந்தவர்களாகவோ இருக்கலாம்.ஆனால் இத்தகைய பேதமையும் சூழ்ச்சியும் நீண்ட நாட்களுக்கு நீடித்திருக்க முடியாது. பார்ப்பனியமும் ஜனநாயகமும் எதிரெதிர் நிலைகளில் நிற்பவை என்பதை அனுபவங்களின் அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும். ஜனநாயகத்தை நிலைநாட்ட, சதுர்வர்ண தர்மத்தை அழித்தொழிக்க வேண்டிய தேவை இருக் கிறது. சதுர்வர்ண கிருமிகளை அழித்தொழிப்பதற்கு புத்த தம்மத்தைவிட ஆற்றல் வாய்ந்த மருந்து இல்லை. எனவே, அரசியலின் உயிர்நாடியை தூய்மைப்படுத்தி வலுப்படுத்த அனைத்து இந்துக்களும் புத்தர் பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். அது முக்கியமானதும் அவர்களுக்குப் பயனளிக்கக் கூடியதாகவும் உள்ளது.
அரசியல் ரீதியாக இந்தியா ஒரு நோயாளியைப் போல உள்ளது. நாம் இந்தியாவை நினைக்கும்போது, பெருத்த வயிறும், குச்சி குச்சியான கை கால்களும் வெளிறிப் போன முகமும் உள்ளடங்கிய கண்களும் கொண்ட எலும்புக் கூடான ஒரு மனிதனின் உருவத்தைத்தான் கற்பனை செய்யத் தோன்றுகிறது. ஜனநாயகத்தைச் செழித்தோங்கச் செய்யும் ஆற்றல் அவனிடம் இல்லை ஆனால், அதற்கான வேட்கை இருக்கிறது. இந்த வேட்கையைத் தணிக்க அதிகாரம் மிகவும் முக்கியம். இந்த அதிகாரத்தை மருந்தின்றி கைப்பற்ற முடியாது. ஆனால், மருந்தினால் என்ன பயன்? மருந்தை உட்கொள்ள வேண்டும் எனில், வயிற்றைத் தூய்மையாக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அனைத்து வகை மாசுபாடுகளும் அகற்றப்பட வேண்டும். இதைச் செய்யாதவரை மருந்தை மட்டும் உட்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை.
இந்துக்களின் வயிறு தூய்மையாக இல்லை. அவர்களுடைய வயிற்றில் நீண்ட நாட்களாக பார்ப்பனியக் கழிசடைகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன. இதைத் தூய்மைப்படுத்தும் மருத்துவரால்தான் இந்தியாவில் ஜனநாயகத்தை நிறுவ உதவி புரிய முடியும். இந்த மருத்துவர் சந்தேகத்திற்கிடமின்றி புத்தராகத்தான் இருக்க முடியும். இந்துக்களுடைய வாழ்வியலை ராமன் பிறந்த நாள், கிருஷ்ணன் பிறந்த நாள் மற்றும் காந்தி பிறந்த நாளைக் கொண்டாடுவதன் மூலம் தூய்மைப்படுத்திவிடமுடியாது. ராமன், கிருஷ்ணன், காந்தி ஆகிய மூவருமே பார்ப்பனியத்தை வழிபடுபவர்களே. ஜனநாயகத்தை நிலை நிறுத்த அவர்கள் ஒருபோதும் பயன்பட மாட்டார்கள். ஜனநாயகத்தை நிர்மாணிக்க, புத்தர் மட்டுமே பயன்படுவார். எனவே, புத்தரை நினைவு கூர்வது மிகவும் முக்கியமானது. அவரது மாமருந்தே இந்துக்களின் அரசியல், சமூக நீரோட்டத் தில் கலந்துள்ள மாசுபாடுகளைத் தூய்மையாக்கும். எனவே, மக்கள் ஜனநாயகத்தை நிறுவ, இந்த மாபெரும் அறிவுரையை நாம் முழங்க வேண்டும். புத்தம் சரணம் கச்சாமி! தம்மம் சரணம் கச்சாமி! சங்கம் சரணம் கச்சாமி!
(பக்கங்கள்: 128- 130, நான் ஓர் இந்துவாகச் சாக மாட்டேன், டாக்டர் அம்பேத்கர், தமிழில் தாயப்பன் அழகிரிசாமி, தலித் முரசு, முதல் பதிப்பு, அக்டோபர் 16, 2016)
I.2. டாக்டர் அம்பேத்கர் கொண்டாடிய புத்த பூர்ணிமா விழாக்கள்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் பர்மா உள்ளிட்ட நாடுகளிலும் என பல இடங்களிலும் புத்த பூர்ணிமா தினங்களில் டாக்டர் அம்பேத்கர் கலந்து கொண்டுள்ளார் . அவற்றில் சில செய்திகள் பின்வருமாறு:
*2/5/1950 பௌத்தம் குறித்து டாக்டர் அம்பேத்கர் முதல் தடவையாக பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
(பக்கம் 873, டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு தமிழில் க.முகிலன்)
இந்த நாளில் தான் டாக்டர் அம்பேத்கர் தன் துணைவியாருடன். பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டார். பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து அக்டோபர் மாதம் 14ஆம் தேதி 1956 ஆம் ஆண்டில் வெகுஜன மதமாற்றம் பெரிய அளவில் நடைபெற்றது. 1950 மே மாத இரண்டாம் நாள் அதாவது புத்த பூர்ணிமா தினத்திற்கு மறுநாள் நடந்த அந்த நிகழ்வைப் பற்றி பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் நூல் தொகுதியில் உள்ள செய்தி வருமாறு:
“டாக்டர் அம்பேத்கர் பேசும் பொழுது உடனிருந்த உயர் மட்ட புத்த பிக்கு “இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. புத்த மதம் இனி எழுச்சி பெற வேண்டும்” என்றார். இந்தியாவில் நிகழவிருக்கும் புத்தமத எழுச்சியும் அதன் அரசியல் முக்கியத்துவம் பற்றியும் குறிப்பிட்டு இந்தியா தனது சுதந்திரத்தையும் ஆன்மிக வலிமையையும் காத்துக் கொள்ள அதற்கு புத்த மதம் தேவை என்று அறிவித்தார்.
சுத்தமான இந்தியில் சுமார் அரை மணி நேரம் பேசிய டாக்டர் அம்பேத்கர், புத்த மதத்தின் புத்தெழுச்சி மீண்டும் இந்தியாவில் தொடங்கிவிட்டது என்று அழுத்தம் திருத்தமாகக் கூறினார். இதற்கு ஆதரவாகப் பேசிய அவர் இந்திய தேசியக் கொடியில் அசோகச் சக்கரத்தைப் பொறிப்பதற்காக இந்திய குடியரசுத் தலைவர் புத்த மதத்தினரை அணுகியதை ஒரு உதாரணமாகக் குறிப்பிட்டார். பிராமணியத்திலிருந்து அவர்களால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. மூன்று சிங்கங்களை தனது அரசுச் சின்னத்தில் பொறித்துக் கொள்ளவும் இந்திய அரசுக்கு அனுமதி வழங்கியது புத்தமதம். இந்தியக் குடியரசின் முதல் ஜனாதிபதி பிரமாணம் எடுத்துக் கொள்கிற அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க சம்பவத்தின் போது, எண்ணிறந்த இந்தியக் கடவுளர்களின் சிலை எதற்கும் முன்னால் இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. மாறாக அவ்வேளையில் ஒரு புத்தர் சிலையே அங்கு நிறுவப்பட்டிருந்தது.
ராமனோ, கிருஷ்ணனோ அல்லது வேறு எந்தக் கடவுளோ புத்தருக்கு இணையாகவில்லை. இவரை விடப் பெரிய துறவியோ தலைவரோ இனிப் பிறக்கப் போவதில்லை என்றார் அவர்.
ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றிலிருந்து பல நிகழ்ச்சி களை எடுத்துக்காட்டி, ராமனும், கிருஷ்ணனும் நடந்து கொண்ட விதத்திலிருந்து அவர்கள் பெருமைக்குரியவர்களா என்று டாக்டர் அம்பேத்கர் வினவினார். இரண்டு கோட்பாடுகளை இந்துமதம் பற்றி நிற்கிறது. உண்மை ஒன்றே என்பதும், தன்மீது தாம் வைக்கும் பாசம் ஒரு மதவெறி என்றும் சொல்லி சச்சரவுகளைத் தவிர்த்து, தமது ஆதரவாளர்கள் வெளியேறிவிடாமல் பாதுகாக்கிறது என்றார் அவர்.
அரச மகுடத்தைத் தவிர எல்லாஉரிமைகளையும் மிகவும் பாதுகாப்பாக தாமே வைத்துக் கொண்டுள்ள பிராமணர்களை அவர் சாடினார். இந்து சாஸ்திரத்தின் படி மகுடம் தரிப்பவர் நரகத்திற்குப் போவார். மதத்தால் நிரந்தரமாகக் கொடுமைகளுக்கு உள்ளாகுமாறு விதிக்கப்பட்ட கோடிக் கணக்கான மக்கள் எப்படி அந்த மதத்தை நேசிக்க முடியும்?
அசையும், அசையாச் சொத்துக்கள் தந்தையிடமிருந்து மகனுக்குச் செல்வது போல மதமும் தந்தையிடமிருந்து மகன் பெற்றுக் கொள்ளும் நிலை மாற வேண்டிய காலம் வந்து விட்டது. ஒவ்வொருவரும் மதத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு பகுத்தறிவு பூர்வமாக அதனை சோதித்துப் பார்க்க வேண்டும்.
சோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் சொல்வது போல மதமே தேவையில்லை என்று தான் நம்பவில்லை என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னார். மனிதனுக்கு மதம் கண்டிப்பாகத் தேவை என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். நீதி, தர்ம சாஸ்திரங்களைப் போல மனித குலத்தை எந்த அரசாங்கமும் பாதுகாக்கவோ, ஒழுங்குப்படுத்தவோ இயலாது என்று கூறினார் டாக்டர் அம்பேத்கர்.
கூட்டத்துக்குத் தலைமை தாங்கிய பர்மாவின் தூதுவர் சர்மௌங் ஜீயே துன்பங்களாலும் தொல்லைகளாலும் அவதிப்படும் உலகம் புத்தமதத்தில்தான் அமைதியும் ஆறுதலும் அடையும் என்று கூறினார். மகாபோதி சமூகத்தின் ஒரு அதிகாரி, “டாக்டர் அம்பேத்கர் தமது அணியில் சேர்ந்துள்ளது” கேட்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.
(பக்கங்கள்:507-508,டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி 37 தமிழ்)
**”1951 மே மாதம் புதுதில்லியில் நடைபெற்ற புத்தர் பிறந்தநாள் விழாவின்போது அம்பேத்கர் இந்து மதத்தின்மீது மீண்டும் ஒரு வெடிகுண்டை வீசினார். இந்துக்களிடம் காணப்படும் வன்முறை, ஒழுக்கக்கேடு மற்றும் அரசாங்க ஊழியர்களிடம் உள்ள இலஞ்ச ஊழல் போன்ற இழிவுகளுக்குக் காரணம் இந்து மதத்தின் சீரழிவுகளே என்று அம்பேத்கர் அவருடைய உரையில் கூறினார் மக்கள் பௌத்த மதத்தைத் தழுவினால்தான் இந்தியாவிற்கு உண்மையான விடுதலை கிடைக்கும் என்றார். அக்கூட்டத் திற்குப் பிரான்ஸ் நாட்டின் அரசுத் தூதர் தலைமை தாங்கினார் கிட்டத்தட்ட எல்லா நாடுகளின் அரசுத் தூதர்களும் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்”
(பக்கம்: 676, டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, தனஞ்ஜெய்கீர், தமிழில் க.முகிலன், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி, மூன்றாம் பதிப்பு 2022)
***1954 ஆம் ஆண்டு மே மாதம் புத்தர் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக டாக்டர் அம்பேத்கர் ரங்கூன் சென்றார்.
****இந்தியாவுக்குத் திரும்பியதும் அம்பேத்கர், பூனாவுக்கு அருகில் தெரு சாலையில், புதியதாகக் கட்டப்பட்ட பௌத்த மடாலயத்தில் புத்தர் சிலையைத் திறந்து வைத்தார். அந்தப் புத்தரின் சிலையை அம்பேத்கர் இரங்கூனிலிருந்து கொண்டு வந்திருந்தார் அவ்விழாவில் அம்பேத்கர் பேசியபோது, இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சியுற்ற பிறகு ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் கழித்துப் புத்த பகவானின் சிலையை நிறுவிய பெருமை தீண்டப்படாத வகுப்பு மக்களையே சாரும். இது மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சி வரலாற்றில் பொறிக்கப்படும் என்பதில் அய்யமேயில்லை. பௌத்தக் கொள்கைகளை இந்தியாவில் பரப்பு வதற்காக நான் இனி என் வாழ்நாளை அர்ப்பணித்துவிடப்போகிறேன்’ என்று அறிவித்தார். அங்கே ஆண்களும், பெண்களுமாகக் குழுமியிருந்த 20,000 மக்களின் முன்னிலையில், பௌத்தத் தத்துவங்களைச் சாதாரணமான மக்களும் புரிந்து கொள்ளக்கூடிய தன்மையில் எளிய மொழிநடையில் ஒரு நூலை எழுதிக் கொண்டிருக்கிறேன் இதை எழுதி முடித்திட ஓராண்டுக் காலமாகும். இந்நூலை எழுதி முடித்தபிறகு நான் பௌத்த மதத்தில் சேருவேன் என்று அறிவித்தார்.
(பக்கம்:757, மேற்படி நூல்)
பாபா ஷாகிப் அம்பேத்கர் அவர்கள் 1954 வது ஆண்டில் இவ்வாறு ரங்கோனில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்தர் சிலையை நிறுவுவதற்கு முன்னதாகவே சென்னை பெரம்பூரிலும் வட ஆற்காடு மாவட்டம்திருப்பத்தூர் பகுதியிலும் கோலார் தங்க வயலிலும் பண்டித அயோத்திதாசர் திருப்பத்தூர் பெரியசாமிப் புலவர் இ.நா. அய்யாக்கண்ணு புலவர் உள்ளிட்ட பல்வேறு தெனிந்திய பௌத்த மறுமலர்ச்சி முன்னோடிகளால் தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பௌத்தம் ஏற்கனவே இங்கு ஊன்றப்பட்டது குறிப்பாக சிலைகள் கொண்டுவரப்பட்டு இங்கே நிறுவப்பட்டு ஆலயங்கள் நடைபெற்றன என்பதும் இங்கு ஒப்பிட்டு காண வேண்டிய முன்னோடி செய்திகளாகும். டாக்டர் அம்பேத்கர் அவர்களே 50 60 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவில் இவ்வாறு பௌத்த நிலை இருக்கிறது என்பதை பர்மா பயணத்தின் போது தென்னிந்தியாவில் புத்த மத நிலை என்று அவர் குறிப்பிட்டு இருப்பது கவனத்திற்குரியது.
*****1956ஆம் ஆண்டு மே மாதத் தொடக்கத்தில் அம்பேத்கர் பம்பாயக்கு வந்தார் மே 24ஆம் நாள் நரே பூங்காவில் புத்தர் பிறந்த நாள் விழாவில் அம்பேத்கர் உரையாற்றியபோது, 1956 அக்டோபர் மாதத்தில் அவர் பௌத்தச் சமயத்தில் சேரப்போவதாக அறிவித்தார் பௌத்தச் சமயம் போதித்துள்ள அகிம்சைத் தத்துவம் குறித்து வீர சாவர்க்கர் எழுதிய தொடர் கட்டுரைகளைப்பற்றி அம்பேத்கர் அவருடைய உரையில் மிகவும் கடுமையாகத் தாக்கிப் பேசினார் ‘சாவர்க்கர் பௌத்தத்தின் அகிம்சை குறித்து என்ன சொல்லவிரும்புகிறார் என்பதுபற்றி எனக்குத் தெளிவாகத் தெரியுமானால் அப்போது அவருக்கு நான் பதிலளிப்பேன் என்று கடுஞ்சீற்றத்துடன் அம்பேத்கர் கூறினார் சாவர்க்கரின் மற்ற கட்டுரைகளைப் போலவே அவர் பௌத்தத்தின் அகிம்சை குறித்து எழுதிய கட்டுரைகளும் அறிவார்ந்தவைகளாக ஆணித்தரமானவைகளாக சிந்தனையைத் தூண்டக்கூடியவைகளாக இருந்தன சுயசிந்தனை மிக்க ஒரு தலைவர் வெளியிடும் கருத்துகளாகவே அவை இருந்தன எனினும் அம்பேத்கர் அக்கூட்டத்தில் பேசுவதற்காகப் புறப்பட்ட போதும், கூட்ட மேடையிலும் அவர் அருகில் இருந்த இச்சகம் பேசுவோரும் துதிபாடுவோரும் சாவர்க்கருக்குப் பதில்கூறுமாறு கடுப்பூட்டி, அம்பேத்கரைத் தூண்டி விட்டனர் இந்துத் தலைவர்களுக்கும் பௌத்தத் தலைவர்களுக்கும் இடையே மீண்டும் கடுமையான வாதப்போர் தொடங்கும் போல் தெரிந்தது. தீண்டப்படாத வகுப்பு மக்களின் முன்னேற்றத்திற்காக உழைப்பவர்களுக்குமட்டுமே அவர்களை விமர்சனம் செய்வதற்கு உரிமை உண்டு என்னைக் குறைகூறுவோர் என்னைப்பற்றி எதுவும் சொல்லாமல் விட்டுவிட வேண்டும். பள்ளத்தில் விழுவதாயினும் அவ்வாறு விழுவதற்கு எனக்கும் என் வகுப்பு மக்களுக்கும் உரிமை இருக்கவேண்டும். என் வகுப்பு மக்கள் என்னால் வழிநடத்தப்படும் ஆடுகள் போன்றவர்களே. நான் அவர்களுடைய மேய்ப்பன் ஆவேன் என்னைப் போன்ற சிறந்த தத்துவ வழிகாட்டி அவர்களுக்கு வேறுயாருமில்லை. எனவே அவர்கள் என்னைப் பின்பற்றி வரவேண்டும்; அவர்கள் மெல்ல மெல்ல அறிவு விளக்கம் பெறுவார்கள்’ என்று புத்தர் பிறந்த நாள் விழாக் கூட்டத்தில் உரைத்தார்
பௌத்தம் இந்துச் சமயத்திலிருந்து வேறுபட்டதாகும் என்பதை அக்கூட்டத்தில் அம்பேதகர் விளக்கினார் “இந்து மதம் கடவுளை நம்புகிறது; பௌத்தம் கடவுளை நம்புவதில்லை. இந்து மதம் ஆத்மாவை நம்புகிறது; பௌத்தத் தத்துவத்தின்படி ஆத்மா என்பது இல்லை. இந்து மதம் நால்வருண அமைப்பையும் சாதி முறையையும் நம்புகிறது; பௌத்தத்திலோ சாதி முறைக்கும் நால்வருணத்திற்கும் இடமேயில்லை என்று விளக்கிக் கூறினார் அக்கூட்டத்தில் புத்தரும் அவருடைய தம்மமும்’ என்ற நூல் வெளிவர இருப்பதுபற்றித் தம் வகுப்பு மக்களுக்கு அறிவித்தார் பௌத்த அமைப்பில் உள்ள ஒட்டைகளை எல்லாம் நான் அடைத்துவிட்டேன்; இப்போது அதை நான் வலிமைப்படுத்த உள்ளேன் அதன்பின் இந்தியாவில் பௌத்தத்துக்கு உள்ள ஏற்றம் என்றும் குறையாமலிருக்கும். கம்யூனிஸ்டுகள் பௌத்தத்தைக் கற்கவேண்டும் அப்போதுதான் மனித வாழ்வின் துன்பங்களை அகற்றுவது எவ்வாறு என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்’ என்று மேலும் எடுத்துரைத்தார்
அக்கூட்டத்தில் அம்பேத்கர் பேசியபோது, எகிப்திலிருந்து தன்னுடைய மக்களை விடுவித்துச் சுதந்திர பூமியான பாலஸ்தீனத்திற்கு வழிநடத்திச் சென்ற மோசசுடன் அம்பேத்கர் தன்னை ஒப்பிட்டுக் கூறினார். ‘ஒரு மதத்தின் வீழ்ச்சிக்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன அழிவிலாத் தத்துவங்கள் அம்மதத்தில் இல்லாமை; பலதுறைகளிலும் அறிவு சான்ற வென்றெடுக்கும் நாவன்மை படைத்தவர்கள் இல்லாமை; எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தத்துவங்கள் சொல்லப்படாமை முதலானவையே அம்மூன்று காரணங்களாகும். என்று அவர் கூறினார். புத்தருக்கு மிகச் சிறந்ததோர் கோயிலைக் கட்டப்போவதாகவும் அறிவித்தார். பம்பாயில் அம்பேத்கர் உரையாற்றிய கடைசிக்கூட்டம் அதுவே யாகும்”.
(பக்கங்கள்: 773 -774, மேற்படி நூல்)
II. பௌத்த வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு பாபாசாகேப் அம்பேத்கரின் பயணங்கள்.
பின்னுரை.
பாபாசாகேப்அம்பேத்கரின் பௌத்தம் ஏற்பு என்பது கடந்த 75 ஆண்டுகளாக மிகப்பெரிய விவாதப் பொருளாகவே இந்திய துணைக்கண்டத்தில் உள்ளது என்றால் மிகை இல்லை. சமயம் அந்த அளவுக்கு அகவயமாகவும் புறவயமாகவும் எந்த அளவுக்குவிருப்புடைய பொருளோ அந்த அளவுக்கு வெறுப்புடையதாகவும் இந்திய மனங்களால் நீண்ட நெடுங்காலமாக பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது. சமயம் எங்கு வெறுமனே சடங்காக ஒரு கடவுள் வழிபாடாக மட்டுமல்லாமல் அது சமுதாயத்தில் அனைத்து தளங்களிலும் ஊடுருவி பறந்து பாய்ந்து வருகின்ற நீரோட்டத்தை போல அனைத்து தளங்களிலும் சமயம் இங்கே ஊடுருவி இருக்கிறது. அதனால்தான் இங்கே சமுதாயத்தில் நிலவும் அத்தனை ஊழல்களுக்கும் கேடுகளுக்கும் சமயம் காரணமாக விளங்குகிறது என்று”சாமி லஞ்சமே சதா லஞ்சம் ஆக முடிந்தது” என்று பண்டித அயோத்திதாசர் கூறுவதில் இருந்து பல அறிஞர்களும் விரிவாக பேசி உள்ளனர். சூத்திரர்க்கு ஒரு நீதி தெண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறோர் நீதி சாத்திரம் சொல்லிடு மாயின் அது சாத்திரம் அல்ல சதி எனக் கண்டோம் என்றும் மகாகவி பாரதியார் எழுதுவதை அனைவரும் அறிவோம். இவ்வகையில் சமயம் இந்திய துணைக்கண்டத்தில் மாபெரும் சக்தி மிக்க ஒன்றாக உள்ளது அதனால் தான் சாதி ஒழிப்பு நூலில் எல்லாவிதமான சமுதாய அரசியல் மேம்பாடுகளுக்கும் முன்னதாக சமய மறுமலர்ச்சி நடைபெறுவது இந்திய துணைக்கண்டத்தில் உலக அளவில் ஒரு மிகப்பெரிய முற்படு தேவையாக இருக்கிறது என்று பாபாசாகேப்அம்பேத்கர் அவர்கள் பேசுகிறார். சமுதாயத்தை அரசியலை சீர் செய்ய வந்த தந்தை பெரியார் போன்றவர்கள் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் போன்றவர்களும் சமயம் குறித்து ஆழமாக சிந்தித்து இருப்பது சமயத்தின் தாக்கம் என்பது மிகப்பெரிய அளவில் இந்திய துணைக்கண்டத்தில் செலுத்துகிறது என்ற காரணத்தினால்தான்.
பகவன் புத்தரும் பாபாசாகேப் அம்பேத்கரும் எந்த அளவுக்கு இந்திய சமுதாயத்தில் சமூக மறுமலர்ச்சியை சமயத்தின் துணை கொண்டு செய்ய முயன்றார்கள் என்ற கருத்தை மிக அழகாக பேராசிரியர் பெ. தங்கராசு அவர்கள் தமது டாக்டர் அம்பேத்கரின் மதமாற்றம் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்:
“புத்தநெறியை அம்பேத்கார் தேர்ந்தெடுத்தது இயற்கையான உணர்வுவழிச் செயலேயாகும். புத்தருக்கும் அம்பேத்காருக்கும் பலவகையில் ஒற்றுமையுண்டு. அன்பை யும் சமத்துவத்தையும் வளர்க்கவே தர்ம நெறிமுறைகளை உபதேசித்தவர் புத்தர்; அம்பேத்காரும் சமத்துவ உரிமைகளுக்காகவே கடைசிவரை போராடியவர், புத்தரை யும் புத்த நெறியையும் பின் ற்றியவர்கள் பெரும்பாலும் சமூகக் கொடுமைகளிற் சிக்கி அல்லலுற்றுக் கிடந்த மக்கள் அம்பேத்கார் அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்திலேயே உருவான ஒரு பெரும் புரட்சி வீரர் என்பதோடு, தம் போல ஒடுக்கப்பட்டுக் கிடந்த கோடானுகோடி மக்களின் அடிமைச் சிறைக் கம்பிகளை ஒடிப்பதிலேயே தன் காலம் முழுவதையும் கழித்தவர் புத்த சங்கத்தில் பெரும்பாலும் சூத்திரர்களே பிக்குகளாக இருந்து தர்மநெறிப் பிரச் சாரம் செய்தார்கள். அம்பேத்காரின் இயக்கத்திற்குத் துணை நின்றவர்களும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்த்ததுர்களே! புத்தரை இந்து மதத்தை உடைக்கும் ஒரு சக்தியாக அக்காலத்தில் கருதினார்கள்; அம்பேத்காரையும் இதுபோலவே கருதினார்கள். புத்தரின் புரட்சி இயக் கத்தைத் தடுத்து நிறுத்த முடியாமல் வெகுண்ட பார்ப்பனர் கள், அவரது இயக்கத்தைச் சார்ந்தவர்களை ‘அனாச்சாரன் யர்கள்'(தீண்டத்தகாதவர்கள்) என்று கேவலமாய்ப் பேசி ஒதுக்கினார்கள்; அம்பேத்காரது இயக்கத்தையும் தடுத்து நிறுத்த முடியாதுபோன காந்தியும், காந்தி பக்தர்களும், காங்கிரசும், இந்துமத கர்த்தாக்களும் அவரை ‘இந்து மதத்தின் சவால்’ ‘தேசீயத்திற்கு விரோதி’ என்றெல்லாம் கூறி ஒதுக்கினார்கள். புத்தர் உருவ வழிபாடு பிரார்த்தனை தலயாத்திரை, சடங்கு, ஆச்சாரம், உயிர்ப்பலி, வேள்வி, படையில் ஆகியவற்றில் நம்பிக்கை வைத்ததில்லை, இவை களை வன்மையாகக் கண்டித்தார்; அம்பேத்காரும் இவை களை நம்பாததோடு, இவைகளைச் செய்து மக்களை ஏமாற்றி வந்த காந்தியையும் அவரது கூட்டத்தையும் இந்து மத வேடதாரிகளையும் வன்மையாய்க் கண்டித்து அவர்களின் புரட்டை வெளியாக்கினார். பழங்காலத்தில் சமூகக் கொடுமைகளிற் சிக்கிக் கிடந்த மக்கள் புத்தரை ஆதரித்து அவரது நெறிமுறைகளை ஏற்று நடந்தார்கள். அம்பேத்காரையும் சமூகக் கொடுமைகளிற் சிக்கிக் கிடந்த தீண்டத்தகாத-தாழ்த்தப்பட்ட- ஒடுக்கப்பட்ட மக்களே ஆதரித்தார்கள்.”
(பக்கங்கள்: 26- 27, டாக்டர் அம்பேத்கரின் மதமாற்றம் பெ. தங்கராஜ்)
இவ்வாறு இந்திய சமுதாயத்தில் மக்களை விடுதலை செய்யும் நோக்கத்தோடு ஒரே விதமான உணர்வுகளினால் பேரறிஞர் அம்பேத்கரும் பகவன் புத்தரும் செயல்பட்டார்கள் என்று வரலாற்று பேராசிரியர் தங்கராஜ் அவர்கள் கருத்துரைத்திருப்பது ஏதோ உணர்ச்சி வசப்பட்ட மொழி அல்ல அவை ஆழ்ந்து உரைக்கப்பட்ட கருத்துக்களாகும்.
இதே வகையில் டாக்டர் அம்பேத்கரின் பௌத்த மதமாற்றம் குறித்து தந்தை பெரியார், பேராசிரியர் என். சிவராஜ்,அறிஞர் அண்ணா உள்ளிட்ட அறிஞர்கள் மிக விரிவாக தமிழகத்திலிருந்து பாராட்டி எழுதி உள்ளனர். வட இந்தியாவில் இருந்து ராகுல சாங்கிருத்தியாயன்,,பதானந்த் கௌசல்யாயன் ஒரு லிட்டர் பல்வேறு அறிஞர்கள் மிக விரிவாக பாராட்டுறைகளை வழங்கி உள்ளனர் இன்னும் உலக அளவில் இருந்து பர்பல் அறிஞர்கள் மிக விரிவாக டாக்டர் அம்பேத்கரின் இந்திய சமுதாய புனரமைப்பு பணிகளை நன்கு புரிந்து பாராட்டி உள்ளனர்.
இந்திய சமுதாயம் மீண்டும் மீண்டும் சாதிக்க கட்டமைப்புகளிலும் சமுதாய சுரண்டல்களிலும் அரசியல் ஒடுக்கு முறைகளிலும் மீண்டும் மீண்டும் சிக்கிக் கொள்வதற்கான அடிப்படை காரணம் அதனுடைய சமய வாழ்வியல் முறை மீண்டும் மீண்டும் பழமை வாதத்திலும் மக்களை பிரிப்பதிலும் உள்ளது தான் என்பதை உணர்ந்து மிகச்சரியாக டாக்டர் அம்பேத்கர் பௌத்த மத மாற்றத்தை முன்னெடுத்தார் இந்த கூறுகள் எல்லாம் மிக நன்கு புரிந்து மீண்டும் இந்திய மண்ணிலே டாக்டர் அம்பேத்கரின் சமயக் கண்ணோட்டங்கள் ஆழமாகப் பார்க்கப்பட்டு வருகின்றன.
ஏறத்தாழ அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை அளவுக்கு இந்தியாவில் உள்ள மக்கள் திரளாகிய பூர்வ குடிகள் அல்லது பழங்குடிகள் அல்லது தலித் மக்கள் பூர்வீக பௌத்தர்கள் என்ற மக்கள் சமயமற்று மிகவும் கீழாநெல்லியில் இன்றைக்கும் வாழ வைக்கப்பட்டுள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை என்பதை ஒப்புக்கொள்ளும் போது உண்மையில் அவர்களின் விடுதலைக்காக பணியாற்றுவது உண்மை என்று ஏற்கும் பொழுது இவர்களைப் போலவே தான் ஏறத்தாழ 50 சதம் உள்ள பின்தங்கிய மிகப் பின்தங்கிய மக்களும் இந்திய சமூகத்தில் உள்ளனர் என்ற உண்மையையும் ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த உண்மைகளை மறைத்து பொய்யாக நாடாண்ட பரம்பரை மற்றும் அப்படி இப்படி என்று போலியான பொய் கதைகளில் இந்திய வனங்கள் மூழ்கி விடாமல் உண்மையை உணர்ந்து வளர வேண்டும் என்பதை முன்னெடுப்பார்கள் என்றார் அதற்கு டாக்டர் அம்பேத்கரின் சமயக் கண்ணோட்டங்கள் மிகுந்த பயன் தந்து நல்வழி காட்டும் என்றால் மிகை இல்லை.
இந்தச் சமயக் கண்ணோட்டங்கள் நவீன ஜனநாயக நவீன அறிவியல் உலக கண்ணோட்டங்களோடு இணைந்து வருபவை என்பது இன்னொரு கூடுதலான அனுகூலமான போக்காகும்.
துணை நூல் பட்டியல்
1. பேரரசன் அசோகன், மறைக்கப்பட்ட மாமன்னனின் வரலாறு, சார்ல்ஸ் ஆலன், தமிழில் தருமி, எதிர் வெளியீடு.2014
2. நான் இந்துவாக சாக மாட்டேன், டாக்டர் அம்பேத்கரின் உரைகள், தமிழில் தாயப்பன் அழகிரிசாமி, தலித் முரசு, 2014
3. பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எடுத்தும் தொகுதி 37 தமிழ். ஆகஸ்ட் 2005
4. டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு தனஞ்செய்கீர்,தமிழில் க. முகிலன், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி வெளியீடு, மூன்றாம் பதிப்பு 2022.
5. டாக்டர் அம்பேத்கரின் தம்மப் புரட்சி- சங்கரட்சிதா. திரி ரத்ன கிரந்தமாலா, நாக்பூர் வெளியீடு மற்றும் எழுத்தாளர் யாக்கன் மொழிபெயர்ப்புகள்.
6. டாக்டர் அம்பேத்கரின் மதமாற்றம்
பேராசிரியர் பெ. தங்கராசு, பீட்டர்ஸ் ரோடு காலனி, ராயப்பேட்டை, சென்னை,மே 1979
7. பாபாசாகேப் அம்பேத்கர் காட்டும் பௌத்தம், முனைவர் க. ஜெயபாலன், போதி சத்துவர் அம்பேத்கர் பௌத்த சங்கம், சென்னை, 2007.
8. பாபாசாகேப் அம்பேத்கரின் பௌத்த ஆக்கங்கள்
தொகுப்பு முனைவர் க. ஜெயபாலன் முனைவர் பெ. விஜயகுமார்.
9. அம்பேத்கரும் பௌத்தமும், தொகுப்பு பேராசிரியர் எம் தங்கராஜ், பாவை பப்ளிகேஷன்ஸ்.
10. இந்தியாவில் பௌத்தம் டாக்டர் அம்பேத்கரின் கண்ணோட்டம் அதன் தோற்றமும் எழுச்சியும் வீழ்ச்சியும் டிசி அஹிர் நூல் மொழிபெயர்ப்பு, தமிழில் எரிமலை ரத்தினம்,
11. டாக்டர் அம்பேத்கரின் புத்தக்காதலும் புத்தகக் காதலும், கி வீரமணி
12. டாக்டர் அம்பேத்கரின் பௌத்தம் குறித்து டி.சி. அஹிர் எழுதிய ஆங்கில நூல்கள்.
13. பகவன் தாஸ், வசந்த் மூன், நானச்சந்த் இரட்டு உள்ளிட்டோர் எழுதிய நூல்கள்.
