உலக கவி ரவீந்திரநாத் தாகூர், விஞ்ஞானிகள் சர் ஜே. சி. போஸ், பி சி ரே போன்ற புகழ்பெற்ற மேதைகளின் வரிசையில் வைத்து எண்ணக்கூடிய பெரியார் பேராசிரியர் பாகாலா லட்சுமி நரசு அவர்கள் 1860ஆம் ஆண்டில் பிறந்தார். அவர் பிறந்த நூறாவது ஆண்டு நெருங்கி வருகிறது. அவர் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் திருச்சியிலும், பெரும்பாலும் சென்னை கல்லூரிகளிலும் விஞ்ஞான ஆசிரியாராக பணியாற்றியுள்ளார். பழைய மாநிலத்தில் கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்றவர்களில் 50 சதவிகிதமாவது அவர் மாணாக்கராயிருந்திருப்பர் என்பதில் ஐயமில்லை. அக்காலத்திலும், அவர் 1934ஆண்டில் இறக்கும் வரையிலும் சென்னையில் அவரைத் தெரியாத பட்டதாரியோ, அதிகாரியோ இருந்தார் என்றால், அவர் அறிவு உலகத்தில் வாழவில்லையென்று தான் கருதவேண்டும். பேராசிரியர் பரிநிர்வாணமடைந்து 24 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆயினும், தென்னாடு அப்பெரியாருக்கு யாதொரு ஞாபகச் சின்னமும் ஏற்படுத்தாதது ஒரு துர அதிஷ்டமே. ஆனால் பௌத்தம் அவரை மறக்காது.
பி. இலக்ஷ்மி நரசு ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். தாய்மொழி தெலுங்கு. கம்பீரத்தோற்றம் ஓங்கி வளர்ந்தவர், உயரத்திற்கேற்ற புஷ்டி. அக்கால வழக்கம் போல, முழங்காலுக்குக் கீழ் தொங்கும் அங்கி, தக்கையினால் முடைந்த தலைப்பாகை அணிந்திருப்பார். எந்தக் கூட்டத்திலும் அவரை எளிதில் கண்டுகொள்ளலாம். டாக்டர் அம்பேத்காரையும், புரபஸர் நரசு அவர்களின் நிறமும்தான் வித்தியாசம் இருவரும் அறிவு உலக பிரபுக்கள், தாதாக்கள் (intellectual aristocrats).
மேனாடுகளில் 19ம் நூற்றாண்டில் புகழுடன் வாழ்ந்த பேராசிரியர் ஹக்ஸ்லி, டின்டல் ஹெக்கல் போன்ற மேதைகளுடன் தான் புரபஸர் நரசு அவர்களை ஒப்பிடலாம். சென்னையில் அவருக்கு அறிவுத் துறையில் சமமானவர்கள் கிறிஸ்துவக் கல்லூரியில் அவருக்கு போதித்த சில போராசிரியரும், அவருடன் படித்த ரங்கநாத முதலியார், சர்.டீ. சங்கர நாயர், டி. எம் நாயர், போன்ற மிகச்சிலரே.
அக்காலத்துப் படிப்பு முறை, ஒருவர் எல்லா பாடங்களிலும் தேர்ச்சி பெறவேண்டும். இதற்கேற்ப, நரசு அவர்கள் இரசாயனம், பௌதிகம் என்ற பாடங்களில் அதிக தேர்ச்சி பெற்றிருந்தாலும், மற்ற விஞ்ஞான பாடங்களிலும் தாய் மொழி ஆங்கில இலக்கியம் முதலிய பாடங்களிலும் சமமான தேர்ச்சி பெற்றிருந்தார். இத்துடன் அவருக்கு சமஸ்கிருதம், பாலி, பிரஞ்சு, ஜெர்மன் முதலிய மொழிகளில் நல்ல பயிற்சியிருந்தது. எனவே அவர் கல்வியறிவில் மேனாட்டு அறிஞர்களைப்போல, அன்று வரையில் வெறியான விஞ்ஞான கருத்துகளை விரல் நுனியில் வைத்துக்கொண்டு யாவரும் வியக்கத்தக்க வண்ணம் மாணவர்களுக்குப் போதித்துவந்தார்.
அக்காலத்தில் கல்லூரிகளில் பாடங்களை போதிக்கும் பேராசியர்கள் எல்லாம் மேனாட்டவர்கள். இந்தியர்கள் துணை ஆசிரியராகவே நியமிக்கப்பட்டார்கள். இந்த மேனாட்டு. பேராசிரியர்கள் பெரும்பாலும் கர்விகள். இந்தியர்கள் முக்கியமான விஞ்ஞான அறிவில் இவர்களைவிட தாழ்ந்தவர் என்ற மனோபாவமுடையவர்கள். ஒரு சமயம் சென்னை அரசாங்க கல்லூரியில் பௌதிக பேராசிரியராகவிருந்த D.வில்ஸன் என்பவருக்கு அச்சமயம் கிறிஸ்துவ கல்லூரியில் பௌதீக துணை ஆசிரியராக இருந்த நரசுவுக்கும் சக்தி சம்மந்தமான சாஸ்திரத்தில் ஒரு பிரச்சனை (Dynamics) விவாதத்திற்கு வந்தது. அப்போது நரசு அவர்களைப் பார்த்து “எனக்கா போதிக்கப் பார்க்கிறாய்” என்று அகம்பாவத்துடன் D.வில்ஸன் கேட்டாராம். அந்த பிரச்சனையை ஒரு நிமிஷத்தில் மறுபடியும் கவனித்தப் பிறகு ஆசிரியர் நரசு “நான் தங்களுக்கு போதிக்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன்” என்று பளிச்சென்று பதில் கொடுத்தாராம். அதைக் கேட்டதும் Dr.வில்சன் தலைக்குனிய நேரிட்டது. எந்த காலத்திலும், எந்த இடத்திலும், தவறை தவறென்று சொல்லும் மன உறுதி பெற்றிருந்தார் நமது பேராசிரியர் நரசு அவர்கள். நேர்மையும் சுயமரியாதையும் உருவானவர். சென்னை கல்லுரிகளில் எத்தனையோ ஆசிரியர்கள் இருந்தார்கள் ஆயினும் பேராசிரியர் என்ற பட்டம் இவருக்கும் (இன்னும் சிலருக்குதான்) வழங்கப்பட்டது.
பேராசிரியர் நரசு பேசுகிறார் என்றால் அறிஞர் கூட்டம் சென்னையின் பல பக்கங்களிலிருந்தும் வரும். அக்காலத்தில் விஞ்ஞான கருத்துக்களை விளக்கும் ஆற்றல் உடையவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் சிறந்தவர் புரபஸர் நரசு என்றால் அது மிகையாகாது. ஒரு சமயம் ராஜப் பிரதிநிதி, ஒருவர் சென்னை கிறிஸ்தவக் கல்லுரிக்கு வந்தபோது கல்லூரி தலைவர் அவரை ஒவ்வொரு அறைக்கும் அழைத்துச் சென்றாராம். புரபஸர் நரசு போதித்துக் கொண்டிருந்த அறைக்கு வந்தபோது உடனே வகுப்பறையில் செல்லாது, ராஜப்பிரதிநிதி, ஆசிரியர் எப்படி விஞ்ஞானப்பாடம் போதிக்கிறார் என்று கவனித்துக் கொண்டிருந்தாராம். அவருடைய ஆங்கிலப்பேச்சு வன்மை, விஞ்ஞானப் பொருள் விளக்கம், மாணவர்கள் கவரப்பட்டவிதம் இவைகளை பெரிதும் பாராட்டினார் என்று சொல்லுவார்கள். பாராட்டின் அடையாளமாக நற்சாட்சிப் பத்திரம் ஒன்று வைசிராய் வழங்கினதாகவும் தெரிகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக கிறிஸ்துவ மதத்தின் அஸ்திவாரம் ஆட்டமெடுத்தது என்று நாம் படிக்கிறோம். இந்தியாவில் பள்ளிகளையும் கல்லூரிகளையும் நிறுவி மக்களுக்கு கல்வி போதித்த பாதிரிமார்கள், கிறிஸ்துமதத்தையும் புகுத்தி அதன் சிறப்பையும் எடுத்துச் சொன்னார்கள். பற்பல லாபம் கருதி கிறிஸ்து சமயத்தை தழுவினார் பலர் ஆனால் மேனாட்டு விஞ்ஞானத்தையும் விஞ்ஞான முறையையும் துறை போய்க் கற்றவரும், தத்துவ சாஸ்திரத்தையும், விவிலிய நூலின் ஆராய்ச்சியையும் அறிந்தவரும் ஆன புரபஸசர் நரசு கிறிஸ்துமதத்தை வன்மையாகக் கண்டித்தார். கிருஸ்துவக் கல்லூரியில் ஆசிரியராக இருந்துக்கொண்டு கிறிஸ்து மதத்தை கண்டிக்கிறதென்றால், அது மன்னிக்கக்கூடிய காரியமா? அதேசமயத்தில் இந்து மதத்தில் காணப்படும் ஆபாசங்களையும், அதன் சமுதாய விரோத கொள்கைகளையும், தீண்டாமை போன்ற அநீதிகளையும் கண்டித்து வந்தார். இக்கண்டனங்கள் ஆங்கிலம் படித்த மக்களுக்கு பெரும்பாலும் பயன்பட்டன. இவைகளை பாமர மக்கள் அறிவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எனவே கல்வியில் முற்போக்குள்ள சமூகமும், சமயவெறியர்களும் நரசு அவர்களுக்கு நாஸ்திகர் என்ற பழிச்சொல்லை சுமத்தினார்கள். ஆனால் அவர் அதைப்பற்றி கவலைப்படவில்லை.
மதப் போராட்டமும், மத மாற்றமும் மிகுதியும் நடந்த அக்காலத்தில், பேராசிரியர் நரசு, தனக்காக ஒரு மதத்தைத் தேடிக்கொண்டிருந்தார். புத்தருடைய போதனைகள் தவிர வேறெந்த மதமும் அவருக்கு திருப்தியளிக்கவில்லை பௌத்தம் அறிவுக்கும் விஞ்ஞான முறைக்கும் பொருத்தமாயிருப்பதைக் கண்டு, நரசு அவர்கள் அம்மதத்தைப் பற்றி பல அருமையான கட்டுரைகளை பத்திரிகைகளில் வெளியிட்டார். இக்கட்டுரைகள் பிறகு தொகுக்கப்பட்டு 1911ஆம் ஆண்டு “பௌத்தத்தின் சாரம்” என்று புத்தக ரூபமாக வெளி வந்தது. மேற்படி கட்டுரைகள், வங்காளத்தில் அநேக புத்த தர்ம சங்கங்கள் தோன்றுவதற்கு துணை புரிந்ததென்றால் அவைகளின் செல்வாக்கை நாம் எளிதில் அளந்துவிட முடியாது. தென்னிந்தியாவில் ஏன் இந்தியா முழுவதிலும் வேறொரு இந்தியன் இதைப்போல புத்தகம் இதற்கு முன் எழுதினதில்லை. இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் உள்ள பௌத்த மத ஆராய்ச்சிக் காரர்கள் இப்புத்தகம், படிப்போரின் மனத்தை அப்படியே கவர்ந்து இணங்கச் செய்கிறதென்று அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர். இப்புத்தகம் படித்து பௌத்த தருமத்தை தழுவினவர் பலராவர்.
ஜப்பான் நாட்டில் பௌத்த மதத்திற்கு புத்துயிர் அளிக்கக் கூடிய பௌத்த நூல் ஒன்று வெளியிட ஆவல் எழுந்தது. உலகில் வெளியிடப்பட்ட எல்லா நூல்களிலும் புரபஸர் நரசு எழுதிய பௌத்தத்தின் சாரம் என்ற நூல் சிறந்தது என்ற முடிவுக்கு வந்து அதை ஜப்பான் மொழியில் மொழி பெயர்த்து வழங்கினார்கள். 1924 ஆண்டுக்குள் அப்புத்தகம் 25 தடவை அச்சிடப்பட்டது. ஜப்பான் நாட்டாரும் புத்தகம் எழுதிய புரபஸர் நரசு அவர்களை தங்கள் நாட்டிற்கு வந்து பௌத்த சமய பிரசாரம் செய்ய வேண்டுமென்றும், அதற்கு வேண்டிய செலவு பூராவும் அவர்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகும் அழைப்புக்குமேல் அழைப்பு அனுப்பினார்கள். ஆனால் யாது காரணம் பற்றியோ புரபஸர் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. பௌத்தத்தின் சாரம் என்ற நூலின் 2ஆம் பதிப்பு பல ஆண்டுகளுக்கு முன்னமேயே தீர்ந்து விட்டது. இந்த நூலின் பெருமையை அறிந்த டாக்டர் அம்பேத்கர் இதைசிறந்த முறையில் வெளியிட்டார் என்றால் இதை எழுதிய ஆசிரியரின் சிறப்புதான் என்னே.
பேராசிரியர் நரசு “பௌத்தம் என்றால் என்ன?”, என்ற ஒரு சிறு நூலை 1916ல் வெளியிட்டார். இது பௌத்தத்தின் சாரம் என்பதின் ‘சாரம்’ என்றால் மிகை ஆகாது. அதோடு, அந்த ஆண்டு வரையில் வெளியான விஞ்ஞான, சமய தத்துவக் கருத்துகளை எல்லாம் அதில் சேர்த்தே எழுதியுள்ளார். இச்சிறு புத்தகம், ஜெர்மன் பாஷையில் மொழி பெயர்க்கப்பட்டது. செக்கோஸ்லோவேகியாவின் முதல் ஜனாதிபதியான ஜீன்மெஸாரிக் என்பவர் தானாகவே செக் பாஷையில் மொழி பெயர்த்து பேராசிரியர் நரசு அவர்களுக்கு 1924ல் பிரதி ஒன்று அனுப்பியிருந்தார். ‘ஜாதியைப் பற்றிய ஆராய்ச்சி’, என்ற புத்தகம் புரபஸர் நரசு 1922ல் வெளியிட்டார். இதில் அவருடைய சரித்திர அறிவும், சமூக அரசியல், இராஜிய கொள்கை பலவும் காணலாம். இது ஒரு பேரகராதி (என்ஸைக்ளோ பீடியோ) என்றே சொல்லலாம். இக்காலத்தில் ஜாதியைக் கண்டிக்கிறவர்கள் சொல்லுகிறதெல்லாம் இச்சிறு புத்தகத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்னமே எழுதப்பட்டுள்ளது.
பேராசிரியர் நரசு அவர்கள் 1934லில் பரிநிர்வாணமடைந்தார். அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன் அவர் “தற்கால பௌத்தனின் மதம்” என்ற பெயருடைய புத்தகம் எழுதி முடித்திருந்தார். கையெழுத்துப் பிரதியைப் படித்துப் பார்க்கும் வாய்ப்பு 1924-1926 ஆண்டுகளில் எனக்குக் கிடைத்தது. புரபஸர் நரசு அவர்கள் அதைவெளியிட வேண்டும் என்று நினைத்தார். அவர் திடீர் என்று இறந்துவிட்டதனால், அவர் எண்ணம் நிறைவேறவில்லை. “இப்புத்தகத்தில் ஒரு நூறு ஆண்டுகளுக்கு அறிவுலகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துகள் அடங்கியிருக்கும். இதை ஒருவன் படித்தால், பல புத்தகங்களைப் படிக்க தேவையிறாது என்று புரபஸர் சொல்வதுண்டு. டைப் அடித்த பிரதி ஒன்று சில ஆண்டுகளுக்குமுன், டாக்டர் அம்பேத்கரிடம் கொடுக்கப்பட்டதை நான் அறிவேன்.
டாக்டர் அம்பேத்கர் அவர்களை மூன்றாவது உலக பௌத்த மாநாட்டின்போது, ரங்கூனில் சந்தித்தபோது தான் அதை சீக்கிரம் வெளியிட முயற்சிக்கப் போவதாக எங்களிடம் சொன்னார். புரபஸர் நரசு அவர்கள் இலங்கைக்குச் சென்று அங்கு பஞ்சீலம் பெற்று, பௌத்த மதத்தில் வெளிப்படையாக சேர்ந்தது முதல் அவர் இறக்கும் வரையில் சுமார் 40 ஆண்டுகளாக சென்னை மாகாணத்தில் பௌத்த தர்மத்தை பரப்புவதற்கு இடைவிடாமல் பாடுபட்டார். இதற்காக வேண்டி சென்னை நகரில், “தென்னிந்திய பௌத்த சங்கம்” ஒன்று நிறுவி, அதற்கு தலைவராக இருந்து வாரந்தோறும் கூட்டங்கள் நடத்தி வந்தார். அவர் இறந்த பிறகு அச்சங்கத்தின் தலைமை ஸ்தானத்தை நிரப்புவதற்கு இதுவரை தகுதியானவர் தோன்றவில்லை. அவர் பல பௌத்த மாநாடுகளில் தலைமை தாங்கி, பௌத்தர்களுக்கு அருமையான தொண்டு புரிந்திருக்கிறார்.
புரபஸர் நரசு அவர்கள் மகாபோதி சங்க ஸ்தாபரும் தலைவருமான அநகாரிக தர்மபாலா அவர்களின் நெருங்கிய நண்பராவர். தர்மபாலா அவர்கள் சென்னையில் பௌத்த பிரசாரம் பற்றி அடிக்கடி நரசுவுக்கு எழுதுவதுமன்றி Mrs. மேரி பாஸ்டர் தந்த நன்கொடையிலிருந்து தென்னிந்திய பௌத்தர்களின் கட்டிடத்திற்காக ஒரு சிறு தொகையும் உதவினார். புரபஸர் நரசு அவர்களை காணவரும் பௌத்தர்களும் பௌத்தர் அல்லாதாரும், அவருடைய நிறைந்த படிப்பையும், கூர்மையான மதியையும், தர்க்க சாமர்த்தியத்தையும், சொல்வன்மையையும் கண்டு அவரை பாராட்டாமல் இருக்க முடியாது. இந்திய மகாபோதி சங்கத்தின் பொது செயலாளர் தேவப்பிரிய வலிசின்ஹா அவர்கள் பேராசிரியர் நரசு அவர்களை சென்னையில் கண்ட சமயங்களில் தான் பெற்ற அநுபவத்தை பின்வருமாறு எழுதுகிறார். “அந்த அறிய சந்தர்ப்பங்களில் நாங்கள் பௌத்தம் பற்றியும் பௌத்த மத பிரசாரம் பற்றியும் விவாதித்துக் கொண்டு பல மணி நேரம் இன்பமாகக் கழித்தோம். நான் அவரை விட்டு பிரிந்து செல்லும்போது முன்னைவிட நிறைய நிறைந்தவனாகவும், அவர் புலமைக்கும், சத்தர்ம பிரேமைக்கும் மரியாதை ததும்பும் உணர்ச்சியுடனும் திரும்பினேன்”.
உலகில் அதிசய மனிதர்களில் ஒருவராகிய டாக்டர் அம்பேத்கார் புரபஸர் லஷ்மி நரசு அவர்களின் வாழ்க்கைக் குறிப்பில் “அவர் 19ம் நூற்றாண்டில் தோன்றிய ஒரு அதிசய மனிதர்” என்று தெரிவிக்கிறார் என்றால் சாதாரண மக்கள் அவருடைய பெருமையை அறியாதிருப்பதில் வியப்பில்லை. பாம்பின் கால் பாம்பரியும் என்பது போல அசாதாரண திறமையுடையவரை இன்னொரு அசாதாரண திறமையுடையவரே அறிந்து கொள்ள முடியும். அப்படிபட்ட மேதையை பௌத்த உலகம் மறந்துவிட முடியாது, மறந்து விடவும் கூடாது. பேராசிரியர் நரசு அவர்களின் ஓர் அம்சம். அதாவது பௌத்த பெரியார் என்ற அம்சத்தைப் பற்றி சில எண்ணங்கள் மாத்திரமே மேலே கூறப்பட்டன. அவருடைய குடும்ப வாழ்க்கை, கல்வித்துறையில் அவர் ஆற்றிய பணி, உரை ஆசிரியர், கல்விப் பத்திரிகை ஆசிரியர், புத்தக ஆசிரியர், சென்னை சர்வ கலாசாலை அங்கத்தினர் என்ற முறையில் செய்த வேலை-சென்னை இந்து சமுதாய சீர்திருத்த சங்கம். குழந்தைகளின் உதவிச் சங்கம் முதலியவைகளில் அவர் பங்கெடுத்துக் கொண்டு செய்த சேவை இவைகள் தனித்தனியே கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களாகும்.
K.பிரம்மச்சாரி
நன்றி: ‘தொண்டு’ இதழ் (1.1.1959)