‘நான் பாபாசாகேபை (அம்பேத்கரை) கடைசிமுறையாக அவருடைய மரண ஊர்வலத்தில் பார்த்தேன். அன்று காலை சாவகாசமாக வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தேன். செய்தித்தாளின் முதல் பக்கத்தில், அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தியைப் படித்தேன். ஏதோ நிலம் கிடுகிடுப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. என்னுடைய குடும்ப உறுப்பினர் இறந்துவிட்டதைப் போல உணர்ச்சிவசப்பட்டேன். வாசல் கதவின் தூணைப் பற்றிக்கொண்டு அழ ஆரம்பித்தேன். செய்தித் தாளை வாசித்துக் கொண்டிருந்தவன் ஏன் திடீரென்று அழுகிறானென என்னுடைய அம்மாவுக்கோ மனைவிக்கோ பிடிபட வில்லை. அம்பேத்கர் மரணமடைந்த செய்தியை அவர்களிடம் சொன்னதும், ஒட்டுமொத்தக் குடும்பமே கண்ணீர் வடித்தது.
வீட்டை விட்டு வெளியே வந்ததும் சாரை சாரையாக மக்கள் கூடி, அம்பேத்கர் மரணச்செய்தியைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. பாபாசாகேப் டெல்லியில் காலமானார். அவரின் உடலைத் தாங்கிய விமானம் அன்று மாலையே பம்பாய் வந்து சேர்வதாக இருந்தது. நான் வேலையில் சேர்ந்து வெறும் மூன்று மாதங்களே ஆகியிருந்தன. நான் வேலை பார்த்துக் கொண்டிருந்த கால்நடை மருத்துவக் கல்லூரிக்குச் சென்று விடுப்பு கேட்டேன். நான் என்ன காரணத்துக்காக விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ளேன் என்பதைப் பார்த்துவிட்டு என்னுடைய மேல் அதிகாரி கடுப்பானார். ”’இதை ஏன் காரணமாகக் கூறியுள்ளாய்? அம்பேத்கர் ஓர் அரசியல் தலைவர். நீ ஓர் அரசுப் பணியாளன். வேறு எதாவது தனிப்பட்ட காரணத்துக்காக விடுப்பு எடுப்பதாக எழுதிக்கொடு” என்று என்னிடம் கேட்டார்.
நான் எப்போதும் அனுசரித்துப்போகும் மனப்பான்மை கொண்டவன். ஆனால், என் குணத்துக்கு மாறாக, ”சார், அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர். அவர் எங்களை எப்படிப்பட்ட படுகுழியிலிருந்து மீட்டிருக்கிறார் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டேன்.
என் வேலையைப் பற்றிக் கவலைப்படாமல், என் விண்ணப்பம் ஏற்கப்படுமா எனக் காத்திருக்காமல், நான் ஆளுநர் மாளிகையை (ராஜ் பவனை) நோக்கி விரைந்தேன். அம்பேத்கரின் பூத உடல் வைக்கப்பட்டு இருந்த ராஜ்பவனை நோக்கி மானுட வெள்ளம் பெருங்கூட்டமாகப் பாய்ந்து கொண்டிருந்தது.’
-மஹாராஷ்டிராவைச் சார்ந்த தலித் எழுத்தாளர் தயா பாவார் அவர்களின் வாக்குமூலம்.
‘அம்பேத்கரும் சாதி ஒழிப்பும்’ புத்தகத்திலிருந்து.
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleஅன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி-1
Next Article அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2
