”பொன்.ராதாகிருஷ்ணன் அரசு வேலை தர்றேன்னார்… தமிழிசை வீடு தர்றதா சொன்னாங்க. ஆனா…” – JNU முத்துகிருஷ்ணன் குடும்பம் தற்போது…
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பி.ஹச்.டி., படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த தலித் மாணவர், முத்துகிருஷ்ணன். கடந்த ஆண்டு இதே மார்ச் மாதம்… இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்தது, இவரது மர்ம மரணம். இதற்குத் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, முத்துகிருஷ்ணனின் வீடு தேடி வந்து ஆறுதல் சொல்லி, பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்கள். இப்போது, அவரின் குடும்பச் சூழ்நிலையை எப்படி இருக்கிறது என்பதை அறிய நேரில் சென்றோம்.
முத்துகிருஷ்ணன் இறந்திலிருந்தே அவர் அம்மாவுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்விடுகிறது. தற்போதுகூட மருத்துவமனைக்கு சென்றிருப்பதாகவும், மாலையில்தான் வருவார்கள் என்றும் பக்கத்து வீட்டில் சொன்னார்கள். மீண்டும் மாலை நேரத்தில் சென்றோம்.
முத்துகிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம், ”ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சீட் கிடைப்பது ரொம்ப கஸ்டம். ‘தமிழ்நாட்டிலேயே ஒருத்தர், ரெண்டு பேருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கும். அங்கே படிச்சுட்டு வந்து பெரிய வேலைக்குப் போய் நம்ம குடும்பத்தைக் காப்பாத்துவேன்’னு சொல்லிட்டுப் போனான் என் மகன். நானும் என் சக்திக்கு மீறி வெளியிலும் வங்கியிலும் கடனை வாங்கி முத்துகிருஷ்ணனை படிக்க அனுப்பினேன். பெரிய காலேஜில் தாழ்த்தப்பட்டவங்க படிக்கிறது அவ்வளவு பெரிய பாவமாங்க? அநியாயமா கொன்னுட்டாங்களே…” என்று கதறுகிறார்.
சற்று நேரம் அசுவாசப்படுத்திக்கொண்டு ”முத்துகிருஷ்ணன் செத்த அந்த நாளை நினைச்சா, இப்பவும் நெஞ்சுல நெருப்பை அள்ளி கொட்டற மாதிரியே இருக்கு. சாகதற்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி அவனுடைய கைடை மாற்றச் சொல்லி பல்கலைக்கழகத்துக்கு லெட்டர் எழுதியிருக்கான். எதுக்கு மாற்றச் சொன்னான். என்ன பிரச்னைன்னு தெரியலை. என் மகனை அடிச்சு கொன்றிருக்கிறது உண்மை. தூக்குப் போட்டு செத்துட்டதா சொல்றாங்க. தற்கொலை செய்துக்கிறவன் காதுல ஹெட்போன் மாட்டிக்கிட்டா சாவான்? தற்கொலை செய்துக்கிற அளவுக்கு என் மகன் கோழை இல்லே.
இதோ, அவன் செத்து ஒரு வருஷம் ஓடிடுச்சு. இதுவரைக்கும் டெல்லி காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கைகூட தாக்கல் செய்யலை. பிரேத பரிசோதனை செய்த வீடியோ, பிரேத பரிசோதனை ரிப்போர்ட் தர்றதா சொன்னாங்க. அதையும் இன்னிக்கு வரை கொடுக்கலை. அவன் ரூமில் இருந்த லேப் டாப், செல்போன் எதையும் திருப்பி ஒப்படைக்கலை. என் பையன் சாவுக்கு நீதி கேட்டு குடும்பத்தோடு அலைஞ்சுட்டு இருக்கோம். எந்த பிரையோஜனமும் இல்லை. அவன் சாகறதுக்கு முன்னாடியும் சரி, அப்புறமும் சரி, பல்கலைக்கழகத்திலிருந்து யாரும் எங்ககிட்ட பேசினதில்லே. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பாக, எங்களுக்காக டெல்லியில் ரமேஷ்நாதன் என்ற வழக்கறிஞர் இருக்கிறார். அவரிடம்தான் நிலைமையை விசாரிப்போம். அவரும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லைன்னு சொல்றார். நாங்க என்னதான் பண்றது?” என் ஆதங்கத்துடன் தொடர்கிறார் ஜீவானந்தம்.
என் மகன் இறந்தபோது வந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ”முத்துகிருஷ்ணன் என் தம்பி மாதிரி. உங்க குடும்பத்துக்கு எல்லா உதவிகளையும் பண்றேன். மூணு பெண் பிள்ளைகளும் டிகிரி படிச்சிருக்கிறதால், அரசு வேலைக்கு ஏற்பாடு பண்றேன்’னு சொன்னார். என் மகனை அடக்கம் செய்த பிறகும் ஒருநாள் வீட்டுக்கு வந்து, ‘சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணனை போய்ப் பாருங்க’னு சொன்னார். நாங்களும் குடும்பத்தோடு சென்னைக்கு போய் பார்த்தோம். ‘அரசு வேலை எதுவும் கொடுக்க முடியாது. அனைவரையும்போல தேர்வு எழுதி பாஸ் பண்ணினால்தான் வேலை கிடைக்கும்’னு சொல்லிட்டார். ‘அமைச்சர் சொன்னாரே சார்’னு கேட்டும் பயனில்லே.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை, நேரில் வந்து துக்கம் விசாரிப்போ, வீடு கட்டி தர்றதா சொல்லி, எங்க வீட்டை போட்டோ எடுத்துட்டுப் போனங்க. இதுவரை எந்த உதவியும் செய்யலை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நாலு, ஐந்து முறை குடும்பத்தோடு போய் பார்த்தாச்சு. ஒண்ணும் நடக்கலை. முத்துகிருஷ்ணன் இறந்தபோது ஆறுதல் சொல்ல வந்தவங்க எல்லாம் வாக்குறுதி கொடுத்தாங்க. ஆனால், யாரும் எந்த உதவியும் செய்யலை. தமிழக அரசு 3 லட்சம் கொடுத்துச்சு. அந்தப் பணத்தில்தான் வங்கியின் கல்வி கடனை பாதி கட்டினேன். இன்னும் பாதி கடன் இருக்கு. என் பையன் மட்டும் இருந்திருந்தால், இப்போ நான் நாலு பேருக்கு உதவி செய்யும் இடத்தில் இருந்திருப்பேன். என் மகள்களுக்கு கல்யாணமும் செய்திருப்பேன்” என்றவர், மேற்கொண்டு பேசமுடியாமல் குலுங்க ஆரம்பித்தார்.
உடல்நிலை சரியில்லாமல் இருந்த முத்துகிருஷ்ணனின் அம்மா அலமேலு, ”எங்க வீட்டுக்காரர் செக்யூரிட்டி வேலைக்கும், நான் லீபஜாரில் மஞ்சள் பொறுக்கியும் என் குழந்தைகள் நான்கு பேரை கஷ்டப்பட்டு படிக்கவெச்சோம். என் பையன் படிப்புல கெட்டிக்காரன். போன் பண்ணும்போதெல்லாம் ‘அம்மா, பத்திரமா இரு’னு சொல்வான். என் பையனை திட்டம் போட்டு கொன்னுட்டாங்க. அவன் செத்துபோன மாதிரியே தெரியலே. இப்பவும் அங்கே படிச்சுட்டிருக்கிற மாதிரி இருக்குப்பா. விடிஞ்சா பையன் வீட்டுக்கு வருவான்னு ஒவ்வொரு நாளும் வாசலுக்குப் போய் பார்ப்பேன். செத்துட்டான்னு நினைச்சுக்கிட்டா உயிரே நின்னுடற மாதிரி இருக்கு. இனி எங்களுக்கு யாரும் ஆதரவு இல்லை” என்று தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார்.
முத்துகிருஷ்ணனின் அக்கா கலைவாணி, ”தம்பி இறந்த பிறகு குடும்பமே நிலைகுலைஞ்சுப் போச்சு. கனவுல வாழ்ந்துட்டு இருக்கிற மாதிரிதான் தோணுது. எந்த நேரமும் அம்மாவும் அப்பாவும் தம்பியை நினைச்சு அழுதுட்டே இருக்காங்க. திடீர் திடீர்னு ராத்திரியில் எழுந்து கதறுறதைப் பார்க்கிறப்போ தூக்கம் வரமாட்டேங்குது. இதனால், அம்மாவுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போயிடுது. அப்பாவுக்கு மூச்சுத்திணறல் பிரச்னை இருக்கு. அடிக்கடி மயங்கி விழுந்துடறா. ஒவ்வொரு நாளும் என்ன ஆகுமோனு பயத்திலேயே இருக்கோம்” என்று அழுதார்.
Courtesy : Vikatan