டெல்லி: இந்தியாவின் வட மாநிலங்கள் முழுக்க தலித் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டம் தற்போது பெரிய அளவில் கலவரமாக மாறியுள்ளது. கடந்த மார்ச் 20ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதன்படி தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி இனி அரசு ஊழியர்களை கைது செய்ய முடியாது என்று கூறியது. இது அந்த சட்டத்தையே கேள்விக்குறியாக்கியது. இதற்கு எதிராக இந்தியா முழுக்க தலித் மக்கள் போராடி வருகிறார்கள். இது அங்கு இயல்பு வாழ்க்கையை பாதித்து இருக்கிறது.
மேலும் மத்திய பிரதேசம் முழுக்க இணையம் முடக்கப்பட்டு உள்ளது. 4 மாநிலங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. டெல்லி முழுக்க இந்த போராட்டம் காரணமாக ஸ்தம்பித்து இருக்கிறது.
இன்று மட்டும் மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த போராட்டம் காரணமாக 4 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். 50க்கும் அதிகமான நபர்கள் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல் டெல்லி, உத்தர பிரதேசத்தில் நிறைய பேர் காயம் அடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஆனாலும் இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியிலும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் உச்ச நீதிமன்றம் செய்த மாற்றத்தை திரும்ப பெற கோரி மத்திய அரசு செய்த மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. போராட்டம் நடக்கிறது என்பதற்காக அவசர வழக்காக விசாரிக்க முடியாது, நாளை இல்லை நாளை மறுநாள் இது பற்றி விசாரிப்போம் என்று தலைமை நீதிபதி கூறியுள்ளார்.