சிதம்பரம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரதூர் கிராமத்தில் வசித்து வருபவர் மணிமாறன். இவரது மகள் வைத்தீஸ்வரி (வயது 16). இவர் புவனகிரியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல வேலைக்கு சென்ற வைத்தீஸ்வரி மாலையில் வீடு வந்து சேரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் பல இடங்களில் வைத்தீஸ்வரியை தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து ஒரத்தூர் காவல்நிலையத்தில் வைத்தீஸ்வரியின் பெற்றோர் மகளை காணவில்லை எனக் கூறி புகார் செய்தனர்.
இதனிடையே இன்று அதிகாலை வைத்தீஸ்வரி ஊருக்கு வெளியே வயலில் சடமாக கிடந்தார். சடலத்தை கைப்பற்றிய ஒரத்தூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக வைத்தீஸ்வரியின் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வைத்தீஸ்வரி வேலை முடிந்து வீடு திரும்பிய நேரத்தில் கும்பல் ஒன்று அவரை வழிமறித்து ஒதுக்குப்புறமாக இடத்திற்கு தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே அதே கிராமத்தில் வசிக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த 3 பேர் சேர்ந்துதான் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். சம்பவ இடத்தை கடலூர் மாவட்ட எஸ்.பி. விஜயகுமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் சிறுமி கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தகவல்கள்: பாலகிருஷ்ணன், செய்தியாளர்.
Courtesy : Puthiyathalaimurai