எனது அன்னை திருமதி,த மீனாம்பாள் சிவராஜ் அவர்கள், மறைந்து மூன்றாண்டுகள் ஆகிறது. எனது நினைவலைகளில் அம்மாவின் முகம் நிழலாடிக் கொண்டிருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, என் உடன் பிறந்தாருக்கு மட்டுமல்ல, இந்த சமூகத்திற்கே ஒரு தாயைப் போல் சேவை செய்ததால் தான் அவர்களை எல்லாருமே “அன்னை மீனாம்பாள்” என்று அன்போடு அழைக்கிறார்கள். என்னைப்பெற்ற அன்னை இந்த சமுதாயத்தாயாக உயர்ந்ததில் என் உள்ளமெல்லாம் மகிழ்கிறது.
ஏனெனில் எனக்கு நினைவு தெரிந்த சின்ன வயசிலிருந்தே என் அம்மா சமூகப் பிச்சனை சம்பந்தமாகவே பேசிக் கொண்டிருப்பார்கள். அதற்கான விடிவு தேடியே பணியாற்றிக் கொண்டிருப்பார்கள்.
ஒரு சின்னச் சம்பவம் என் நினைவில் சுழல்கிறது. அதாவது வெள்ளையர் ஆட்சி காலத்தில், ஒரு ஷெட்யூல்டு சமூகத் தொழிலாளி கைகடிகாரம் கட்டியிருந்ததாலேயே, பெரியமேடு போலீஸ்காரர்க ளால் கைது செய்யப்பட்டுவிட்டார். ஏனெனில் அந்த காலத்தில் கடிகாரம் கட்டுபவர்கள் கனவான்களாகவும், பெரிய பணக்காரர் களாகவும், அரசாங்க அதிகாரிகளாகவும் தான் இருப்பார்கள். அதனால் ஒரு தாழ்த்தப்பட் தொழிலாளிக்கு எப்படி கை கடிகாரம் கிடைத்தது என்று சந்தேகப்பட்டு, கைது செய்துவிட்டீர்கள். அப்போது கவுரவ நீதிபதியாக இருந்த என் அம்மா இந்தப் பிரச்சனையை கேள்விப்பட்ட உடனேயே போலீஸ்துறை உயர் அதிகாரிக்கு போன் செய்து, விளக்கம் கொடுத்து அவரை உடனடியாக விடுதலை செய்ய வைத்தார்கள். இப்படி சின்னசின்ன விஷயங்களிலெல்லாம் கூட அக்கரை எடுத்து என் தாய் செய்து முடிப்பார்கள்.
அந்த காலத்தில் சென்னையில் நமது மக்கள் வாழும் சேரிப் பகுதிகளை சமூக விரோதிகள் அடிக்கடி தீ வைத்துக் கொளுத்தி விடு வார்கள். அந்த நேரத்தில் சம்பவம் நடந்த இடத்திற்கே நேரில் சென்று, பாதிக்கப்பட்டவ்ர்களுக்கு ஆறுதல் கூறுவதோடு, அவர்க்ளுக்கு வேண்டிய உதவிகளை செய்யும்படி அதிகாரிகலை போய் சந்தித்து பேசுவார்கள். இப்படி மக்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதில் என் அன்னைக்கு சோர்வே வந்ததில்லை.
செங்கல்பட்டு மாவட்டம், னிணாம்பேடு என்ற கிராமத்தில் மக்கள் வேட்டியை முழுங்காலுக்கு கீழே கட்டக் கூடாது. செருப்பு போடக்கூடாது . என்று கட்டுப்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். இதைக் கேள்விப்பட்ட என் தாய் அந்த கிராமத்திற்கே துணிச்ச லாகச் சென்று அக்கிராம மக்களைத் திரட்டி, அவர்கள் மத்தியில் வீர உரையாற்றி அவர்களை முழங்காலுக்கு கீழே வேட்டி கட்டவும், செருப்பு போடவும் வைத்து, ஒரு ஊர்வலத்தையும் அந்தப் பகுதியில் நடத்தினார்கள். இது மட்டுமல்ல அதிகாரிகளைச் சந்தித்துப்பேசி இந்தக் கொடுமைகளைச் செய்வதில் மிகத் தீவீரமாக இருந்த சாதி வெறியர் சிலரை கைது செய்து, கை விலங் கிட்டு வீதியில் அழைத்து வந்து காவலில் வைக்கவும், பிறகு தண்டனை கிடைக்கவும் தகுந்த ஏற்பாடு செய்தார்கள்.
அந்த நாட்களில் தலைவர்களால் “நாய்க்கர்” என்று குறிப்பிட்டு அழைக்கப்பட்ட நீதிக்கட்சித் தலைவர் ஈ.வெ.ரா. அவர் களுக்கு “ பெரியார்” என்றுபட்டம் அம்மா முன்னிலை வகித்த பெண்கள் மாநாட்டில்தான் கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
அம்மாவிற்கு தமிழ், தெலுங்கு, இந்தி , ஆங்கிலம், மொழிகள் நன்றாகத் தெரியும். இதனால் அவர்கள் அகில இந்திய அளவிலும் அரசியலில் ஈடுபட்டு புகழ் பெற்றார்கள். அண்ணல் அம்பேட்கரின் பாசத்திற்குரிய சகோதரியாகவும் திகழ்ந்தார்கள் பல பதவிகளை வகித்தார்கள். எனது தந்தையார் சிவராஜ் அவர்கள் எவ்வளவு புகழோடு இருந்தார்களோ அந்த அளவிற்கு அம்மாவும் செல்வாக் கோடு திகழ்ந்தார்கள். இப்படி, அந்தக் காலத்தில் “கணவன் மனைவியும்” சமூகப் பணிகளில் ஒரு சேர ஈடுபட்டு பேர் பெற்ற வர்கள் என்றால் என் அம்மாவும் – அப்பாவும் தான் என்று பலபேர் இன்று என்னிடம் தெரிவிக்கும் போது அவர்ஸீ÷து பிள்ளை நான் என்பதில் மிகுந்த மனநிறைவு ஏற்படுகிறது.
அம்மா ஆற்றிய சமூகப் பணிகளால் அவரைத் தேடி வந்த பதவிகள் ஏராளம். சென்னை மாகான கவரவ நீதிபதியாக -18 ஆம் ஆண்டுகள், சென்னை பல்கலைக்கழக உறுப்பினராக- 6 ஆண்டுகள், சென்னை பல்கலைகக்கழக உறுப்பினராக-6 ஆண்டுகள், சினிமா தணிக்கை குரு உறுப்பினராக- 9 ஆண்டுகள், சென்னை கூட்டுறவு வீட்டுவசதி சங்க இயக்குனராக- 6 ஆண்டுகள், சென்னை மாவட்ட கூட்டுறவு வங்கி இயக்குனராக-12 ஆண்டுகள், பெண்கள் கூட்டுறவு தொழில் வாரியத்தின் தலைவராக-6 ஆண்டுகள், மற்றும் பாரி கம்பெனி தொழிற்சங்கத் தலைவராக, லேடி வெலிங்கடன் கல்லூரி தேர்வுகுழு உறுப்பினராக, டி.யூ.சி.எஸ் அடையாறு கிளை இயக்குனராக, அடையாறு பஞ்சாயத்து தலைவராக, காந்திநகர் பெண்கள் சங்க தலைவியாக, உயிர்வதைத் தடுப்புச் சங்க உறுப்பின ராக, முன்னாள் கைதிகள் மறுவாழ்வு சங்க அங்கத்தினராக, மருத்துவமனை அரசாங்க பார்வையாளராக….. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு பல்வேறு பதவிகளில் வீற்றிருந்து அம்மா, மக்கள் பணி செய்துள்ளார்கள்.
இப்படியெல்லாம் சமுகப் பணி செய்ததால் தான் சென்னை நகரின் பல இடங்களில் என் அன்னையின் பெயரில் பல தெருக் களும், நகர்களும் இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும்.
தாழ்த்தப்பட்ட மக்களின் துயர் துடைக்க அல்லும் பகலும் அயராது உழைத்த என் அன்னை, முதிய வயதின் மூப்பினால் தனது 90 வது வயதில் 30.11.92ல் காலமான போது இன்றுள்ள சமுதாயத் தலைவர்களெல்லாம் வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியது என்னால் மறக்க முடியாத நெகிழ்ச்சியான சம்பவமாகும்.
என் அன்னை தான் வாழ்ந்த காலத்தில் இந்த சமுதாய மக்கள் தங்கள் துயரங்களை இறக்கி வைத்து இளைப்பாறும் ஒரு ஆலமரமாய் விளங்கனார்கள். அதிலிருந்து பல விழுதுகள் தோன்றி இன்று நம் சமுதாயத்தை தாங்கிப் பிடித்து கொண்டிருப்பது கண் கூட மிகவும் மகிழ்கிறேன்.
குறிப்பு: இக்கட்டுரையாசிரியர் எஸ்.போதிசந்தர் அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்களின் இளைய மகனாவார்.