டி.பி. ஜெயின் கல்லூரி வரலாற்றிலேயே முதன் முறையாக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு ஒரு விழா எடுத்து அந்த விழாவில் முதல் விருந்தினாராக என்னை அழைத்து எனக்குப் பெருமை சேர்த்திருக்கிற கல்லூரி முதல்வர் அவர்களுக்கும் கல்லூரி தாலாளர் அவர்களுக்கும் கல்லூரி பேராசிரியர் அவர்களுக்கும் முதல்வர் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மாபெரும் தலைவர் உலகப் புகழ் பெற்றத் தலைவர் அவருக்கு விழா எடுப்பதில் எங்களுக்குப் பெருமை என்று என்னிடத்தில் சொன்னார்கள். விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் இந்த கல்லூரிக்கு நான் எனது நெஞ்சார்ந்த நன்றியை சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
புரட்சியாளர் அம்பேத்கரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் நான் விளக்கிச் சொல்லி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர் ஒரு மாபெரும் தலைவர். மாமேதை உலகப் புகழ்ப்பெற்ற சிந்தனையாளர், எழுத்தாளர் இவையெல்லாம் நாமறிந்த ஒன்றுதான். இந்தியாவில் தேசத் தந்தை என்று போற்றப்படுகிற மகாத்மா அவர்களின் பேச்சுக்கூட இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் அரசின் செலவில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. ‘ஆசியாவின் ஜோதி’, ‘மனிதருள் மாணிக்கம்’ என்றுப் போற்றப்படுகிற ஜவகர்லால் நேரு அவர்களின் பேச்சும், எழுத்தும்கூட இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் அரசின் செலவில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. ஆனால், அந்தப் பெருமைக்குறிய ஓரேத் தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள். இன்றைக்கு அவருடைய எழுத்து அவருடையப் பேச்சு இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழிபெயற்கப்பட்டு நூல்களாகத் தொகுக்கப்பட்டு நாடுதழுவிய அளவில் அவைகள் பரப்பப்படுகிறது என்றால், அந்த அளவிற்கு ஆற்றலும் பெருமையும் புகழும் கொண்ட ஒரு மகத்தானத் தலைவர், மானிதர், மாபெரும் சிந்தனையாளர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்.
ஒரு காலத்தில் அவர் சேரியில் பிறந்தவர், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சர்ந்தவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே உரியத் தலைவர் என்கிற அளவில் ஊடகங்கள் அவரை இருட்டடிப்புச் செய்தன. அல்லது இந்திய அரசியல் உலகம் அவரை ஓரங்கட்டி வைத்திருந்தது. நெருப்பை பொட்டலம் கட்டி மறைத்து வைத்திருக்க முடியாது. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் புகழை யாராலும் ஒளித்து வைக்க முடியாது என்பதை 1991ஆம் ஆண்டுக்கு பிறகு அறிய முடிந்தது. அவருடைய நூற்றாண்டு விழா நாடுமுழுக்க வெகுமக்களால் கொண்டாடப்பட்டது. இந்திய அரசும் தவிற்க முடியாமால் அதை கொண்டாடியது.
அதன் பின்னர்தான் அவர் பிறந்த மாநிலமான மராட்டிய மண்ணில் மராட்டிய அரசு அவருடைய நூற்றாண்டு விழாவை ஒட்டி அவருடைய பேச்சுகளையும் எழுத்துகளையும் அரசுடைமையாக்கி அரசை பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்வதற்கான உரிமையை இந்திய அரசின் மூலமாக பெற்று இன்றைக்கு நாடுதழுவிய அளவில் அவருடைய பேச்சுகளும் எழுத்துகளும் நாடுமுழுக்க மொழியாக்கம் செய்யப்பட்டு பரப்பப்படுகின்றன. தமிழில் அவருடைய பேச்சுகளும் எழுத்துகளும் முப்பது தொகுதிகளுக்கு மேல் உள்ளன. மராட்டியில் இருக்கிறது. இந்தி, ஆங்கிலம், தெலுங்கு, கன்னடத்தில் இருக்கின்றன. இப்படி இந்தியாவில் இருக்கின்ற எந்த தலைவருக்கும் இந்தப் பெருமை கிடையாது. தனிப்பட்ட முறையில் சில நிறுவனங்கள் வேண்டுமானால், காந்தியாடிகளின் பேச்சை எழுத்தை மொழியாக்கம் செய்திருக்கக்கூடும். அல்லது இரவீந்திரநாத் தாகூர் பேச்சை எழுத்தை மொழியாக்கம் செய்திருக்கக்கூடும். ஆனால், இந்திய அரசாங்கம் ஒரு தலைவரின் சிந்தனையை மொழியாக்கம் செய்துப் பரப்புகிறது என்பதற்கு ஒரு வரலாற்றுக் காட்டாயம் ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால், அது அவரின் சிந்தனைக்குக் கிடைத்திருக்கிற வலிமை. அப்படி என்ன அவர் சிந்தித்து விட்டார். தாழ்த்தப்பட்ட மக்களை மட்டுமே சிந்தித்திருந்தால் அவரை யாரும் பொருட்படித்தியிருக்க மாட்டார்கள். தாழ்த்தப்பட்டவர், அவர் தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி மட்டுமே பேசக்கூடியவர் என்னு எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலபேர் அவரை சாதிச் சங்கத் தலைவரைப் போல ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். பார்ப்பனச் சங்கத் தலைவர், முதலியார் சங்கத் தலைவர், செட்டியார் சங்கத் தலைவர், உடையார் சங்கத் தலைவர், நாடார் சங்கத் தலைவர், அதைப் போல இவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கானத் தலைவர் என்று சிலர் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள். அதுத் தவறு.
வன்னியர் சமுதாயத்திற்கானத் தலைவர் வன்னியச் சமுதாயப் பிரச்சனைகளைப் பற்றி மட்டுமே பேசி, அவர்களின் உரிமைகளுக்காக மட்டுமே குரல் கொடுத்து அவர் அப்படியே ஊறிப்போவர். அவருக்கு எந்த உலகப் பார்வையும் சமூகப் பார்வையும் பொருளாதார அடிப்படையிலான அனுகுமுறையும் இருக்காது. அப்படி இருந்திருந்தால் குறிப்பிட்ட சாதியின் தலைவராக மட்டுமே சுருங்கிப் போகமாட்டார். ஆனால், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் அவ்வாறானத் தலைவர் அல்ல. அதனால்தான், அவர் உலகப் புகழ் பெற்றத் தலைவராக, சர்வதேசத் தலைவர்களுள் ஒருவராக போற்றப்படுகிறார்.
சேரியில் வாழ்கிற சாதாரண மக்களைப் பற்றி மட்டுமே சிந்திக்கக் கூடியத் தலைவராக இருந்திருந்தால் அவர் ஒரு குறுகிய வளையத்திற்குள் மட்டுமே சுருக்கப்பட்டிருந்திருப்பார். சர்வதேக அளவில் யாரும் அவரைப் பற்றி விவாதிக்கவோ, பேசவோ வாய்ப்பிருந்திருக்காது. இந்திய அரசாங்கம் அவருடையப் பேச்சை, எழுத்தை, மொழியாக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்திருக்காது. இந்தக் கோணத்தில் இருந்து புரட்சியாளர் அம்பேத்கரை நாம் பார்க்க வேண்டும். அவர் ஒரு குறிப்பிட்ட சாதிக்கானவர் அல்ல. இதைத்தான் நாம் மிக முக்கியமாக உணர்ந்துக்கொள்ள வேண்டியச் செய்தி. தோழர் ரவிக்குமார் இங்கே உரையாற்றும் போது லண்டன் மீயுசியத்தில் இருக்கிற நூலகத்தில் அவர் எவ்வாறு படித்தார் என்று சொன்னார்கள். அந்த நூலகத்தில் இரண்டே இருண்டு தலைவர்களின் திருவுவப் படங்கள் திறந்து வைத்து பெருமைச் சேர்த்திருக்கிறார்கள் என்று சொல்வதுண்டு. அந்த இரண்டு பேர் படத்தில் ஒருவர் பொருளாதாரத் தத்துவத்தைதந்த மாமேதை, இயற்பியல் தத்துவத்தைத் தந்த மாமேதை காரல் மார்க்ஸ், இன்னொருவர் புரட்சியாளர் அம்பேத்கர்.
இந்த இரண்டு பெரும் தலைவர்கள்தான் அந்த நூலகத்தில் இருந்த அனைத்து நூலகத்தையும் படித்து முடித்தத் தலைவர்கள். இன்றைக்கு இந்தியாவில், தமிழ்நாட்டில் தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளக் கூடியவர்கள் எல்லாம் ‘ஆனந்த விகடன்’, ‘குங்குமம்’, ‘குமுதம்’… போன்ற நூல்களைப் படித்து வைத்து அதில் இருந்து வரும் வதந்திகளை நம்பிக்கொண்டுப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆழமான வரலாற்று நூல்களை எல்லாம் எங்கே படிக்கிறோம். படிப்பதற்கு ஏது நேரம். மற்றவர்கள் பெருமையாக நினைக்க வேண்டும் என்பதற்காக படிக்கத் தெரிந்தால் படிக்காவிட்டாலம் கையில் ‘இந்து’ பத்திரிகையை வைத்துக் கொண்டு பேருந்தில் பயணம் செய்வோம். அந்த அளவில்தான் தமிழ்நாட்டில் இருக்கிற இந்தியாவில் இருக்கிற தலைவர்களின் நிலைமை இருக்கிறது. அதிகம் படிப்பதற்கு ஆர்வமும் இல்லை, அதற்கான வாய்ப்பும் இல்லை என்பதுதான்.
ஆனால், என்னேரமும் படிப்பது, படித்ததின் அடிப்படையில் சிந்திப்பது, சிந்திப்பதன் அடிப்படையில் செயல்படுவதென்கிற அந்த தொடர்ச்சி ஒரு தலைவரிடத்தில் இருக்கிறதென்றால், அந்த முயற்சி ஒரு தலைவரிடத்தில் இருக்கிறது என்று சொன்னால் அந்தப் பெருமைக்குரியத் தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்தான். வெளிநாட்டிற்குப் போனால், பெண்டாட்டி என்ன வாங்கி வருவது, பிள்ளைகளுக்கு என்ன வாங்கி வருவது என்று கடைகளுக்குப் போவான். தொலைபேசியில் தொடர்பு கொண்டு மனைவிக்கு என்ன வேண்டும் என்று மனைவியிடத்தில் கேட்பான். அல்லது பிள்ளைகளுக்கு என்ன வேண்டும் என்று கேட்பார். ஆனால், வெளிநாட்டுக்குப் போய் பெட்டிப் பெட்டியாய் கப்பல்களில் புத்தகங்களைக் கொண்டு வந்தது உலகத்திலேயே புரட்சியார் அம்பேத்கராகத்தான் இருக்க முடியும். இவர் எதையுமே வாங்கிவந்ததில்லை. அவர் எடுத்துச் சென்ற பணமாக இருந்தாலும் அல்லது நன்கொடையாக இருந்தாலும், அவர் சம்பாதித்தத் தொகையாக இருந்தாலும் சரி, அவ்வளவுக்கும் பெட்டிப் பெட்டியாய், பொதிபொதியாய் புத்தகங்களைக் கொண்டு வந்த, இங்கு தமக்கென மாபெரும் நூலகத்தைக் கொண்ட ஒரு மாபெரும் தலைவர்,புத்தகங்களின் மீது ஒரு மோகம் கொண்டத் தலைவர். 24 மணிநேரம் படிக்க வேண்டும் என்று சொன்னால், 24 மணிநேரமும் படித்துக் கொண்டே இருந்தத் தலைவர். அதனால்தான் இனி எந்தக் காலத்திலும் எவனாலும் வரலாற்று சுவடுகளில் இருந்து அழிக்க முடியாத பெருமைக்குறிய மாமனிதனாக விளங்கக்கூடியவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள். அவரைச் சேரிக்காரர் என்று முத்திரைக்குத்தி யாராலும் ஒதுக்கிவிட முடியாது, ஒழித்துவிட முடியாது.
எல்லத் தளங்களிலும் முத்திரைப் பதித்தவர். இவர் காங்கிரசை கடுமையாக எதிர்த்தத் தலைவர், ஜவகர்லால் நேருவை கடுமையாக விமர்சித்தத் தலைவர். ஆனால், அதே காங்கிரஸ் கட்சி, அதே ஜவகர்லால் நேரு இவரை அரசியல் நிர்ணயச் சபைக்கு வேட்பாளராக போட்டியிட வைத்து இவருக்கு ஆதரவுத் தெரிவித்து இவரை வெற்றிப்பேர வைத்து இவரை அரசியல் சபையின் உறுப்பினராக ஆக்கி அந்த ‘ராஷ்டிரியக் கமிட்டி’யில் உறுப்பினராக்கி அரசியலமைப்புச் சட்டதை எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கினார். ஏன், அவருடைய அறிவாற்றல். காங்கிரஸ் இவருக்கு ஆதரவுத் தந்தது. இவர் காங்கிரசை விமர்சிக்கக்கூடியவர். ஜவகர்லால் நேரு வலியப்போய் இவரை தனது அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார். இன்னும் வெளிப்படையாகச் சொன்னால் தாழ்த்தப்பட்ட மக்களின் எதிரிகள் என்று பட்டியல் படுத்துகிறபோது மூன்றுப் பேரைச் சொன்னார்.
ஒன்று இந்து மதம், இன்னொன்று காந்தியடிகள், இன்னொன்று காங்கிரஸ் கட்சி. இந்த மூன்றையும் வெளிப்படையாக அடையாளப் படுத்தினார். அவ்வளவுப் பெரிய முரண்பாடு. காந்தியடிகளோடு, காங்கிரஸ் கட்சியோடு, இந்து மதத்தோடு – புரட்சியாளர் அவர்களுக்கு கடுமையான முரண்பாடு இருந்தது. அவ்வாறு அம்பலப்படுத்திக் கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை அழைத்து தன்னுடைய அமைச்சரவையில் இணைத்து கொண்டு ஜவகர்லால் நேருச் சொன்னார் “என்னுடைய மகூடத்தில் மின்னுகிற மாணிக்கம்தான் புரட்சியாளர் அம்பேத்கர்” என்று சொன்னார். அம்பேத்கரை தன்னோடுச் சேர்த்துக் கொண்டால் தனக்குப் பெருமை என்று எண்ணக்கூடிய அளவிற்கு புரட்சியாளருக்கு ஆற்றல் இருந்தது, அறிவு இருந்தது. அதுதான் அதற்குக் காரணம்.
ஆக, புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாற்றல் என்பது இந்த உலகம் அறிந்த ஒன்று. ஆகவே, அவர் ஒரு பெரிய அறிவாளி அறிஞர் என்கிற அளவில் அந்த கோணத்தில் மட்டும் பார்த்தால் போதுமா? அதனால்தான், அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டோமா? சிலப்பேர் நினைப்பார்கள் திருமாவளவன் ஒரு தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சார்ந்தவன் அம்பேத்கர் ஒரு தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சார்ந்தவர். அதனால்தான், திருமாவளவனுக்கு அம்பேத்கர் தலைவர் இப்படி பார்ப்பவனுக்குத்தான் சாதி புத்தி உள்ளே வரும். இதுதான் அவர்களின் குறுகிய புத்தியை வெளிப்படுத்துகிறது. திருமாவளவன் தாழ்த்தப்பட்டவன் என்பதனால், அம்பேத்கரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படிப்பார்த்தால் அம்பேத்கர் அவர்கள் திருமாவளவன் எந்த சாதியோ அந்தச் சாதி கிடையாது. மிகக் குறுகிய கண்ணோட்டத்தின்படி, சாதிபுத்தியோடுப் பார்த்தால் நான் தமிழ் நாட்டில் பறையர் வகுப்பைச் சார்ந்தவன். அம்பேத்கர் பறையர் இல்லையே? மொழி அடிப்படையில் பார்த்தால் நான் தமிழன், அம்பேத்கர் தமிழன் இல்லையே? பிராந்திய அடிப்படையில் பார்த்தால் நான் தென்னாட்டைச் சார்ந்தவன், திராவிடப் பகுதியைச் சார்ந்தவன் தென்னிந்தியாவைச் சார்ந்தவன். அவர் வடநாட்டைச் சார்ந்தவர். அப்படிப் பார்த்தாலும் புரட்சியாளர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் இல்லையே? எந்த அடிப்படையில் நான் தலைவனாக ஏற்றுக் கொண்டேன்.
சாதி புத்தி என்பது உள்ளுக்குள் ஊடுருவி ஊடுருவி உட்சாதி வரையில் போகும். எவனொருவனுக்குச் சாதியிருந்தாலும். அந்த சாதி புத்தி என்பது ஒரு அளவிற்குள் நிற்காது. தலித் என்றால் தலித்துக்குள் என்ன என்பான். பறையன் என்றால் பறையனுக்குள் என்ன பறையன் என்பான், அதற்குள்ளே போனால் அதற்குள் என்ன வகையறா என்பான். வன்னியரை எடுத்துக் கொண்டால்கூட வன்னியரில் எந்த வன்னியர் என்பான். வன்னியரில் பலப் பிரிவுகள் இருக்கிறது. கவுண்டர் என்றால் கவுண்டரில் பலப் பிரிவுகள். சாதி என்றாலேயே உடைத்து உடைத்து உள்ளே போகும். குறுகிய கண்ணோட்டத்தை உண்டாக்கும். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை நான் தலைவராக ஏற்றுக் கொண்டோம் என்றுச் சொன்னால் அதன் அடிப்படை என்பது சாதி அல்ல. அதற்கு அடிப்படை அவர் அறிவாளி என்பதும் அல்ல. அப்படிப் பார்த்தால் அவருக்கே முன்னோடியாக இருந்த அயோத்திதாசப் பண்டிதர் மிகப் பெரிய அறிவாளி. அவர் தமிழ்நாட்டில் பிறந்தவர். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பவுத்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கு அவருக்கு ஒரு சிந்தனைப் பிறந்தது, அறிவொளி உருவானது என்றுச் சொன்னால், தமிழ்நாட்டிற்கு வந்து பவுத்தத்தை அவர் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது என்றால் அயோத்திதாசப் பண்டிதரின் பேச்சும், எழுத்தும்தான் காரணம். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1891ஆம் ஆண்டு குழந்தையாகப் பிறக்கிற போது 1891 ஆம் ஆண்டு ஆதிதிராவிட மக்களுக்காக ‘மகாஜன சங்க’த்தை நடத்தி கொண்டிருந்தவர் மாவீரன் ரெட்டமலை சீனிவாசனார் அவர்கள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று ஆதிதிராவிடர் மக்களுக்கென்று சங்கம் வைத்து உருவாக்கி நடத்திக் கொண்டிருந்த காலத்தில்தான் அம்பேத்கரேப் பிறக்கிறார்.
ஆக, அம்பேத்கருக்கு முன்னோடி மாவீரன் ரெட்டமலை சீனிவாசனார் அவர்கள். ரெட்டமலை சீனிவானாரின் மைத்துனர்தான் அயோத்திதாசப் பண்டிதர். அயோத்திதாசப் பண்டிதர்தான் பகுத்தறிவு கருத்துகளை, பவுத்த கருத்துகளை இந்த மண்ணில் பரப்பியவர். பகுத்தறிவு கருத்துகளை தந்தை பெரியாருக்கு முன்னாள் பரப்பியவர்தான் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள். இது பலபேருக்குத் தெரியாது, தெரிந்தாலும் சொல்லவும் மாட்டார்கள். ஆக, வெறும் அறிவுக்காகப் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை நாம் தலைவராக நான் ஏற்றுக்கொள்ள இல்லை. தாழ்த்தப்பட்டவர் என்பதற்காக அவரைத் தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை. அவர், இந்த ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கா தன் வாழ்வை அற்பணித்துக் கொண்டார். அதற்கான விடுதலை அரசியலை தத்துவமாகவும் செயல் திட்டமாகவும் வழங்கியிருக்கிறார் என்பதுதான் அதற்கான அடிப்படைக் காரணம். அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டதற்கு அவருடைய அரசியல்தான் காரணம். அவர் வகுத்துத்தந்த செயல் திட்டங்கள்தான் காரணம். இந்த மண்ணில் ஒடுக்கப்பட்ட மக்கள், உழைக்கிற மக்கள் விடுதலைப் பெற வேண்டும் என்று அவர் சிந்தித்தார். எத்தனையோ மகான்கள் தோன்றினார்கள், எத்தனையோ மகாத்மாக்கள் தோன்றினார்கள், எத்தனையோ தலைவர்கள் தோன்றினார்கள், எத்தனையோ மன்னர் வந்தார்கள் யாரும் இந்த நாட்டில் அடிப்பட்டுக் கிடக்கிற உழைக்கிற மக்களைப் பற்றி கவலைப்படாமல் அவரவருக்கு வேண்டியதைப் பற்றி மட்டுமே சிந்தித்துப் போனார்கள்.
ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு சமூகம் சாதியின் பெயரால் தீண்டப்படாதவர்களாக அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள், திறந்தவெளி சிறைச்சாலையில் அடைப்பட்டுக் கிடக்கிறார்கள், உழைப்புச் சுரண்டப்படுகிறது, இழிவுப் படுத்தப்படுகிறார்கள். ஏன்? எதனால் என்று எந்த மகானும் சிந்தக்கவில்லை. அதை விடுவிக்க வேண்டும் என்று யாரும் எண்ண வில்லை. பரிதாபப் பட்டிருக்கலாம், பச்சாதாபம் பட்டிருக்கலாம், அடிமைப்பட்டிருப்பவனைப் பார்த்து பரிதாபப் படுவது அதைவிடக் கேவலமானது. ஓர் அடிமையைப் பார்க்கிற போது, அந்த அடிமைத் தனத்தைப் பார்த்து கொந்தளிக்க வேண்டுமேத் தவிர பரிதாபப் படக்கூடாது. அந்த அடிமையிடம்போய் அகிம்சையைப் போதிப்பது மிகப் பெரிய துரோகம். அடிமையிடம் ‘அடங்கமறு’ என்று சொல்லுவதுதான் அவனை விடுவிப்பதற்கான வழி. ‘அத்துமீறு’ என்று சொல்வதுதான் அவனை விடுவிப்பதற்கான வழி. அதைச் சொன்னவர்தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள். அவர் நினைத்திருந்தால் அவர் படித்தப் படிப்புக்கு அவருக்கு கிடைத்திருந்த வாய்ப்புக்கு அவர் எங்கோயோ சொகுசான வாழ்க்கையை நோக்கிப் போயிருக்கலாம். வெளிநாடுகளில் போய்த் தங்கி இருக்கிலாம். மிக உயர்ந்தப் பதவிகளை அவர் பெற்றிருக்கலாம். சொகுசான, சுகமான வாழ்க்கையை மட்டுமே அவர் நாடியிருக்கலாம். எல்லாத் துறைகளிலும் முணைவர் பட்டங்களைப் பெற்றவர். அரசியல்வாதிகள் பெறுவதைப் போல கவுரவ டாக்டர் பட்டங்கள் அல்ல. நிறையப் பேர் டாக்டர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார்கள். புரட்சியார் அம்பேத்கர் அனைத்துத் துறைகளிலும் – வரலாறு, பொருளாதாரம், அரசியல், தத்துவம், அறிவியல் அனைத்துத் துறைகளிலும் டாக்டர். இவையெல்லாம் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் உள்நாட்டுப் பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சி செய்து, அவருடைய அறிவான்மைக்கு வழங்கப்பட்ட பட்டங்கள். அப்படிப்பட்ட அந்தப் படிப்பை வைத்துக் கொண்டு மிக உயர்ந்த பதவியைப் பெற்று சொகுசான சுகமான வாழ்க்கையை அவர் அடைந்திருக்க முடியும். இன்றைக்குக் கல்வி அப்படிதானே இருக்கிறது. நாமெல்லாம் அப்படிதானே படிக்கிறோம். பி.ஏ. முடித்தவுடன் வேலை கிடைக்குமா? பி.எஸ்சி. படித்தவுடன் வேலை கிடைக்குமா? எம்.சி.ஏ. முடித்தவுடன் வேலை கிடைக்குமா? வேலை கிடைக்கக்கூடிய படிப்பு எது? வேலை கிடைக்கக்கூடிய வாய்ப்புள்ள படிப்பு எது? என்று வேலைக்காக கல்லூரிக்குப் போகிற படிக்கிற அந்தத் தற்குறிப்பு – படிப்பு என்பதே வேலைக்காகத்தான் படிப்பு என்பதே வருமானத்திற்காகத்தான். படிப்பு என்பதே தன்பிள்ளை, தன் குடும்பம் என்பதற்காகத்தான். என்கிற அளவில் தம்மைத்தாம் சுருக்கிக் கொள்கிறோம். புரட்சியாளர் அம்பேத்கர் அப்படி எண்ணி இருந்தால், அவரும் ஒரு வேலை தேடிக்கொண்டிருக்கக்கூடும். அவரும் தன்னுடைய வாழ்க்கை சுகமோகமாக அமைத்திருக்கக்கூடும்.
தன்னுடைய வாழ்க்கையை எண்ணாமல், ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான நூல்களை எல்லாம் படித்து இந்தச் சமூகத்தை ஆராய்ந்து இந்த மக்கள் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று இந்த உலகத்திற்குச் சொன்னவர். சேரி என்று சொன்னால், ஏதோ தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமே வசிக்கின்ற பகுதி என்று பலபேர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அது வரலாறு தெரியாத மூடர்களின் நம்பிக்கை அது. சேரி என்றால் எல்லா குடியிருப்புகளுக்குப் பெயர். பார்ப்பனர்கள் குடியிருக்கிறப் பகுதிக்கு பார்பனர் சேரி என்று பெயர். இடையர்கள் வசிக்கின்றப் பகுதிக்குப் பெயர் இடைச் சேரி, பள்ளர்கள் வசிக்கின்றப் பகுதிக்குப் பெயர் பச்சேரி, பறையர்கள் வசிக்கின்றப் பகுதிக்குப் பெயர் பறைச்சேரி. மீனவர்கள் வசிக்கின்றப் பகுதிக்குப் பெயர் மீனவச் சேரி. மக்கள் சேர்ந்து வசிக்கின்றப் பகுதிக்கு சேரி. அதுவொரு பொதுச்சொல். ஆனால், அவனவன் ஊர்ப் பெயரை மாற்றிக் கொண்டான், தன் பெயரை மாற்றிக் கொண்டான், தன் தெருப் பெயரை மாற்றிக் கொண்டு அடையாளத்தை மாற்றிக் கொண்டு ஓடிப்போய்விட்டான். தமிழும் இவனிடத்தில்தான் மிச்சம் இருக்கிறது; பழைய பாண்பாட்டு கூறுகளும் இவனிடத்தில்தான் மிஞ்சியிருக்கிறது. சேரி என்னும் சொல்லையும் இவன்தான் பாதுகாத்து வைத்திருக்கிறான். ஆக சேரி என்பது பார்ப்பனர் வசிக்கும் பகுதிக்குப் பெயரே சேரிதான். பார்ப்பன சேரி. பழங்கால இலக்கியங்களில் அதை நீங்கள் பார்க்க முடியும்.
வடமொழிகளுக்கு இங்கே வாசல் கதவு திறந்தப் பிறகு சிவப்பு கம்பளம் விரித்தப் பிறகு அது அங்ரஹாரம் என்று மாறி இருக்கிறது. வடமொழிகள் இங்கு எப்போது வந்தது என்றால் சமணத்திற்கும் வடமொழிக்கும் ஒரு தொடர்பு உண்டு. அதைக் கண்டறிந்து சொன்னவர்தான் புரட்சியாளர் அம்பேத்கர். இந்த அடக்கு முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் காரணம் பவுத்தத்திற்கும் சமணத்திற்கும் நடந்த வன்முறை வெறியாட்டங்கள்தான்.
இந்தியாவில் பவுத்தம் கோலோச்சியக் காலத்தில் சமணம் கோலோச்சியக் காலத்தில் பவுதத்தையும் சமணத்தையும் வேரறுப்பதற்காக இந்துத்துவம் ஆயுதத்தைக் கையில் ஏந்தியது. அப்போது இந்துத்துவம் இந்து மதமாக இல்லை. அப்போது அது சைவமாகவும் வைணவமாகவும் இருந்தது. வைணவம் வடக்கே வைதீக வைணவமாக இருந்தது. தெற்கே தென்கலை, வடக்கே வடகலை என்று சொல்லக்கூடிய வைணவமாக இருந்தது. வடக்கிருந்து வந்த வைதீக வைணவம் சைவத்தை அழிப்பதற்கு மிகப்பெரிய யுத்தத்தை நடத்தியது.
சைவத்திற்கும் வைணவத்திற்கும் போராட்டம் நடந்த காலம் அது. அதுதான் இராமாயணம். அதற்கான சான்று ஆவணம்தான் இராமாயணம். சைவத்தை அழிப்பதற்கென்று வைணவம் நடத்திய யுத்தத்தின் அடையாளமாகத்தான் இராமாயணம். உன்னை எப்படி அழித்தேன் பார் என்று காட்டுகிற கதைத்தான். இராவணன் சைவத்தின் அடையாளம், இராமன் வைணவத்தின் அடையாளம். வைணவம் எப்படி சைவத்தை அழித்தது என்று காட்டுகிற சான்று ஆவணம்தான் இராமாயணம். இது ஒரு வரலாறு நெடுகிலும் காணுகின்ற சுவடுகள். இது இரண்டும் ஒன்று சேர்ந்து எவையிரண்டும் வைணவமும், சைவமும் ஒன்று சேர்ந்து சமாதானமாகி, சமரசமாகி – பவுத்தத்தையும், சமணத்தையும் வேரறுப்பதற்குக் கூட்டுச் சேர்ந்து கொண்டது, மன்னர்களின் துணையோடு. பல்லவர் மன்னின் துணையோடும், பிற்கால சோழர்களின் துணையோடு, பிற்கால சேரர்களின் துணையோடு இவர்கள் எல்லாம் அன்றைக்கு பவுத்தத்தை, பவுத்த பிக்குகளை எங்கிருந்தாலும் தலையை அறுத்தார்கள், சமணர்களை எங்கிருந்தாலும் கொத்துகொத்தாய் கொலை செய்தார்கள். எங்கே பார்த்தால் அவர்களை நிர்வாணமாக கழுவில் ஏத்தி கொலை செய்தார்கள். எட்டாயிரம் சமணர்களை கழுவில் ஏற்றி கொலைச் செய்தார்கள்.
கழுவில் ஏற்றுதல் என்றால் சாதாரணமான கொலை அல்ல. கொடூரமான கொலை அது. மிகக் கூரிய மரத்தால் ஆன ஒரு கருவி. அந்தக் கூரிய மரத்தால் ஆனா கருவியில் எவனைக் கொலைச் செய்ய வேண்டுமோ அவனை நிர்வாணப்படுத்தி அழைத்துக் கொண்டுப் போய் இரண்டு கால்களையும் விரித்து அவனுடைய ஆசன வாயில் அந்தக் கூர்மையான பகுதியில் வைத்து அழுத்துவார்கள். அவன் அங்கேயே செத்து சாய்ந்து கிடப்பான். காக்கை, குருவிகள் வந்து அவனை கொத்தித் தின்றுவிட்டுப் போகும். அவ்வளவு கொடுமையாகக் கொலை செய்தார்கள். இந்துத்துவ வெறியர்கள். எட்டாயிரம் பேரை ஓரேயிடத்தில் படுகொலைச் செய்தார்கள். படுகொலை செய்துவிட்டு புதைத்தவிட்டுப் போகவில்லை. அவ்வளவு மோசமான முறையில் படுகொலைகள் எல்லாம் நடந்தது. ஏன்? சமணர்கள் இந்த மண்ணில் இருக்கக்கூடாது, பவுத்தம் இந்த மண்ணில் இருக்கக்கூடாது இரண்டையும் வேரறுத்தால்தான் இங்கே சைவம் பிழைக்கும். வைணவம் பிழைக்கும்.
ஆகவே, சைவத்தையும், வைணவத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் இரண்டும் ஒன்று சேர்ந்தது. ஒருகாலத்தில் இரண்டும் மோதிக்கொண்டிருந்தது. இரண்டும் ஒன்று சேர்ந்த காலத்தில்தான் சேர்த்து பெயர் வைத்தார்கள் ‘ஹரிகரன்’ என்றெல்லாம் பெயர் வைத்தார்கள். ஹரி என்றால் திருமால், ‘ஹரன்’ என்றால் சிவன். ஹரியும் சிவனும் ஒன்று அதை அறியாதவன் வாயில் மண்ணு. இந்த பழமொழிகள் எல்லாம் அப்போதுதான் வந்தது. அதற்கு முன்பு கிடையாது. அதற்கு முன்பு ஒருவனை ஒருவன் ஏமாற்றி சைவத்தில் இருப்பவனை ஏமாற்றி வைணவத்திற்குச் சேர்ப்பது, வைணவத்தில் இருப்பவனை மாற்றி சைவத்திற்குச் சேர்ப்பது என்கிற மதமாற்றம் அன்றைக்கு நடந்தது. அந்த மதமாற்றம் அன்றைக்கு நடந்தது.
இன்றைக்கு இஸ்லாமியத்தில் சேர்ப்பது, பவுத்தத்தில் சேர்ப்பது, கிறித்தவத்தில் சேர்ப்பது என்பது இன்றைய காலக்கட்டத்தில் நடந்துக் கொண்டிருக்கிற மதமாற்றங்கள். அதற்கு முன்பு சைவத்தில் இருந்து வைணவத்திற்கு, வைணவத்தில் இருந்து சைவத்திற்கும் மதமாற்றம் நிகழ்ந்தது. இன்றைக்கும் ஒருவனை ஒருவன் ஏமாற்றினால் பட்டை நாமத்தை சாத்திட்டானா என்றுதான் கேட்பார்கள். பட்ட நாமத்தை சாத்திட்டானா என்றால் என்ன அர்த்தம். பட்டையை நாமத்திற்கு மாத்திட்டானா? வைணவ மத்திற்கு மாத்திட்டானா என்று அர்த்தம். ஏமாற்றம் என்பது அந்தப் பொருளில் வந்ததுதான்.
அவ்வளவு மோசமாக சைவமும் வைணவமும் மோதிக்கொண்டிருந்தப் நிலையில், பவுத்தத்தையும் சமணத்தையும் வேரறுப்பதற்காக இருவரும் ஒன்று சேர்ந்து விழாவெல்லாம் எடுத்தார்கள். அப்படி உருவான விழாதான் மதுரையில் கல்லழகர் திருவிழா. கல்லழகர் திருவிழா என்பது மதுரையில் சொக்கநாதருக்கு நடத்துகின்ற விழாவிற்கும் அங்கே மலையில் இருக்கிற கல்லழகருக்கும் முடிச்சுப் போடுகிறார்கள். ஏனென்றால், அது வைணவ விழா, இது சைவ விழா. இரண்டுக்கும் இடையில் ஆற்றில் இறங்குகிற ஒரு சந்திப்பு நடத்துகிறார்கள். ஏனென்றால், சைவமும் வைணவமும் ஒன்றுதான். இரண்டும் ஓரிடத்தில் சேருகிறது. அதற்காக திருமலை நாயக்கர் நடத்திய விழா, ஒற்றுமையை உருவாக்குவதற்காக இடைப்பட்டக் காலத்தில் தோன்றிய விழாதான் இந்த விழா. இப்படி ஏராளமாகச் சொல்லலாம்.
ஏன் இதை இந்த இடத்தில் நான் சொல்கிறேன் என்றால், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் பண்பாட்டுத் தளத்தில் மிகப் பெரிய ஆராய்ச்சிச் செய்தார். இந்த சாதிகள் எப்படி உருவாயின. இந்த சாதியை யார் காப்பாற்றியது. இந்த சாதி எதற்காக தக்கவைத்திருக்கிறார்கள். இதை சிலர் முற்பிறவி அடிப்படையில் உருவானது. இவர்கள் எல்லாம் உயர்சாதியில் பிறந்துவிட்டார்கள். இவர்கள் தாழ்ந்த சாதியில் பிறந்து விட்டார்கள் என்பது இல்லவே இல்லை. சிலப் பேர் இவர்கள் குளிக்க மாட்டார்கள் அதனால் தாழந்த சாதி. இவர்கள் மாட்டுக்கறி தின்கிறார்கள் அதனால் தாழ்ந்த சாதி. இதெல்லாம் தவறான கருத்து. மாட்டுக்கறி தின்பவனெல்லாம் தாழ்த்தப்பட்ட சாதி என்றால், அமெரிக்காவின் அதிபர் ஜார்ஜ் புஷ் பறையன்தான். ஜார்ஜ் புஷ் தினமும் மாட்டுக்கறிதான் தின்கிறார். இங்கிலாந்து அதிபர் டோனி பிளேயர்கூட பறையர்தான். அவரும் மாட்டுக்கறி தின்கிறார். உலகத்தில் 99 சதவிகிதம் பேர் மாட்டுக்கறி தின்கிறார்கள். மாட்டுக்கறி தின்னாதவன் எவனும் கிடையாது. ஏனென்றால் மாட்டுக்கறி சிறந்த புரோட்டின். புரோட்டின் உள்ள ஒரு நல்ல உணவு. ஆனால், அதை என்னவோ ஒரு குறிப்பிட்ட சாதி மட்டும் தின்பதைப் போல இவர்கள் இழிவு படுத்துகிறார்கள்.
அவர்கள் பறை அடிப்பதனால்தான் பறையன் என்கிறார்கள் என்பதும் தவறு. பஞ்சம சாதி என்பது அஞ்சா சாதிதான் என்கிறான். வர்ணம் என்பது நால்வர்ணம் தான். அப்போது அஞ்சாவத சாதி எப்படி வரமுடியும். சதுர்வர்ணம் என்பது நல்வர்ணம்தான். தோளில் பிறந்தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன் என்று நால்வர்ணம் தான் – சதுர்வர்ணம். அதன்பிறகு எப்படி பஞ்சவர்ணம் எப்படி வரமுடியும். அஞ்சாவது ஒரு வர்ணம் இருக்க முடியாதே. அப்போது பஞ்சமன் என்கிற பெயர் எப்படி வந்திருக்க முடியும். பஞ்சச்சீல பழக்க வழக்கங்களை ஒழுக்கங்களை கடைபிடித்த சமூகம் பவுத்தச் சமூகம். இவன் பவுத்தனாக இருப்பதனால்தான் ஒடுக்கப்பட்டான். இந்த வரலாற்று உண்மையை உலகத்திற்குச் சொன்னவர் புரட்சியாளர் அம்பேத்கர்.
பவுத்தத்தை அடக்கி ஒடுக்கும் போது, பவுத்தத்தை வேரறுக்கும் போது இந்த மண்ணில் வன்னியர்கள் பவுத்தர்களாக இருந்தவர்கள்தான், செட்டியார்கள் பவுத்தர்களாக இருந்தவர்கள்தான், கவுண்டர்கள் பவுத்தர்களாக இருந்தவர்கள்தான், முதலியார்கள் பவுத்தர்களாக இருந்தவர்கள்தான், பிள்ளைமார்கள் பவுத்தர்களாக இருந்தவர்கள்தான். ஆனால், அன்றைய பல்லவ மன்னர்கள், பிற்காலச் சோழர்கள் இவர்களெல்லாம் பவுத்தத்திற்கு எதிராக யுத்தம் நடத்திய போது, அவர்களின் அடக்குமுறைகளுக்கு ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சி, பவுத்த பிக்குகளைக் கொலை செய்தபோது, அந்த அடக்குமுறைக்கு, வன்முறைக்கு அஞ்சி சமண சாமியார்களை எல்லாம் கொலை செய்தபோது, பவுத்த மடங்களைக் கொளுத்தியபோது, இதற்கெல்லாம் அஞ்சி நாங்கள் உங்கள் வழிகளை ஏற்றுக் கொள்கிறோம் என்று சரணடைந்தவர்கள் எல்லாம் சாதி இந்துக்களாக ஆனார்கள். சரணடையாமல் எங்கள் குலமே அழிந்தாலும் ஒட்டுமொத்த பரம்பரையே அழிந்தாலும் நாங்கள் சாதி அமைப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று எதிர்த்து நின்றவர்கள்தான் தாழ்த்தப்பட்டவர்களாக ஒடுக்கப்பட்டார்கள், அடக்கப்பட்டார்கள். சேரி என்னும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்கள் என்கிற வரலாற்று உண்மையை இந்த உலகிற்கு அளித்தவர்தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள். இதுதான் வரலாறு.
கடைசிவரையில் இந்த சதுர்வர்ணத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள். பவுத்த கொள்கையைத்தான் நாங்கள் ஏற்றுக் கொள்வோம். பவுத்த கொள்கை என்ன. அடித்தால்கூட திருப்பி அடிக்க மாட்டேன் என்கிறார்கள். பவுத்த கொள்கை என்ன கொலை செய்யக்கூடாது, பொய்ச் சொல்லக்கூடாது, மது அருந்தக்கூடாது, திருடக்கூடாது, இல்லற வாழ்வில் தனக்கென ஒரு மனைவியை ஏற்படுத்திக்கொண்டு அவளோடு மட்டும் இல்லற வாழ்வை நடத்த வேண்டும் இதுதான் பஞ்சசீலம் என்பது இதுதான். சீலம் என்பது இதுதான். பவுத்தத்தை இவர்கள் சமண மதத்தைப் பின்பற்றக்கூடியவர்கள், தனிநபர் ஒழுக்கத்தில் மிககக் கராராக இருந்தார்கள். இந்த இரண்டு மதத்தைப் போல தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்திய மதம் உலகத்தில் வேறெதுவும் கிடையாது.
அதற்குப் பின்னால் வேண்டுமானால் மற்ற மதங்கள் வந்திருக்கலாம். மது அருந்தக்கூடாது, திருடக்கூடாது, கொலைச் செய்யக்கூடாது, பிறன்மனையோடு தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது, இல்லற வாழ்வில் ஒரு தூய்மை. இது தனிமனித ஒழுக்கத்தில் முக்கியமான ஒழுக்கச் சீலங்கள். பொய் சொல்லக்கூடாது – இது தனிமனித உறவுகளைச் சிதைக்கும், தனிமனித உறவுகளைச் சிதைத்தால் பொது ஒழுங்குக் கெடும், பொது ஒழுங்குக் கெட்டால் இங்கே வன்முறை உருவாகும். ஆக, அமைதி கெட்டுப்போகும். இந்தச் சமூகம் அமைதியாக இருக்க வேண்டுமானால், பொது ஒழுங்குக் காப்பாற்றப்பட வேண்டும். பொதுஒழுங்கு காப்பாற்றப்பட வேண்டுமானால் – தனிமனித ஒழுக்கம் மிக முக்கியமானது. தனிமனித ஒழுக்கத்தை சீர்குலைப்பது இந்த அய்ந்து வகையானதுதான்.
பொய்ச் சொல்லும் போது பொது ஒழுங்குக் கெட்டுப் போகும். மதுஅருந்தும் போது மூளை கேட்டுப்போகும் – அப்போது அவன் எல்லாத் தவறுகளையும் செய்வன். மனிதனுடைய எல்லா உறுப்புகளும் கெட்டால்கூட அதைமாற்றிப் பொருத்திவிட முடியும். கை போனால் மாற்று கை வைத்து கொள்ளலாம். மூக்கு போனால் மாற்று மூக்கு வைத்து கொள்ளலாம். இதயம் போனால் வேறு இதயம் வைத்தக் கொள்ளலாம். ஆனால், மூளை போனால் வேறு மூளை வைத்துக்கொள்ள முடியுமா? இதுவரையில் விஞ்ஞானம் இதில் வெற்றி பெறவில்லை. மூளை பாதிப்படைந்தால் வேற்று மூளையை மாற்றிக் கொள்ளலாம் என்று விஞ்ஞானத்தால் சொல்ல முடியவில்லை. மதுவும் போதையும் மூளையைச் சீர்குலைக்கக்கூடியது. எனவே, மூளையை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். மிகச் சிறப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். சுறுசுறுப்பாக, உற்சாகமாக வைத்துக் கொள்ள வேண்டுமானால் எந்த மனிதனும் போதைக்கு அடியாகக்கூடாது. போதை பழக்கமே கூடாது. மது அருந்தவேக்கூடாது என்கிற சிறந்த ஒழுக்கத்தைச் சொன்ன சிறந்த முதல் மார்க்கம் பவுத்தம்.
ஆக, இந்த பவுத்தம் சொன்ன பஞ்சசீலத்தை பின்பற்றிய காரணத்தினால் பஞ்சமர்கள் என்று அழைக்கப்பட்டிருக்கக்கூடும் என்பது எனது கருத்து. அந்த அடிப்படையில்தான், பஞ்சமர் என்கிறப் பெயர் வந்திருக்கக்கூடும். பஞ்சமன் என்றால் அய்ந்தாவது சாதி என்று இருக்க வாய்ப்பே இல்லை என்பது என்னுடைய கருத்து. அதனால்தான், வன்முறைகளைக் கொண்டு ஒதுங்கிப் போனார்கள், வன்முறைக்கு வன்முறையை இவன் கையில் எடுக்க வில்லை. இவனுடைய வீட்டை எவன் கொளுத்துரானோ அவனுக்கே இன்றைக்கும். ஓட்டுப்போடுவன். சேரிக்குள்ளே புகுந்து தீ வைத்து கொளுத்திவிட்டு போய்விடுவான். தீ கொளுத்துகின்ற பழக்கம்கூட இவனுக்கு எப்படி வந்தது என்றால் இவன் பவுத்தப் பள்ளிகளை கொளுத்துகின்ற பழக்கம், அவனுடைய வாரிசுகள் இன்றைக்கு சேரியைக் கொளுத்துகின்றார்கள் இது பரம்பரை பரம்பரையாக வருகிறது. ஒரு மனிதன் தப்பு செய்தால் அவனைப் பிடித்து போலிஸ்கிட்ட கொடுக்கலாம். ஒருவன் தப்பு செய்தால் அவனுடைய ஊரையே கொளுத்துகிறவனின் மனநிலை எப்படிப்பட்ட மனநிலை என்று பாருங்கள். மனித நேய மில்லாத மனநிலை. அது எங்கிருந்து வருகிறது. மதச் சண்டைகள்தான் சாதிச் சண்டைகளாக பரிணாமம் அடைந்திருக்கிறது. இவன் இசுலாத்திற்குப் போனால்கூட விடமாட்டேன் என்கிறார்கள். இவன் என்ன அரபு இசுலாத்தோடுவா சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறான்.
ஏற்கனவே இந்த மண்ணில் பவுத்தனாக இருந்து தாழ்த்தப்பட்டவனாக அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டவன் மறுபடியும் இசுலாத்துக்குப் போகிறபோதுதான், உன்னை இசுலாத்துக்குப் போனாலும் உன்னை விடமாட்டேன் என்று அங்கேயும் விரட்டிக் கொண்டுபோய் தாக்குகிறான். அதுதான் இன்றைக்கு இந்து இசுலாம் சண்டை. இது வெறும் அரபு முசுலிமுடன் ஏற்படுகிற சண்டை அல்ல. அவனோடு இவனுக்கு உறவுதான் இருக்கிறது. உண்மையில் இவனுக்கு இசுலாத்தோடு வெறுப்பிருந்தால் அரபு முசுலிம்முடன் இவனுக்கு எந்த உறவும் இருக்கக்கூடாது. இந்தியாவில் இருக்கக்கூடிய முஸ்லிம்களுடன் பகை இருப்பது தொப்புள்கொடி பகை. ஏனென்றால், அவன் தொடக்கக் காலத்தில் பவுத்தனாக இருந்து தாழ்த்தப்பட்டவனாக ஒடுக்கப்பட்டு கிறித்தவனாக, இசுலாத்தாக மாறுகிறான். நீ எங்கு போனால் உன்னைவிடமாட்டேன் என்பதுதான் இதன் அடிப்படைக் காரணம்.
ஆக, இந்த மண்ணில் சாதி உருவானது. சாதியை பாதுகாத்தது. சாதியின் பெயரால் இந்த ஒடுக்குமுறை நிலவியது. அதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் பவுத்ததிற் எதிரான வன்முறை. சமணத்திற்கு எதிரான வன்முறை. இதுதான் மிக முக்கியமான காரணம். இந்த வரலாற்றைச் சொன்னவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர்கள் யாரும் தலைகுனிய வேண்டிய அவசியம் இல்லை. இந்த மண்ணின் மைந்தர்கள், இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள். இந்த நாடு நாகர்களின் நாடாக இருந்தது. நாகர்கள் அவர்கள்தான் முந்திய காலத்து பவுத்தர்கள். அவர்கள் சங்க காலத்துத் தமிழர்கள். அவர்கள்தான் முந்திய காலத்துத் திராவிடர்கள். இது புரட்சியாளர் அம்பேத்கர் சொல்லுகிற வரலாற்று ஆய்வில் கண்ட உண்மை.
ஆனால், அவைகள் எல்லாம் வெவ்வேறு படையெடுப்புகளால், வெவ்வேறு இனக் கலவரங்களால், புதிய புதிய மொழி உண்டாகி, வெவ்வேறு இனங்களாக பரிணாமமடைந்து இன்றைக்கு தேசிய இன உரிமைகள் என்று பரிணாமம் பெற்று, தேசிய இன விடுதலைப் போராட்டங்களாக மாறி இன்றைக்கு அரசியல் கலத்தில் பல்வேறு பரிமாணங்கள் உருவாகி இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் அடிப்படை அரசியலைத் தந்த ஒரு மாபெரும் மனிதன் தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள். தேசிய இன அரசியலைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா? அம்பேத்கரைரின் அரசியல் அறிவு அதற்கு அடித்தளம் வகுத்திருக்கிறது.
மொழியைப் பற்றிச் சொல்லுகிறார். இந்தியை திணிக்காதே என்கிறார். அவர் சொன்னது ஒரு வலுவான மத்திய அரசு உருவாக வேண்டுமானால், ஒரு மொழியை ஆளுமைச் செலுத்துகிற மொழியை உருவாக்க விரும்பினாலும் திணிக்கக்கூடாது. பிற மொழிகளை மதிக்க வேண்டும். பிற மொழிகளின் உரிமையை மதிக்க வேண்டும். டெல்லியில் மட்டுமே தலைநகரம் வைத்திருக்கக்கூடாது. அய்தராபாத்தில் சில நாட்கள் நீங்கள் தலைநகரத்தை வைத்திருக்க வேண்டும். இந்தியாவில் இரட்டைத் தலைநகரம் தேவை. இந்தியாவை நீ பெரிய வல்லரசாக வளர்க்க வேண்டுமானால், அயல் நாடுகளோடு இருக்கக்கூடிய பகைகளை நீங்கள் கைவிட வேண்டும். அயல்நாடுகளோடு இருக்கிறப் பகை நடுநிலைமை என்கிறப் பெயரால் நீங்கள் இராணுவத்திற்கு நூற்றுக்கு எண்பத்திரெண்டு சதவிகிதம் வீணாக பணத்தை விரையமாக்குகிறீர்கள். இது புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் கருத்து ஜவகர்லால் காலத்தில் நடந்தது.
இன்றைக்கும், பாகிஸ்தானுக்கு பயந்து கொண்டு நிதிநிலை அறிக்கையில் பெரும்பான்மையானத் தொகை எதற்காகச் செலவு செய்யப்படுகிறது.
கல்விக்காகவா, சுகாதாரத்திற்காகவா, மருத்துவத்திற்காகவா, அடிப்படை வசதிக்காகவா, குடிநீர்திட்டத்திற்காகவா, தார்ச்சாலை மேம்படுத்துவதற்காகவா எல்லைத் தாண்டி பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காக காஷ்மிரைச் சுற்றி வீரர்களை நிறுத்துவதற்காக, இங்கே கன்னியாகுமரியைச் சுற்றி விடுதலைப் புலிகள் ஊடுருவி உள்ளே வந்துவிடக்கூடாது என்பதற்காக 24 மணி நேரமும் இராணு வீரர்களை நிறுத்தி வைத்து விட்டு அதற்காகக நீங்கள் செய்கிற செலவுதானே இந்தியாவில் பெரும்பான்மையாக வீணாகிக் கொண்டிருக்கிறது. ஆக, இந்திய நாட்டின் வெளியுறவுக் கொள்கை தவறானது. அதனால், இந்தியாவின் வருமானத்தில் பெரும் பகுதி வீணாகிறது என்கிற கருத்தைச் சொன்னவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள். ஜவகர்லால் நேரு அவர்களின் நிதிநிலைக் கொள்ளை தவறானது என்று அடித்துச் சொன்னவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்.
அம்பேத்கர் அவர்களின் விடுதலை அரசியல் தன்மைத்தான் என்னைத் தலைவராக ஏற்றுக் கொள்ள வைத்தது. நான் கற்றுக் கொள்ள வேண்டியச் செய்தி அவரைப் போலத் தலைமைப் பண்புள்ளவர்களாக நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். சமூக அக்கறையுள்ள தலைமைப் பண்புள்ளவர்களாக நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். அதுதான் அம்பேத்கர் அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து மேலாதிக்க வாதிகளின் மிகப் பெரிய அடக்கு முறைகள், ஒடுக்கு முறை இருட்டடிப்புகளில் இருந்து மீறி புரட்சியாளர் தனித்து ஒளிர்ந்திருக்கிறார், ஒளிவீசிக் கொண்டிருக்கிறார் என்றால் அவருடைய அளப்பறிய தலைமைப் பண்புதான் காரணம்.
தலைமைப் பண்பு என்றால் ஏதாவது ஓர் இயக்கத்திற்கு தலைவனானால்தான் அந்த பண்பு வேண்டும் என்று எண்ணிவிடக்கூடாது. பெண்ணாப் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குடும்பத் தலைவியாகப் போகிறோம். ஆணாய் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குடும்பத் தலைவனாகப் போகிறோம். ஒரு நிறுவனத்திற்கு தலைவனாகப் போகிறோமோ இல்லையோ? ஒரு துறைக்குத் தலைவனாகப் போகிறோமோ இல்லையோ? கல்லூரிக்குத் தலைவனாகப் போகிறோமோ இல்லை? ஒரு குழுவுக்குத் தலைவனாகப் போகிறோமோ இல்லையோ? ஆனால், கட்டாயம் ஒவ்வொரு ஆணும் ஒரு குடும்பத்திற்குத் தலைவனாகப் போகிறான். கல்யாணம் பன்னாமல் யாராவது இருப்பார்களா? ஆகக் ஒவ்வொருவரும் குடும்பத் தலைவனாக ஆகிற ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
தலைமைப் பண்பை எங்கிருந்து கற்றுக் கொள்வது, நமக்குச் சொல்லித் தருகிற பாடப் புத்தகத்தில் இருந்து கற்றுக் கொள்ளக்கூடியது இல்லை. அது மக்களிடமிருந்து கற்றுக் கொள்வது. மக்களிடம் இருந்து எப்படிக் கற்றுக் கொள்வது? அது மனித நேயத்தில் இருந்து கற்றுக் கொள்ளக்கூடியது. மனித நேயம் எங்கிருந்து கற்றுக் கொள்ள முடியும் மனிதர்களை முதலில் மனிதர்களாக மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மனிதர்களை மனிதர்களாகக் கருதாமல் வேறு எப்படி நாம் கருதுகிறோம். மனிதர்களை நாம் மனிதர்களாகக் கருதவில்லை? அவர்களை நாம் சாதிவாரியாக பார்க்கிறோம். இவன் தாழ்த்தப்பட்ட சாதி இவன் நம் சாதி, இவன் வேறு சாதி, இவன் வேறு சாதி, இவன் இந்து மதம், இவன் கிறித்தவ மதம் என்று மனிதர்களை மதவாரியாகப் பார்க்கிறோம். இதைவிட கீழான புத்தி வேறு எதுவாகவும் இருக்க முடியாது? நீ எவ்வளவுப் பெரிய விஞ்ஞானியாக இருந்தாலும், நீ எவ்வளவுப் பெரிய வரலாற்று ஆராய்ச்சியாளராக இருந்தாலும், நீ எவ்வளவுப் பெரிய சிந்தனையாளனாக இருந்தாலும் – அர்ப்பன் என்றுதான் பொருள். மனிதனை மத அடிப்படையில் ஒருவன் அனுகினால், மனிதனை ஒருவன் சாதிய அடிப்படையில் அனுகினால், மனிதனை மொழி அடிப்படையில் ஒருவன் அனுகினால் அவன் அர்ப்பன் என்றுதான் பொருள். மனிதனை ஒருவன் மனிதனாக அனுகவேண்டும்.
சாதி அடிப்படையைப் பார்த்து இவன் நட்பு வைத்துக் கொள்கிறான். இவனோடு நட்பு வேண்டுமா? வேண்டாமா? சாதி அடிப்படையில் காதலைத் தீர்மானிக்கிறார்கள். காதல் மலருகிறபோது சாதியைக் கேட்டுக் கொள்வார்கள். சாதியைக் கேட்டுக் கொண்ட பிறகு அய்யய்யோ நீ வேறு சாதி நான் வேறு சாதி அதனால், இது ஒத்துவராது காதல் வேண்டாம் என்று அங்கே முடித்துக் கொள்கிறார்கள். எப்படி இது பொருத்தமாக இருக்க முடியும் எப்படி இது சரியாக இருக்க முடியும். ஆக, மனித உறவுகள் சாதி அடிப்படையில் தீர்மானிக்கிப் படுகிறது. மனித உறவுகள் மத அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. மனித உறவுகள் மொழி அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்று சொன்னால் அவன் மனிதனாகவே இலலை என்று பொருள். ஆகவே, அவனிடத்தில் மனித நேயம் இல்லை என்று பொருள். மனிதனை மனிதனாக அனுகிறபோது அங்கே மனித நேயம் மலரும். மனித நேயம் மலருகின்ற இடத்தில் தான் மனிதம் மலரும். அங்கேதான் தலைமை பண்புகள் முகிழ்க்கும்.
ஆக, மனித நேயம் இல்லாத இடத்தில் தலைமைப் பண்புகள் வளரவே வளராது. அவன் பழிவாங்கும் குணமுள்ளவனாக இருப்பான். அவன் மற்றவர்களைச் சுரண்டக்கூடிய பண்புள்ளவனாகத்தான் இருப்பான். அவன் மற்றவர்களை இழிவுப்படுத்தக்கூடியவனாகத்தான் இருப்பான். மற்றவர்களை ஏய்கக்கூடியவனாகத்தான் இருப்பான். தன்னுடைய ஆற்றலை எண்ணிப் பெருமைப்படக்கூடியவனாகத்தான் இருப்பான். மற்றவனைப் பழிவாங்கிவிட்டு நான்குச் சுவர்களுக்குள்ளே இருந்துக் கொண்டு மகிழ்ச்சி அடையக்கூடியவனாகத்தான் இருப்பான். அவன் மனிதன் அல்ல அவன் மிருகம். அதுத் தலைமைப் பண்பு அல்ல – அது மிருகப் பண்பு.
ஆகவே, புரட்சியாளர் அம்பேத்கர் என்கிற மாமனிதரிடம் நாம் கற்றுக் கொள்ளக்கூடிய ஒற்றைச் செய்தி நாம். பாடபுத்தகங்களில் இருந்த படித்து நாம் வகுப்புகளில் இருந்து படித்து வெற்றிப் பெறுவதற்கானது. வாழ்க்கையில் இருந்து வெற்றிப் பெறுவதற்கானது அல்ல. நாம் மக்களிடமிருந்து படிப்பது வாழ்க்கையில் வெற்றிபெறுவது. ஆகவே, மக்களைப் படிக்க வேண்டும் என்பது புரட்சியாளர் அம்பேத்கரிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியச் செய்தி அந்த வகையில் புரட்சியாளர் அம்பேத்கரை நீங்கள் ஒரு புதியக் கோணத்தில் பார்க்க வேண்டும். அவர் தாழ்த்தப்பட்டவர் என்றோ, சேரிக்காரர் என்றோ அவர் தாழ்த்தப்பட்டத் தலைவருக்காக மட்டும் பாடுபட்டத் தலைவர் என்றோ நாம் குறுகியப் பார்வையில் பார்த்தால் புரிந்துக் கொள்ள முடியாது.
இத்தனைக் காலமும் கம்யூனிஸ்டுகளே இப்படித்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அம்பேத்கர் என்றால் தாழ்த்தப்பட்டச் சிந்தனையாளர் என்கிற அளவில்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் கம்யூனிஸ்டுகளே அம்பேத்கரைப் பற்றி படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த பத்து இருபதாண்டுகள்தான் இந்திய மண்ணில் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் தன்னியல்பாக எழுச்சிப் பெற்று வருகிறார்கள். தலைகீழாய் மாற்றம் நடைபெற்று வருகிறது. ஒரு காலத்தில் கோயிலில் தாழ்த்தப்பட்டவன் நுழைந்தால் கோயிலில் தீட்டுப்பட்டுவிடும். இன்றைக்கும் இது நடந்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தாழ்த்தப்பட்ட பெண்மணி மத்தியப் பிரதேசத்தில் கோட்டைக்குள் நுழைந்துவிட்டார், நாற்காலியில் அமர்ந்து விட்டார் செல்வி மாயாவதி. என்ன செய்யப் போகிறார்கள். கோயிலுக்குள் நுழைந்தால் கோயில் தீட்டு. கோட்டைக்குள் நுழைந்தால் நாடே தீட்டுப்பட்டுவிட்டது என்றுதானேப் பொருள். நாட்டைவிட்டே ஓடிவிடுவார்களா! மற்ற சாதிக்காரர்கள் எல்லாம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகி விடுவார்களா? அய்.ஏ.எஸ். அதிகாரிகள் எல்லாம் சட்டையை கழற்றிவிட்டு ஓடிவிடுவார்களா? போலிஸ் அதிகாரிகள் எல்லாம் காக்கிச் சட்டையை கழற்றிவிடுவார்களா? தாழ்த்தப்பட்டவன் அதிகாரத்திற்கு வரக்கூடாது, அதிலும் ஒரு பெண்மணி வரக்கூடாது என்பதுதானே இந்துத்துவத்தினுடைய அடக்குமுறை.
தலித்துகளுக்கும் பெண்களுக்கும் ஓரேவிதமான அடக்குமுறைதான் ஒரே விதமான அடக்குமுறை. தாழ்த்தப்பட்டவனுக்கும் தீட்டு உண்டு பெண்களுக்கும் தீட்டு உண்டு. தாழ்த்தப்பட்டவனும் கோயிலில் நுழையக்கூடாது, பெண்களும் கோயிலுக்குள் நுழையக்கூடாது. தாழ்த்தப்பட்டவனும் படிக்கக்கூடாது, பெண்களும் படிக்கக்கூடாது. தாழ்த்தப்பட்டவனும் அதிகாரத்திற்கு வரக்கூடாது, பெண்களும் அதிகாரத்திற்கு வரக்கூடாது. தாழ்த்தப்பட்டவனும் கருத்துச் சொல்லக்கூடாது, பெண்களும் கருத்துச்சொல்லக்கூடாது. தாழ்த்தப்பட்டவனும் விரும்புகிற உடையை உடுத்தக்கூடாது, பெண்களும் விரும்புகிற உடையை உடுத்தக்கூடாது. இதுதான் இந்துத்துவத்தினுடைய அடக்குமுறை.
இதை உடைத்தெறிய கிளம்பியவர்தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும், தந்தை பெரியார் அவர்களும். ஆகவே, ஒரு மாபெரும் விடுதலை அரசியலுக்கு வித்திட்டவர்தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள். அவரை ஒரு விடுதலை வீரராய் ஒரு விடுதலை சக்தியாய் நாம் பார்க்க வேண்டுமேத் தவிற அவரை ஒரு சாதியச் சக்தியாய் ஒரு காலத்திலும் நாம் பார்க்கவேக்கூடாது. அவர் ஒரு சாதி ஒழிப்புப் போராளி. சாதி ஒழிப்புக்கான புரட்சியாளர் என்பதை இந்த நேரத்தில் சொல்லி சமண மதம் என்கிற ஒரு மகத்தான மதம் இந்த மண்ணில் இன்றைக்கம் துளிர்விட்டு மனித நேய அடிப்படையில் மக்களுக்குத் தொண்டாற்றி வருகிறது. ஒரு காலத்தில் இந்துத்துவம் மிகக் கடுமையாகச் சிதைத்தாலும் அது மேலும் வலிமைப் பெற்று இன்றைக்கு மக்கள் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறது. அது முற்றிலுமாக அழிந்துவிடவில்லை. ஒரே ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன்.
திருஞானச் சம்பந்தர் திருமணத்தைப் பற்றி ஒரு ஆராய்ச்சியாளர் எழுதுகிறார் “பார்ப்பனச் சமூகத்தைச் சார்ந்தவர்கள் எல்லாம், விருந்துக்கு அழைக்கப்பட்டு விழாவிற்கு வருகிறார்கள். வந்த இடத்தில் திருமணப் பந்தல் தீபிடித்துக் கொள்கிறது. அவர்கள் எல்லாம் பந்தலை விட்டு தப்பித்துக் கொள்வதற்காக ஓடுகிறார்கள். ஒருபுறம் யானை மிரட்டுகிறது, இன்னொரு புறம் காளை மிரட்டுகிறது, அவர்கள் அஞ்சி மறுபடியும் தீப்பிடித்த மந்தலுக்கே ஓடிவருகிறார்கள். அந்தப் பந்தலுக்குள் சிக்கி, தீயிக்குள் சிக்கி அவர்கள் செத்துப் போகிறார்கள் ” என்பது செய்தி. இதை ஆன்மிக வாதிகள், சைவவாதிகள் எப்படி எழுதுகிறார்கள் என்றால், சிவனே அங்கு ஊழித்தீயாக அங்கே வந்த சிவன் பக்தர்கள் எல்லாம் என்று அவர்கள் எல்லாம் ஆட்கொண்டு விட்டார், என்று அவர்களுடைய புராணங்களில் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஆனால், அந்த ஆராய்ச்சியாளர் என்ன எழுதுகிறார்கள் என்றார், திருஞானச் சம்பர்ந்தர் திருமண விழா நடந்தபோது, அங்கே சுற்றுவட்டாரத்தில் இருந்த பவுத்தர்கள் சமனர்கள் சைவ மதத்திற்கும், வைணவ மதத்திற்கும் இருந்த முரண்பாடுகள் காரணமாக அந்த திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அதன் காரணமாக அந்தத் திருமணத்தில் பிரச்சனை வந்துவிடுகிறது. அந்த திருமணத்திற்கு வந்தவர்களை அவர்கள் எதிர்க்கிறார்கள். அந்த எதிர்ப்பில் சண்டையில் திருமணப் பந்தலில் தீ வைத்துவிடுகிறார்கள். அப்படி தீ வைத்தவுடன் அங்கு வந்து திரண்டு தப்பிப்பதற்காக ஒருபுறம் ஒடுகிறார்கள் அப்படி ஓடும்போது பிள்ளையார் சிலை அவர்களைக் கண்டு உருட்டி மிரட்டியது என்றும் அவர்கள் சிலையைக் கண்டு மிரண்டு ஓடிவந்தார்கள் என்று எழுதுகிறார்கள். ஆனால், அது பிள்ளையார் சிலை அல்ல.
அது பிள்ளையார் சிலை அல்ல. இன்றைக்கு பிள்ளையார் சிலை இந்து மதக் கடவுள் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அது புத்தருடைய இன்னொரு வடிவமாகச் சொல்லப்படுகிறது. பிள்ளையார் என்பது பவுத்தரின் இன்னொரு வடிவம். கவுதம புத்தரின் கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் இங்கே வராதீர்கள் இங்கே வந்தால் வெட்டுவோம் என்று மிரட்டுகிறார்கள். அதைத்தான் அவர்கள் வேறு வடிவத்தில் சொல்கிறார்கள். அங்கேப் பிள்ளையார் என்பதை யானை வடிவத்தில் சொல்கிறார்கள் தும்பிக்கையை சுழட்டுகிறது. கவுதம புத்தரை ஏற்றுக் கொண்டவர்கள் மிரட்டுகிறார்கள். இந்தபுறம் காளை மிரட்டுகிறது என்றால் சிவபெருமானை குறிப்பது. இன்று சிவன் கோயிலுக்கு முன்னாள் இருக்கிற நந்தி – அந்த நந்தி என்பது சமணர்களின் அடையாளம். ஒரு காலத்தில் சமனர்கள் நாட்டை ஆண்டபோது அவர்களின் நாணயத்தின் ஒரு பக்கத்தில் சின்னமாக வைத்திருக்கிறார்கள். இதுவும் வரலாற்றில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த உண்மை. இன்றைக்கு நாணயம் இருக்கிறதே அதில் நான்கு முகம் சின்னம் அதைப் போல அன்றைக்கு சமணர்கள் அந்த நாணயத்திற்குப் பின்னால் காளை யை பதித்திருக்கிறார்கள். சமண மதத்தை அழித்தப்பிறகு அந்த நந்தியை அழைத்து வந்து சிவபெருமான் கோயிலுக்கு முன்னால் வைத்துக் கொண்டார்கள். நந்தி பிற்காலத்தில்தான் சிவபெருமான் கோயிலுக்குள் வந்தது. அது தொடக்கக் காலத்தில் வந்தது. நந்தி என்பது சமண மதத்தின் அடையாளம். சமணர்களின் அடையாளம். அது சைவ மதத்தின் அடையாளம் அல்ல. அது பிற்காலத்தில் கொண்டு வந்து கோயிலில் நிறுவப்பட்டது என்று சொல்லப்படுகிறது. ஆகவே, காளை மிரட்டியது என்றால் ஒரு புறம் சமணர்கள் மிரட்டினார்கள், ஒருபுறம் யானை மிரட்டியது என்றால் அது பவுத்தர்கள் மிரட்டினார்கள். ஆக ஒருபுறம் பவுத்தர்களும், மறபுறம் சமணர்களும் மிரட்டிக் கொண்ட வந்தார்கள். அதற்கு அஞ்சி தீக்குளித்தப் பந்தலுக்குள் வந்து மாட்டிக் கொண்டதால் அனைவரும் செத்துப் போனார்கள். இந்த சம்பவத்தை அதில் பதிவு செய்திருக்கிறார்கள்.
ஆக திருஞானச் சம்பந்தர் அவர்களுக்கு திருமணம் நடக்கின்றபோது, சைவத்திற்கும் பவுத்தத்திற்கும் சமணத்திற்கும் இடையில் இருந்த சிக்கல்கள் வேறுவடிவத்தில் சொல்லப்பட்டிருக்கிறது எதற்கு இந்த இடத்தில் நான் சொல்கிறேன் என்றால், அவ்வாறெல்லாம் ஆளுமை செய்து கொண்டிருந்த சமணம், ஆளுமைச் செய்துக் கொண்டிருந்த பவுத்தம் அந்தக் காலத்தரில் வணிகம் செய்ய வந்தவர்களால் அது பெரும்பான்மையாக ஆக்கிரமிப்புச் செய்த மதமாக இருந்தக் காரணத்தினால் அவர்கள் வணிக வர்க்கமாக இருந்தக் காரணத்திலனால், இங்கிருந்த சைவத் தமிழர்களால் எதிர்க்கப்பட்டது. அது வன்முறை வெறியாட்டமாக மாறியது. இங்கிருந்து மன்னர்களின் துணையோடு அடக்குமுறையாக, ஒடுக்குமுறையாக மாறியது. அப்படி அடக்குமுறை ஒடுக்குமுறையால் பவுத்தமும் சமணமும் வேரறுக்கப்பட்டபோது, அந்த பவுத்தத்தைப் பின்னபற்றியவர்களில் அடக்குமுறையால் ஒடுக்குமுறையால் ஒடுக்கப்பட்ட மிச்சமானர்கள்தான் சேரிமக்களாய், தாழ்த்தப்பட்டவர்களாய் இன்னும் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் . இவர்கள் பின்தங்கியதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை என்று சொன்னவர்தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள். அப்படிப்பட்ட வரலாற்றுச் சுவடு கொண்ட சமண மதத்தைச் சார்ந்தவர்கள் இன்றைக்கு அதே வழிவந்த தாழ்த்தப்பட்ட பின்தங்கிய ஏழை எளிய மக்களுக்கு கல்வி நிறுவனத்தை உருவாக்கி இன்றைக்கு கல்வியை கற்றுத் தருகிறார்கள். அந்த மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறார்கள். அவர்களை மேம்படுத்தத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தொடக்கக்காலத்துத் தொண்டு இன்னும் தொடர்கிறது என்று எண்ணுகிறபோது, இந்தச் சமணத்தின் தொண்டு மேலும், மேலும் வளரவேண்டும், பண்பாட்டு உறவுகள் தொடர வேண்டும் என்று இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி புரட்சியாளர் அம்பேத்கர் என்கிற மாமனிதர் விடுதலைக்கான வழிகாட்டி என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்டி ஆண்டுதோறும் நீங்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழாவை நீங்கள் கொண்டாட வேண்டும் என்கிற வேண்டுகோளை முன்னெடுத்து, இந்த விழாவிற்கு என்னை அழைத்துச் சிறப்பித்தமைக்காக கல்லூரி நிர்வாகத்திற்கும் கல்லூரி முதல்வர் அவர்களுக்கும் கல்லூரி தாளாளர் அவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு பொதுவாழ்வில் இருக்கிறேன் என்பதற்காக நானொரு வேண்டுகோள் விடுக்கிறேன். நான் வந்ததும் கல்லூரிப் பேராசியர்கள் சிலப்பேர் என்னிடத்தில் ஒரு மனுத் தந்தார்கள். அவர்கள் நிர்வாகத்தால் நடவடிக்கைக்கு ஆளானவர்கள் என்பது தெரியவருகிறது. அவர்களையும் அரவணைத்து அவர்களை மறுபடியும் நிர்வாகத்தில் இணைத்து அவர்களுக்கு மறுபடியும் வாய்ப்பைக் கொடுக்க வேண்டும் என்கிற வேண்டுகோளை நான் ஒரு பொதுத் தொண்டன் என்கிற அடிப்படையில் நம்முடைய தாளாளர் ரமேஷ் மேத்தா அவர்களுக்கு வேண்டுகோளாக விடுத்து வாய்ப்புக்கு நன்றிகூறி விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்.
8.4.2008 ஜெயின் கல்லூரியில் ஆற்றிய உரை