கனம் தங்கிய ரெவரண்ட் சி.எப். ஆன்று(Charles Freer Andrews)அவர்களும் சென்சஸ் உத்தேசமும்.
பண்டித அயோத்திதாசர்
“இந்து சாதியோருக்குள்ள வகுப்புகளை விவரமாகக் கண்டறியவேண்டு மென்னும் ஆலோசனைக் கொண்டுள்ள சென்செஸ் கமிஷனரவர்களின் உத்தேசத்திற்கு மாறுதலாக ரெவரெண்டு ஆன்று அவர்கள் தோன்றி தனதபிப்பிராயங்களை வெளியிட்டுள்ளார். அவை யாதெனில் இந்துக் கோவிலுக்குள் போகாதவர்களாய் இருப்பினும் , இந்துவென்று கூறுவோர்களை யாதொரு மறுப்புமின்றி இந்துவென்றே எழுதிக் கொள்ளவேண்டும் என்கின்றார். இவற்றுள் இந்துக்களென்போர் பெருந்தொகையோரெனக் காட்டி தங்கள் சுகத்தைப் பெருக்கிக்கொள்ளுவதற்கு சகலரையும் இந்துக்களென்றே அபிநயித்து தங்கள் காரியம் முடிந்தவுடன், அப்பா நீங்கள் இந்துக்களென்றால் உங்கள் உட்பிரிவுகளென்ன, இந்துக்களுக்குள் தீண்டாதவர்களுமிருக்கின்றார்கள் அவர்களுக்கெல்லாம் சமரச ஆட்சி கொடுக்கலாமா, அது சாதியாசாரத்திற்கு முறணாச்சுதே என்று கழித்துவிட்டு ஏழைகளை முன்னேறவிடாதுச் செய்துக்கொள்ளுவார்கள்.
அப்போது நமது ரெவரெண்டு ஆன்று அவர்கள் தவிக்கு முயலை அடிப்பதுபோல் ஏழைகளை தமது மதத்திற் சேர்த்துக்கொண்டு தங்கள் கூட்டத்தைப் பெருக்கத்தக்க சுயப்பிரயோசனத்தை நாடி வாழைப்பழத்தில் ஊசியை நுழைப்பதுபோல தமதபிப்பிராயத்தைக் கொடுத்துவிட்டார். இந்துக்களென்போரை இந்துக்களென்றே எழுதிக்கொள்ளும்படி அபிப்பிராயங் கூறும் பாதிரியாரவர்களிடம் ஒரு மனிதன்வந்து நான் கிறீஸ்தவனென்று கூறியவுடன் அவனை ஒன்றுங் கேழ்க்காமல் சேர்த்துக் கொள்ளுவரோ. புரோட்டிஸ்டாண்டு கிறீஸ்தவனா, கத்தோலிக்குக் கிறீஸ்தவனா, யூனிட்டேரியன் கிறீஸ்தவனாவென மூன்றிலொன்றைக் கேழ்க்காது விடுவரோ. அவ்வகையால் தனது வினாவை யோசியாது சென்ஸஸ் கமிஷனர் வினாவுக்குத் தடைகூறுவதழகாமோ. அவர் யாதுகாரணத்தைக் கொண்டு பிரிவினைகளை யறிய வேண்டுமென்று யோசித்திருக்கின்றாரோ அதன் காரணத்தை இவர்கண்டு கொண்டனரா. கமிஷனரவர்களின் உத்தேசத்தை உணராது வீண் அபிப்பிராயங் கூறுவது விழலேயாகும்”.4:28 ; டிசம்பர் 21 , 1910 –
