மார்க்ஸியக் கோட்பாட்டில் மிஞ்சியிருப்பது
புத்தரின் சித்தாந்தங்களையும் காரல்மார்க்ஸின் சித்தாந்தங்களையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு முன், மார்க்ஸியத்தின் இந்த மூலக் கோட்பாடுகளில் எவ்வளவு இப்போது மிஞ்சியிருக்கிறது என்பதைக் காண்பது அவசியம், வரலாற்றின் மூலம் செல்லாதவை. என நிரூபிக்கப்பட்டவை எவ்வளவு, எதிர்ப்பாளர்களால் தவறானவை என நிரூபிக்கப்பட்டவை எவ்வளவு என்று காணவேண்டும்.
மார்க்ஸியக் கோட்பாடு பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வெளியிடப்பட்டது. அப்போதிருந்து அது மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த விமர்சனத்தின் விளைவாக, கார்ல்மார்க்ஸ் உருவாக்கிய சித்தாந்தக் கட்டமைப்பின் பல பகுதிகள் உடைந்து நொறுங்கிப் போய்விட்டன. அவரது சோஷலிசம் தவிர்க்க முடியாதது என்ற மார்க்ஸிய வாதம் முற்றிலும் தவறு என்று நிரூபிக்கப்பட்டு விட்டது என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை. உழைப்பாளர்களின் சர்வாதிகார ஆட்சி முதல் முதலாக 1917-இல் ஒரு நாட்டில், சோஷலிசத்தின் வேதமான டாஸ் காப்பிட்டல்’ (மூலதனம்) வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகள் சென்றபின், அமைக்கப்பட்டது. ரஷ்யாவுக்குப் பொது உடைமை உழைப்பாளர்களின் சர்வாதிகார ஆட்சி என்பதன் மறு பெயர் இது வந்தபோது கூட அது ஏதோ தவிர்க்க முடியாத ஒன்றாக, எந்த விதமான மனித முயற்சியும் இல்லாமல் வந்துவிடவில்லை. ரஷ்யாவில் அது காலடி வைப்பதற்கு முன் அங்கு ஒரு புரட்சி நடந்தது. மிகவும் கருத்தூன்றித் திட்டமிடப்பட்டது பெருமளவில் வன்முறையும் இரத்தம் சிந்துதலும் நடந்தன. உலகின் மீதிப்பகுதி, உழைப்பாளர்களின் சர்வாதிகார ஆட்சியின் வருகைக்கு இன்னமும் காத்துக் கொண்டிருக்கிறது. சோஷலிசம் தவிர்க்க முடியாதது என்ற மார்க்ஸியக் கருத்து இவ்வாறு பொதுவான முறையில் பொய்த்துப் போனது மட்டுமின்றி, பட்டியலில் கூறப்பட்டுள்ள மற்றக் கருத்துக்களில் பலவும் தர்க்கவாதத்தின் மூலமும் அனுபவத்தின் மூலமும் தகர்க்கப்பட்டுவிட்டன. வரலாற்றுக்குப் கூறுவதுதான் வரலாற்றுக்கு ஒரே விளக்கமாகும் என்பதை இப்போது யாரும் ஏற்பதில்லை. உழைப்பாளர்கள் படிப்படியாக எறுமையில் ஆழ்ந்து வந்திருக்கிறார்கள் என்று இப்போது யாரும் ஏற்பதில்லை. இதுவே மற்றக் கருத்துக்களுக்கும் பொருந்தும்.
மார்க்ஸியத்தில் இப்போது மீதியிருப்பது அணைந்து போன நெருப்பின் மிச்சமே; இது அளவில் சிறியதானாலும் மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த மிச்சத்தில் நான்கு அம்சங்கள் உள்ளன என்பது என் கருத்து :
(1) தத்துவ ஞானத்தின் பணி உலகை மறுமுறை சீரமைத்துக் காட்டுவதேயாகும். உலகின் தோற்றத்தை விளக்குவதில் காலத்தை வீணாக்குவதல்ல.
(2) ஒரு வர்க்கத்துக்கும் இன்னொரு வர்க்கத்துக்கும் இடையே நலன்களில் முரண்பாடு உள்ளது.
(3) உடைமைகள் தனிநபர்களுக்குச் சொந்தமாயிருந்தால் ஒரு வர்க்கத்துக்கு அதிகாரமும், மற்றொரு வர்க்கத்துக்கு, அது சுரண்டப்படுவதன் மூலம் துன்பமும் ஏற்படுகின்றன.
(4) சமூகத்தின் நன்மைக்காக தனியார் உடைமையை ஒழிப்பதன் மூலம் துன்பத்தை நீக்குவது அவசியம்.
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும்
நூல் தொகுதி 7
( பகுதி 2 – இயல் 14 – பக்கம் 403 – 434)