பண்டிகைகளில் விஜய தசமி எனும் மாமன்னர் அசோகரின் வரலாற்றில் அறவெற்றி நாளின் முக்கியத்துவத்தையும், விநாயக சதுர்த்தி போன்ற இந்துத்வாமயமான பண்டிகையையும் சேர்த்து இப்பண்டிகைகளை கொண்டாடலாமா என சில பௌத்தர்கள் குழப்பிக்கொள்கிறார்கள்.
விஜயதசமி எனும் அறவெற்றி நாளுக்கு புத்தர், அசோகர், பிக்கு நியாகரோதர், பிக்கு மொகாலி புத்த, கலிங்கம், அசோக சக்கரம், சிங்க முத்திரை என நீண்ட வரலாறு உள்ளது. அது ஒரு வரலாற்று நிகழ்வு. ஆனால் விநாயகர் சதுர்த்தி வெறும் பண்பாட்டு பண்டிகை. அசோகரின் வரலாற்றை இந்துத்வாவால் அபகரிக்க முடியாதது. ஆயுத பூஜை எனும் பெயரில் காளி கொண்டாட்டத்தை செய்யலாமே தவிர அசோகரின் அறவெற்றி நாளின் வரலாற்றை அழிக்க முடியாது. அசோகரின் விஜய தசமியை பௌத்தர்கள் கட்டாயம் கொண்டாடவேண்டும். அதன் தேவை சமூகத்தில் இன்றும் உள்ளது. கொடிநாள் என்பது தியாகிகளை நினைவு கூருவது போன்று “போர் மறுப்பு நாள்” என போருக்கு எதிரான நாளாக அறவெற்றி நாளை (விஜய தசமியை) கொண்டாடவேண்டும். அந்த கொண்டாட்டம் என்பது படையல் போட்டு கற்பூரம் ஏற்றி அசோகருக்கோ, புத்தருக்கு தீப ஆராதனை செய்வதன்று. போருக்கு எதிரான கருத்துகளையும், ஏகாதிபத்துக்கு எதிரான ஆக்கிரமிப்புகளையும் பேசும் பண்டிகையாக கடைபிடிக்க வேண்டும். நம் வரலாற்றை பிரச்சாரம் செய்வது நம் தேவை. மேலும் பௌத்தம் நடைமுறைக்கு உதவாது என சொல்பவர்களுக்கு எதிராக அசோகர் எனும் மாமன்னர் வரலாற்று ஆதாரமாக பௌத்தத்தை நடைமுறை படுத்தி காட்டியுள்ளார். எனவே, விநாயக சதுர்த்தி போன்ற ஒரு சடங்கு பண்டிகையாக விஜயதசமியையும் பார்க்க வேண்டிய பயம் தேவையற்றது. இக்கூற்றை துணிந்து சொல்லக் காரணம். நான் எப்போதும் சொல்வது போல் பாபாசாகேப் அவர்களே நம் வழிகாட்டி. அவர் விஜயதசமி அன்று தான் பௌத்த பண்பாட்டு புரட்சியை நடத்தினார். துணிந்து ‘இது அசோகரின் தம்ம விஜய் நாள்’ என முழங்கி அன்றைய நாளில் இலட்சக்கணக்கான மக்களை பௌத்தம் தழுவச்சொன்னார். [கவனிக்க அவர் என்றும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட சொன்னது கிடையாது. தீபாவளியை கொண்டாட சொன்னது கிடையாது. நாமும் கொண்டாட சொல்லக்கூடாது. ஆனால் விஜயதசமியை பண்பாட்டு புரட்சிநாளாக நடத்தினார்]. அப்படித்தான் அந்த பண்டிகையை பிரச்சார நாளாக கொண்டாடினார். அதை தான் நாமும் செய்ய வேண்டும் என்கிறேன்.
இந்துத்வா பௌத்த பண்டிகைகளை இந்து மத பண்டிகையாக மாற்றிவிட்டது என்று மீண்டும் அதே குழப்பம் வருமாயின் ஒரு கேள்வி எழுப்புகிறேன். புத்தரை கூட இந்து மத சீர்த்திருத்தவாதி என விவேகானந்தர் சொன்னார். விஷ்ணுவின் 10வது அவதாரம் என கதை கட்டினார்கள். பாபாசாகேப் அவர்களை கூட இந்துத்துவா அம்பேத்கர், நவீன மனு என்றெல்லாம் அபகரிக்க முயல்கிறது பார்ப்பனீயம். அறிவு திருட்டை நடத்துவதே பார்ப்பனீயத்தின் கைவந்த கலை. அதற்காக “புத்தரையும் பாபாசாகேப்பையும் கூட நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என அவர்களிடத்தில் கொடுத்துவிடலாமா?”
இங்கு எது சமூகத்துக்கு பயனளிக்க கூடியது, அன்பையும், அறிவையும், கருணையும் கொடுப்பது எது? என உள்ளது உள்ளபடி ஆராய்ந்து அவற்றை செயல்படுத்துவதே பகுத்தறிவு.
விநாயகர் சதுர்த்தி போன்றவை பார்ப்பனீயத்தின் பண்பாட்டு பண்டிகை நாள்.
அறவெற்றி நாள் (விஜயதசமி) என்பது வரலாற்றில் முக்கியத்துவமான நாள். போருக்கு எதிரான நாள்.
அறத்தின் வருவதால் வருவதே வெற்றி. அனைவருக்கும் அறவெற்றி நாள் வாழ்த்துகள்.