Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » பௌத்த திருப்பதிகள்
    பௌத்த நூல்கள்

    பௌத்த திருப்பதிகள்

    Sridhar KannanBy Sridhar KannanMay 8, 2017No Comments12 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    நான்காம் அதிகாரம்

    பௌத்த திருப்பதிகள்

    தமிழ்நாட்டிலே பண்டைக்காலத்திலே பௌத்த மதம் சிறப்பும் செல்வாக்கும் பெற்றிருந்தது என்பதை அறிந்தோம். பொதுவாகத் தமிழ்நாட்டில் சிறப்புப் பெற்றிருந்ததென்றாலும், சிறப்பாக எந்தெந்த நகரங்களிலும் ஊர்களிலும் செல்வாக்குற்றிருந்தது என்பதை ஈண்டு ஆராய்வோம். முதலில் சோழநாட்டில் இருந்த பௌத்த திருப்பதிகளைக் கூறுவோம்.

    காவிரிப்பூம்பட்டினம்

    சோழநாட்டில் பேர்பெற்ற துறைமுகப் பட்டினமும் சோழர்களின் தலைநகரங்களில் ஒன்றுமான காவிரிப்பூம்பட்டினம் பண்டைக் காலமுதல் பௌத்தர்களின் செல்வாக்குப் பெற்றிருந்தது. காவிரியாறு கடலில் கலக்கும் இடத்தில் அவ்யாற்றின் வடகரையில் அமைந்திருந்த இந்தத் துறைமுகப்பட்டினம் புகார் என்றும் பெயர் பெற்றிருந்தது. பாளிமொழியில் உள்ள பௌத்த நூல்களில் இப்பட்டினம் ‘கவீரபட்டினம்’ என்று கூறப்பட்டுள்ளது. மிகப்பழைமையானதென்று கருதப்படுகின்ற புத்த ஜாதகக் கதைகள் ஒன்றில் இந்த நகரம் டமிள (தமிழ்) தேசத்தில் உள்ளதென்றும், அகத்தி, அல்லது அகித்தி என்னும் முனிவர் தமது பெருஞ் செல்வத்தைத் தானஞ் செய்துவிட்டுத் துறவு பூண்டு காவிரிப்பூம்பட்டினத்தின் அருகில் இருந்த ஒரு வனத்தில் தங்கித் தவம் செய்தாரென்றும், அப்பெரியாரைக் கண்டு வணங்கப் பெருந்திரளான மக்கள் அங்குச் சென்று வந்ததால், அவரது தவத்துக்கு இடையூறாயிருந்ததுபற்றி அவர் அவ்விடத்தை விட்டு யாழ்ப்பாணத்துக்கருகில் உள்ள காரைத்தீவிற்குச் சென்று தவம் புரிந்தாரென்றும் கூறப்பட்டிருக்கின்றது. இந்த அகத்தி, அல்லது அகித்தி என்பவர் பௌத்த முனிவர்களில் ஒருவர்.

    கி. மு. மூன்றாம் நூற்றாண்டில், அசோக சக்கரவர்த்தியின் உறவினரான மகிந்தர், அல்லது மகேந்திரர் என்பவர் இலங்கைக்குச் சென்று அங்குப் பௌத்த மதத்தைப் பரப்புவதற்கு முன், சோழ நாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தில் தங்கி, அங்கு ஏழு புத்த விகாரைகளைக் கட்டினாரென்றும், மணிமேகலை சிலப்பதிகார நூல்களில் கூறப்படுகின்ற இந்திர விகாரை என்பவை இவர் கட்டியவைகளே யென்றும், மகேந்திரர் கட்டிய அந்த விகாரைகளை இந்திரன் கட்டியதாக அந்த நூல்களில் கூறப்பட்டுள்ளதென்றும் சரித்திர ஆராய்ச்சியிற் சிறந்த அறிஞர்கள் கருதுகின்றார்கள். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இந்த விகாரைகளின் தலைவராக அறவண அடிகள் என்னும் தேரர் இருந்தார் எனத் தெரிகின்றது. இந்த ஏழு இந்திர விகாரைகளையன்றி, ‘உவவனம்’ என்னும் பூஞ்சோலையின் நடுவில், பளிங்கினால் அமைக்கப்பட்ட சிறு கோயில் ஒன்றில் புத்தரது பாதபீடிகை இருந்தது. இந்தப் பாத பீடிகையை அப்பட்டினத்தில் இருந்த பௌத்தர்கள் வணங்கிவந்தார்கள். அன்றியும், இப்பட்டினத்தின் முதுகாட்டினை அடுத்துச் ‘சுடுகாட்டுக் கோட்டம்’ என்று ஏனைய மதத்தோரால் கூறப்பட்டதும், ‘சக்கரவாளக் கோட்டம்’ என்று பௌத்தரால் போற்றப்பட்டதுமான ஒரு கோட்டம் இருந்தது. இக்கோட்டத்தினுள் ‘சம்பாபதி’ என்னும் பௌத்த தெய்வம் கோயில் கொண்டிருந்தென்பதையும், அக்கோயிலின் தூணொன்றில் கந்திற்பாவை என்னும் தெய்வ உருவம் அமைந்திருந்ததென்பதையும், ‘சக்கரவாளம்’ என்னும் பௌத்தரது அண்டகோளத்தின் உருவம் இக்கோட்டத்தின் வாயிலில் அமைக்கப்பட்டிருந்ததென்பதையும் மணிமேகலை என்னும் நூலினால் அறிகின்றோம். சம்பாபதி கோயிலுக்குக் ‘குச்சரக் குடிகை’ என்றும், ‘முதியாள் கோட்டம்’ என்றும் வேறு பெயர்கள் வழங்கப்பட்டன.

    கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழ நாட்டினை அரசாண்ட கிள்ளிவளவன் என்னும் அரசன், பௌத்த மதத்தைச் சேர்ந்து துறவுபூண்ட மணிமேகலையின் வேண்டுகோளின்படி, சிறைச்சாலையை அறச்சாலையாக்கிக்கொள்ளும் படி அதனைப் பௌத்தர்களுக்குக் கொடுத்தான் என்றும், அச்சிறைச்சாலைக் கட்டிடத்தைப் பௌத்தர்கள் அறச்சாலையாகவும் பௌத்தப் பள்ளியாகவும் அமைத்துகொண்டனர் என்றும் மணிமேகலை நூலினால் அறிகின்றோம்.

    ‘இரசவாகினி’ என்னும் பாளிமொழியில் உள்ள பௌத்த நூலில், சோழ அரசன் ஒருவன் காவிரிப்பூம்பட்டினத்தில் சிவபெருமானுக்குக் கோயில் ஒன்று நிறுவினான் என்றும், அக்கோயிற்பணி நடைபெறும்போது சில பௌத்தத் துறவிகள் வந்து சில அதிசயங்களைச் செய்து அரசனுக்குக் காட்டி, அச்சிவன் கோயிலைப் பௌத்தக் கோயிலாக்கினார்கள் என்றும் கூறப்பட்டிருக்கின்றது.

    கி. பி. நாலாம் நூற்றாண்டில் அச்சுதவிக்கந்தன் என்னும் களபர அரசனால் ஆதரிக்கப்பட்டவரும், தமிழ் நாட்டுப் பௌத்தப் பெரியார்களில் பேர் பெற்றவருமான புத்ததத்த தேரர் என்னும் பௌத்த ஆசாரியர் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த ஒரு பௌத்தப் பள்ளியில் சிலகாலம் தங்கியிருந்ததாகத் தமது நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.

    பூதமங்கலம்

    இதுவும் சோழநாட்டில் இருந்த பௌத்த ஊர்களில் ஒன்று. இவ்வூரில், பிண்டிதாசர் என்றும், வேணுதாசர் என்றும் பெயருள்ள ஒருவரால் அமைக்கப்பட்ட பௌத்தப் பள்ளி ஒன்றிருந்ததென்றும், அப்பள்ளியில் சில காலம் தங்கியிருந்தபோது ஆசாரியர் புத்ததத்த தேரர் ‘வினய வினிச்சயம்’ என்னும் பாளி மொழி நூலை இயற்றினார் என்றும் தெரிகின்றது.

    போதிமங்கை

    இதுவும் சோழநாட்டில் இருந்தது. ‘சாக்கியர்தம் போதிமங்கை’ என்று இதனைப் பெரிய புராணம் கூறுகின்றது. (சாக்கியர்=பௌத்தர்.) இப்பெயரைக்கொண்டே இது பௌத்தர்களுக்குரியது என்பதை நன்கறியலாம். இவ்வூரில் புத்தநந்தி, சாரிபுத்தர் முதலான பௌத்த தேரர்கள் இருந்தனர் என்றும், இவர்களுடன் திருஞான சம்பந்தர் (கி. பி. ஏழாம் நூற்றாண்டு) வாதம் செய்தார் என்றும் பெரிய புராணம் கூறுகின்றது. இப் போதிமங்கையும் மேற்கூறிய பூதமங்கலமும் ஒரே ஊராக இருக்கக்கூடும் என்று கருதுவோரும் உண்டு. ஆனால், அவர்கள் அதற்கு ஆதாரம் ஒன்றும் காட்டவில்லை.

    பொன்பற்றி

    இதுவும் சோழ நாட்டில் உள்ளது. இது மாலைக் கூற்றத்தைச் சேர்ந்தது. தஞ்சை ஜில்லாப் புதுக் கோட்டைத் தாலூக்காவில் உள்ளது இந்த ஊர் என்றும், தஞ்சை ஜில்லா அறந்தாங்கி தாலூக்காவில் உள்ள ‘பொன் பேத்தி’ என்னும் ஊரே பொன்பற்றி என்பது என்றும் கூறுவர். இவ்வூரில் வீரசோழிய ஆசிரியரான புத்தமித்திரனார் வாழ்ந்திருந்தார்.

    நாகைப்பட்டினம்

    இது சோழ நாட்டைச் சேர்ந்த துறைமுகப்பட்டினம். இது தொன்றுதொட்டு பௌத்தர்களின் புண்ணிய நகரமாக இருந்துவந்தது.

    ‘ உற்றவர்க் குறுப்பறுத் தெரியின்க ணுய்த்தலை யன்னதீமை செய்வோர்க்கு மொத்த மனத்ததாய்,நற்றவர்க் கிடமாகின்றது நாகையே ‘

    என்று பௌத்தர்கள் இந்நகரைப் புகழ்ந்து கூறுவர்.

    கி. பி. 720 -ஆம் ஆண்டில், நரசிம்ம போத்தவர்மன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில், இந்தப் பட்டினத்தில் ஒரு பௌத்தக் கோயில் கட்டப்பட்டது. வர்த்தகத்தின் பொருட்டுச் சீன நாட்டிலிருந்து நாகைக்கு வரும் பௌத்தர்களுக்காகச் சீன அரசன் விருப்பப்படி அது கட்டப்பட்டது. பிற்காலத்தில் இக்கோயிலைச் ‘சீனா கோயில்’ என்று வழங்கியதாகத் தெரிகின்றது. வெனிஸ் தேசத்திலிருந்து சீனாவுக்கு யாத்திரை சென்ற மார்க்கோ-போலோ என்பவர் நாகைப்பட்டினத்தில் ‘சீனா கோயில்’ என்னும் பெயருள்ள ஒரு கோயில் இருந்ததாகக் குறிப்பிடுகின்றார்.

    கி. பி. எட்டாம், அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்த திருமங்கையாழ்வார் நாகைப்பட்டினத்துப் பௌத்த விகாரையொன்றில், முழுதும் பொன்னால் அமைக்கப்பட்டிருந்த புத்த உருவச்சிலையைக் கவர்ந்துகொண்டுபோய், அப்பொன்னைக்கொண்டு திருவரங்கத் திருப்பதியில் திருமதில் எடுப்பித்தல் முதலான திருத்தொண்டுகளைச் செய்தார் என்பது வைணவ நூல்களினால் தெரியவருகின்றது.

    கி. பி. 985 முதல் 1014 வரையில் சோழ நாட்டை அரசாண்ட புகழ்பெற்ற இராச இராச சோழன் காலத்தில் நாகையில் ‘ஸ்ரீ சைலேந்திர சூடாமணி விகாரை’ என்னும் பௌத்தப்பள்ளி கட்டப்பட்டது. சுமாத்திரா தீவில் ஸ்ரீவிஜய என்னும் இராச்சியத்தையும், பர்மா தேசத்தில் கடாரம் என்னும் இராச்சியத்தையும் அரசாண்ட ஸ்ரீமாற விஜயோத்துங்க வர்மன் என்னும் அரசன் வேண்டுகோளின்படி, இந்த விகாரையை நாகைப்பட்டினத்தில் கட்டுவதற்கு இராச இராச சோழன் உத்தரவு கொடுத்தான். இந்த விகாரை ஸ்ரீமாற விஜயோத்துங்கனது தந்தையான சூடாமணிவர்மன் என்பவன் பெயரால் கட்டப்பட்டதாகலின், இதற்குச் ‘சூடாமணி விகாரை’ என்று பெயராயிற்று. யானைமங்கலம் முதலான ஊர்களை இவ்விகாரைக்குப் பள்ளிச்சந்தமாக இராச இராசன் அளித்தான். ஆயினும், சாசனம் எழுதுவதற்கு முன்னமே அவன் இறந்துவிட., அவனுக்குப்பின் அரசாண்ட இராசேந்திர சோழன் செப்புப் பட்டயத்தில் சாசனம் எழுதித்தந்தான். இவன் எழுதிக் கொடுத்த சாசனங்கள் லீடன் நகரத்துப் பொருட்காட்சி சாலையில் இப்போது இருக்கின்றன. இப்பொழுது இச்சாசனங்களுக்கு ‘லீடன் சாசனம்’ (Leiden Grant) என்று பெயர் வழங்கப்படுகின்றது. (Arch. Sur. Of South India, Vol. IV, Epigraphica Indica, Vol. XXII.) இவை வெளியிடப்பட்டுள்ளன.

    பர்மா தேசத்தில் ஹம்சவதி நாட்டை (Pegu) பதினைந்தாம் நூற்றாண்டில் அரசாண்ட ராமாபதி ராஜன் என்பவன் அனுப்பிய பதினொரு பௌத்த பிக்ஷக்களும், சித்திர தூதன் என்னும் தூதனும் இலங்கை சென்று தங்கள் வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் கப்பலேறிச் செல்லும் வழியில் கப்பல் புயலில் அகப்பட்டு உடைந்துபோக, நற்காலமாக உயிர் பிழைத்துக் கரையேறினார்கள் என்றும், நாகைப்பட்டினத்தை அடைந்து அங்கிருந்த ‘படரிகாராமம்’ என்னும் பௌத்தப்பள்ளியில் தங்கியிருந்தார்கள் என்றும், அப்பள்ளிக்கருகில் சீன தேசத்து அரசனால் குகை வடிவமாகக் கட்டப்பட்டிருந்த பௌத்தப் பள்ளியில் புத்ததேவரை வணங்கினார்கள் என்றும் பர்மா தேசத்துக் கலியாணி நகரத்துக் கல்வெட்டுச்சாசனம் கூறுகிறது. இது நிகழ்ந்தது கி. பி. 1477 -ஆம் ஆண்டில்.

    கி. பி. 1725 -ஆம் ஆண்டில், ‘சீனா கோயில்’ என்னும் பெயருள்ள ஒரு கோயில் நாகைப்பட்டினத்தில் இருந்ததென்று வாலென்டின் (Valentyn) என்பவர் எழுதியிருக்கின்றார்.

    நாகைப்பட்டினத்துக்கு வடக்கே, ஒன்று அல்லது இரண்டு கல்தொலைவில், ‘புது வெளிக் கோபுரம்’ என்றும், ‘சீனா கோயில்’ என்றும், ‘கறுப்புக் கோயில்’ என்றும் பெயருள்ள ஒரு கோபுரம் இருந்ததென்றும், இக்கோபுரம் நாகைப்பட்டினத்துக்கு வருகிற கப்பல்களுக்கு ஒரு அடையாளமாகக் கடலில் தோன்றியதென்றும், இந்தக் கோபுரம் தாம் நேரில் 1846 -ஆம் ஆண்டில் கண்டதென்றும் சர். வால்டர் எலியட் (Sir Walter Elliot) என்பவர் எழுதியிருக்கின்றார். (படம் 1 காண்க).

    படம் 1.

    நாகைப்பட்டினத்தில் இருந்த பௌத்தக்கோயில் கோபுரம்.

    1846-இல் இந்த நிலையில் இருந்தது.

    இந்தக் கோபுரம் இருந்த இடத்தில், ஏசுவின் சபைப் பாதிரிமார் இப்போது கட்டிடம் கட்டியிருக்கிறார்கள். 1867 -இல் இந்தக் கோபுரத்தை இடித்துவிட்டுக் கட்டிடம் கட்டிக்கொள்ள அரசாங்க உத்தரவுபெற்று இதை இடித்துப் போட்டார்கள்.

    இவ்விடத்தில் இருந்த மிகப்பழைய இலுப்பை மரம் ஒன்றை ஏசுவின் சபைப் பாதிரிமார் 1856 -இல் வெட்டியபோது, அம்மரத்தின் அடியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சிறிய பௌத்த விக்கிரகங்களைக் கண்டெடுத்தனர். இவற்றில் நான்கு உலோகத்தினால் ஆனவை; ஒன்று பீங்கானால் செய்யப்பட்டது. இவற்றில் ஒன்று புத்தர் நின்று கொண்டு உபதேசம் செய்வதுபோல் அமைக்கப்பட்டது. கவர்னராயிருந்த நேப்பியர் பிரபு (Lord Napier) நாகைக்குச் சென்றபோது, பாதிரிமார் இதை அவருக்குக் கொடுத்தார்கள். (படம் 2 காண்க).

    படம் 2.

    நாகையில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் வெண்கலச் சிலை.

    அதன் பீடத்தில், அம்புக்குறி காட்டப்பட்ட இடத்தில்

    எழுத்துக்கள் காணப்படுகின்றன. (படம் 3 -இல் காண்க)

    இந்த விக்கிரகத்தின் பீடத்தில், பதினொன்றாம், அல்லது பன்னிரண்டாம் நூற்றாண்டில் வழங்கிய தமிழ் எழுத்தில், ‘ஸ்வஸ்திஸ்ரீ ஆகம பண்டிதர் உய்யக்கொண்ட நாயகர்’ என்று எழுதப்பட்டிருக்கின்றது. (படம் 3 காண்க).

    படம் 3.

    இத்தமிழ் எழுத்துக்கள் 2 -ஆவது படத்தில் உள்ள புத்தச் சிலையின் பீடத்தில் எழுதப்பட்டுள்ளன. ‘ஸ்வஸ்தி ஸ்ரீ ஆகம பண்டிதர் உய்யக்கொண்ட நாயகர்’ என்பது இதன் வாசகம்.

    இன்னொரு விக்கிரகம் புத்தர் போதியின்கீழ் அமர்ந்து தியானத்தில் இருக்கும் பாவனையாக அமைந்துள்ளது. (படம் 4 காண்க).

    படம் 4.

    நாகையில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் வெண்கலச் சிலை.

    இன்னொன்று புத்தர் இரு கைகளையும் உயர்த்தி அபயம் அளிப்பதுபோல் அமைக்கப்பட்ட உருவம். (படம் 5 காண்க).

    படம் 5.

    நாகையில் கண்டெடுக்கப்பட்ட புத்தர் வெண்கலச் சிலை.

    இன்னொன்று சீன முறைப்படி செய்யப்பட்ட புத்தர் விக்கிரகம்.

    நாகைப்பட்டினத்தில் இப்பொழுதும் ‘புத்தன் கோட்டம்’ என்னும் பெயருள்ள அக்கிரகாரம் இருக்கிறதென்றும், பண்டைக்காலத்தில் இந்த இடத்தில் பௌத்தக் கோயில் இருந்திருக்கவேண்டுமென்றும், பௌத்தக் கோயில் அழிந்த பிறகு அந்த இடத்தில் இந்த அக்கிரகாரம் ஏற்பட்டிருக்கவேண்டுமென்றும் கூறுவர் டாக்டர் S. கிருஷ்ணசாமி அய்யங்கார் அவர்கள்.

    நாகைப்பட்டினத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட வேறு பௌத்த உருவச் சிலைகள் சென்னைப் பொருட்காட்சி சாலையில் உள்ளன.

    புத்தகுடி

    இதுவும் சோழநாட்டில் நாகைப்பட்டினத்துக்கு அருகில் இருந்த ஒரு ஊர். இவ்வூர் ‘செயங்கொண்ட சோழவளநாட்டுக் குறும்பூர்’ நாட்டில் இருந்ததாகக் குலோத்துங்க சோழனது செப்புப் பட்டயம் (Leiden Grant) கூறுகின்றது. இவ்வூரின் பெயரே இது பௌத்தர் குடியிருந்த ஊர் என்பதைத் தெரிவிக்கின்றது.

    உறையூர்

    இது சோழர்களின் தலைநகரமாக இருந்தது. இந்த ஊரை வடமொழியில் ‘உரகபுரம்’ என்பர். பேர் பெற்ற பௌத்த ஆசாரியரும் பௌத்த நூல்களுக்குப் பாளிமொழியில் பல உரைகளை இயற்றியவருமான புத்த தத்ததேரர் (கி. பி. நாலாம் நூற்றாண்டு) இந்த நகரத்தில் பிறந்தார். இவ்வூரில் பௌத்தர் அதிகமாக இருந்ததாகவும் தெரிகின்றது.

    இனி, தொண்டை நாட்டில் சிறப்புற்றிருந்த பௌத்த ஊர்களைப்பற்றி ஆராய்வோம்.

    காஞ்சீபுரம்

    இந்த ஊர் தொன்றுதொட்டு சைவ, வைணவ, ஜைன, பௌத்த மதத்தவர்களுக்கு நிலைக்களமாக இருந்துவந்தது. பௌத்தர்கள் பண்டைக்காலத்தில் இங்கு அதிகமாக இருந்தனர். இந்த ஊரில், கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் அரசாண்ட அசோக சக்கரவர்த்தியினால் கட்டப்பட்ட ஒரு பௌத்த தூபி இருந்ததாக கி. பி. ஏழாம் நூற்றாண்டில் இந்த நகரத்திற்கு வந்த யுவாங் சுவாங் என்னும் சீனயாத்திரிகர் எழுதியிருக்கின்றார். ஆனால், அசோகர் கட்டிய தூபியைப்பற்றி மணிமேகலையில் கூறப்படவில்லை. கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் சோழநாட்டை அரசாண்ட கிள்ளிவளவன் என்னும் சோழன் தம்பி இளங்கிள்ளி என்பவன் காஞ்சீபுரத்தைத் தலைநகராகக்கொண்டு தொண்டைநாட்டை அரசாண்ட காலத்தில், ‘பைம்பூம்போதிப் பகவற்கு’ ஒரு சேதியம் அமைத்தான் என்று மணிமேகலையினால் அறிகின்றோம். இந்தச் சேதியத்தைத்தான் பிற்காலத்தவராகிய யுவாங் சுவாங் என்னும் சீனர் அசோகர் கட்டியதாகக் கூறினார் போலும். இளங்கிள்ளி அரசாண்ட கி. பி. இரண்டாம் நூற்றாண்டிலே, காஞ்சீபுரத்துக்குத் தென்மேற்குத் திசையில், ‘தருமத வனம்’ என்னும் ஒரு பூந்தோட்டம் இருந்ததென்றும், அதில் இளங்கிள்ளி ஒரு புத்த பீடிகையை அமைத்து விழாவும் சிறப்பும் செய்தானென்றும் மணிமேகலையினால் அறிகின்றோம்.

    காவிரிப் பூம்பட்டினத்தில் பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்த அறவண அடிகள் பிற்காலத்தில் காஞ்சீபுரத்தில் வந்து தங்கிப் பௌத்த மதத்தைப் போதித்து வந்தார் என்பதும் மணிமேகலையினால் பெறப்படுகின்றது. இன்றைக்கும், காஞ்சீபுரத்தில் அறப்பணஞ்சேரி என்னும் ஒரு தெரு உண்டென்றும், அது ‘அறவணஞ்சேரி’ என்பதன் மரூஉவென்றும், அறவண அடிகள் தங்கியிருந்த தெரு (சேரி=தெரு) ஆதலின், அத்தெரு இப்பெயர் வாய்ந்ததென்றும் கூறுவர் வித்துவான் ராவ்பகதூர் மு. இராகவ அய்யங்கார் அவர்கள். அன்றியும், ‘புத்தேரித் தெரு’ என்னும் பெயருடன் ஒரு தெரு காஞ்சீபுரத்தில் இருக்கின்றதென்றும், அது ‘புத்தர் தெரு’ என்பதன் மரூஉவென்றும் மேற்படி அய்யங்கார் அவர்களே கூறுவர். மாதவி மகள் மணிமேகலை பௌத்த தருமங்கேட்டுத் துறவு பூண்டபின், காஞ்சீபுரத்திலே கடைநாள் வரையில் இருந்ததாக மணிமேகலை கூறுகின்றது. இப்பொழுதும் காஞ்சீபுரத்துக்கருகில் ‘மணிமேகலை அம்மன்’ என்னும் பெயருடன் ஒரு அம்மன் கோயில் இருக்கின்றதாகச் சொல்லப்படுகின்றது. பௌத்த பிக்குணியாகிய மணிமேகலையின் கோயிலாக இது இருக்குமோ என்பது ஆராய்ச்சி செய்யற்பாலது.

    காஞ்சீபுரத்தைத் தலைநகராகக்கொண்டு அரசாண்ட பல்லவ அரசர்களுள் புத்தவர்மன் என்பவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவன் என்று கூறப்படுகின்றான். இவன் பௌத்தர்களுக்காகப் பௌத்தப்பள்ளிகளைக் கட்டி அவர்களை ஆதரித்திருக்கக்கூடும். கி. பி. ஏழாம் நூற்றாண்டில், ஹிமசீதளன் என்னும் அரசன் பௌத்தர்களை ஆதரித்தான் என்றும், அகளங்கர் என்னும் ஜைனர் காஞ்சீபுரத்தில் இவ்வரசன் முன்னிலையில் பௌத்தர்களுடன் சமயவாதம் செய்து வென்று, இவ்வரசனை ஜைன மதத்தில் சேர்த்ததோடு, தோல்வியுற்ற பௌத்தர்களை இலங்கைக்கு அனுப்பி விட்டார் என்றும் தெரிகின்றது. ஏழாம் நூற்றாண்டில், அதாவது 640-இல், காஞ்சீபுரத்துக்கு வந்த யுவாங் சுவாங் என்னும் சீனர் காஞ்சீபுரத்தில் நூறு பௌத்தப் பள்ளிகளும் ஆயிரம் பௌத்த பிக்ஷக்களும் இருந்ததாகவும், பௌத்தப் பள்ளிகள் நல்ல நிலையில் இருக்கவில்லையென்பதாகவும் எழுதியிருக்கின்றார்.

    காஞ்சீபுரத்தில் உள்ள காமாட்சியம்மன் கோயில் பண்டைக்காலத்தில் பௌத்தர்களின் தாராதேவி கோயில் என்றும், பௌத்த மதம் அழிந்த பிறகு அக்கோயில் இந்துமதக் கோயிலாக மாற்றப்பட்டதென்றும் அரசாங்க சிலா சாசன ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். காமாட்சியம்மன் கோயிலில் ஐந்தாறு புத்தர் உருவச் சிலைகள் இன்றைக்குங் காணப்படுகின்றன. இவற்றில் முக்கியமானது பெரிதாகவும், புத்தர் நிற்கும் கோலமாகவும் அக்கோயிலின் உட்பிராகாரத்திலே இருக்கின்றது. இந்தப் புத்த உருவத்திற்கு இப்போது ‘சாத்தன்’ என்று பெயர் சொல்லப்படுகின்றது. ‘காமாட்சி லீலாப் பிரபாவம்’ என்னும் நூலில், சாஸ்தா (சாத்தன்) தேவியின் முலைப்பால் உண்டு வளர்ந்ததாகக் கூறப்பட்டிருக்கின்றது. புத்தருக்குச் சாஸ்தா என்பதும் பெயர். காமாட்சியம்மன் கோயில் பண்டைக்கால்த்தில் பௌத்தக் கோயில் என்று சொல்லுகிறவர்களின் கொள்கையை இவை ஆதரிக்கின்றன. (படங்கள், 6, 7 காண்க.)

    படம் 6.

    காஞ்சீபுரத்தில், காமாட்சியம்மன் கோயிலின் உட்பிராகாரத்தில்

    இருந்த புத்தர் உருவச்சிலை, உருவம் 7 அடி உயரம் உள்ளது.

    மூக்கும் கைகளும் உடைக்கப்பட்டுள்ளன.

    படம் 7.

    காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோயிலைச் சேர்ந்த

    தோட்டத்தில் உள்ள புத்தர் உருவச்சிலை.

    காஞ்சீபுரத்திலே உள்ள இன்னொரு அம்மன் கோயிலில் புத்தர் உருவச் சிலைகள் இரண்டு காணப்படுகின்றன. (படம் 8 காண்க.)

    படம் 8.

    காஞ்சீபுரம், கருக்கில் அமராண்ட அம்மன் கோயிலில்

    உள்ள இரண்டு புத்த விக்கிரகங்களில் ஒன்று.

    அறவண அடிகள், மணிமேகலை, திக்நாகர், போதி தருமர், தருமபாலர், ஆனந்ததேரர், அநுருத்தர், புத்தாதித்தியர் முதலிய பேர்பெற்ற தேரர்கள் இவ்வூரில் வசித்தவராவர்.

    திருப்பாதிரிப்புலியூர்

    இப்பொழுது கூடலூர்க்கு அருகில் உள்ள திருப்பாதிரிப்புலியூரில் பண்டைக்காலத்தில் பௌத்தர் இருந்தனரென்றும், அங்குப் பௌத்தப் பல்கலைக்கழகம் ஒன்றிருந்ததென்றும் கூறுவர். ஆயினும், அவற்றைப்பற்றிய வரலாறுகள் ஒன்றும் தெரியவில்லை.

    சங்கமங்கை

    இதுவும் தொண்டை நாட்டிலிருந்ததாகத் தெரிகின்றது. பௌத்தராயிருந்து, பின்னர்க் காஞ்சீபுரஞ் சென்று பௌத்த தருமத்தை நன்கு கற்று, பின்னர்ச் சைவ சமயத்தைச் சேர்ந்த சாக்கிய நாயனார் இவ்வூரில் பிறந்தவர். இந்த ஊரின் பெயரே இது பௌத்தரது ஊர் என்பதைத் தெரிவிக்கும். சங்கம் என்பது, புத்த, தர்ம சங்கம் என்னும் மும்மணிகளில் ஒன்று. அதாவது, பௌத்தப் பிக்ஷ¨களுக்குச் சங்கம் என்பது பெயர். எனவே, சங்க

    மங்கை என்கிற பெயர் பௌத்தச் சார்பானதென்பதைத் தெரிவிக்கின்றது.

    கூவம்

    இதுவும் தொண்டை நாட்டிலுள்ள ஒரு ஊர். செங்கற்பட்டு ஜில்லாவில் உள்ளது. இவ்வூரிலும் பண்டைக் காலத்தில் பௌத்தர்கள் இருந்தார்கள். இவ்வூரில் இருந்த பெரிய புத்த விக்கிரகம் ஒன்றைச் சென்னைப் பொருட்காட்சிச் சாலையில் கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள்.

    இனி, பாண்டி நாட்டில் பௌத்தர் இருந்த ஊர்களைப் பற்றி ஆராய்வோம்.

    மதுரை

    இந்த நகரத்தில் பௌத்தப்பள்ளிகள் இருந்தனவென்பதை மதுரைக் காஞ்சியில்,

    ‘திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களையோம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கித்தாதணி தாமரைப் போதுபிடித் தாங்குத்தாமு மவரு மோராங்கு விளங்கக்காமர் கவினிய பேரிளம் பெண்டிர்பூவினர் கையினர் தொழுவனர் பழிச்சிச்சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியும் ‘

    என வரும் அடிகளுக்கு, ‘திண்ணிய ஒளியினையுடைய பேரணிகலங்களையுடைவராய் விருப்பம் அழகு பெற்ற பெரிய இளமையினையுடைய பெண்டிர், தாம் முயங்குதலைச் செய்து கூடிப் பாதுகாக்குங் கணவரையும் கூட்டிக்கொண்டு தாது சேர்ந்த செவ்வித் தாமரைப் பூவைப் பிடித்தாற்போல ஒள்ளிய சிறு பிள்ளைகளையும் எடுத்துக்கொண்டு, தாமும் கணவரும் பிள்ளைகளும் சேரச் சீலத்தாலே விளங்கும்படியாகப் பூசைக்கு வேண்டும் பூவினையுடையராய்த் தூபங்களையுடையராய் வணங்கினராய் மிகுத்துத் துதித்துப் பாதுகாத்தலை நடத்தும் பௌத்த பள்ளியும்’ என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருப்பதுகொண்டு அறியலாம்.

    அசோக சக்கரவர்த்தி, மதுரைக்குக் கீழ்த்திசையில் கட்டிய ஒரு பௌத்த விகாரை இடிந்து பழுதுபட்ட நிலையில் இருந்ததென்றும், அதற்குச் சற்றுச் சேய்மையில் மகேந்திரர் கட்டிய பௌத்தப் பள்ளியொன்றும் அழிந்து போகும் நிலையில் இருந்ததென்றும் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் நாட்டில் பிரயாணம் செய்த யுவாங் சுவாங் என்னும் சீனர் எழுதியிருக்கின்றார். ஆனால், இந்த விகாரை பள்ளிகளைப்பற்றிச் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய தமிழ் நூல்களில் குறிப்பிடப்படவில்லை. இவை பிற்காலத்தில் கட்டப்பட்டு, நாளடைவில் கட்டியவர் பெயர் மறைந்து, அசோகரும் மகேந்திரமும் கட்டியதாகத் தவறாகக் கருதப்பட்டிருக்கலாம். யார் கட்டியதாக இருந்தாலும், மதுரையிலும் பௌத்தர்களும் பௌத்தப் பள்ளிகளும் இருந்துவந்ததுமட்டும் இதனால் உறுதிப்படுகின்றது. மதுரையில், கி. பி. இரண்டாம் நூற்றாண்டில், ‘சிந்தாதேவி’ என்னும் அம்மன் கோயில் ஒன்று இருந்ததாக மணிமேகலையினால் தெரிய வருகின்றது. இந்தக் கோயிலைப் பௌத்தர்களின் தாராதேவி கோயில் என்று ஆராய்ச்சியாளரிற் சிலர் கருதுகின்றார்கள்.

    அரிட்டாபட்டி

    மதுரை ஜில்லாவில் இப்போது குக்கிராமமாயுள்ள ஒரு ஊர். கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் இலங்கையை அரசாண்ட தேவனாம்பிரிய திஸ்ஸன் என்னும் அரசனுடைய அம்மானாராகிய அரிட்டர் என்னும் பௌத்த பிக்ஷ, மகேந்திரருடன் சேர்ந்து பாண்டி நாட்டில் பௌத்தமதத்தைப் பரவச் செய்தாரென்றும், அந்த அரிட்டர் என்பவர் இந்த ஊருக்கு அருகில் உள்ள மலைக்குகையில் வாழ்ந்து வந்தார் என்றும், ஆகவே இவ்வூருக்கு அவர் பெயர் வழங்கலாயிற்று என்றும் ஆராய்ச்சி வல்ல அறிஞர் கருதுகின்றனர். இந்த அரிட்டாபட்டிக்கருகில் உள்ள பௌத்தக் குகைகளில் அசோக மன்னர் காலத்தில் வழங்கிய பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது பண்டைக் காலத்தில் பௌத்தக் கிராமமாயிருந்து, பிற்காலத்தில் அழிந்து இப்போது குக்கிராமமாக இருக்கின்றது.

    பொதிகை

    பொதிகை மலையும் பௌத்தர்களின் புண்ணிய மலைகளில் ஒன்றாகப் பிற்காலத்தில் கருதப்பட்டு வந்தது. அந்த மலையில் அவலோகிதீஸ்வரர் என்னும் போதி சத்வர் வீற்றிருக்கிறார் என்பதும், அவரிடம் அகத்தியர் தமிழ் கற்றார் என்பதும் பௌத்தர்களின் கொள்கை. இந்த மலையை அடுத்து ‘மலைய நாடு’ என்னும் பெயருடைய நாடு இருந்தது. அந்நாட்டில் தந்திரயான பௌத்த மதத்தவராகியவச்சிரபோதி (கி. பி. 661 – 730) என்பவர் பிறந்தார். சீன தேசத்திலும், ஜப்பான் தேசத்திலும் சென் பௌத்த (Zen Buddhism) மதத்தைப் பரப்பியவர் இவரே.

    தஞ்சை

    பாண்டி நாட்டில் இருந்த தஞ்சாவூர். இந்தவூரில் வாணன் என்னும் சிற்றரசன் ஒருவன்மீது இயற்றப்பட்ட தஞ்சைவாணன் கோவை என்னும் ஒரு நூல் தமிழில் உண்டு. பாளி மொழியில் பதினான்கு நூல்களை இயற்றிய பேர்பெற்ற பௌத்த பிக்ஷவாகிய ஆசாரிய தர்மபாலர் இந்த ஊரில் பிறந்தார். இந்த ஊரிலும் பௌத்தர்கள் இருந்ததாகத் தெரிகின்றது.

    திருமாலிருஞ் சோலை

    ‘அழகர்மலை’ என்று வேறு பெயருள்ள இந்த இடம் இப்போது வைணவத் திருப்பதிகளில் ஒன்று. இங்குள்ள மலைக்குகைகளில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளதுகொண்டு இங்குப் பண்டைக் காலத்தில் பௌத்தர்களும் ஜைனரும் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறுவர் திரு. V. R. இராமச்சந்திர தீக்ஷ¤தர் அவர்கள்.

    இனி, சேரநாட்டில் இருந்த பௌத்த ஊர்களை ஆராய்வோம்.

    வஞ்சிமாநகர்

    இப்போது மலையாளதேசமாக மாறிவிட்ட கேரளதேசம் பண்டைக்காலத்தில் தமிழ் நாடாக இருந்தது. அப்போது அதற்குச் சேரநாடு என்று பெயர். அதன் தலைநகராக இருந்தது வஞ்சிமாநகர். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சிலப்பதிகாரக் கதைத்தலைவனாகிய கோவலன் என்பவனுடைய மூதாதை, கோவலன் என்னும் பெயருள்ளவன், இந்த நகரத்தில் சிறந்ததோர் புத்தசேதியம் கட்டினான் என்று மணிமேகலையினால் தெரிகின்றது. சிலப்பதிகாரத் தலைவனாகிய கோவலனது ஒன்பது தலைமுறைக்கு முற்பட்ட பாட்டனான இந்தக் கோவலன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு உற்ற நண்பன் என்பதும், பாதபங்கய மலையிலிருந்து வந்த ஒரு பௌத்த பிக்ஷவின் உபதேசங்களைக் கேட்டு இவன் துறவு பூண்டு சேதியம் அமைத்ததோடு, தன் பொருள் முழுவதும் தானம் செய்தான் என்பதும் தெரிகின்றன. இவன் கி. மு. முதல் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவனாகலின், இந்தச் சேதியம் கட்டப்பட்டதும் அக்காலமாகும். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில், இந்தச் சேதியமும் இன்னும் பல பௌத்தப் பள்ளிகளும் இருந்ததாகவும், கோவலன் தந்தை மாசாத்துவான் என்பவனும், மணிமேகலையும், அறவண அடிகள் என்னும் பிக்ஷ¨வும் இந்த நகரத்திற் சென்று இங்கிருந்த பௌத்த விகாரைகளைத் தொழுதனரென்பதாகவும் மணிமேகலை கூறுகின்றது.

    இப்போது மலையாள நாட்டில் ஆங்காங்கே ‘சாத்தன் காவு’ என்றும், ‘ஐயப்பன் கோயில்’ என்றும் சொல்லப்படும் கோயில்கள் பல உண்டு. இவை முற்காலத்தில் பௌத்தக் கோயில்களாயிருந்தன என்று சிலர் கருதுகின்றார்கள். ‘சாத்தன்’ என்பது ‘சாஸ்தா’ என்பதன் திரிபு. சாஸ்தா என்பதும் புத்தருக்குப் பெயர். காவு அல்லது கா என்பது தோட்டம். எனவே, ‘சாத்தன்காவு’ என்றால், புத்தரது தோட்டம் என்பது பொருள். பண்டைக் காலத்தில் பூந்தோட்டங்களுக்கிடையே புத்தகோயில்கள் அமைப்பது வழக்கம். பௌத்தப் பள்ளியுள்ள பூந்தோட்டத்தைப் பௌத்தர் ‘ஆராமம்’ என்பர். ‘ஆராமம்’ என்றால், தோட்டம் அல்லது கா என்பதே பொருள். (தொடர்புரை 3 காண்க.)

    இவையன்றியும், மானாவூர், துடிதபுரம் என்னும் ஊர்களில் பௌத்தப் பள்ளிகள் இருந்தனவாகத் தெரிகின்றன. இந்த ஊர்கள் எங்கிருந்தன என்பது விளங்கவில்லை. தக்க யாகப்பரணி உரையில் பௌத்தபுரம் என்னும் ஓர் ஊர் கூறப்படுகின்றது. இதுவும் எந்த இடத்தில் இருந்ததென்று தெரியவில்லை.

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleபௌத்தமதம் மறைந்த வரலாறு
    Next Article தமிழின் இனிய விதிவிலக்கு
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    தமிழ் பௌத்தம் – தாள் சேர்தல்

    June 7, 2024

    புத்தர் – கருடன் – விஷ்ணு

    June 7, 2024

    நான் கருத்து எதுவும் சொல்லாத ஒன்றில் இதுவும் ஒன்று

    April 28, 2024
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    • கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்
    Random Posts

    மார்க்சீயர் வேடத்தில் அம்பேத்கரை சிறுமைப்படுத்தும் ரங்கநாயகம்மா – ஆதவன் தீட்சண்யா

    August 8, 2016

    தண்ணீர் எல்லோருக்குமானது

    May 14, 2022

    The Dalit Struggle Is a Universal Struggle

    April 11, 2024

    கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்

    February 12, 2026
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள்

    April 13, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026

    இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    March 13, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

     

    Loading Comments...
     

      %d