சித்தரிப்புப் படம்.
குஜராத் மாநிலத்தில் பிரதமரின் சொந்த ஊரான வத்நாகருக்கு அருகிலுள்ள பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் மூவரால் வன்கொடுமைக்கு ஆளான தலித் ஊழியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.
சித்ரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வத்நாகர் நகர தொடக்கப் பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தில் பணியாற்றிவந்த தலித் மேலாளர் நேற்று தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியதாக மூன்று பள்ளி ஆசிரியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கண்டெடுக்கப்பட்ட கடிதம்
சவுகான் தற்கொலைக்கு காரணமானவர்கள் பற்றிய கடிதத்தை அவரிடமிருந்து போலீஸார் கண்டெடுத்தனர். சவுகானின் மனைவி இலாபென், கணவரின் தற்கொலைக்குக் காரணம் ஷேக்பூர் தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த மூன்று ஆசிரியர்கள்தான் எனவும் அவர்களை உடனடியாக கைது செய்யும்படியும் வத்நாகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து வாத்நகர் வட்டார காவல் ஆணையாளர் ஆர்.எல்.கராதி தெரிவிக்கையில், ”தற்கொலைக்கு தூண்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பள்ளி ஆசிரியர்கள் மோமின் ஹசன் அப்பாஸ்பாய், விநோத் பிரஜாபதி மற்றும் அமாஜி தாகூர் ஆகிய மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இம்மூவர் மீதும் (இபிகோ பிரிவு 306) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் வெவ்வேறு பிரிவின்கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இருப்பினும் இன்னும் அவர்கள் கைது செய்யப்படவில்லை.
மோசமான பண நெருக்கடியிலும்….
வத்நாகர் அருகே யுள்ள ஷேய்க்பூர் கிராம தொடக்கப் பள்ளியில் மத்திய உணவுத் திட்ட மேலாளராக பணியாற்றிவந்த சவுகான் கடந்த ஒரு வருடமாக ரூ.1,600 மாத ஊதியம் பெற்று பணியாற்றி வந்தவர். அதே பள்ளிக்கூடத்தில் சமையல்காரராக சவுகானின் மனைவி இலாபென் பணியாற்றி வந்தார்.
இலாபென் தனது புகார் மனுவில், ”எனது குடும்பம் மோசமான பண நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்த போதிலும், இந்த மூன்று ஆசிரியர்களும் ஸ்நாக்ஸ் எனப்படும் தின்பண்டங்களுக்காக என் கணவரை பணம் செலவழிக்க கட்டாயப்படுத்தினர். மேலும் ஆசிரியர்கள் கொடுத்து வந்த நெருக்கடிகளால் என் கணவர் மனமுடைந்த நிலைக்கு தள்ளப்பட்டார். தலித் சமூகத்தவர் என்பதால் அவர்களின் வன்கொடுமைகளுக்கு தன் கணவர் உட்படுத்தப்பட்டார். அதனாலேயே அவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்” என்று கூறியுள்ளார்.
”சவுகானின் தற்கொலையை அடுத்து பள்ளியில் பணியாற்றி வந்த அம் மூன்று ஆசிரியர்களும் விடுப்பில் சென்றுவிட்டனர். நாங்கள் அந்த ஆசிரியர்கள் மீது எப்ஐஆர் பதிந்துள்ளோம். மேலும் இந்த வழக்கை எஸ்சி/எஸ்டி பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று ஆர்.எல்.கராதி தெரிவித்தார்.
குஜராத் அமைச்சர் உறுதி
இதை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டு, குஜராத் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் இஷ்வார் பார்மர் இந்த சம்பவத்தின்மீது விசாரணைக்கு உத்தரவிட்டார்.
மேலும், அதிகாரிகள் சமர்ப்பித்துள்ள அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
Courtesy : Tamil Hindu