வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாக்க வலியுறுத்தி ஜூலை 2-ஆம் தேதி புதுச்சேரியில் ரயில் மறியல் போராட்டம் நடத்த தலித் மற்றும் பழங்குடி அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
இந்த அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம், புதுச்சேரியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் வெ.பெருமாள் தலைமை வகித்தார். பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் நோக்கவுரையாற்றினார்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தமிழ் மாநில செயலாளர் மோகனா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினார்.
கூட்டத்தில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், திமுக, விசிக, திக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் நீலகங்காதரன், ராமமூர்த்தி, வீரமணி, தந்தைபிரியன் மற்றும் புதுச்சேரியில் உள்ள தலித் மற்றும் பழங்குடியினர் அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் பங்கேற்று பல்வேறு ஆலோசனை வழங்கினர்.
தலித் மற்றும் பழங்குடியின மக்களை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதை மத்திய அரசு கைவிடவேண்டும். ஜூலை 6-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற உள்ளதால், சட்டத்தை பாதுகாக்க மத்திய அரசு உரிய ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வரும் ஜூலை 2-ஆம் தேதி புதுச்சேரியில் ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.