“சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை போதிக்கும் மதத்தையே நான் விரும்புகிறேன்…” என்று சூளுரைத்த டாக்டர் அம்பேத்கரின் 130-வது பிறந்தநாளையொட்டி அவரைப்பற்றிய பெருமாள் முருகனின் கவிதையை பாடி நேற்று அரங்கேற்றம் செய்தார் வித்வான் டி.எம்.கிருஷ்ணா. கர்நாடக இசை எனும் பெரிய குடைக்குள் அம்பேத்கரை கரம்பிடித்து அழைத்துவந்துவிட்டார் அவர். “இனி எல்லா கச்சேரிகளிலும் பாபாசாகேப் பாடப்படுவார்” என்றார் பெருமிதத்துடன்.
“கற்பி ஒன்றுசேர் புரட்சிசெய் என்றே
கருத்தை நெஞ்சில் விதைத்த வீரர்
போர்க்களத்தில் நின்று விளைத்த சூரர்
அற்பச் சாதியை அழித்திட வந்தே
அறிவை ஊட்டிய அரிய தீரர் – எம் அகத்தில் வாழ்கின்ற சிங்காரர்
மாற்ற ஊற்று மதியில் நெருப்பு
மநுவைக் கொல்ல வந்த மழுவாம் – அவர் மண்ணைப் பிளந்து தந்த கொழுவாம்
ஆற்றல் வேகம் அருளும் மேகம்
அனலின் சொற்கள் பிடித்து எழுவோம் –அவர்
அடியில் விழுந்து வணங்கித் தொழுவோம்
ஏற்றி வைத்து எம்மைக் காத்த
ஏந்தல் நாங்கள் பெற்ற சீராம்
ஏழை எங்கள் அண்ணல் அவர்தான் யாராம்
போற்றிப் பாடித் துதிக்க வந்த
பாபா சாகேப் அம்பேத் காராம் – அது
போரா டென்று தூண்டும் பேராம்”
என பெருமாள் முருகன் எழுதிய இந்த வரிகளைக் காவடிச்சிந்து வடிவில் பாடியிருக்கிறார் கிருஷ்ணா.