இப்போது நாம் வழிவகைகளைப் பார்க்கவேண்டும். புத்தர் கூறிய பொது உடைமையை உருவாக்குவதற்கான வழிவகைகள் முற்றிலும் தெளிவாக வரையறை செய்யப்பட்டுள்ளன. இவற்றை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்
மனத்தை அலைக்கழித்துக் கொண்டிருந்த பிரச்சினைக்குத் தீர்வுகாணும் திறவுகோல் அதில் அடங்கியிருந்தது. புதிய நற்செய்தியின் அடிப்படை, உலகம் துக்கமும் துன்பமும் நிறைந்தது என்ற உண்மையாகும். இது கருத்தில் கொள்ள வேண்டிய உண்மை என்ற அளவில் இல்லாமல், மீட்சிக்கான எந்தத் திட்டத்திலும் முதலாவதாகவும் முதன்மையானதாகவும் கொள்ள வேண்டிய உணமையாகும். இந்த உண்மையை உணர்ந்ததன் மூலம் புத்தர் தமது நற்செய்திக்குத் தொடக்கம் அமைத்தார்.
தமது நற்செய்தியால் ஏதேனும் பலன் விளையவேண்டும் என்றால், இந்தத் துக்கத்தையும் துன்பத்தையும் நீக்குவதே அதன் நோக்கமாகவும் குறிக்கோளாகவும் இருக்கவேண்டும் என்பது அவர் கருத்து.
இந்தத் துக்கத்துக்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்த போது புத்தர் இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும் என்று கண்டார்.
மனிதனின் துக்கத்திலும் துன்பத்திலும் ஒரு பகுதி அவனுடைய சொந்த தீய நடத்தையின் விளைவாகும். துக்கத்துக்கான இந்தக் காரணத்தை நீக்குவதற்காக அவர் பஞ்சசீலத்தைப் பின்பற்றுமாறு உபதேசித்தார்.
பஞ்சசீலத்தில் பின்வரும் நெறிகள் உள்ளன;
(1) எந்த உயிரையும் அழிப்பதையும், அழிவுக்குக் காரணமாயிருப்பதையும் தவிர்த்தல்;
(2) களவு செய்யாமல் தவிர்த்தல் அதாவது, ஏமாற்றின் மூலமோ வன்முறையின் மூலமோ பிறர் பொருளைத் தனதாக்கிக் கொள்வதையும் தன்னிடம் வைத்துக் கொள்வதையும் தவிர்த்தல்;
(3) பொய் உரையாமல் தவிர்த்தல்;
(4) காமம் தவிர்த்தல்;
(5) மது தவிர்த்தல்.
உலகில் காணும் துக்கத்திலும் துன்பத்திலும் ஒரு பகுதி, மனிதனுக்கு மனிதன் செய்யும் அநியாயத்தின் விளைவு என்பது புத்தரின் கருத்து. இந்த அநியாயத்தை எப்படி நீக்குவது? இதற்கு அவர் கூறிய வழி உன்னத எண்வகைப் பாதை. இந்த எண்வகைப் பாதையின் அம்சங்களாவன:
(1) நல்ல கருத்துக்கள். அதாவது மூட நம்பிக்கைகளிடமிருந்து விடுதலை;
(2) நல்ல நோக்கங்கள், அறிவும் ஆர்வமுள்ள மனிதனுக்குத் தகுந்தவையான, உயர்ந்த நோக்கங்கள்;
(3) நல்ல பேச்சு; அதாவது அன்பும் தெளிவும் உண்மையுடையது.
(4) நல்ல.நடத்தை, அதாவது, அமைதியான, நேர்மையான, தூய்மையான நடத்தை;
(5) நல்ல வாழ்க்கை வழி, அதாவது எந்த உயிருக்கும் தீங்கு ஏற்படுத்தாதது;
(6) நல்ல முயற்சி, அதாவது மற்ற ஏழு அம்சங்களிலும்;
(7) நல்ல மனஉணர்வு, அதாவது, விழிப்பாகவும், செயல் துடிப்புடனும் இருத்தல்;
(8) நல்ல சிந்தனை, அதாவது, வாழ்க்கையின் அழ்ந்த மர்மங்கள் பற்றிக் தீவிரமாகச் சிந்தித்தல்
உன்னத எண்வகைப் பாதையின் நோக்கம் உலகில் நன்னெறியின் அரசை நிறுவி அதன் மூலம் உலகிலிருந்து துயரத்தையும் துன்பத்தையும் ஒழிப்பதாகும்.
நற்செய்தியின் மூன்றாவது பகுதி நிப்பானக் கோட்பாடு ஆகும். நிப்பானக் கோட்பாடு உன்னத எண்வகைப் பாதைக் கோட்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். நிப்பானம் இல்லாமல் எண்வகைப் பாதை நிறைவுபெற முடியாது.
எண்வகைப் பாதை கைகூடுவதற்கு என்னென்ன இடையூறுகள் உள்ளன என்பதை நிப்பானக் கோட்பாடு கூறுகிறது.
இந்த இடையூறுகளில் முக்கியமானவை பத்து. புத்தர் இவற்றைப் பத்து ஆசவங்கள், தளைகள் அல்லது இடையூறுகள் என்று குறிப்பிடுகிறார்.
முதலாவது இடையூறு தான் என்ற மாயை. ஒரு மனிதன் முற்றிலும் தன்னைப்பற்றிய எண்ணத்திலேயே ஆழ்ந்து, தன்னுடைய மனத்தின் ஆசைகளைத் திருப்திப்படுத்தும் என்று தான் நினைக்கிற ஒவ்வொரு அற்ப விஷயத்தையும் துரத்திச் சென்று கொண்டிருக்கும் வரை அவனுக்கு மேன்மையான பாதை கிடையாது. அளவிடற்கரிய முழுமையில், தான் ஒரு நுண்ணிய பகுதி என்ற உண்மையைக் காண்பதற்கு அவனுடைய கண்கள் திறந்தால்தான் தன்னுடைய தற்காலிகத் தனித்தன்மை எவ்வளவு நிலையற்றது என்பதை அவன் உணர்ந்தால்தான், இந்தக் குறுகிய பாதையில் நுழைவதே கூட அவனுக்குச் சாத்தியமாகும்.
இரண்டாவது இடையூறு சந்தேகமும் தீர்மானம் இன்மையும் ஆகும். வாழ்க்கையின் பெரும் மர்மத்தைக் காண்பதற்கு ஒருவனுடைய கண்கள் திறக்கும்போதும் ஒவ்வொரு தனித்தன்மையின் நிலையாமையை அவன் உணரும்போதும் அவனுக்குத் தனது செயல்கள் பற்றிய சந்தேகமும் தீர்மானம் இன்மையும் எழுகின்றன. செய்வதா – செய்ய வேண்டாமா?என்கிற தடுமாற்றமும் தன்னுடைய தனித்தன்மையே நிலையற்றதாயிருக்கும் போது எதையும் ஏன் செய்ய வேண்டும் என்ற தீர்மானமற்றவனாகவும் செயலற்றவனாகவும் ஆக்குகின்றன. ஆனால் வாழ்க்கைக்கு இது சரிப்பட்டுவராது. அவன் தனது ஆசிரியரைப் பின்பற்றுவதென்றும்., உண்மையை ஏற்பதென்றும், அதற்கான முயற்சியில் இறங்குவதென்றும் முடிவு செய்து கொள்ளவேண்டும்; இல்லையென்றால் அவன் முன்னேற எவ்வளவு உறுதியாக இருந்தாலும், அவன் சடங்கு முறைகளைக் கைவிட்டாலன்றி, புறத்தே செய்யும் செய்கைகளும், புனிதச் சடங்குகளும், புரோகிதர்களின் சக்திகளும் தனக்கு எந்த வகையிலேனும் உதவும் என்ற நம்பிக்கையை விட்டாலன்றி, எந்தப் பயனும் ஏற்படாது. இந்த
இடையூற்றை ஒருவன் கடந்தால்தான் நீரோட்டத்தில் அவன் இறங்கியிருப்பதாகவும், விரைவிலோ அல்லது தாமதமாகவோ அவன் வெற்றிபெற முடியும் என்றும் கூறமுடியும்.
நான்காவது இடையூறு உடல் சார்ந்த ஆசைகளாகும்.
ஐந்தாவது, மற்ற மனிதர்களின்பால், தவறான எண்ணம் கொள்வதாகும்.
ஆறாவது, பருவுடலுடன் வாழும் மறுமை வாழ்வு பற்றிய ஆசையாகும்;
ஏழாவது, பொருட்தன்மையற்ற உலகில் மறுமை வாழ்வு வாழும்
ஆசையாகும்.
எட்டாவது இடையூறு கர்வமும்,
ஒன்பதாவது, தானே நல்லவன் என்ற எண்ணமும் ஆகும். மனிதர்கள் வெல்வதற்குக் கடினமான பிழைபாடுகள் இவை; குறிப்பாக உயர்ந்த மனங்கள் இவற்றுக்கு தங்களைவிடக் குறைந்த திறனும், குறைந்த. தூய்மையும் கொண்டவர்களிடம் பரிசேயரீதியில் ஏற்படும் இளக்கார மனப்பான்மைக்கு உள்ளாகின்றன.
பத்தாவது இடையூறு அறியாமையாகும். மற்ற இடையூறுகளை யெல்லாம் வென்ற பின்பும் இது தடையாக நிற்கும். விவேகிகளுக்கும் நல்லவர்களுக்கும் முள்ளைப் போல் உறுத்திக் கொண்டு, மனிதனின் கன்டசி எதிரியாக, கடுமையான பகைவனாக இது இருக்கும்.
நிப்பானம் என்பது உன்னத எண்வகைப் பாதையைப் பின்பற்றுவதற்குத் தடையாக உள்ள இந்த இடையூறுகளைக் கடப்பதாகும்.
உன்னத எண்வகைப் பாதைக் கோட்பாடு, ஒரு மனிதன் எத்தகைய மனப்பான்மையை முயன்று வளர்க்கவேண்டும் என்பதைக் கூறுகிறது. உன்னத எண்வகைப் பாதையில் செல்வதற்கு ஒருவன் முயன்று கடக்கவேண்டிய இடையூறுகள் என்ன என்பதை நிப்பானக் கோட்பாடு எடுத்துரைக்கிறது.
புதிய நற்செய்தியின் நான்காவது பகுதி பரமிதங்களின் கோட்பாடு ஆகும்.
பரமிதங்களின் கோட்பாடு, தினசரி வாழ்க்கையில் கடைப்பிடித்து நடக்கவேண்டிய பத்து ஒழுக்கங்களை எடுத்துரைக்கிறது.
இந்தப் பத்து ஒழுக்கங்களாவன :-
(1) பன்னா,
(2) சீலம்,
(3) நிக்காமம்,
(4) தானம்,
(5) வீர்யம்,
(6)காந்தி,
(7) சுச்சம்,
(8) அதிட்டானம்.
(9) மேத்தம்,
(10) உபேக்கை.
பன்னா அல்லது அறிவு என்பது அவிஜ்ஜா, மோகம் அல்லது அறியாமை. பன்னா வேண்டு மென்றால், ஒருவன் தனது ஐயங்கள் பற்றி தன்னைவிட அறிவுடையோரிடம் கேள்வி கேட்டு அவற்றை நீக்கிக் கொள்ளவேண்டும்; அறிவுடையோருடன் இணங்கிப் பழகவேண்டும்; அறிவை வளர்க்கும் பல்வேறு கலைகளையும் விஞ்ஞானங்களையும் பயிலவேண்டும்.
சீலம் என்பது அறநெறி உணர்வு; தீமை செய்யாமையும், நன்மை செய்வதும் ஆகிய இயல்பு; தவறு செய்வதில் நாணமடைதல்; தண்டனைக்கு அஞ்சி தீமை செய்யாமல் தவிர்த்தல் சீலமாகும். சீலம் என்றால் தவறு செய்ய நாணுதல் என்று பொருள்.
நிக்காமம் என்பது உலக இன்பங்களைத் துறத்தல்.
தானம் என்பது தன்னுடைய உடைமைகளையும். இரத்தத்தையும், உறுப்புகளையும், உயிரையும் கூட, மற்றவர்களின் நன்மைக்காக, கைம்மாறு கருதாமல் கொடுப்பது.
வீர்யம் என்பது நல்ல முயற்சி, ஒருவன் எடுத்துக் கொண்டுள்ள எந்தச் செயலையும் மனம் மாறுபடாமல், முழுத்திறனுடன் செய்தல்.
காந்தி என்பது பொறையுடைமை. வெறுப்பவரை வெறுக்காமலிருப்பது இதன் சாராம்சம். வெறுப்பினால் வெறுப்பு தணிவதில்லை. பொறையுடைமைதான் வெறுப்பைத் தணிக்கும்.
சுச்சம் என்பது உண்மை. புத்தராக விரும்புகிறவன் ஒருபோதும் பொய் பேசமாட்டான். அவன் பேசுவது உண்மை, உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை.
அதிட்டானம் என்பது குறிக்கோளை அடைந்தே தீருவது என்ற உறுதி.
மேத்தம் என்பது எல்லா உயிர்களிடத்தும் பகைவர், நண்பர், விலங்கு, மனிதன் ஆகிய எல்லா உயிர்களிடத்தும் கொள்ளும் அன்பு உணர்ச்சி.
உபேக்கை என்பது பற்றின்மை; அது அலட்சியம் அல்ல. அது, விருப்போ வெறுப்போ இல்லாக ஒரு மனநிலை. விளையும் பலனால் பாதிக்கப்படாமலும் அதேசமயம் அதை அடையும் முயற்சியில் ஈடுபட்டும் இருக்கும் நிலை.
இந்த ஒழுக்கங்களை ஒருவன் தன்னுடைய முழுமையான திறனளவுக்குப் பின்பற்ற வேண்டும். அதனால்தான் இவை பரமிதாக்கள் (நிறைவுற்ற நிலைகள்) எனப்படுகின்றன.
புத்தர் ஞானம் பெற்றதன் விளைவாக. உலகிலிருந்து துன்பத்தையும் துக்கத்தையும் ஒழிப்பதற்கு உபதேசம் செய்த நற்செய்தி இத்தகையதாக உள்ளது.
புத்தர் பின்பற்றிய வழிவகைகள் அவர் காட்டிய வழியில் ஒருவன் தானே மனப்பூர்வமாகச் செல்லும்படி, அவனது அறநெறி உணர்வைச் செம்மையாக மாற்றியமைப்பனவாக இருந்தன என்பது தெளிவாகத் தெரிகிறது.
பொது உடைமைவாதிகள் பின்பற்றிய வழிவகைகளும் இதே போலத் தெளிவாகவும் சுருக்கமாகவும் விரைவாகவும் உள்ளன.
அவை; (1) வன்முறை (2) உழைப்பாளர்களின் சர்வாதிகாரம்.
பொது உடைமையை நிறுவுவதற்கு இரண்டு வழிகள்தான் உள்ளன என்று பொது உடைமை வாதிகள் கூறுதிறார்கள். முதலாவது வன்முறை, இப்போதுள்ள முறைமையை உடைப்பதற்கு இதைவிடக் குறைந்த எதுவும் போதுமானதாகாது.மற்றது உழைப்பாளர்களின் சர்வாதிகாரம். புதிய முறைமை தொடர்ந்து செயல்படுவதற்கு இதற்குக் குறைந்த எதுவும் போதுமானதாகாது.
இப்போது புத்தருக்கும் காரல்மார்க்ஸீக்கும் இடையே என்ன ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் உள்ளன என்பது தெளிவாகிறது. வேற்றுமைகள் வழிவகைகள் பற்றியவையே. குறிக்கோள் இருவருக்கும் பொதுவானது.
—-

