பாபா சாகேப் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு
அண்ணல் அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு நூலைக் குரல் வடிவில் தரும் ஒலி வட்டு இது. 26 தலைப்புகளில் அமைந்த அம்பேத்கரின் உணர்வு மயமான கருத்துகளை தோழர் யாக்கன் எழுச்சி மயமான குரலில் தந்துள்ளார். 1936_ல் லாகூரில் இருந்த இந்து மத சீர்திருத்த அமைப்பு ஒன்றின் மாநாட்டின் தலைமை உரையாற்ற அம்பேத்கர் அழைக்கப்பட்டார். ஆனால், அம்மாநாடு நடைபெறவில்லை. இம்மாநாட்டில் அம்பேத்கர் பேச இருந்த உரையில் சில திருத்தங்களைச் செய்யவேண்டும் என்ற மாநாட்டுக் குழுவினரின் கோரிக்கையை அம்பேத்கர் நிராகரித்தார். உரையை எள்ளளவும் மாற்றமுடியாது என்று கூறிவிட்டார். இதனாலேயே மாநாடு நடைபெறவில்லை. ஆனாலும்,இவ்வுரையை அம்பேத்கர் ஒரு நூலாக ஜாதி ஒழிப்பு என்ற பெயரில் வெளியிட்டார். இந்நூலைத் தமிழில் ஜாதியை ஒழிக்க வழி என்ற பெயரில் வெளியிட்டவர் தந்தை பெரியார். (இந்த வரலாற்றுக் குறிப்பை ஏனோ இந்த ஒலி நூலில் குறிப்பிடவில்லை) ஒன்பது மொழிகளில் வெளிவந்துள்ள இந்நூல் இன்றளவும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்திற்கு ஓர் உந்து சக்தியாக விளங்குகிறது. இந்து மதத்தின் கொடூர ஜாதி முறையை தோலுரிக்கும் இந்நூலை காலத்தின் தேவைக்கேற்ப ஒலிப் புத்தக வடிவத்தில் கொண்டு வந்த www.ambedkar.in அமைப்பினரைப் பாராட்டவேண்டும்.
தொடர்புக்கு: www.ambedkar.in 194/9.ஏசியாட் காலனி, அண்ணா நகர் மேற்கு, சென்னை- 600101. தொலைபேசி: 9710304064
நன்கொடை : ரூ.100/-
நன்றி : உண்மை