Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » அயோத்திதாசப் பண்டிதரின் பகுத்தறிவுவாத பௌத்தம்
    ஆய்வுகள்

    அயோத்திதாசப் பண்டிதரின் பகுத்தறிவுவாத பௌத்தம்

    Sridhar KannanBy Sridhar KannanSeptember 21, 2017No Comments17 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    “நம்முடைய சங்கத்தின் சத்தியதன்ம போதமோவென்னில், ஒவ்வொரு மனிதனும் நீதிநெறி வாய்மெயில் நிலைத்து மெய்ப்பொருளுணர்ந்து தீவினைகளை ஒழித்து பிறவியின் துக்கத்தை ஜெயிக்க வேண்டும் என்பது கருத்தும் சத்திய சாதனமுமாகும்” -க. அயோத்திதாசர்

    இயற்கை சக்திகளான இடி, பெருமழை, வெள்ளம் போன்றவற்றைக் கண்டு பயந்து நடுங்கிய ஆதி மனிதன், இவற்றை எல்லாம் கண்ணுக்குப் புலப்படாத ஏதோவொரு மாயசக்தி அந்தரத்திலிருந்து இயக்குவதாக நம்பினான். அந்த சக்திக்குப் பணிந்து வழிபடுவதால் அதன் கோபத்தைத் தணித்து அவ் இயற்கைச் சீற்றங்களிலிருந்து தப்பித்து வழலாம் என்ற நம்பிக்கையிலிருந்து மதம் மற்றும் கடவுள் நம்பிக்கை உருவானது என்கின்றனர் லோகாயதவாதிகள். மதம் என்றால் அது கடவுள் வழிபாடு, சடங்குகள், பிரார்த்தனைகள், மந்திர தந்திரங்கள், பேய் -பிசாசு-ஆவிகள் பற்றிய கதைகள் என்ற மூட நம்பிக்கைகளாலான சமூக நிறுவனமாக கருதப்படுகிறது.

    “மனிதனின் குறுகிய எண்ணங்களிலிருந்து மதம் பிறந்தது” என்றார் ஏங்கல்ஸ். இயக்க இயல் பொருள்முதல் வாதம் எனப்படும் மார்க்சிய மெய்ஞ் ஞானம் ‘மதம் மக்களுக்கு அபின்’, ‘மதம் என்பது ஆன்மீக பெரும்போதை’, ‘மதம் என்பது ஆன்மீக ஒடுக்கு முறையின் வடிவம்’ என்றெல்லாம் மதங்கள் குறித்து வரையறை செய்து வைத்திருக்கிறது. மதவாத சிந்தனைகள்/செயல்பாடுகள், கடவுள் நம்பிக்கை ஆகியவற்றை பகுத்தறிவுக்கு ஒவ்வாத பிற்போக்கு வாதம்/ கருத்து முதல்வாத சிந்தனை என்று புறந்தள்ளுகிறது பொதுவுடைமை சித் தாந்தம். என்றால், சமூக அறிவியல் விஞ்ஞானம் என்று போற்றப்படும் மார்க்சியம் உலகெங்கும் பரவி வலுப்பெற்று வந்த பதினெட்டாம் நூற்றாண்டின் மத்திய காலங்களிலும் பிற்பகுதியிலும் தென்னிந்திய சமூக சீர்திருத்தவாதிகளின் முன் னோடியாய் எழுச்சிப் பெற்ற அயோத்திதாசப் பண்டிதர் ‘புத்த மதம்’ என்னும் ஒரு மதத்தைத்தானே உயர்த்திப் பிடித்திருக்கிறார்! இந்திய சமூக வரலாற்று இயக்க வியல் அறிஞர்களுள் முக்கியமானவரும், அரசியல்/பொருளியல்/சட்டவியல் நிபுணருமான புரட்சி யாளர் அம்பேத்கரும் அயோத்திதாசரைத் தொடர்ந்து புத்த மதத்தைத்தானே பின் பற்றினார்!! எனில் இவர்களது புத்த மத சிந்தனைகள்/ செயல்பாடுகள் கருத்து முதல்வாத சிந்தனை அல்லது பிற்போக்கு வாதம் என்ற சட்டகத்துக்குள் அடங்கும் தன்மை கொண்டவைதானா என்ன? இது போன்று எழும் கேள்விகளுக்கு பொதுப்புத்தியில் வரையறுக்கப்பட்டுள்ள மதம் என்னும் சொல்லாக்கத்துக்கான பொருள் கௌதம புத்தரால் அருளப்பட்ட புத்த தம்மம் என்னும் புத்த மதத்துக்கு பொருந்துவதில்லை என்பதையும் புத்த தம்மத்தைப் பின்பற்றிய அயோத்திதாசரும் அம்பேத்கரும் கருத்து முதல்வாத சிந்தனையா ளர்கள் அல்ல, பகுத்தறிவுவாத-பொருள் முதல்வாத சிந்தனையாளர்களேயாவர் என்பதையும் இக்கட்டுரை வழியாக இயன்ற அளவுக்கு காண்போம்.

    கி.மு. ஆறாம் நூற்றாண்டுகளின் மத்திய காலங்களில் தோன்றி ஆறு ஆண் டுகளின் தியான வலிமையின் மூலம் போதி மரத்தின் கீழ் பெற்ற ஞானத்தால் புத்தர் அருளிய புத்த தம்மமானது சமூகம் அர்த்தப்படுத்திக்கொண்டுள்ள மதம் என்னும் வகைப்பாட்டுக்குள் அடங்காமல் அறிவு, அன்பு, அறம், சீலம், நீதிநெறி போதிக்கும் மென்மையானதொரு மார்க்கமாக தனித்து நிற்கிறது. கடவுள்/ ஆன்மா/ மறுபிறப்பு/ விதி என்று பிற மதங்களால் கற்பிக்கப்பட்டுள்ள மூடநம்பிக் கைகளை மறுதலித்து எழுந்த பகுத்தறிவு மையமாகவே பௌத்த சமயம் விளங்கு கிறது. ஆகவே உலகளவில் பெரும் மதங்கள் எனப்படும் கிறித்துவம்/இஸ்லாம் மற்றும் பிற மதங்களின் தோற்றம், வளர்ச்சி, வரலாறுகளின் மூலம் மார்க்சியம் போன்ற முற்போக்கு சித்தாந்தங்கள் கண்டறிந்த அனுபவங்களின் சாயல் பண் டைய இந்திய மதமான பௌத்தத்தின் மேல் இல்லை என்பதிலிருந்து மதம் என் பது பற்றிய மார்க்சியத்தின் கருதுகோள் பௌத்தத்திற்குப் பொருந்தாமல் போகி றது. மார்க்சியம் அறிந்த மதங்களின் வரலாறு என்பது வன்முறைகள் மூலமும் சிந்தப்பட்ட இரத்தப் பெருக்கின் மீதும் தம்மை நிறுவிக் கொண்ட வரலாறாகவே இருந்து வந்துள்ளது. இந்த வகையில் புத்த மதம் அல்லது மார்க்கமானது உல கின் மற்றெந்த மதங்களினின்றும் வேறுபட்டு வன்முறைக்கு அப்பாற்பட்ட அற நெறியை/அஹிம்சையை போதிக்கும் நீதிநெறி மார்க்கமாக விளங்குகிறது.

    பறையர்களை சாதி பேதமற்ற திராவிடர்கள் என்றழைத்த அயோத்திதாசர் பௌத்தத்தை அவர்களது பூர்வ மதம் என்றார். பௌத்தம் பார்ப்பனர்களின் இருப்புக்குச் சவாலாய் இருந்தது என்பதாலும் அப்பௌத்தத்தை கைகளில் ஏந்தி பாதுகாத்து வந்தவர்கள் பறையர்கள் என்பதாலும் அவர்கள்மீது பகைமைப் பாராட்டிய பார்ப்பனியம் பெரும் சூழ்ச்சிகள் வகுத்து பறையர்களை தீண்டத் தகாதவர்களாக ஆக்கியது என்றார். அம்பேத்கரும் கூட மகர்கள் நாக வம்சத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்; பார்ப்பனியத்துக்கும் பௌத்தத்துக்குமான போட்டியில் பௌத்தம் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற நிலைக்கு ஆளாக்கப்பட்டனர் என்றார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டுகளில் பார்ப்பனியம் வென்று மேலாதிக்கம் பெற்றதுடன் தீண்டாமையும் தோற்றம் கொண்டதாக வரலாற்றுச் சான்றாதாரங்களுடன் நிறுவும் அயோத்திதாசரும் அம்பேத்கரும் இவ்வகையில் வழக்கொழிந்துபோன பௌத்தம் மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும் என்று செயல்பட்டனர்.

    முன்னொரு காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் மதமாக பௌத்தம் இருந்தது என்னும் ஒற்றைக் காரணத்தை முன் வைத்துவிட்டு ஏதோ பிதுரார்ஜித உரிமையுணர்வோடு மட்டுமே பண்டிதரும் அம்பேத்கரும் பௌத்த மதத்தின் மீட்டுருவாக்கம் கோரினர் என்று நினைப்பது அறிவாகாது. மாறாக பௌத்தத்தின் சத்தரும /பஞ்சசீல/எண்வழி கோட்பாட்டுகளும் சிந்தனைகளும் புத்த பகவானால் பகுத்தறிவு அடிப்படையில் வடிவமைக்கப்பட்டவை என்பதாலும் பௌத்தம் அடிப்படையிலேயே சாதி மறுப்புக் கொள்கையுடையது என்பதாலும் யாவரையும் சமமாக பாவிப்பது/ சமத்துவக் கண்கொண்டு அணுகுவது என்பன போன்றவை பௌத்தத்தின் அடிநாதமாக விளங்குகின்றன என்பதாலுமே அச்சமயத்தால் ஈர்க்கப்பட்டனர் என்பதுவே சரி. அயோத்திதாசர்/அம்பேத்கர் ஆகிய இவ்விருவரும் இந்தியச் சமுதாயத்தில் நிலவும் பார்ப்பனிய மேலாதிக்கத்தையும் இந்து மதத்தின் சாதிய ஏற்றத்தாழ்வுகளையும் சமய அங்கீகாரத்தோடு எதிர்கொள்வதற்கான வாய்ப்புகள் பௌத்தத்திற்குள் அமைந்திருப்பதாக நம்பினர். “வாழ்நிலை மற்றும் இருத்தலியல் தேவைகளுக்கு அனுசரணையான கருத்துக்களை பௌத்தத்திலிருந்து மறுவிளக்கம் செய்யும் முயற்சியும் முக்கியத்துவம் பெற்றது. இம் முயற்சிகளில் ஒன்றாக க.அயோத்திதாசரின் பௌத்தம் அமைந்தது. பார்ப்பனியத்துக்கு மாற்றாக, எதிர் மதமாக, சாதி பேதமற்ற அறநெறியாக ஒரு பௌத்த மதத்தை சரித்திரத்தையும் புனைவையும் கலந்து கட்டி எழுப்பினார்” என்னும் ராஜ்கௌதமன் கூற்றில் மாற்றியமைக்கப்பட்ட ஒரு பௌத்தத்தை அயோத்திதாசர் கட்டி எழுப்பினார் என்னும் பொருள் உள்ளடங்கியிருக்கிறது.

    “இந்துக்களென்போர் சாதி பேதமென்னுங் கொடுஞ்செயலையே பீடமாகக் கொண்டொழுகுகிறவர்கள். பௌத்தர்களோ சாதிபேதமென்னுங் கொடுஞ்செயல் அற்று அன்பையே பீடமாகக் கொண்டொழுகுகிறவர்கள்” என்று இந்து மதத்தையும் பௌத்தத்தையும் கோட்பாட்டு அடிப்படையில் வேறுபடுத்திக் காட்டுகிறார் அயோத்திதாசர். பிற மதங்கள் கடவுள்/ ஆன்மா/மறுபிறப்புப் பற்றி அலட்டிக்கொண்டிருக்க புத்த மதம் அறிவு/அன்பு/சமத்துவம் என்பவற்றை போதிக்கிறது. ஒரு மனிதன் மகிழ்வான வாழ்க்கையை அடைவதற்கு இம்மூன்று கோட்பாடுகளும் அவசியமாகின்றன என்கிற வகையில் இவை என்னைப் பெரிதும் கவர்ந்தன என்றார் அம்பேத்கரும்.

    பிற்போக்கு இந்து மதமும் பகுத்தறிவுவாத பௌத்தமும்:

    சமத்துவம்/ சகோதரத்துவம்/ சுதந்திரம் என்னும் உயரிய நோக்கங்களாலான புத்த மதம் ஒரு சாதி மறுப்பு சமயமாகவும் விளங்குகிறது என்பதாலேயே சாதி பேத மதமான இந்து மதத்தினின்று வேறுபட்டு தனித்து நிற்கிறது. பிளவுவாத/ பிரிவினைவாத சித்தாந்தமான பார்ப்பனியத்தால் வடிவமைக்கப்பட்ட இந்து மதமும் அதன் கோட்பாடுகளும் எவ்வெவ்வகையில் புத்த சமய கொள்கைகளிலிருந்து வேறுபட்டு நிற்கின்றன என்பதை அயோத்திதாரின் மொழியாக்கத்திலேயே இங்கு காண்போம். அவர் சொல்கிறார்:

    “இந்துக்கள் என்போர் அவரவர்கள் ஏற்படுத்திக்கொண்டுள்ள அவரவர்கள் தேவதைகளைத் தொழுது அவர்களுக்குப் பூசை, நெய் வேத்தியஞ்செய்து வந் தால் மோட்சமும் சுகமும் உண்டென்பார்கள். பௌத்தர்களோ சன்மார்க்க அடிப்படையில் சீலத்தைப் பின்பற்றி ஒழுக்கத்தில் நிலைப்போர்க்கு முத்திய சுகமுண்டென்பார்கள்.

    இந்துக்கள் என்போர் அவர்கள் ஏற்படுத்திக்கொண்டுள்ள வேதத்தை நம்பு வதுடன் சாதியாசாரம் சமயசாரத்தில் லைத்திருக்க வேண்டுமென்பார்கள். பௌத்தர்களோ தங்களது பௌத்த போதாகமத்தின்படி பாவச் செயல்களை அகற்றி, நன்மெய்க் கடைபிடித்து இதய சுத்தி உடையவர்களாகி சருவ சீவகர்கள் மீதும் அன்பு பாராட்ட வேண்டும் என்பார்கள்.

    இந்துக்களென்போர்களுக்கு தங்கள் சாதியாசாரங்களுக்குத் தக்க சாதிப் பெயரும் தொடர் மொழியும் இருப்பதுடன் நெற்றியிலும் கழுத்திலும் சமய சின் னங்களாகும் விபூதி, திருமண், உருத்திராட்சம் முதலியன இருத்தல் வேண்டும்.

    பௌத்தர்களோ சகல மக்களையும் சோதிரரென பாவித்து சகலரும் ஒற் றுமெயின் வாழ்க்கைப் பெற விரும்புதலும், பஞ்ச பாதகங்களை அகற்றி வாழ்தலே பௌத்த சின்னமென்று எண்ணி பஞ்சசீலத்தையே தியானமாகக் கொண்டு அம் மேறை நடப்பார்கள்”

    இந்து மதம் கடவுள்/ மோட்சம்/சொர்க்கம் என்னும் மூடநம்பிக்கைகளைக் கண்மூடிக்கொண்டு பின்பற்றும் மதமாக இருக்கிறது; சாதியப் பிரிவினைகளை தனது பிரதானக் கோட்பாடாகக் கொண்டிருக்கிறது; மத அடையாளங்களை நெற்றியிலும் கழுத்திலும் சுமந்துகொண்டு திரியும் ஒரு பிற்போக்கு மதமாக உள்ளது என்பதை விளக்குகின்றன மேற்காணும் அயோத்திதாசரின் குறிப்புகள். அதே சமயம் மனிதர்களை சதுர் வர்ணங்கள்/சாதிகள் என்று பிளவுபடுத்தும் இந்து மத நம்பிக்கைகளுக்கு நேர் விரோதமான சகோதரத்துவத்துவ அடிப்படையில் அன்பின் வழிப்பட்ட மக்கள் ஒற்றுமையை போதிக்கிறது புத்த தம்மம் என்பதை யும் குறிப்பிட்டுக் காட்டுகிறார் பண்டிதர்.

    தீண்டப்படாதவர்களும் பின்தங்கிய வகுப்பினரும் படிநிலை அடிப்படை யில் அமைந்த சாதிய வுஏற்றத்தாழ்வுகளை இந்து மதம் தனது சித்தாந்தமாகக் கொண்டு கடைபிடிப்பதால் இம் மதத்தை எதிர்க்கின்றனர். அறிவுத்துறை பெரிதும் வளர்ச்சியடைந்துள்ள இன்றைய கட்டத்தில் இந்த வகுப்பினர் இந்து மதத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள் என்ற அம்பேத்கர் இந்து மதத்தை வெறுத்தொதுக்கிய அவர்கள் மூன்று காரணங்களுக்காக பௌத்தத்தை விரும்புகின்றனர் என்றார். அவை:

    1) பௌத்தம் இந்தியாவுக்கு அந்நியமான மதமல்ல.

    2) பௌத்த மத்தின் மிக முக்கியமான சித்தாந்தம் சமூக சமத்துவமாகும். இதைத்தான் அவர்கள் விரும்புகின்றனர்.

    3) பௌத்தம் பகுத்தறிவு சார்ந்த மதம். அதில் மூட நம்பிக்கைகளுக்கு இடமில்லை.

    தீண்டப்படாதவர்கள் பௌத்தம் விரும்புவதற்கான காரணங்களை இவ்வாறு எடுத்துக் காட்டிய அம்பேத்கர் 1956, மே-24ல் பம்பாய் நரே பூங்காவில் நடை பெற்ற மாபெரும் கூட்டத்தில் நிகழ்த்திய சொற்பொழிவின்போது புத்த மதம் இந்து மதத்தினின்று பகுத்தறிவுவாத அடிப்படையில் மேம்பட்டது என்பதற்கு ஆதாரமாக கீழ்வரும் வாதங்களை முன்னிறுத்தினார். அவை:

    1) இந்து மதம் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறது. புத்த மதத்துக்கு கடவுள் இல்லை.

    2) இந்து மதம் ஆன்மா என்று ஒன்று இருக்கிறது என்று நம்புகிறது. புத்த மத சித்தாந்தத்தின்படி ஆன்மா இல்லை.

    3) இந்து மதம் சதுர் வர்ணத்தையும் சாதி அமைப்பு முறையையும் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் புத்த மதத்தில் சதுர் வர்ணியத்துக்கும் சாதி அமைப்பு முறைக்கும் இடமில்லை.

    புரட்சியாளர் அம்பேத்கார் இந்து மதத்தினின்று பௌத்தத்தை வேறுபடுத் திக் காட்டி அதன் முற்போக்கு சித்தாந்தத்தை 1956களில் விளக்கியது போலவே அயோத்திதாசர் 1910களிலேயே விளக்கமளித்துள்ளார். வகுப்புவாரி பிரதிநித் துவம் கோரியது, அரசியல்/கல்வி/வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இடஒதுக்கீடு வேண்டியது, கல்வி பெறுவதற்கு சிறப்பு சலுகைகள், பொதுசொத்துக்களில் தமக்கான பங்கு/பொது இடங்களில் தலித் மக்கள் புழங்குவதற்கான சிவில் உரிமைகள் கோருதல் என்று தலித் மக்கள் முன்னேற்றத் துக்காக சிந்தித்ததிலும் தலித்துகளுக்கான அரசியல்/சமூக நல அமைப்புகள் தோற்றுவித்து மக்களைத் திரட்டி போராட்டங்கள் நடத்தியதிலும் சாதி ஒழிப்புப் போராளியாக எழுச்சிப் பெற்றதிலும் புரட்சியாளர் அம்பேத்கருக்கும் முன்னோடியாகத் திகழ்கிறார் அயோத்திதாசர் என்றால் அது மிகையாகாது. அதே வேளையில் தலித் மக்கள் இந்து மதத்தின் சாதிய ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை அடைவதற்கான வாய்ப்புகள் நிறைந்துள்ள ஒரு மார்க்கமாக பௌத்தத்தைத் தேர்வு செய்ததிலும் பண்டிதர் அம்பேத்கருக்கு முன்னோடியாகவே விளங்குகிறார் என்பதும் மனதில் கொள்ளத்தகுந்தது.

    அயோத்திதாசரின் மாற்றியமைக்கப்பட்ட பௌத்தம்:

    புத்த மதத்தின் சாதி பேதமற்ற சகோதரத்துவம் குறித்து கீழ்வருமாறு எடுத்துரைக்கிறார் அயோத்திதாசர்: “புத்த மதத்தில் சாதி பேதமில்லதிருக்க வேண்டுமென்று போதித்துள்ள கட்டளைபடிக்கு பலவகை கால்வாய்களில் ஓடிவரும் அசுத்த சலங்களெல்லாம் சமுத்திரத்தில் விழுந்து சுத்தமடைவதுபோல் பார்ப்பனனென்பவன் வந்தாலும், நாயுடு என்பவன் வந்தாலும், முதலி என்பவன் வந்தாலும் அவர்களை வேறு சாதி என்று வித்தியாசம் பாராமலும் சத்துருக்களென்று சங்கைக்கொள்ளாமலும் தன்னவர்களைப்போல ஆதரித்து சுத்த இதய முண்டாகச் செய்வார்களே அல்லாது இன்ன சாதி இனிய சாதி என்று புறங்கூறி தள்ளமாட்டார்கள்”(காண்க:அயோத்திதாசரின் புத்தர் என்னும் இரவு பகலற்ற ஒளி) பௌத்தத்தின் சகோதரத்துவ/சமத்துவ சிறப்புகளை மேற்கண்ட வகையில் புரிந்துகொண்ட பண்டிதர் தமிழகத்தில் கட்டி எழுப்பிய தமிழ்ப் பௌத்தத்தை பகுத்தறிவுவாத பௌத்தம் என்று சொல்லத் துணிகிறோம் நாம். “வழக்கமான பௌத்த வரலாற்றிலிருந்து விலகி தாசர் பழந்தமிழ் இலக்கியங்கள், நிகண்டுகள், பௌத்த சமய நூல்கள், செவிவழிக் கதைகள், பழமொழிகள் ஆகியவற்றை மறு வாசிப்பு செய்து பௌத்த தன்மத்தை வாழ்ந்து வீழ்ந்த பறையரின் பூர்வ மதமாக, பாதிக்கப்பட்டோரின் மதமாக கட்டி எழுப்ப முயன்றார். இது அவரது தனித் தன்மை” எனும் ராஜ் கௌதமன் அவர்களது கூற்றும் இங்கு நினைவுக் கூறத் தகுந்தது.

    அயோத்திதாசர் இங்கு கட்டியமைத்த பௌத்தம் மரபான பௌத்தத்தின் சாயல் கொண்ட முற்போக்கான பௌத்தமாகும். பகவன் புத்தர் இறந்து நூற்றுப் பத்தாண்டுகள் கழிந்தபின் புத்த மதத்தில் நுழைந்துவிட்ட புதிய பழக்க வழக்கங்களை மறுக்கும் பொருட்டு 700 பிக்குகள் கொண்ட மாநாடு கூடியது என்று சொல்லப்படுகிறது. அதன்பின் புத்த மதம் ஹீனயாணம்(தேரவாதம்)/மகாயாணம் என்று இரண்டு பிரிவுகளாக உடைந்ததாகவும் மரபான பௌத்தத்தைப் பின்பற்றியவர்கள் ஹீனயாண பௌத்தர்கள் என்று அழைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மகாயாண பௌத்தம் புத்தரை கடவுள் நிலைக்கு கொண்டுசென்றது; கடவுள்/ஆன்மா/மறுபிறப்பு கொள்கைகள் மீது நம்பிக்கைக் கொண்டு செயல் பட்டது; சாதி மறுப்பை வற்புறத்தவில்லை என்றும் சொல்லப்படுகிறது. “இலங் கைத் தீவிலே, கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் நாளது வரையில், பழைய தேரவாத பௌத்தம் நிலைப்பெற்றுள்ளது. இத்தீவிலேயும் கி.மு. முதல் நூற் றாண்டிலே புதிய கொள்கைகள் பௌத்த மதத்தில் புகத் தொடங்கின” என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி. பவுத்தம் மற்றும் இலங்கை பௌத்த வரலாற்றுப் பின்னணி இவ்வாறிருக்க 1898ல் கர்னல் ஆல்காட் துரையுடன் இலங்கை சென்று பௌத்தம் தழுவிய அயோத்திதாசர் இலங்கை பௌத்தத்திலிருந்து மாற்றியமைக்கப்பட்ட புதிய பௌத்தத்தை தமிழகத்தில் நிறுவ முயன்றிருக்கிறார்.

    “அயோத்திதாசரின் பவுத்தம் தனித்தன்மை மிக்கது. இலங்கை சென்று பவுத்தம் தழுவி திரும்பிய அவர் ஈழ பவுத்த சாயலை பின்பற்றாமல் முற்றிலும் புதிய வழியை தேர்வு செய்தார். தமிழ் மரபிலிருந்து பௌத்த விளக்கங்களை வழங்கிய அயோத்திதாசர் சமயம் என்பதற்கு தேவையான கதையாடல்களை மறுகண்டுபிடிப்பு செய்தார்,…சென்னையில் தலைமை சாக்கைய பௌத்த சங் கத்தை அமைத்து அதன் கிளைகளையும் அமைக்கத் தொடங்கினார். பவுத் தத்தை இந்துக்களல்லாத பஞ்சமர்களுக்கான நிரந்தர சமயமாக நிறுவன ரீதியில் நிறுவிட அவர் ஓயாமல் உழைத்தார்…வழிபாட்டு மையம், வழிபாட்டு முறைகள், பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சடங்குகள், பள்ளிகள், சுடுகாடு, தனியான சமய நூல் என்று அவர் அதற்கான வழிமுறைகளை அந்தக் கிளைகளில் செயற்படுத்தினார். இந்த வழிமுறைகளை அவர் மரபான பௌத்தத்திலிருந்து எடுக்க வில்லை. ஏற்கனவே தமிழகத்தில் புழக்கத்திலிருந்த பண்பாட்டு அம்சங்களிலிருந்து எடுத்து புனரமைத்தார்” எனும் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களது கூற்று பண்டிதர் இங்கு மாற்றியமைக்கப்பட்ட பௌத்தத்தை நிறுவ முயன்றார் என்னும் கருத்துக்கு ஆதாரமாக நிற்கிறது. மேலும் பண்டிதரின் பௌத்தம் தனிப்பட்டது என்பதை நிறுவுவதற்கு அவரது காலத்தில் சென்னையில் இயங்கிய மகாபோதி சங்கத்துடன் அவருக்கு இருந்த முரண்பாட்டையும் சான்றாக கொள்ளலாம்.

    அயோத்திதாசரின் பௌத்தம் சாதி எதிர்ப்பு பௌத்தமாகும் என்பதுடன் சாதி அழித்தொழிப்புக்கு காது கொடுக்காத வேறெந்த சிந்தனையையும் செயல் பாட்டையும் அது தயவு தாட்சண்யமின்றி நிராகரித்தது அல்லது பொருட்படுத்த வில்லை என்றும் சொல்லலாம். இலங்கை தர்மபாலா முயற்சியால் சென்னையில் துவக்கப்பட்ட மகாபோதி சங்கம் சாதி மறுப்பு கொள்கையற்றது என்று கடுமை யான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் பண்டிதர். அச்சங்கத்தின் பிற்போக்கு கோட்பாடுகளைக் கண்டித்துவிட்டு பண்டிதரின் சமகாலத்து பவுத்த சிந்தனை யாளராக/ செயற்பாட்டாளராக விளங்கிய பேரா.லட்சுமி நரசு அவர்களும் அம் மகா போதி சங்கத்தினின்று வெளியேறினார். மகாபோதி சங்கத்தை நூதன பௌத்தம் என்று விமர்சனம் செய்த பண்டிதர் “இந்துக்களின் செய்கையை விடா தவர்களும் சாதிபேதத்தை உடையவர்களுமாகிய இருவர்கள் வெளிதோன்றி யாங்கள் பௌத் தர்களாகிவிட்டோம் மற்றவர்களையும் பௌத்தர்களாக்க வந் துள்ளோமென இரண்டு பௌத்த சங்கங்களை ஏற்படுத்திக் கொண்டு அக் கூட்டங்களில் தங்கள் சாதி சம்பந்தப்பட்ட ஒருவரேனுமின்றி சாதி பேதமில் லாமற் சேரிகளில் வாழ்ந்திருந்தவர்களையே அதில் அங்கங்களாகச் சேர்த்துக் கொண்டு நூதன பௌத்தம் பிரசங்கித்து வருகிறார்கள்” ( அ.சிந்தனைகள்-II,பக்:441)என்றார்.

    “புத்த பகவானின் சிலைகளை சங்கங்களில் வைக்கக்கூடாது, மறுபிறவி என்பதுங்கிடையாது, கன்மமுங்கிடையாது, மனிதன் எப்போது மரித்துவிடுகி றானோ அதுதான் அவனுக்கு முடிவு. மற்றோர் சுகம் யாதுங்கிடையாதென புத்த தன்மத்திற்கு எதிரிடையாய் அபுத்த தன்மமாம் நூதன பௌத்தம் போதிக்கின்றார் கள். அதனால் புத்த தன்மமே மாறுபடுவதுடன் அதனைக் கேட்போர்கள் மனிதன் மரிப்பதே முடிவாதலின் மனம் போனவாறு கொலை செய்தல் பாபமென்னை, குடித்து சுகித்தால் பாபமென்னை, அன்னியன் தாரத்தை இச்சித்தால் பாபமென் னை, அன்னியன் பொருளை அபகரித்தால் பாபமென்னை, பொய் சொன்னால் பாபமென்னை என்னும் உச்சாகமுண்டாகி தானும் கெடுவதுடன் தன்னை அடுத் தோரையுங் கெடுத்து தேசத்தையும் சீரழித்து இராஜ விசுவாசத்தையும் கெடுப் பதற்கு தடையிராது” என்றார். மேலோட்டமாய் பார்ப்பதற்கு மகா போதி சங்கம் சிலை வணக்கம் கூடாது என்றும் மறுபிறவி-கன்மம் கிடையாது என்றும் சொல் வது முற்போக்கான சிந்தனையைக் கொண்டது என்பது மாதிரியான தோற்றம் தரக்கூடும். ஆனால் அதன் கருத்துக்களை பகுத்தறிவுவாத பவுத்தத்தின்நோக்கு நிலையிலிருந்து அவதானிக்கும்போது மகாபோதி சங்கத்தின் பொய்த்தோற்றமும் பிற்போக்கு வாதமும் துலக்கமாகிறது.

    கடவுள் இல்லை:

    முகம்மது நபி, இயேசுநாதர் போன்றவர்கள் போல் புத்தர் கடவுளின் தூதராக பூமியில் அவதரித்தவர் இல்லை. அவர் தம்மை கடவுள் என்று எங்கும் சொல்லிக் கொள்ளவுமில்லை. அவர் மனிதராகப் பிறந்து, மனிதனாக வளர்ந்து ஞானம் பெற்று புத்தர் என்ற மெய்ஞ்ஞான நிலையை அடைந்தவர். ஞானம் அடைந்தால் சாதாரண மனிதரும் புத்தர் என்ற நிலையை அடையலாம் என்பது பௌத்த தருமத்தின் சிறப்பம்சங்களுள் ஒன்றாகும். புத்தர் போதித்த தருமத்தை மதம்/ சமயம் என்றழைப்பதைக் காட்டிலும் அறநெறி, வாழ்க்கைமுறை, மார்க்கம், தருமம் என்று குறிப்பிடுவதே சரியாகும். தனது சீடர் ஆநந்தரைப் பார்த்து “ஆநந்தா உங்களுக்கு நீங்களே விளக்காய் இருங்கள்” என்றதன் மூலம் மனிதன் தன் விடுதலையை தானே கண்டடைந்தாக வேண்டுமே தவிர வேறு ஒருவர் மூலம் தனது மீட்சியைப் பெற முடியாது என்றார் புத்தர். மனிதன் தன் துக்கங்களை உணர்ந்து, துக்கத்துக்கான காரணங்களை உணர்ந்து, துக்க நிவாரணம் பெற்று, துக்க நிவாரண மார்க்கம் கண்டடைந்து மகிழ்வான வாழ்க்கையைப் பெற வேண்டும் என்பதுவே பௌத்த தருமத்தின் குறிக்கோள்.

    இந்த உலகத்தை கடவுள் படைத்தார்; எங்கெங்கும் நீக்கமற நிறைந்து காணப்படுகிறார் கடவுள்; காலங்கள் கடந்து, என்றென்றைக்கும் நீடித்து நிலைப் பவர் கடவுள்; சர்வ வல்லமையும் கொண்ட கடவுளால் முடியாதது என்று ஒன்று மில்லை என்றெல்லாம் பழமைவாதத்தால்/ஆன்மீகத்தால் முன்னிறுத்தப்படும் கடவுளை புத்த மதம் ஏற்பதில்லை. கடவுள் மறுப்பு சிந்தனையை பகுத்தறிவு வாத/பொருள்முதல்வாத சிந்தனை என்று மார்க்சிய/பெரியாரிய அறிவுஜீவிகளால் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் கடவுளை/சாதியை மறுக்கும் பௌத்தம் அறிவியல் பூர்வமான மதம் என்று சொல்லப்படுகிறது. புத்தரின் போதனைகளில் மேற்கண்ட நவீனப் போக்குகள் நிறைந்துக் காணப்படுவதை அறிந்து, அம்மதத் தில் பார்ப்பனிய/இந்து மத பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக உள்ள சிந்தனைகளைக் கிரகித்துக்கொண்டுதான் அதன்பால் மிகுந்த ஆர்வம் கொண்ட அயோத்திதாசர்.

    கடவுள் என்னும் சொல்லின் பொருள் பயன் என்பதாகும் என்றார். “ஆதியங் கடவுளை யருமறை பயந்தனை/போதியங்கிழவனை பூமிசை யொதுங்கினை” என்னும் சூளாமணி இலக்கிய வரிகளை எடுத்துக்காட்டி “இல்லந்துறந்து கட வுளானானென்னும் மொழியின் ஆதரவால் நன்மெய்க் கடைபிடித்த மகாஞானி கள் ஒவ்வொருவருக்கும் கடவுள் என்னும் பெயர் பொருந்தி நிற்கின்றது” என்று கடவுள் பற்றிய மற்றபிற மதங்களின் கதையாடல்களை புரட்டிப் போடுகிறார் அயோத்திதாசர்.

    “ஓர் கடவுளில்லாமல் உலகம் உண்டாச்சுதா, குயவனில்லாமல் பாண்டம் உண்டாச்சுதா என வினவுவதும் உண்டு. அங்ஙணம் வினவுவோர் குயவனுக்கு மண் காரணமாயிருந்தது போல் கடவுளுக்குக் காரணம்(அதாவது பிரபஞ்சத்தை யும் உலகத்தையும் உயிர்களையும் கடவுள் படைத்தார் என்றால் கடவுளை யார் படைத்தார்? என்னும் கேள்வியாகும் இது) எதுவெனக் கண்டறிவாரேல் சிருட்டி கள் உண்டா இல்லையா என்பது செவ்வனே விளங்கும்…. அல்லது கடவுள் என்னும் மொழிக்கும் சிருட்டிகள் என்னும் மொழிக்கும் பொருள் பொருந்துமா என உசாவு வரேல் பொருந்தாது பொருந்தாதென்பதும் சிறந்து விளங்கும்” என்று கடவுள் நம் பிக்கைமீது விவாதம் தொடுக்கும் பண்டிதர் “கடவுள் என்னும் பொருளறிந்தோன் நீதியினாலும் நெறியினாலும் வாய்மெயினாலும் அதனை விளக்குவான். கடவுளென்னும் பொருளறியாதோன் கடவுள் எங்கும் நிறைந்திருக் கின்றான், அவனுக்கு எல்லாம் தெரியும் என்று தம்பட்டமடிப்பான். ஆனால் அன்னியனுடைய பொருளை அபகரிக்கும் காலத்தும், அன்னியன் மனைய்வியை இச்சிக்குங் காலத்தும், அன்னியனை வஞ்சிக்குங்காலத்தும் எங்கும் நிறைந்த கடவுள் எல்லா மறியுங் கடவுள் பார்ப்பானென்னுஞ் சிந்தனாச் செயலுண்டோ, இல்லை” எனும் பண்டிதர் மனிதன் கடவுள் நம்பிக்கையை தனது சுயநலத்துக்கு பயன்படுத்துவதையும் கடவுள் ஒருவர் இருந்தால் இதையெல்லாம் பொறுத் துக்கொண்டு சும்மா இருக்கமாட்டார் அல்லவா என்ற தொனியிலும் பேசி கடவுள் பற்றிய மூடநம்பிக்கையை அம்பலப்படுத்துகிறார். .

    கடவுள் என்னும் சொல்லுக்கு நன்மை என்று பொருள் வழங்கியவர்களும் பௌத்தர்களே என்றும் ஆதி புத்தரின் ஆயிரக்கணக்கான பெயர்களுள் கடவுள் என்ற பெயரும் ஒன்றாகும் என்றும் “ஆனால் கடவுளென்னும் ஓர் உருவம் கட் டைத்தடிபோல் சட்ட திட்டமக்க உட்கார்ந்துகொண்டு உலகத்தை சிருஷ்டிப்பவர் ஒருவர் இருக்கின்றார் என்னில் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” பௌத்தர் கள் என்றும் தமது கடவுள் மறுப்புக் கொள்கையை தெளிவுபட எடுத்துரைக்கிறார் பண்டிதர்.

    “மாற்றமே உலகின் நியதி. எல்லாப் பொருள்களும் உயிர்களும் அந்த விதிக்கு உட்பட்டு மாறிக்கொண்டேயிருக்கின்றன். எனவே உலகம் சம்பவங்களின் பிரவா கமாக இடையீடில்லாத நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாகவே இருந்து வருகின்றது” என்பதுவே பௌத்த தருமத்தின் உலக இயக்கத்தின் பற்றிய கோட்பாடு என்று பா.ராமஸ்வாமி சொல்வதுப்போல சமூக விஞ்ஞானம் எனப்படும் மார்க்சியம் தோன்றும் முன்பே அதன் புகழ் வாய்ந்த வாக்கியமான ‘மாறுதல் என்பது ஒன்றே மாறாதது’ என்னும் சொல்லைப் பிரயோகித்து அதற்கான விளக்கங்களை முன் வைத்திருக்கிறது பௌத்தம். உலக இயக்கம் என்பது இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டதுவே தவிர எவ்வகையிலும் கடவுள் என்னும் இல்லாத ஒன்றுடன் சம்பந்தபட்டது அல்ல என்ற அறிவியல் பூர்வமான விளக்கத்தை பௌத்தத்தில் காணமுடிகிறது.

    ஆன்மா என்று ஒன்று இல்லை:

    ஆன்மா என்பது மனிதனுக்குள் குடிகொண்டிருக்கும் ஓர் அரூபம் என்கிறது ஆன்மீகம். பிறக்கும்போதே உடலுடன் ஒட்டிப்பிறந்துவிடும் ஆன்மா இறக்கும் போது உடலைவிட்டு நீங்கிவிடுகிறது; ஆன்மா அழிவற்றது-என்றென்றும் மாறா தது; ஆன்மாவை ஐம்புலன்களால் உணர முடியாது என்றெல்லாம் ஆன்மா குறித்த நம்பிக்கைகள் மதங்களால் உருவாக்கப்பட்டுள்ளன இத்தகைய பிற் போக்குக் கருத்துக்களின்/மூட நம்பிக்கைகளின் பிறப்பிடமாக-காப்பாளனாக விளங்குகிறது இந்து மதம் என்பதும் நாமறிந்ததே. ஆன்மா பற்றிய மேற்படி கருத் துக்களை மறுக்கிற பௌத்தம் மனித வாழ்வு என்பது ‘பஞ்சஸ்கந்தங்களின் (உரு வம், உணர்வு, அறிவு, கருத்து, நிலைமை) வினையாற்றல் என்கிறது. ஒருவன் இறந்த பிறகும் ஆன்மா என்ற ரூபத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறான் என்ற ஆன் மீக வாதத்தை விஞ்ஞான அறிவுக்கு புறம்பானது என்று அதனை அலட்சியப் படுத்துகிறது பௌத்தம்.

    “ஆன்மமென்னும் மொழி மகடபாஷையின் உற்பவமேயாம்.ஆன்மமென்பதின் பொருள் புருஷ்னென்(உடல்-க.ஆர்.)னப்படும்…பஞ்சஸ்கந்தங்கள் சரிவர அமைந்து மானிடனெனப் பாடியாடி உலாவும் புருஷ வடிவிற்கு ஆன்மனென்றும் ஆத்துமனென்றும் வழங்கலாயினர்”(அ.சிந்தனைகள்-II, பக்:433) என்கிறார் அயோத்திதாசர்.

    “ஆன்மா பற்றிய பௌத்த விளக்கத்தைத் தொடர்ந்து தொடர்ச்சியான மாற்றம், மாற்றங்களுக்கிடையே தொடர்ச்சி, காரண-காரிய இயைபு ஆகியவை குறித்த விளக்கங்களை அறிந்து கொண்டால் பிறப்பு-இறப்பு என்ற மாற்றங்களுக்கு இடையே தொட்ர்கின்ற வினை-வினைப்பயன் என்ற காரண-இயைபினைப் பற்றி புரிந்துகொள்ளலாம். இதனை அறிவியல் பூர்வமாக லட்சுமி நரசு விளக்குகிறார்” என்றும் ” நிலையாமை என்ற பௌத்த கருத்தினை நரசு பௌதீக அறிவியல் துணையோடு விளக்க முற்படுகிறார். அகண்ட பிரபஞ்சத்தில் எதுவும் நிலைத் ததன்று எல்லாவித இருத்தல்களும் ஓர் இடைவிடாத சுழற்சியே-தொடர்ச்சியான ஓட்டமே. எல்லாமே தொடர்ந்து மாறுகின்றன. எதுவும் அதுவாக என்றும் இருப் பதில்லை…மாறுவது என்பது விதி விலக்கன்று. அதுவே விதி. இதனை பௌதீ கத்தின் அடிப்படைக்கொண்டு நரசு நிறுவ முயலுகிறார்” என்றும் ராஜ்கௌதம்ன் பண்டிதரின் சமகாலத்து பௌத்த சிந்தனையாளர் பேரா.லட்சுமி நரசுவின் ஆன்மா பற்றிய பௌத்த நோக்கிலான அணுகுமுறையை விளக்குகிறார்.

    “அகம் அல்லது ஆன்மா என்றென்றும் நிலையாய் உள்ளதென்னும் நம்பிக்கையானது தவறான எண்ணங்களுள் பெருந்தவறானதென்றும், எல்லா பிரமைகளுள்ளும் இது மிகவும் வஞ்சிக்கத்தக்கதென்றும் அறிந்தொழுக வேண்டும். அப்பிரமையை உடையவர்கள் துக்க சாகரத்தினின்று கரையேற மாட்டார்களென்று சத்தருமம் போதிக்கின்றது” புத்தர் அருள் அறம் என்ற தமது நூலில் ஆன்மா குறித்து இவ்வாறு பதிவிட்டிருக்கிறார் ஜி. அப்பாதுரையார் அவர்கள். அப்பாதுரையார் அயோத்திதாசரின் நேரடி சீடராக இருந்தவர் என்பதும் கோலார் தங்க வயல் தென்னிந்திய சாக்கிய பௌத்த சங்கத்தின் உப தலைவராக இருந்து பணியாற்றிவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆன்மா பற்றிய லட்சுமி நரசு வின் அப்பாதுரையாரின் மேற்காணும் முற்போக்குக் கருத்துக்கள் யாவும் அயோத் திதாசரது பகுத்தறிவுவாத பௌத்த சிந்தனைகளின் பிரதிபலிப்புகள் எனலாம்.

    பௌத்தத்தின் பார்வையில் மறுபிறப்பு-முக்தி-மோட்சம்:

    மறுபிறப்பு, கர்மவினை, முக்தி, மோட்சம் என்பவை சம்பந்தமாக உலகின் பல்வேறு மதங்களும் வேதங்களும் இந்து மதமும் ஏற்படுத்தி வைத்துள்ள புரி தல்களை நிராகரிக்கிறது பௌத்தம். மனிதன் செய்த பாவ புண்ணியங்களுக் கேற்ப மனிதனாகவோ விலங்காகவோ அல்லது பிற உயிரங்களாகவோ மறுபிறப்பு எடுக்கின்றான் என்பது இந்து மதம் உள்ளிட்ட பிற மதங்களின் நம்பிக்கை. இந்து மத நம்பிக்கையின்படி அவரவரின் கர்ம பலன்களுக்கு ஏற்ப மறுபிறப்பின் தன்மை அமைகிறது எனப்படுகிறது. ஆனால் பௌத்தம் மனிதனின் எண்ணங்கள் /காரி யங்களினால் விளையும் பலன்களையே அவனது மறுபிறப்பாக கொள்கிறது. அவனது செய் வினைகள் தன் மீதும் தன்னைச் சார்ந்தவர்கள் மீதும் ஏற்படுத்தும் தொடர் விளைவுகளை மறுபிறப்பு என்கிறது பவுத்தம்.

    “தனது பேராசையால் ஒருவனைக் கெடுத்து துன்பப் படுத்திய தீவினை யானது இவனை விடாது துன்பப்படுத்துவதற்கு பின் தொடர்ந்தே நிற்குமென்று கூறியுள்ள கட்டளையாம் விதியை உணராது செய்த தீவினையின் பலனை அனு பவிக்குங்கால் என் தலைவிதி, நான் முன் செய்த தீவினை என்று கட்டளை விதிக்கு மீறி நடந்த செயலை ஓதி துக்கிக்கின்றான்…ஆதி கட்டளையை மீறா மலும் தீவினைக்கு உட்படாமலும் இருப்பானாயின் அதன் சுக விருத்தியால் என் தலைவிதி என்னும் சொல் நீங்கி பூர்வ புண்ணியமென்று கொண்டாடுவான்” (அ.சிந்தனைகள்-II,பக்:37) பண்டிதரின் இக்கூற்றில் உள்ளீடாக படிந்துள்ள மறு பிறப்பு/விதிப்பயன் என்பது பற்றிய கண்ணோட்டம் பிற மதங்களின் நம்பிக்கை களின்று மாறுபட்டது.

    ” இறப்பு என்பது மனம், உடல் ஆகியவற்றின் கலைவு. ஆயினும் இறந்த மனிதன் தனது வினைகளில் தொடந்து வாழுகிறான். ..வினைகள் அவனது குழந்தைகள் போன்றவை. அவனது சித்தத்திற்கு அப்பாலிருந்து அவை வாழ் கின்றன. எங்கெல்லாம் ஒருவனின் எண்ணங்களும் பேச்சுக்களும் செயல்களும் பிறருடைய மனங்களில் தம்மையே பதிவு செய்கின்றனவோ அங்கெல்லாம் அவன் மறுபிறவி எடுக்கிறான். மறு அவதாரம் செய்கிறான். ஒருவனுடைய வினைகள் அவனுக்கு முன்னின்று தொடர்ந்து வந்து அவன் வாழும் சமூகத்தில் பிறாரிடம், அவனது சந்ததிகளிடம் சேகரமாகின்றன-மறுபிறவி எடுத்துத் தொடர்ந்து சென்றுகொண்டே இருக்கின்றது” மறுமலர்ச்சி பௌத்த சிந்தனையா ளர் லட்சுமி நரசு அவர்களது மறுபிறவி பற்றிய இக்கூற்றை தமது அயோத்திதாசர் ஆய்வுகள் என்ற நூலில் ராஜ்கௌதமன் எடுத்துக்காட்டுகிறார்.

    இந்திய வேதங்களும் இந்து மதத்தின் புராணங்களும் ‘முக்தி’ என்பதை பௌத்தம் ‘பரிநிருவாணம்’ என்கிறது. இந்து மதத்தின் வரையறைபடி முக்தி என்பது ‘விகார உணர்ச்சிகளிலிருந்து விடுதலை: பரம்பொருளோடு ஐக்கியம்’ என்பதாகிறது எனும் பா.ராமஸ்வாமி “சுவர்க்கமும் நரகமும் எங்கோ இருப்பதாக வும் ஒவ்வொருவரும் இறந்தபிறகு அவற்றில் ஒன்றை அடைவர் என்றும் கூறாமல் இந்தப் பிறவயிலேயே இங்கேயே நிருவாணம் அடைய முடியும் என்று பௌத்த தருமம் கூறுகின்றது…ஆசா பாசங்கள் யாவும் அகன்று நான் என்ற ஆணவம் அறவே அழிந்து மன விகாரங்கள் அனைத்தும் ஒடுங்கி சகல உயிர்களிடத்திலும் கருணை பெருகி, அவற்றிற்கு அப்பால் பாவ புண்ணியங்கள் பற்றிய கருத்தும் அவிந்து சித்தத்தில் தன் சிந்தனையேயில்லாத சாந்தி நிலையே நிருவாணம் எனலாம்.

    உடலோடு இருக்கும்போழுதே இந்த நிலையை அடைவார்கள். பின்னாலும் உயிர் வாழ்ந்திருத்தல் கூடும்.அதற்குக் காரணம் முந்திய வினைப்பயனில் எஞ்சி யுள்ள பகுதியே” என்று இந்துத்வா முக்தி நிலைக்கான விளக்கங்களிலிருந்து மாறுபட்டு இயக்க இயல் கண்ணோத்துடன் பரிநிருவானம் என்பதை பௌத்தம் அணுகுவதாக விளக்கமளிக்கிறார் பா.ராமஸ்வாமி.

    அநித்யம், அநாத்துமம் என்பதுவே பௌத்த தத்துவத்தின் மையக்கரு. அனுபவம்/அநுமானம் (இதனை காண்டல்/கருதல்-என்கிறார் ஜி.அப்பாதுரையார்) என்பதுவே மனிதனின் அறிவுக்கு ஆதாரம் என்பதை அநித்யம்-அநாத்துமம் என்று சொல்லப்படுகிறது. உலக இயற்கைக்கும் மானுடத்தன்மைக்கும் மீறியதாக எந்தவொரு செயலையும் பண்பையும் காண்பதில்லை பௌத்தம். பிற மதங்கள் கடவுள்/புனர்ஜன்மம் என்பது குறித்தெல்லாம் பிற்போக்கான கதைகள் புனைந்து மக்களது மனங்களில் வேரூன்றச் செய்தன. அத்தகைய மூடநம்பிக்கை மூடை களை தத்துவ விளக்கங்களால் அவிழ்த்துக்கொட்டி அம்பலப்படுத்திவிட்டு இயற் கை விதிகளை சார்ந்தது மனிதனின் வாழ்வு என்பதை நிரூபித்தது என்பதாலேயே பௌத்தம் பகுத்தறிவை மையமாகக் கொண்டது என்று சொல்லப்படுகிறது. விஞ் ஞான தொழில் நுட்பம் வளர்வதற்கு மார்க்சியம் தோன்றியதற்கும் ஈராயிரமாண் டுகளுக்கு முன்பே இயக்கவியல் பொருள் முதல்வாத சிந்தனையாளராக தோன் றியவராக இருக்கிறார் புத்தர் என்பதையே இதுவரைக்கும் நாம் கண்ட விவாதங் கள் எடுத்துரைக்கின்றன.

    மதம் மக்களுக்கு அவசியம்:

    சத்தரும கொள்கையின்படி காமம், வெகுளி, மயக்கம் என்னும் முக்குற்றங் களிலிருந்து விடுபட்டு, பஞ்சசீலம் ஏற்று, எண்வழிகளைப் பின்பற்றி, பற்று எனும் அவாவை விட்டோழித்து, பிறவி துன்பங்களிலிருந்து விடுதலை பெற்ற மகிழ் வான/அமைதியான வாழ்க்கையை அடையுமாறு போதிக்கிறது பௌத்தம். அதன் வழியில் வன்முறை/புரட்சி/இரத்தம் சிந்துதல் என்பவற்றை விரும்பாத அறம்-அஹிம்சை வழியிலான சாதிபேதமற்ற சமுதாய மாற்றத்தை வழக்கொழிந்துபோன பௌத்தத்தை மீட்டெடுத்து மறு உருவாக்கம் செய்வதன் மூலம் உருவாக்க முடியும் என்று அதையொட்டியே சிந்தித்தும் செயல்பட்டும் வந்துள்ளார் அயோத் திதாசர். இவ்வகையில் அயோத்திதாசரின் பௌத்தத்தை பகுத்தறிவுவாத பௌத்தம், மாற்றியமைக்கப்பட்ட பௌத்தம், அறிவுவழி பௌத்தம், மறுமலர்ச்சி பௌத்தம், சாதி விடுதலை பௌத்தம் என்றெல்லாம் பேசுகிறொம் நாம். தமிழகத் தில் மட்டுமல்லாமல் இந்தியாவெங்கும் வழக்கொழிந்துபோன பழங்காலத்து மதம் என்று பௌத்த மதம் மதிப்பிடப்படுகிறது. ஆனால் பண்டிதர் தமிழ் மக்களின் வாழ்வியல் அம்சங்களில், வழிபாட்டு முறைகளில், கலாச்சார-பண்பாட்டு நிகழ் வுகளில் வாழ்ந்துகொண்டிருப்பதாக கருதினார். அப் பவுத்தம் பூரணமாக மீட்கப்பட்டு தமிழ்ச்சமூகத்தில் நிறுவப்படுவதன் மூலம் பார்ப்பனிய மேலா திக்கத்துக்கும் இந்து மதத்தின் சாதிய கெடுபிடிகளுக்கும் ஒரு முடிவு கட்டிவிட முடியும் என்றும் திடமாக நம்பி அவ்வழியில் செயலாற்றினார். சாதியத்துக்கும் தீண்டாமைக்கும் காரணமான வேர்களைக் கண்டறிந்து அவற்றைக் களைவதன் மூலம் திட்டவட்டமானதொரு சாதியற்ற-சமுத்துவ சமுதாயத்தை படைப்பது என்ற செயல் தந்திரம் பண்டிதரின் பௌத்த மீட்டுருவாக்கக் கோட்பாட்டின் உள்ளீடாகும். இதுபோன்ற ஆழமான புரிதல்களிலிருந்துதான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பௌத்தம் என்ற மதத்தின் தேவையை அறிமுகப்படுத்தினார் அயோத்திதாசர்.

    மதமாற்றம் என்பதை சமூக அணுகுமுறை, ஆன்மீக அணுகுமுறை என்னும் இரண்டு அம்சங்களில் அணுக வேண்டும் என்றார் அம்பேத்கர். அம்பேத்கருக்கு அரை நூற்றாண்டுக்கும் முன்பே மேற்படி அம்சங்களின் அடிப்படையில் தாழ்த் தப்பட்ட மக்களுக்கான மதமாக பௌத்தத்தை அணுகியிருக்கிறார் பண்டிதர். இந்து மதத்தின் சாதிய/தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான அவரது குரலை சமூக அணுகுமுறை சம்பந்தப்பட்டது என்றும் புத்தரின் கோட்பாடுகள்/ போதனைகளைப் பின்பற்றி பவுத்த அமைப்புகள் நிறுவி பவுத்த மீட்டுருவாக்கம் சார்ந்து செயலாற்றியதை ஆன்மீக சம்பந்தப்பட்டதாகவும் கொள்ளலாம்.

    ”சந்தர்ப்பக் கேடாக நான் இந்துவாக பிறந்துவிட்டேன்; ஓர் இந்துவாக பிறந்துவிட்ட நான் இறக்கும்போது இந்துவாக இறக்கமாட்டேன்” என்ற அம்பேதக்ர் அம்மதத்தை விட்டு வெளியேறி பௌத்தம் தழுவுமாறு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அழைப்பு விடுத்தார். முழு மனித வாழ்வைப் பெறவும், சமூக விடுதலையும் சமத்துவமும் அடையவும், சமமாக நடத்தப்படவும் சமவாய்ப்பு வழங்கப்படவும் முன் வருவதுமான ஒரு மதத்துக்கு மாறுங்கள் என்று கேட்டுக் கொண்ட அம்பேத்கர் “மதமாற்றம் என்பது நம்மைப் பொருத்தமட்டில் நம் சமுதா யத்தின் வளமான எதிகாலத்தை நிர்ணயிப்பாதாயிருப்பதால் மதமாற்றத்தை நான் பெரிதும் விரும்புகிறேன்” என்றார். மதமாற்றம் குறித்து அயோத்திதாசர் தமது தனிச்சிறப்பான சொல்லாக்கங்களால் மூலம் வழங்கியுள்ள பௌத்த சமய/ சித்தாந்த கதையாடல்கள், அம்பேத்கர் மதமாற்றம் குறித்து முன் வைத்துள்ள கதையாடல்களோடு பல்வேறு இடங்களில் ஒருங்கிணைந்து நிற்பதை இவ் விருவரையும் ஆழ்ந்து வாசிப்பதிலிருந்த்து அறிந்துணரலாம்.

    அயோத்திதாசரும் அம்பேதகரும் மதம் மக்களுக்கு அவசியம் என்ற கண்டறிதல்களிலிருந்து பவுத்த சமயத்தை தலித் மக்களுக்கு வழங்கினர். மக்களுக்கான மதத்தின் தேவையை “மனிதனுக்கு மதம் அவசியம் என்பது வெறும் மத விளக்கத்தால் மட்டுமல்ல, மக்கள் சமுதாயத்தை செயலாட்சிக்கு உட்படுத்தவும் விதி முறைகளின் மூலம் கட்டுப்படுத்தவுமான பின்னணியை உடையதாகும்” என்றார் அம்பேத்கர். அதே சமயத்தில் மதம் என்னும் சமூக நிறுவனமானது சமுக மேம்பாட்டுக்கும் தனி மனிதனின் மகிழ்வான வாழ்வுக்கும் வாய்ப்புகளை வழங்குவதாகவும் இருக்க வேண்டும் என்றார். பண்டைய காலந் தொட்டு நாளதுவரைக்கும் சமய சித்தாந்த/ செயல்பாடுகளுக்குப் பழகியே பரிணாம் அடைந்து வந்துள்ள இந்தியச் சமுதாயத்தின் சிக்கல்களை புத்த மதம் என்னும் அறிவுவாத சமயத்தின் அங்கீகாரத்துடன் எதிர்கொண்டு சரிகட்டுவது என்னும் செயல்திட்டம் அயோத்தாசருடையது. இந்த அடிப்படையில் மரபாண பௌத்தத்திலிருந்து தமிழ்ச்சமூகத்துக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்பட்ட தனித்தன்மை வாய்ந்த அதியற்புத பணியாகும் அவரது சமய பணி. ஏற்கனவே பவுத்தத்திற்குள் நுழைந்து படிந்துவிட்டிருந்த குறைந்தபட்ச மூடநம்பிக்கைகளையும் பிற்போக்குத் தனங்களையும் உதறிவிட்டு மரபாண பவுத்தத்தின் பகுத் தறிவு சிந்தனைகளின் துணையோடு சாதி பேதங்களை புறக்கணிக்கும் சமத்துவ பகுத்தறிவுவாத பௌத்தத்தை தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தமிழ்ச் சமூகத்தும் வழங்கினார் க.அயோத்திதாசப் பண்டிதர்.

    0000

    துணை நின்ற நூல்கள்:

    1) அயோத்திதாசர் சிந்தனைகள், தொகுப்பு-I மற்றும் தொகுப்பு-II- ஞான.அலாய்சியஸ்

    2) புத்தர் அருள் அறம்-ஜி.அப்பாதுரையார், தொகுப்பு:ஸ்டாலின் ராஜாங்கம், ஆழி பப்ளிஷர்ஸ், சென்னை-24

    3) புத்தர் அருள் அறம் எனும் ஜி.அப்பாதுரையாரின் நூலுக்கான பதிப்புரை -ஸ்டாலின் ராஜாங்கம்

    4) க.அயோத்திதாசர் ஆய்வுகள்-ராஜ் கௌதமன், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்

    5) பௌத்தமும் தமிழும்-மயிலை சீனி. வேங்கடசாமி, செண்பகா பதிப்பகம், சென்னை

    6) புத்தமும் அவர் தம்மமும்-டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், தமிழில்: பெரியார் தாசன், பவுத்த ஆய்வு மையம், சென்னை

    7) பௌத்த தருமம்-பா.இராமஸ்வாமி, சந்தியா பதிப்பகம், சென்னை.

    8) புரட்சியாளர் அம்பேத்கர் வாழ்வும் பணியும்-வெளியீடு: NLC எஸ்சி/எஸ்டி பணியாளர்கள் நலச்சங்கம், நெய்வேலி.

    9) மதத்தைப் பற்றி…-வி.இ. லெனின், தமிழாக்கம்:ஏ. சீனிவாசன், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை-14

    – வெ.வெங்கடாசலம்

    Share this:

    • Click to share on X (Opens in new window) X
    • Click to share on Facebook (Opens in new window) Facebook
    • Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleதலித் பெண்களை பாதிக்கும் 4 ஆதிக்கங்கள் : ‘எவிடென்ஸ்’ கதிர்
    Next Article பௌத்த மதமாற்றப் பேருரை
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    தமிழ் பௌத்தம் – தாள் சேர்தல்

    June 7, 2024

    புத்தர் – கருடன் – விஷ்ணு

    June 7, 2024

    நான் கருத்து எதுவும் சொல்லாத ஒன்றில் இதுவும் ஒன்று

    April 28, 2024
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
    • Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock
    • பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்
    • கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்
    • இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    Random Posts

    அமெரிக்காவில் இந்துகோயில் கட்டும் பணியில் தலித் தொழிலாளர்கள் சித்திரவதை

    May 12, 2021

    “தீண்டாமைப் பிரச்னை பற்றி அறிவுஜீவுகள் பேசுவது இல்லை!”

    May 6, 2015

    “சாதி ஒழிப்பு ஒலிநூல்” அறிமுக விழா

    August 20, 2012

    `கணவரின் ஆணவக்கொலைக்கு நீதி வேண்டும்’ – பிரனய் மனைவி அம்ருதா உருக்கம் #JusticeForPranay

    September 17, 2018
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை பள்ளிகளில் கற்பிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

    May 4, 2026

    Why India needs Ambedkar’s federal blueprint for the delimitation deadlock

    April 17, 2026

    பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 135 பிறந்த நாள்

    April 15, 2026

    கன்சிராமின் சுதந்திர சிந்தனை – பேரா. எ. பாவலன்

    March 15, 2026
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    %d